The conduct of a peacock! | Shanti-Parva-Section-120| Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 120)
பதிவின் சுருக்கம் : மயிலுக்கு ஒப்பாக மன்னன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும், ஒரு மன்னன் குடிமக்களைப் பாதுகாக்கும் தன் கடமையில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-120 |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, அரச கடமைகளை அறிந்த பழங்காலத்து மனிதர்களால் விதிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்த அரசதிறத்தின் பல்வேறு கடமைகளைக் குறித்து நீர் உரையாடினீர்.(1) உண்மையில், ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட அந்தக் கடமைகளைக் குறித்து நீர் விரிவாகப் பேசியிருக்கிறீர். எனினும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவற்றை ஒருவன் நினைவில் தக்க வைத்துக் கொள்வதில் வெல்லும் வகையில் சொல்வீராக” என்று கேட்டான்[1].(2)
[1] “அவற்றைக் குறித்துச் சுருக்கமாகச் சொல்வீராக, அல்லது உமது விரிவான உரைகளின் சுருக்கத்தை எங்களுக்குச் சொல்வீராக என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பதே ஒரு க்ஷத்திரியனின் உயர்ந்த கடமை என்று சொல்லப்படுகிறது. ஓ! மன்னா, பாதுகாக்கும் கடமையை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை என்னிடம் இருந்து கேட்பாயாக.(3) தன் கடமைகளை அறிந்த ஒரு மன்னன், பல்வேறு நிறங்களைத் தோகையில் எற்கும் ஒரு மயிலைப் போலவே பல்வேறு வடிவங்களை ஏற்க வேண்டும்.(4) கூர்மை, கபடம், உண்மை, நேர்மை ஆகிய பண்புகள் அவனிடம் இருக்க வேண்டும். அவன், முழுமையாகப் பாரபட்சமில்லாமல், நற்பண்புகளை நடைமுறைப்படுத்தி, புகழை ஈட்ட வேண்டும்.(5) அவன் தான் நிறைவேற்ற முனையும் குறிப்பிட்ட நோக்கத்தில் நன்மையடைவதைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நிறத்தையோ, வடிவையோ ஏற்க வேண்டும். பல்வேறு வடிவங்களை ஏற்கவல்ல மன்னனால் மிக நுண்ணிய நோக்கங்களையும் கூட நிறைவேற்றுவதில் வெல்வான்.(6)
கூதிர்காலத்து ஊமை மயிலைப் போல அவன் தன் ஆலோசனைகளை மறைக்க வேண்டும். அவன் குறைவாகவே பேச வேண்டும், அந்தக் குறைவான பேச்சும் இனிமையாக இருக்க வேண்டும். அவன் நற்பண்புகளைக் கொண்டவனாகவும், சாத்திரங்களை நன்கறிந்தவனாகவும் இருக்க வேண்டும்.(7) மனிதர்கள் தங்கள் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளத்தால் நிறைக்கக் கூடிய பெரிய ஏரிகளுடைய உடைப்புகளைக் கவனித்துக் கொள்வதைப் போலவே அவன் தன்னை வீழ்த்தக்கூடிய ஆபத்துகள் வரும் வாயில்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மலைத் தடாகங்களில் திரளும் மழைநீரில் இருந்து உண்டாகும் ஆறுகளை மனிதர்கள் நாடுவதைப் போலவே அவன் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களின் புகலிடத்தை நாட வேண்டும். செல்வத்தைத் திரட்ட விரும்பும் மன்னன், சடாமுடி தரிக்கும் போலி அறவோரைப் போலச் செயல்பட வேண்டும்.(8) மன்னன் தன் கரங்களில் எப்போதும் தண்டக்கோலை உயர்த்தியபடியே இருக்க வேண்டும். வருவாயையும், செலவினங்களையும் நன்கு ஆய்வு செய்த பிறகு, முழுதாக வளர்ந்த பனைமரத்திடம் அதன் சாறை உறிஞ்சச் செல்வதைப் போல அவன் (வரி விதிக்கும் காரியங்களில்) எப்போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்.(9) அவன் தன் குடிமக்களிடம் தகமையுடன் {நியாயமாக} நடந்து கொள்ள வேண்டும்; தன் சிறகுகள் பலம்பெற்றதும் எதிரியை எதிர்த்துப் படையெடுத்து, தன் குதிரைப் படையைக் கொண்டு எதிரிகளின் பயிர்களை நசுக்க வேண்டும்; மேலும் தன் பலவீனங்களின் தோற்றுவாய்களையும் நோக்க வேண்டும்.(10)
தன் எதிரிகளின் குற்றங்களை அவன் அறிக்கையிட வேண்டும்; தன்னைச் சார்ந்தோரின் குற்றங்களை நசுக்க வேண்டும்; காட்டிலிருக்கும் மலர்களைக் கொய்யும் மனிதனைப் போலவே வெளியில் இருந்து செல்வத்தைத் திரட்ட வேண்டும்.(11) வலிமையில் பெருகியவர்களும், மலைகளைப் போன்று உயர்ந்த தலைகளுடன் நிமிர்ந்து நிற்பவர்களுமான முதன்மையான ஏகாதிபதிகளை அவன் அறியப்படாத நிழல்களையும் நாடுதல், ஒளிந்து மறைந்திருத்தல், திடீர் தாக்குதல்களை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் அழிக்க வேண்டும்.(12) மழைக்காலத்து மயிலைப் போல அவன் தன் இரவு வசிப்பிடங்களில் தனியாகவும், யாராலும் காணப்படாமல் நுழைய வேண்டும். உண்மையில் அவன் மயிலின் நடையிலேயே தன் மனைவியரின் துணையுடன் தன் அந்தப்புரங்களுக்குள் இன்புற்றிருக்க வேண்டும்[2].(13) அவன் தன் கவசத்தைக் கழற்றக்கூடாது. அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களால் விரிக்கப்படும் வலையைத் தவிர்த்து, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(14) மேலும் அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களுடைய பற்றை வெல்ல வேண்டும், ஆனால், வாய்ப்பு நேரும்போது அவர்களை வேரோடு அழித்துவிட வேண்டும். மயில்களைப் போலவே மன்னனும் தன் பலமிக்கக் கோபக்கார எதிரிகளைக் கபடத் திட்டங்களின் மூலம் கொன்று,(15) அவர்களது படையையும் அழித்து, தன் நாட்டில் இருந்து அவர்களை விரட்ட வேண்டும். மேலும் மன்னனானவன், மயில்களைப் போலவே தனக்கு நன்மையானதைச் செய்து கொண்டு, காட்டில் இருந்து அவை {மயில்கள்} பூச்சிகளைச் சேகரிப்பது போல அனைத்து இடங்களில் இருந்தும் ஞானத்தைச் சேகரிக்க வேண்டும்.(16)
[2], கங்குலியில் 8ம் சுலோகம் முதல் 13ம் சுலோகம் வரை காணப்படும் இந்தப்பகுதி, கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் மயிலுடன் ஒப்பிட்டே சொல்லப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே உள்ளது. கும்பகோணம் பதிப்பில் இருப்பது பின்வருமாறு: “(மயில் இனிமையான குரலும் உடம்பின் அழகும் தன் செய்கையில் ஸாமர்த்தியமும் பொருத்தியிருப்பது போல) அரசன் அழகான சொற்களுள்ளவனும், ஸம்பத்துள்ளவனும், சாஸ்திரங்களில் ஸமர்த்தனுமாயிருக்க வேண்டும். நீரருவிகளில் (மயிலானது நாட்டமுள்ளதாயிருப்பது போல (அரசன்) வரவு செலவுகளில் ஜாக்ரதையுள்ளவனாயிருக்க வேண்டும். மயிலானது மலையிலுள்ள மழை ஜலங்களை அடுப்பது போல (அரசன்) ஸித்திபெற்ற பிராம்மணர்களை அடுக்க வேண்டும். பொருளில் விருப்பமுள்ள அரசன் (மயில் தன் தலையிலுள்ள சிகையை எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது போல் இயற்கையில் தர்மிஷ்டனென்று பிறர் நினைக்கும்படி) தர்மத்துக்குக் கொடி கட்டுவது போல அடையாளங்களைக் காண்பிக்க வேண்டும். (மயிலானது தன்னைப் பாதுகாத்துக் கொண்டு பாம்பு முதலியவற்றை அடிக்க எப்போதும் ஜாக்ரதையாயிருப்பது போல) அரசன் எப்பொழுதும் தண்டத்தை மேற்கொண்டவனும் ஆசாரத்தில் அஜாக்ரதையில்லாதவனுமாயிருக்க வேண்டும். மயிலானது இருக்கிற மரத்திலிருந்து அதிகச் செழுமையுள்ள மரத்துக்குச் செல்வது போல (அரசன்) உலகிலுள்ள வரவுசெலவைக் கண்டு வரவு அதிகமும் செலவு குறைவுமாகவுள்ள கார்யங்களில் செல்ல வேண்டும். தன் கூட்டத்தார்களில் தானே உத்தரவு செய்கிறவனும், சத்துருவினுடைய பூமியிலுள்ள தான்யங்களைக் குதிரை முதலியவற்றின் நடைகளால் அழிக்கிறவனுமாக இருக்க வேண்டும். தன் பக்ஷம் விருத்தியடைந்த பிறகு ஸஞ்சரிக்க வேண்டும். தன் குறையைக் கவனிக்க வேண்டும். மயில் தன் தோற்றத்தினாலேயே காக்கை முதலியவற்றின் குறைதோன்றுபடி இருத்தல் போலத் தன் நேர்மையினாலேயே சத்துருவின் குற்றங்கள் வெளியாகும்படி இருத்தல் வேண்டும். வேட்டை முதலிய வ்யாஜத்தால் வெளியில் ஸஞ்சரித்துக் கொண்டு எதிரிகளின்பக்ஷங்களை அழிக்க வேண்டும். காட்டிலுள்ள மலர்களைப் போலச் சப்தாதி விஷயங்களை நேருங்காலத்து விருப்பு வெறுப்பின்றி அனுபவிக்க வேண்டும். (மயில் உயர்ந்த செழிப்புள்ள மலைகளை அடுப்பது போல அரசன்) உயர்ந்தவர்களும் வ்ருத்தியடைந்தவர்களும் மலை போன்றவர்களுமான அரசர்களை அடுக்க வேண்டும். மயில் களைத்த காலத்து நிழலை அடுப்பது போல (அரசன்) இளைத்த காலத்தில் ஞாதியை அடுக்க வேண்டும். மயில் வேனிற்காலத்தில் மரத்தில் மறைந்து ஒன்றுவது போல ரஹஸ்யமாக ரக்ஷகனை அடைய வேண்டும். மயில் வருஷாகாலத்தில் களிப்பது போல இரவில் ஜனமில்லாத இடத்தில் களிக்க வேண்டும்” என்றிருக்கிறது.
ஞானியும், மயிலைப் போன்றவனுமான மன்னன், இவ்வாறே தன் நாட்டை ஆண்டு, தனக்கு நன்மையை அளிக்கும் கொள்கையை {திட்டத்தைப்} பின்பற்ற வேண்டும்.(17) தன் நுண்ணறிவைக் கொண்டே அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பிறருடன் ஆலோசிப்பதன் மூலம் அவன் அத்தகு தீர்மானத்தைக் கைவிடவோ, உறுதிசெய்யவோ வேண்டும். சாத்திரங்களால் கூர்த்தீட்டப்பட்ட நுண்ணறிவின் துணையுடன் ஒருவன் தன் செயற்பாட்டு வழிமுறைகளைத் தீர்மானித்துக் கொள்ள முடியும். சாத்திரங்களின் பயன் இதில்தான் {காரியங்களின் போக்கைத் தீர்மானிப்பதில்தான்} இருக்கிறது.(18) இணக்கக் கலைகளை {சாம முறையைப்} பயில்வதன் மூலம் அவன் தன் எதிரிகளுடைய இதயங்களின் நம்பிக்கையை ஈர்க்க வேண்டும். அவன் தன் சொந்த பலத்தை வெளிக்காட்ட வேண்டும். பல்வேறு செயல்பாட்டு வழிமுறைகளைத் தன் மனத்திற்குள் மதிப்பிடுவதன் மூலம், அவன் தன் நுண்ணறிவைப் பயன்படுத்தித் தீர்மானங்களை அடைய வேண்டும்.(19) மன்னன், இணக்கக் கொள்கையின் {சாம முறையின்} கலைகளை நன்கறிந்திருக்க வேண்டும், அவன் ஞானம் கொண்டவனாக இருக்க வேண்டும்; எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வல்லவனாகவும், எது கூடாதாதோ அதைத் தவிர்க்க வல்லவனாகவும் இருக்க வேண்டும். ஞானமும், ஆழமான நுண்ணறிவும் கொண்ட மனிதனுக்கு ஆலோசனைகளோ, அறிவுரைகளோ தேவைப்படுவதில்லை.(20)
பிருஹஸ்பதியைப் போன்ற நுண்ணறிவைக் கொண்ட ஒரு ஞானி, அவதூறு செய்பவனானால், அவன் நீரில் முக்கப்படும் சுடப்பட்ட இரும்பைப் போல விரைவில் தன் மனநிலை சீரடைவான்.(21) மன்னன் தனது, அல்லது பிறரின் நோக்கங்கள் அனைத்தையும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படியே நிறைவேற்ற வேண்டும்.(22) செல்வத்தை அடையும் வழிமுறைகளை அறிந்த மன்னன் ஒருவன், தன் செயல்பாடுகள் அனைத்திலும் மென்மையான மனநிலை, ஞானம், துணிவு, பெரும் பலம் ஆகியவற்றைக் கொண்ட மனிதர்களையே எப்போதும் நியமிக்க வேண்டும்.(23) {வீணை போன்ற} இசைக்கருவியின் நாண்களைச் சுவரங்களுக்குத் தக்கபடி சரியான அழுத்தத்தில் கட்டுவதைப் போல ஒருமன்னன், தன் பணியாட்கள், அவர்களுக்குத் தகுந்த செயல்களில் நியமிக்கப்படுவதைக் கண்டு அவர்களுடன் சேர்ந்து கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.(24) மன்னன், அற விதிகளை மீறாமல் அனைத்து மனிதர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும். “இவன் என்னவன்” என்று அனைவராலும் கருதப்படும் மன்னன் அசையாத மலையென நிலைத்து நிற்பான்.(25)
வழக்காடுபவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கும் பணியில் தன்னை நிறுவிக்கொள்ளும் மன்னன், தன்னால் விரும்பப்படும், மற்றும் விரும்பப்படாத நபர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாட்டையும் காணாமல், நீதியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.(26) குறிப்பிட்ட குடும்பங்கள், குறிப்பிட்ட மக்கள் திரள், பல்வேறு நாடுகள் ஆகியவற்றின் பண்புகளை அறிந்தவர்கள்; பேச்சில் மென்மையாக இருப்பவர்கள்; நடு வயதில் இருப்பவர்கள், குற்றங்கள் {குறைகள்} ஏதும் இல்லாதவர்கள்; நற்செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள்; ஒருபோதும் அலட்சியமாக இல்லாதவர்கள்; கொள்ளையில் ஈடுபடாதவர்கள்; கல்வியும், தற்கட்டுப்பாடும் கொண்டவர்கள்; அறத்தில் உறுதியும், அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டும் சார்ந்த காரியங்களை உயர்த்திப்பிடிக்க எப்போதும் தயாராக இருப்பவர்கள் ஆகியோரையே மன்னன் தன் அலுவல்கள் அனைத்திலும் நியமிக்க வேண்டும்.(27,28) இவ்வழியில், செயல்களின் நடைமுறையையும், இறுதி நோக்கங்களையும் உறுதி செய்து கொள்ளும் மன்னன், அவற்றைக் கவனமாக நிறைவேற்ற வேண்டும்; தன் ஒற்றர்கள் மூலம் அனைத்து செய்திகளையும் அறிந்து கொண்டு அவன் உற்சாகத்துடன் வாழ வேண்டும்.(29) போதுமான காரணங்களில்லாமல் கோபத்துக்கும், இன்பத்துக்கும் ஒருபோதும் வசப்படாதவனும், வரவு மற்றும் செலவு ஆகியவற்றைத் தன் கண்களால் நேரடியாகக் கண்காணிப்பவனுமான மன்னன், உலகத்தில் இருந்து பெருஞ்செல்வத்தை அடைவதில் வெல்கிறான்.(30)
தன் அதிகாரிகள் மற்றும் குடிமக்களை (அவர்கள் செய்ய நற்காரியங்களுக்காக) பொதுவில் வைத்து கௌரவிப்பவனும், தண்டனைக்குத் தகுந்தோரைத் தண்டிப்பவனும், தன்னையும், தன் நாட்டையும் அனைத்துத் தீமைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்பவனுமான மன்னன், அரசகலையின் {ஆட்சித்திறத்தின்} கடமைகள் அனைத்தையும் அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(31) கீழிருக்கும் அனைத்தின் மேலும் தன் கதிர்களைப் பொழியும் சூரியனைப் போல மன்னன், எப்போதும் தன் நாட்டைப் பார்த்துக் கொண்டு, தன் நுண்ணறிவின் உதவியால், தன் ஒற்றர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் கண்காணிக்க வேண்டும்.(32) மன்னன் உரிய காலத்தில் தன் குடிமக்களிடம் இருந்து செல்வத்தைப் பெற வேண்டும். அவன் செய்வதை அவன் ஒருபோதும் அறிக்கையிடக்கூடாது. பசுவிடம் இருந்து தினமும் பால்கறக்கும் ஒரு புத்திசாலியைப் போல, மன்னனும் தினமும் தன் நாட்டைக் கறக்க வேண்டும்.(33) ஒரு தேனியானது, மலர்களில் இருந்து படிப்படியாகத் தேனைத் திரட்டுவதைப் போலவே மன்னனும் தன் நாட்டில் இருந்து படிப்படியாகச் செல்வத்தைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டும்.(34) போதுமான அளவைத் தனியாக வைத்துக் கொண்டு, எஞ்சியவற்றைக் கொண்டு, அறத்தகுதியை அடைவது மற்றும், இன்பத்துக்காக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது ஆகியவற்றில் செலவிட வேண்டும். கடமைகளை அறிந்தவனும், நுண்ணறிவு கொண்டவனுமான ஒரு மன்னன், பாதுகாக்கப்பட்டதை {அவ்வாறு திரட்டப்பட்டுப் பாதுகாக்கப்படும் செல்வத்தை} ஒருபோதும் வீணாக்கமாட்டான்.(35)
மன்னன், சிறியது என எந்தச் செல்வத்தையும் ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது; அவன் எதிரிகளின் பலவீனத்தை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது; அவன் தன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, தன்னை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்; அவன் ஒருபோதும் நுண்ணறிவற்ற மனிதர்களின் நம்பிக்கையைச் சார்ந்திருக்கக் கூடாது.(36) உறுதி {உற்சாகம்}, புத்திசாலித்தனம் {ஸாமர்த்தியம்}, தற்கட்டுப்பாடு {அடக்கம்}, நுண்ணறிவு {அறிவு}, உடல்நலம் {தேகம்}, பொறுமை {சௌரியம்}, துணிவு {தைரியம்}, இடம் மற்றும் நேரத்திற்குத் தேவையான கவனம் {ஜாக்ரதையுணர்வு} ஆகிய இந்த எட்டு பண்புகளும், சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும் செல்வத்தைப் பெருகவே வழிவகுக்கும்.(37) சிறு நெருப்பும், தெளிந்த நெய்யூட்டப்பட்டால் பெரும் நெருப்பாகச் சுடர்விட்டெரியும். ஒரே ஒரு விதை கூட ஆயிரம் மரங்களை உண்டாக்கிவிடும். எனவே, ஒரு மன்னன், தன் வருவாயும், செலவினங்களும் பெரிய அளவில் இருப்பதாகக் கேள்விப்பட்டாலும், சிறிய பொருட்களை அலட்சியம் செய்யக்கூடாது.(38) ஓர் எதிரியானவன், சிறுவனாகவோ, இளைஞனாகவோ, முதியவனாகவோ இருப்பினும், கவனமில்லாத மனிதனைக் கொல்வதில் வெல்வான். முக்கியமற்ற ஓர் எதிரியும் பலமடைந்தால், ஒரு மன்னனையே அழித்துவிடுவான். எனவே, காலத்தின் தேவைகளை அறிந்த மன்னனே ஆட்சியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான்.(39) ஓர் எதிரி பலவானாகவோ, பலவீனனாகவோ இருப்பினும், கபடத்தால் வழிநடத்தப்படும் அவன், ஒரு மன்னனின் புகழை மிக விரைவில் அழித்து, அவனால் அடையப்படும் அறத்தகுதியைத் தடுத்து, அவனுடைய சக்தியையே இழக்கச் செய்துவிடுவான். எனவே ஒழுங்குபடுத்தப்பட்ட மனம் கொண்ட மன்னன் ஒருவன், தனக்கு ஓர் எதிரி இருக்கும்போதும் ஒருபோதும் கவனமில்லாமல் இருக்கக்கூடாது.(40)
நுண்ணறிவு கொண்ட ஒரு மன்னன், செழிப்பையும், வெற்றியையும் அடைய விரும்பினால், அவன் தன் செலவினம், வருவாய், சேமிப்பு, நிர்வாகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு, அமைதியையோ, போரையோ தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் காரணமாக மன்னனானவன், நுண்ணறிவுமிக்க ஓர் அமைச்சனின் உதவியை நாட வேண்டும்.(41) சுடர்மிக்க நுண்ணறிவானது ஒரு பலமிக்க மனிதனையும் {எதிரியையும்} பலவீனமடையச் செய்யும்; வளர்ந்து வரும் பலமானது நுண்ணறிவால் பாதுகாக்கப்படும்; வளர்ந்து வரும் ஒரு பகைவன் நுண்ணறிவால் பலவீனமடையச் செய்யப்படுவான். எனவே, நுண்ணறிவின் விதிகளுக்கு இணக்கத்துடன் செய்யப்படும் அனைத்துச் செயலும் போற்றத் தகுந்தவையே ஆகும்.(42) பொறுமையுள்ளவனும், குறையேதும் இல்லாதவனுமான மன்னன் விரும்பினால், சிறிய படையின் உதவியை மட்டுமே கொண்டு அவன் விருப்பங்கள் அனைத்தின் பயன்களையும் அடைவான். எனினும், தன்னலம் நாடும் துதிபாடிக்கூட்டத்தால் சூழப்பட்டிருப்பதை விரும்பும் மன்னன், சிறு நன்மை அடைவதில் கூட ஒருபோதும் வெல்லமாட்டான்.(43) இந்தக் காரணங்களால், மன்னன் தன் மக்களிடம் இருந்து செல்வத்தைப் பெறுவதில் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு மன்னன் தொடர்ந்து தன் மக்களை ஒடுக்கினால், ஒரு நொடி மட்டுமே மின்னும் மின்னலின் கீற்றைப் போல அவன் அழிவை அடைவான்.(44) கல்வி, தவம், பரந்த செல்வம் ஆகியவற்றையும், உண்மையில் அனைத்தையும் உழைப்பால் {முயற்சியால்} ஈட்ட முடியும். உடல் படைத்த உயிரினங்களில் தோன்றும் உழைப்பானது {முயற்சியானது} நுண்ணறிவாலேயே ஆளப்படுகிறது. எனவே உழைப்பே அனைத்திலும் முதன்மையானதாகக் கருதப்பட வேண்டும்.(45)
சக்ரன் {இந்திரன்}, விஷ்ணு, சரஸ்வதி மற்றும் பெரும் சக்தி படைத்த, நுண்ணறிவுமிக்கப் பல உயிரினங்களின் {பூதங்களின்} வசிப்பிடமாக மனித உடலே இருக்கிறது. எனவே, அறிவு கொண்ட மனிதன் ஒருவன் ஒருபோதும் உடலை[3] அலட்சியம் செய்யக்கூடாது.(46) பேராசை கொண்ட மனிதன் ஒருவன், தொடர்ந்த கொடைகளின் மூலம் அடக்கப்பட வேண்டும். பேராசை கொண்டவன் மக்களின் செல்வத்தைப் பறிப்பதில் ஒருபோதும் தணிவடைய மாட்டான். எனினும், இன்புறும் காரியங்களில் அனைவரும் பேராசைக்காரர்களாகவே இருக்கிறார்கள். எனவே, ஒரு மனிதன் செல்வத்தை இழந்தால், அவன் (செல்வத்தால் அடையப்படும் பொருட்களான) அறம் மற்றும் இன்பத்தை இழந்தவனாகிறான்.(47) பேராசைக்கார மனிதன் ஒருவன், பிறரின் செல்வம், இன்பங்கள், மகன்கள், மகள்கள் மற்றும் செழிப்பை அபகரிக்கவே முனைகிறான். பேராசைக்கார மனிதர்களில் அனைத்து வகைக் குற்றங்களும் தென்படும். எனவே, மன்னன் ஒரு பேராசைக்கார மனிதனை தன் அமைச்சராகவோ, அதிகாரியாகவோ ஒருபோதும் நியமிக்கக்கூடாது.(48) ஒரு மன்னன், (உரிய முகவர்கள் இல்லாத போது) எதிரியின் நிலையையும், செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள ஓர் அற்பனையும் அனுப்பலாம். ஞானம் கொண்ட ஆட்சியாளன் ஒருவன், தன் எதிரிகளின் முயற்சிகள் மற்றும் நோக்கங்கள் அனைத்தையும் கலங்கடிக்க வேண்டும்.(49) நம்பிக்கை நிறைந்தவனும், உயர்குடி பிறந்தவனுமான எந்த மன்னன், கல்வியாளர்களும், அறவோருமான பிராமணர்களின் அறிவுரையை நாடுவானோ, எவன் தன் அமைச்சர்களால் பாதுகாக்கப்படுகிறானோ, அவன் {அந்த மன்னன்}, கப்பங்கட்டும் தன் தலைவர்கள் அனைவரையும் உரிய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் வெல்கிறான்[4].(50)
[3] “அது தன்னுடலாக இருப்பினும், பிறனுடலாக இருப்பினும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] “49 மற்றும் 50ம் ஸ்லோகங்கள் பர்துவான் பண்டிதர்களால் தவறாக உரைக்கப்பட்டிருக்கிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “தாழ்ந்த மனிதனையும் நேரில் கண்டு வேலையில் ஏவ வேண்டும். அறிவுள்ளவன் சத்துருக்களுடைய முயற்சிகளையும் எல்லா விஷயங்களையும் நாசஞ்செய்ய வேண்டும். பாண்டுகுமாரனான அரசனே, தர்மத்துடன் கூடிய பிராம்மணர்களிடம் தத்வத்தை அறிந்தவனும் மந்த்ராலோசனையைக் காப்பாற்றுகிறவனும், உண்மையுள்ளவனும் நற்குலத்திற் பிறந்தவனுமாயிருப்பவன் ராஜ்யத்தைச் சேர்ப்பதில் ஸமர்த்தனாவான்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “தாழ்ந்த குலவழியில் பிறந்த மனிதன், அறவோனாகவும், ஞானியாகவும் இருந்தால், தீங்கிழைக்க விரும்புவோரின் நோக்கங்களையும், செயல்பாடுகள் அனைத்தையும் அறிந்து கொள்ளப் பயன்படுத்தப்படலாம். ஓ பாண்டவா, ஓர் அமைச்சன் தர்மத்தைப் பின்பற்றவும், இரகசியத்தைப் பாதுகாக்கவும் தெரிந்தவனாக இருக்க வேண்டும். ஓ மன்னா, அவன் உன்னதக் குலவழியில் பிறந்தவனாகவும், நாட்டை விரிவு படுத்தவல்லவனாகவும் இருக்கவேண்டும்” என்றிருக்கிறது. கங்குலி சொல்லும் பர்துவான் பண்டிதர்களின் உரையைப் பிபேக்திப்ராய்ப் பின்பற்றியிருப்பதாகத் தெரிகிறது.
ஓ! மனிதர்களின் இளவரசே {யுதிஷ்டிரனே}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகள் அனைத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். உன் நுண்ணறிவின் துணையுடன் அவற்றைக் கவனிப்பாயாக. தன் ஆசானுக்குக் கீழ்ப்படிந்து, இவற்றைக் கவனிக்கும் மன்னன், மொத்த உலகையும் ஆள்வதில் வெல்கிறான்.(51) கொள்கையில் இருந்து அடையப்படும் இன்பத்தை அலட்சியம் செய்து, விதி கொண்டு வரும் வாய்ப்பை நாடும் மன்னன், அரசு தொடர்புடைய இன்பத்தை அடைவதிலும், மறுமையில் அருள் உலகங்களை அடைவதிலும் ஒருபோதும் வெல்வதில்லை.(52) போர் மற்றும் அமைதியின் தேவைகளுக்கு உரிய முறையில் பெரும் கவனத்துடன் இருக்கும் மன்னன், செல்வத்துக்காகப் புகழ்பெற்றவர்களும், நுண்ணறிவு மற்றும் நன்னடத்தைக்காக வழிபடப்படுபவர்களும், சாதனைகளைக் கொண்டவர்களும், போரில் துணிவுமிக்கவர்களும், உழைப்புக்கு {முயற்சிக்கு} ஆயத்தமாக இருப்பவர்களுமான எதிரிகளைக் கூடக் கொல்வதில் வெல்கிறான்.(53) பல்வேறு வகையான செயல்கள் மற்றும் நடவடிக்கைகளால் அமையும் வழிமுறைகளை மன்னன் கண்டுபிடிக்க வேண்டும். அவன் ஒருபோதும் விதியை நம்பியிருக்கக்கூடாது. குற்றமற்ற மனிதர்களிடம் குற்றங்களைக் காணும் ஒருவன், செழிப்பையும், புகழையும் அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(54) இரு நண்பர்கள், ஒரே செயலை நிறுவேற்றுவதில் ஈடுபடும்போது, அவர்கள் இருவரில் அந்தப் பணியில் பெரும் சுமையைத் தன் பங்காக ஏற்றுக் கொள்பவனையே எப்போதும் ஞானிகள் மெச்சுகிறார்கள்.(55) நான் உனக்குச் சொன்ன அரச கடமைகளைச் செய்வாயாக. மனிதர்களைப் பாதுகாக்கும் கடமையில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக. அப்போது நீ அறவெகுமதியை நீ எளிதில் அடைவாய். மறுமையில் உள்ள புகழுலகங்கள் அனைத்தும் தகுதியை {புண்ணியத்தைச்} சார்ந்தே இருக்கின்றன” என்றார் {பீஷ்மர்}.(56)
சாந்திபர்வம் பகுதி – 120ல் உள்ள சுலோகங்கள் : 56
ஆங்கிலத்தில் | In English |