Fit appointment! | Shanti-Parva-Section-119 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 119)
பதிவின் சுருக்கம் : பணியாட்களில் ஒவ்வொருவரையும் அவரவர்க்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்க வேண்டும்; தகாதவர்களைத் தகாத நிலையில் நியமித்தால் ஏற்படும் நிலை மற்றும், தகுந்தவர்களைத் தகுந்த நிலையில் நியமித்தால் ஏற்படும் நிலை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-119 |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “எந்த மன்னன், இந்த நாயின் கதையில் இருந்து பெறப்பட்ட பாடத்தால் வழிகாட்டப்பட்டு, தன் பணியாட்கள் ஒவ்வொருவரையும் அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்புடைய இன்பங்களை அனுபவிப்பதில் வெல்வான் {அரசின் பயனைப் பெறுவான்}. ஒரு நாயானது, அதற்குத் தகுந்த நிலைக்கு மேலே கௌரவத்துடன் அமர்த்தப்படக்கூடாது. ஒரு நாய், அதற்குத் தகுந்த நிலைக்கு மேல் அமர்த்தப்பட்டால், அது செருக்கால் போதையுறும்.(2) தகுந்த அலுவல்களில் நியமிக்கப்படும் அமைச்சர்கள், அந்தந்தத் தொழிலுக்குத் தகுந்த தகுதிகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தகாத மனிதர்களின் நியமனங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாது.(3) எந்த மன்னன், தன் பணியாட்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த அலுவல்களைக் கொடுக்கிறானோ, அத்தகு தகுதியின் {புண்ணியத்தின்} விளைவால் அவன் {அந்த மன்னன்}, அரசு தொடர்புடைய இன்பங்களை அனுபவிப்பதில் வெல்வான் {அரசின் பயனைப் பெறுவான்}.(4) ஒரு சரபம், சரபத்தின் நிலையை ஏற்க வேண்டும்; ஒரு சிங்கம், சிங்கத்தின் வலிமையால் பெருகியதாக இருக்க வேண்டும்; ஒரு புலியானது, புலியின் நிலையில் அமர்த்தப்பட வேண்டும்; ஒரு சிறுத்தையானது, சிறுத்தையின் நிலையில் அமர்த்தப்பட வேண்டும்.(5)
பணியாட்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் விதிப்படி நியமிக்கப்பட வேண்டும். நீ வெற்றியை அடைய விரும்பினால், பணியாட்களுக்குத் தகுந்ததைவிட உயரிய நிலையில் ஒருபோதும் அவர்களை நியமிக்கக்கூடாது.(6) எந்த மூட மன்னன், இந்த எடுத்துக்காட்டை மீறி, தகாத நிலைகளில் பணியாட்களை நியமிப்பானோ, அவன் தன் மக்களை நிறைவடையச் செய்வதில் தவறுவான்.(7) திறன்மிக்கப் பணியாட்களைக் கொள்ள விரும்பும் மன்னன் ஒருவன், நுண்ணறிவற்றவர்களும், இழிந்த மனம் கொண்டவர்களும், ஞானம் இல்லாதவர்களும், தங்கள் புலன்களுக்குத் தலைவர்களாக இல்லாதவர்களும், உயர் குடியில் பிறக்காதவர்களுமான மனிதர்களை ஒருபோதும் {எந்த அலுவலிலும்} நியமித்துக் கொள்ளக்கூடாது.(8) நேர்மையானவர்களும், உயர்குடி பிறப்பைக் கொண்டவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், கல்விமான்களும், தீயநோக்கமும், பொறாமையும் இல்லாதவர்களும், உயர்ந்த மனம் கொண்டவர்களும், நடத்தையில் தூய்மையானவர்களும், தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலிகளுமான மனிதர்கள், அமைச்சர்களாக நியமிக்கப்படத் தகுந்தவர்களாவர்.(9) பணிவுடையவர்களும், தங்கள் கடமைகளை ஆற்றத் தயாராக இருப்பவர்களும், அமைதியான மனநிலை கொண்டவர்களும், மனத்தில் தூய்மையானவர்களும், இயல்பான பல்வேறு பிற கொடைகளைக் கொண்டவர்களும், தாங்கள் இருக்கும் அலுவல்களின் தொடர்பான அவதூறுகளுக்கு ஆளாகாதவர்களுமான மனிதர்கள், மன்னனின் அணுக்கமான துணைவர்களாக இருக்க வேண்டும்.(10)
ஒரு சிங்கமானவன், எப்போதும் மற்றொரு சிங்கத்தையே தன் தோழனாகக் கொள்ள வேண்டும். சிங்கமல்லாத ஒருவன், ஒரு சிங்கத்திற்குத் தோழனானால், அவன் அந்தச் சிங்கத்திற்கு உண்டான பயன்கள் அனைத்தையும் ஈட்டுவான்.(11) எனினும் ஒரு சிங்கமானவன், நாய்களின் கூட்டத்தை மட்டுமே தன் துணைவர்களாகக் கொண்டிருந்தால், அவன் சிங்கத்திற்குரிய கடமைகளை ஆற்றும்போது, தன் தோழமையின் விளைவால், அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதில் தவறுவான்.(12) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஒரு மன்னன், துணிவு, ஞானம், பெரும் கல்வி, உயர்குடி பிறப்பு ஆகியவற்றைக் கொண்ட மனிதர்களைத் தன் அமைச்சர்களாகக் கொண்டிருந்தால், அவன் மொத்த உலகையும் அடக்குவதில் வெல்வான்.(13) ஓ! அரசத் தலைவர்களில் முதன்மையானவனே, கல்வி, நேர்மை, ஞானம், பெருஞ்செல்வம் ஆகியவையற்ற ஒரு பணியாளனை மன்னர்கள் ஒருபோதும் ஊக்கப்படுத்தக் கூடாது.(14) தங்கள் தலைவனுக்கான தொண்டுகளில் அர்ப்பணிப்போடு இருக்கும் மனிதர்களை எந்தத் தடைகளாலும் ஒருபோதும் தடுத்துவிட முடியாது. மன்னர்கள், தங்கள் தலைவர்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் பணியாட்களிடம் எப்போதும் ஆறுதலாகவே பேச வேண்டும்.(15)
மன்னர்கள் எப்போதும் பெருங்கவனத்துடன் தங்கள் கருவூலங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையில் மன்னர்கள், தங்கள் கருவூலங்களிலேயே தங்கள் வேர்களைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மன்னன் எப்போதும் தன் கருவூலத்தைப் பெருகச் செய்வதில் முனைய வேண்டும்.(16) ஓ! மன்னா, உன் பண்டகசாலைகள் {கிடங்குகள்} தானியங்களால் நிறைக்கப்படட்டும். அதை நேர்மையான பணியாட்கள் கவனித்துக் கொள்ளட்டும். நீ உன் செல்வத்தையும், தானியங்களையும் பெருகச் செய்ய முனைவாயாக.(17) போரில் திறன்பெற்ற உன் பணியாட்கள், அவர்களுடைய கடமைகளைக் கவனமாகச் செய்யட்டும். அவர்கள் குதிரைகளை நிர்வகிப்பதில் திறன்பெற்றவர்களாக இருப்பது விரும்பத்தக்கதாகும்.(18) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, உன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தேவைகளைக் கவனிப்பாயாக. நீ நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சூழப்பட்டிருப்பாயாக. உனது நகரத்துக்கான நன்மையை நீ நாடுவாயாக.(19) நாயின் எடுத்துக்காட்டைச் சொன்னதன் மூலம், உன் குடிமக்களிடம் நீ பின்பற்ற வேண்டிய கடமைகளைக் குறித்து உனக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். மேலும் நீ என்ன கேட்க விரும்புகிறாய்” என்று கேட்டார் {பீஷ்மர்}.(20)
சாந்திபர்வம் பகுதி – 119ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |