Vasuhoma’s teaching of Chastisement! | Shanti-Parva-Section-122| Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 122)
பதிவின் சுருக்கம் : தண்டனையின் தோற்றம் குறித்து வசுஹோமன் மற்றும் மாந்தாதாவுக்கு இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-122 |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. அங்கர்களுக்கு மத்தியில் வசுஹோமன் என்றழைக்கப்படும் பெரும் மன்னன் ஒருவன் இருந்தான்.(1) அந்த மன்னன் எப்போதும் பக்திச் செயல்பாடுகளில் ஈடுபடுபவனாகத் தன் மனைவியின் துணையுடன், எப்போதும் கடும் தவங்களைச் செய்து வந்தான். அவன், பித்ருக்கள் மற்றும் தெய்வீக முனிவர்களால் பெரிதும் மதிக்கப்படும் முஞ்சப்பிருஷ்தம் என்றழைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றான். அங்கே மேருவின் தங்க மலைகளுக்கு அருகில், இமயத்தின் கொடுமுடியில் உள்ள நன்கறியப்பட்ட ஓர் ஆலமரத்தின் நிழலின் கீழ், (பெரும் பிராமணரான) ராமர் {பரசுராமர்} தன் சடாமுடியை ஒன்றாகச் சேர்த்து கட்டியிருந்தார்[1].(3) ஓ! ஏகாதிபதி, அக்காலத்தில் இருந்து, ருத்திரனால் பெரிதும் விரும்பப்பட்ட அந்த இடம், கடும் நோன்புகளைக் கொண்ட முனிவர்களால் முஞ்சப்பிருஷ்தம் என்று அழைக்கப்பட்டது.(4) மன்னன் வசுஹோமன், அந்த இடத்தில் வசித்து, பல தெய்வீகப் பண்புகளை அடைந்து, பிராமணர்களின் மதிப்பை ஈட்டி, புனிதத்தால் ஒரு தேவ முனிவனாகக் கருதப்பட்டான்.(5)
[1] “ஜடாஹரமாதிசத் Jataharamadicat என்பது, “தன் சடாமுடியை அகற்ற ஆணையிட்டார்” என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், “அங்கே அவமானப்பட்டார்” என்றும் கொள்ளலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “தர்மமறிந்தவனும், எப்பொழுதும் பெரிய தவஞ்செய்கிறவனுமான அந்த அரசன் பத்நியுடன் தேவக்கூட்டங்களாலும், ரிஷிக்கூட்டங்களாலும் அடையப்பட்ட முஞ்சபிருஷ்டஞ்சென்றான்; அவ்விடத்தில் முஞ்சமென்னும் ஆலமரத்தினடியில் ஜடையைத் தரிக்கும்போடி ஸ்ரீராமர் ஆஜ்ஞாபித்தார்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “மேருவின் கொடுமுடி, இமயத்தின் தங்க மலைகளில் இருந்தது. முஞ்சவதத்தில் ராமர் தன் சடாமுடியைப் பற்றும்படி ஆணையிட்டார்” என்றிருக்கிறது. மேலும் அதன் அடிக்குறிப்பில், “இந்த ராமர் பரசுராமராவார். குருக்ஷேத்திரத்தின் அருகில் மற்றொரு முஞ்சவதம் இருக்கிறது. இங்கே குறிப்பிடப்படும் முஞ்சவதம் முஞ்சப்பிருஷ்தத்துடன் ஒப்பிடப்படுகிறது. இங்கே யாருடைய சடை பற்றப்பட்டது? என்ன காரணத்திற்காகப் பற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. முஞ்சம் என்பது ஒருவகைப் புல்லாகும். முஞ்சப்பிருஷ்தம் என்பது அந்தப் புல் காணப்படும் சாரலாகும் {சரிவாகும்}” எனத் தெரிவிக்கிறார்.
எதிரிகளை நொறுக்குபவனும், சக்ரனின் நண்பனும், பெரும் ஆன்மா கொண்டவனுமான மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா} வசுஹோமனின் அந்த மலை ஆசிரமத்திற்கு வந்தான்.(6) அங்கே வந்த மாந்தாத்ரி {மாந்தாதா}, கடுந்தவங்களைக் கொண்ட மன்னன் வசுஹோமனைக் கண்டு, அவனுக்கு முன்னிலையில் பணிவுடன் நின்றான்.(7) வசுஹோமன் தன் விருந்தினனுக்குக் கால்களைக் கழுவிக்கொள்ள நீரும், வழக்கமான பொருட்களைக் கொண்ட அர்க்கியமும் கொடுத்து, நலம் விசாரித்து, ஏழு அங்கங்களுடன் கூடிய அவனுடைய நாட்டைக் குறித்தும் விசாரித்தான்.(8) அதன் பிறகு, வசுஹோமன், பழங்காலத்து அறவோரின் நடைமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றும் தன் அரசவிருந்தாளியிடம் {மாந்தாதாவிடம்}, “ஓ! மன்னா {மந்தாதா}, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(9) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு கேட்கப்பட்டவனும், மன்னர்களில் சிறந்தவனுமான மாந்தாத்ரி {மாந்தாதா}, மிகவும் நிறைவடைந்து, சுகமாக அமர்ந்திருக்கும் பெரும் ஞானியன வசுஹோமனுக்குப் பின்வரும் வார்த்தைகளில் பதிலளித்தான்.(10)
மாந்தாத்ரி {வசுஹோமனிடம்}, “ஓ! மன்னா {வசுஹோமரே}, நீர் பிருஹஸ்பதியின் சித்தாந்தங்கள் அனைத்தையும் கற்றவராவீர். ஓ மனிதர்களில் சிறந்தவரே, உசனஸால் {சுக்கிராச்சாரியரால்} விதிக்கப்பட்ட சித்தாந்தங்களையும் நீர் அறிவீர்.(11) நான் தண்டனையின் பிறப்பைக் குறித்து அறிய விரும்புகிறேன். தண்டனைக்கு முன்பு விழிப்புடன் இருந்தது எது? மேலும் அதன் முடிவென்னவென்று சொல்லப்படுகிறது?(12) தண்டனை க்ஷத்திரியனைச் சார்ந்தது என்று எவ்வாறு உண்டானது? ஓ! பெரும் ஞானியே இவை யாவையும் எனக்குச் சொல்வீராக. உமக்குப் பயிற்சிக் கட்டணம் {குருதக்ஷிணை} கொடுக்க ஆயத்தமான ஒரு சீடனாக நான் உம்மிடம் வந்திருக்கிறேன்” என்றான்[2].(13)
[2] “அஃதாவது, உம்மை ஆசானாக ஏற்கிறேன் என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வசுஹோமன் {மந்தாத்ரியிடம்}, “ஓ! மன்னா, உலகைத் தாங்கிப் பிடிக்கும் தண்டனை எவ்வாறு எழுந்தது என்பதைக் கேட்பாயாக. அறத்தின் ஆன்மாவும், அழிவில்லாததுமான அஃது {தண்டனை}, அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு உரிய அரசைப் பராமரித்துக் கொள்வதற்காக உண்டாக்கப்பட்டது.(14) ஒரு காலத்தில், அனைத்துலகின் பெரும்பாட்டனும், தெய்வீகமானவனுமான பிரம்மன், ஒரு வேள்வி செய்ய விரும்பியபோது, தம்மைப் போன்ற தகுதிகளைக் கொண்ட ஒரு புரோகிதரைக் காணத் தவறினார் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(15) இதன் காரணமாக அவர் {பிரம்மன்} தமது மூளையில் கருத்தரித்து, அங்கேயே {அந்த மூளையிலேயே} நீண்ட வருடகாலங்களாக அந்தக் கருவைத் தாங்கி வந்தார். ஆயிரம் வருடம் கடந்ததும் அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்} தும்மினார். அச்செயல்பாட்டால், அந்தக் கரு அவரது தலையில் இருந்து கீழே விழுந்தது.(16) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {மந்தாத்ரி}, பிரம்மனில் இருந்து இவ்வாறு பிறப்பை அடைந்த அந்தத் தெய்வீகமானவர், க்ஷுபர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பெரும் சக்திகளைக் கொண்ட அவர், உயிரினங்களின் தலைவராக ஆனார். ஓ! மன்னா {மந்தாத்ரி}, அந்த க்ஷுபரே, உயர் ஆன்ம பெரும்பாட்டனின் {பிரம்மனின்} வேள்வியில் புரோகிதரானார்.(17)
ஓ! மன்னர்களில் சிறந்தவனே {மந்தாத்ரி}, பிரம்மனின் அந்த வேள்வி தொடங்கியதும் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஏற்றுக் கொண்ட வடிவத்தின் விளைவால் தண்டனை மறைந்தது[3].(18) தண்டனை மறைந்ததும், அனைத்து உயிரினங்களுக்கு மத்தியிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதற்கு மேலும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதற்குள் எந்த வேறுபாடும் இல்லாமல் போனது.(19) அனுமதிக்கப்பட்ட பானம் எது, அனுமதிக்கப்படாத பானமெது என்பதில் வேறுபாடு காண்பதை மனிதர்கள் நிறுத்தினர். அனைத்து உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தீங்கிழைக்கத் தொடங்கின. பாலினக்கலவியின் காரியத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் போனது.(20) அனைத்து உயிரினங்களும் திருடத் தொடங்கின, ஒருவருக்கொருர் இறைச்சியைப் பறித்தனர். பலவான், பலவீனனைக் கொல்லத் தொடங்கினான். எவரும் தன் அருகில் இருப்பவனிடம் சிறு கருணையும் கொள்ளவில்லை.(21)
[3] “அண்டத்தை ஆள்பவரான பெரும்பாட்டன் {பிரம்மன்}, வேள்வி செய்பவரின் மென்மையான, அமைதியான வடிவை ஏற்றதும், அவரது கடும் வடிவில் வசித்து வந்த தண்டனையால் அதற்கு மேலும் நீடித்து இருக்க முடியவில்லை என்பது இங்கே பொருளாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது பெரும்பாட்டன் {பிரம்மன்}, அழிவில்லாத தெய்வீக விஷ்ணுவை வணங்கி, வரந்தரும் அந்தப் பெருந்தேவனிடம்,(22) “ஓ! கேசவா, தற்போதைய நிலையில் நீ உன் கருணையைக் காட்டுவதே தகும்[4]. இப்போது நேரும் குழப்பம் மறையும் வகையில் நீ விதிப்பாயாக” என்றார்.(23) இவ்வாறு சொல்லப்பட்டவனும், மகத்தான சூலத்தைத் தரித்தவனுமான[5], அந்தத் தேவர்களில் முதன்மையானவன், நீண்ட நேரம் சிந்தித்து, தன்னையே, தண்டனையின் வடிவாக்கிக் கொண்டான்.(24) சரஸ்வதி தேவி, அறத்தையே கால்களாகக் கொண்ட அந்த வடிவத்தில் {தண்டனை வடிவத்தில்} இருந்தே, மிக விரைவில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட தண்டநீதியை (தண்டனை அறிவியலை} உண்டாக்கினாள்[6].(25)
[4] 22ம் சுலோகத்தில் வரும் பெருந்தேவன் என்ற சொல்லை மஹாதேவன் என்று கொண்டால், இங்கே சொல்லப்படுவது சிவனாகும். ஆனால் 23ம் சுலோகத்தில் வரும் கேசவ என்ற சொல்லையும் சேர்த்துப் பொருள் கொண்டால், அது விஷ்ணுவாகும். இங்கே கங்குலி விஷ்ணுவாகப் பொருள்கொள்வதாகவே தெரிகிறது.[5] அடிக்குறிப்பைக் காணவும். 24ம் சுலோகத்தில் வரும் மகத்தான சூலத்தைத் தரித்தவன் என்பதைக் கணக்கில் கொண்டால் சொல்லப்படுவது சிவனாகும். கும்பகோணம் பதிப்பில், “பிதாமஹர் ஸநாதனரான விஷ்ணுபகவானைப் பூஜித்து (அவருடன்) வரமளிப்பவரும் தேவருமான மஹாதேவரை நோக்கி, “ஓ, சங்கரரே, இவ்விஷயத்தில் நீர் தயை செய்யத்தக்கவராகிறீர்கள்” என்று சிவனிடம் வேண்டுவதாக இருக்கிறது. இருப்பினும், சங்கரரே என்ற சொல்லின் அடிக்குறிப்பில், “நீலகண்ட வ்யாக்யானத்தோடு கூடின பதிப்புப்படி “கேசவ” என்பது பாடம்” என்று அதே {கும்பகோணம்} பதிப்பில் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “இதன்பேரில், சிறப்புமிக்கவனும், அழிவில்லாதவனும், வரங்களை அளிக்கும் தேவனுமான விஷ்ணுவை வழிபட்டு, அந்தப் பெருந்தேவனிடம், “அறவோரிடம் நீ கருணை காட்ட வேண்டும்” என்று விஷ்ணுவிடம் வேண்டுவதாகவே இருக்கிறது.[5] “இங்கே சூலம் குறிப்பிடப்பட்டாலும், இங்கே குறிப்பால் உணர்த்தப்படுவது விஷ்ணுவேயன்றி மகாதேவன் இல்லை” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] கும்பகோணம் பதிப்பில் இந்தப் பத்தி, “உத்தமமான சூலத்தை ஆயுதமாகக் கொண்டவரும், தேவர்களுக்குத் தேவரும் உலகத்திற்குப் பெரிய காரணரும், பிரம்மா, விஷ்ணு, இந்திரன் இவர்களுடன் கூடியவரும், எல்லாத் தேவாஸுரர்களுடனும் கூடியவரும், தேவர்களுள் மிக உத்தமரும், பகவானுமான அந்த மஹாதேவர் அப்பொழுது தியானஞ்செய்து உலகத்தை நன்றாக ரக்ஷிக்க வேண்டியதற்காக உலகத்தின் ஸங்கரத்தை நாஞ்ஞசெய்வதும் தம் உருவமுள்ளதுமான தண்டத்தை ஸ்ருஷ்டித்தார். அந்தத் தண்டமென்னும் தர்ம்மத்திலிருந்து நீதியென்னும் ஸரஸ்வதி தேவியையும், மூன்று உலகங்களிலும் ப்ரஸித்தமான தண்டநீதியையும் உண்டாக்கினார்” என்று சிவனையே குறிக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “இதன் பேரில் அந்தச் சிறப்புமிக்கவன், நீண்ட நேரம் தியானித்து, திரிசூலத்தையும், சடாமுடியையும் தரித்தான். தேவர்களில் உயர்ந்தவனான அவன் தன்னில் இருந்தே தண்டக்கோலை உண்டாக்கினான். அதிலிருந்து தர்மத்தை நோற்கும் கொள்கையான தேவி சரஸ்வதி உண்டாக்கப்பட்டாள். இவ்வாறு படைக்கப்பட்ட அவள் மூவுலகங்களிலும் தண்டநீதியாகப் புகழ்பெற்றிருக்கிறாள்” என்றிருக்கிறது. கங்குலியின் பதிப்பின்படி கேசவன் என்ற பெயரைக் கொண்டு விஷ்ணுவாகவும், திரிசூலம் என்ற சொல்லைக் கொண்டு சிவனாகவும் கொள்ள முடியும். மகாதேவன் என்ற பெயர் பெரிய தேவன் என்ற பொருளில் விஷ்ணுவையும் குறிக்கும்.
கும்பகோணம் பதிப்பில் வரும் சங்கரன் என்ற சொல், கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, பிபேக்திப்ராயின் பதிப்பிலோ இல்லை. எத்தனை நூல்களை ஒப்புநோக்கினாலும் இங்கே குறிப்பிடப்படுவது விஷ்ணுவா, சிவனா என்பதில் தெளிவு பெற முடியவில்லை.
இதன் பிறகு, மகத்தான சூலத்தைத் தரித்திருந்த அந்தப் பெருந்தேவன் {விஷ்ணு/சிவன்}, சிறிது நேரம் சிந்தித்து, தேவர்களில் ஒரு சிலரை, அவரவர் வகையைச் சேர்ந்தோருக்குத் தலைவர்களாகவோ, ஆட்சியாளர்களாகவோ நியமித்தான்.(26) இதன் பிறகே அவன் ஆயிரம் கண்களைக் கொண்ட தெய்வீக இந்திரனை தேவர்களின் ஆட்சியாளனாக்கினான். விவஸ்வானின் மகனான யமன், பித்ருக்களின் தலைவனாக்கப்பட்டான்.(27) குபேரன், புதையல்களுக்கும் {பொக்கிஷங்களுக்கும்}, ராட்சசர்கள் அனைவருக்கும் தலைவனாக்கப்பட்டான். மேரு மலைகளின் மன்னனாகவும், பெருங்கடல் {சமுத்திர தேவன்} ஆறுகளின் தலைவனாகவும் ஆக்கப்பட்டனர்.(28) பலமிக்க வருணன், நீர்நிலைகள் மற்றும் அசுரர்களுக்கான அரசில் {அரசனாக} நிறுவப்பட்டான். மிருத்யுவானவன், உயிர் மற்றும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக்கப்பட்டான். நெருப்பானவன் {அக்நி}, சக்தி படைத்த அனைத்துப் பொருட்களுக்குத் தலைவனாக்கப்பட்டான்.(29) பலமிக்க ஈசானனும், உயர் ஆன்மா கொண்டவனும், முக்கண்ணனும், அழிவில்லாதவனுமான மஹாதேவன் {சிவன்}, ருத்திரர்கள் அனைவருக்கும் தலைவனாக்கப்பட்டான்[7].(30)
[7] கும்பகோணம் பதிப்பில், “மஹாத்மாவும், ஸநாதனரும், விசாலாக்ஷருமான மஹாதேவரை ப்ரபுவானவர் ருத்திரர்களுக்குத் தலைவரும், ரக்ஷகருமாகச் செய்தார்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “அந்தத் தலைவன், ருத்திரர்களின் பாதுகாவலனாக ஈசானனை அறிவித்தான்” என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், “இது சிவனைக் குறிக்கிறது” எனப் பிபேக்திப்ராய் விளக்குகிறார்.
வசிஷ்டர் பிராமணர்களின் தலைவராக்கப்பட்டார்,
ஜாதவேதஸ் {அக்னியின் மற்றொரு வடிவம்} வசுக்களின் தலைவனாக்கப்பட்டான்.
சூரியன், ஒளிரும் கோள்கள் அனைத்தின் தலைவனாக்கப்பட்டான்,
சந்திரமாஸ் {சந்திரன்}, நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்களின் தலைவனாக்கப்பட்டான்.(31)
அன்சுமான் அனைத்துச் செடிகொடிகளுக்கும், மூலிகைகளுக்கும் தலைவனாக்கப்பட்டான்.
பலமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனும், பனிரெண்டு கரங்களைக் கொண்டவனுமான குமாரன், அல்லது ஸ்கந்தன், (மஹாதேவனுக்குப் பணிவிடை செய்யும்) கணங்கள் மற்றும் பேய்கள் அனைத்திற்கும் தலைவனாக்கப்பட்டான்.(32)
அழிவு, வளர்ச்சி ஆகிய இரண்டின் வித்துகளையும் கொண்ட காலன், அனைத்து உயிர்கள், மரணத்தின் நான்கு பகுதிகள் (ஆயுதங்கள், நோய்கள், யமன் மற்றும் செயல்கள்) மற்றும் இறுதியாக இன்பம் மற்றும் துன்பத்தின் அரசனாக்கப்பட்டான்.(33)
தலைவர்களுக்குத் தலைவனும், சூலந்தரித்தவனும், உயர்ந்த தேவனுமான மகாதேவனே {சிவனே}, ருத்திரர்களின் தலைவன் என்று ஸ்ருதிகள் அறிவிக்கின்றன.(34)
பிரம்மனுக்கு, அதற்கடுத்து {க்ஷுபர் பிறந்த பிறகு} பிறந்தவரும், அனைத்து உயிரினங்களின் தலைவரும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவருமான க்ஷபரிடம் தண்டனைக்கோல் கொடுக்கப்பட்டது.(35)
ஜாதவேதஸ் {அக்னியின் மற்றொரு வடிவம்} வசுக்களின் தலைவனாக்கப்பட்டான்.
சூரியன், ஒளிரும் கோள்கள் அனைத்தின் தலைவனாக்கப்பட்டான்,
சந்திரமாஸ் {சந்திரன்}, நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்களின் தலைவனாக்கப்பட்டான்.(31)
அன்சுமான் அனைத்துச் செடிகொடிகளுக்கும், மூலிகைகளுக்கும் தலைவனாக்கப்பட்டான்.
பலமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனும், பனிரெண்டு கரங்களைக் கொண்டவனுமான குமாரன், அல்லது ஸ்கந்தன், (மஹாதேவனுக்குப் பணிவிடை செய்யும்) கணங்கள் மற்றும் பேய்கள் அனைத்திற்கும் தலைவனாக்கப்பட்டான்.(32)
அழிவு, வளர்ச்சி ஆகிய இரண்டின் வித்துகளையும் கொண்ட காலன், அனைத்து உயிர்கள், மரணத்தின் நான்கு பகுதிகள் (ஆயுதங்கள், நோய்கள், யமன் மற்றும் செயல்கள்) மற்றும் இறுதியாக இன்பம் மற்றும் துன்பத்தின் அரசனாக்கப்பட்டான்.(33)
தலைவர்களுக்குத் தலைவனும், சூலந்தரித்தவனும், உயர்ந்த தேவனுமான மகாதேவனே {சிவனே}, ருத்திரர்களின் தலைவன் என்று ஸ்ருதிகள் அறிவிக்கின்றன.(34)
பிரம்மனுக்கு, அதற்கடுத்து {க்ஷுபர் பிறந்த பிறகு} பிறந்தவரும், அனைத்து உயிரினங்களின் தலைவரும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவருமான க்ஷபரிடம் தண்டனைக்கோல் கொடுக்கப்பட்டது.(35)
உரிய சடங்குகளுடன் அந்த வேள்வி நிறைவடைந்ததும், உரிய மதிப்பை அளித்தபிறகு, மஹாதேவன் {சிவன்}, அறத்தைப் பாதுகாக்கும் தண்டனையை விஷ்ணுவிடம் கொடுத்தான்[8].(36)
விஷ்ணு அதை அங்கிரசுக்குக் கொடுத்தான், தவசிகளில் முதன்மையான அங்கிரஸ், இந்திரனுக்கும், மரீசிக்கும் அதைக் கொடுத்தார். மரிசி அதைப் பிருகுவுக்குக் கொடுத்தார்.(37) பிருகு, அறத்தைப் பாதுகாக்கும் நோக்குடைய அந்தத் தண்டத்தை முனிவர்கள் அனைவருக்கும் கொடுத்தார். முனிவர்கள் அதை லோகபாலர்களுக்கு அளித்தனர். லோகபாலர்கள் மீண்டும் அதை க்ஷுபரிடமே அளித்தனர். க்ஷுபர் அதைச் சூரியனின் மகனான மனுவுக்கு அளித்தார். சிராத்தங்களின் தேவனான அவர் (மனு), உண்மையான அறம் மற்றும் செல்வத்தின் பொருட்டு அதைத் தன் மகன்களிடம் கொடுத்தார்.(39)
விஷ்ணு அதை அங்கிரசுக்குக் கொடுத்தான், தவசிகளில் முதன்மையான அங்கிரஸ், இந்திரனுக்கும், மரீசிக்கும் அதைக் கொடுத்தார். மரிசி அதைப் பிருகுவுக்குக் கொடுத்தார்.(37) பிருகு, அறத்தைப் பாதுகாக்கும் நோக்குடைய அந்தத் தண்டத்தை முனிவர்கள் அனைவருக்கும் கொடுத்தார். முனிவர்கள் அதை லோகபாலர்களுக்கு அளித்தனர். லோகபாலர்கள் மீண்டும் அதை க்ஷுபரிடமே அளித்தனர். க்ஷுபர் அதைச் சூரியனின் மகனான மனுவுக்கு அளித்தார். சிராத்தங்களின் தேவனான அவர் (மனு), உண்மையான அறம் மற்றும் செல்வத்தின் பொருட்டு அதைத் தன் மகன்களிடம் கொடுத்தார்.(39)
[8] “இந்த மொத்த விவரிப்பும், ஒன்றுக்கு மேற்பட்ட முரண்களைக் கொண்டிருக்கிறது. இங்கே உரையாசிரியர் அமைதியாக இருக்கிறார். இந்த முரண்களை விளக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். இந்த விவரிப்பில் இடைசெருகல்கள் நேர்ந்திருக்கும் வாய்ப்பு மிக அதிகம். 34 மற்றும் 36ம் சுலோகங்கள் ஒருவேளை இடைசெருகலாக இருக்கலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “பிறகு, அந்த யாகம் முடிவு பெற்றவுடன், மஹாதேவர் ஸமாதானமுள்ளவராய்த் தர்மத்தை ரக்ஷிக்கும் தண்டத்தை மரியாதை செய்து விஷ்ணுவினிடம் கொடுத்தனர்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “உரிய சடங்குகளுடன் வேள்வி தொடங்கியபோது, விஷ்ணுவைக் கௌரவித்த மஹாதேவன் {சிவன்}, தர்மத்தைப் பாதுகாக்கும் தண்டத்தை அவனிடம் கொடுத்தான்” என்றிருக்கிறது.
தண்டனையானது, உறுதியின்மையால் அல்லாமல் அறத்தால் வழிநடத்தப்பட்டு எந்தப் பாகுபாடுமின்றி விதிக்கப்பட வேண்டும். அது, தீயோரைத் தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். அபராதங்களும், பறிமுதல்கள் ஆகியன அச்சமூட்டும் நோக்கம் கொண்டவையேயன்றி, மன்னனின் கருவூலத்தை நிரப்புவதற்காக அல்ல.(40) ஒருவனுடைய உடலின் அங்கத்தை இழக்கச்செய்வது, அல்லது மரணம் போன்ற தண்டனைகளை அற்பமான காரணங்களுக்காகக் கொடுக்கக்கூடாது. மலைகளில் இருந்து வீசப்படுவது, நாடு கடத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளால் விதிக்கப்படும் உடல் வலி சார்ந்த தண்டனைகளும் அதுபோன்ற {அற்ப} காரணங்களால் கொடுக்கப்படக்கூடாது.(41) சூரியனின் மகனான மனு உலகின் பாதுகாப்புக்காகத் தண்டக்கோலை (தன் மகன்களிடம்) கொடுத்தார். அடுத்தடுத்து தண்டனையை {தண்டக்கோலைக்} கைகளில் ஏந்தியோரின் மூலம், அஃது உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது.(42) தராசின் {துலாக்கோலின்} உச்சியில் (தண்டக்கோலுடன்) தெய்வீக இந்திரன் விழிப்புடன் இருக்கிறான்; அவனுக்குப் பிறகு, சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட அக்னியும்; அவனுக்குப் பிறகு, வருணனும்; வருணனுக்குப் பிறகு பிரஜாபதியும் {விழிப்புடன் இருக்கின்றனர்};(43) பிரஜாபதிக்குப் பிறகு, கட்டுப்பாட்டைச் சாரமாகக் கொண்ட அறமும் {ஒழுக்கமும்}; அறத்திற்குப் பிறகு, பிரம்மனின் மகனான அழிவில்லா சட்டமும் {வியவஹாரமும்};(44) சட்டத்திற்குப் பிறகு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஆற்றலும் விழிப்புடன் இருக்கின்றன; ஆற்றலுக்குப் பிறகு, (தேவர்களை ஆதரிக்க வேள்விகளில் ஆகுதியாகக் கொடுக்கப்படுவதும், உணவாகவும், மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுவதுமான) மூலிகைகளும்; மூலிகைகளுக்குப் பிறகு மலைகளும்;(45) மலைகளுக்குப் பிறகு, அனைத்து வகைச் சாறுகளும் {ரசங்களும்}, அதன் பண்புகளும்; அவற்றுக்குப் பிறகு நிருதி {நிருருதி} தேவியும்; நிருதிக்குப் பிறகு கோள்களும், சொர்க்கத்தின் ஒளிக்கோள்களும்;(46) இவற்றுக்குப் பிறகு வேதங்களும்; வேதங்களுக்குப் பிறகு, குதிரைத் தலை கொண்ட விஷ்ணுவின் பலமிக்க வடிவமும் {ஹயக்கிரீவனும்}; அவனுக்குப் பிறகு, எல்லாம்வல்லவரும், அழிவில்லா பெரும்பாட்டனுமான பிரம்மனும்;(47) பெரும்பாட்டனுக்குப் பிறகு, தெய்வீகமானவனும், அருளப்பட்டவனுமான மஹாதேவனும்; மஹாதேவனுக்குப் பிறகு விஸ்வதேவர்களும்; அவர்களுக்குப் பிறகு பெரும் முனிவர்களும்;(48) முனிவர்களுக்குப் பிறகு தெய்வீக சோமனும்; சோமனுக்குப் பிறகு, அழிவற்றவர்களான அனைத்துத் தேவர்களும்; தேவர்களுக்குப் பிறகு பிராமணர்களும் விழிப்புடன் இருப்பதாக அறிவாயாக.(49) அசையும், மற்றும் அசையாத உயிரினங்களை உள்ளடக்கிய அழிவில்லா அண்டமானது, க்ஷத்திரியர்களால் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளது.(50)
இவ்வுலகில் உயிரினங்கள் விழிப்புடன் வைக்கப்பட்டு, அவர்களுக்கு மத்தியில் தண்டனையும் விழிப்புடன் இருக்கிறது. பெரும்பாட்டனுக்கு {பிரம்மனுக்கு} ஒப்பான காந்தியுடன் கூடிய தண்டனையே அனைத்தையும் தாங்கிப் பிடிக்கிறது[9].(51) ஓ பாரதா, காலமானது, தொடக்கத்திலும், மத்தியிலும், முடிவிலும் என எப்போதும் விழிப்புடனே இருக்கிறது. உலகங்கள் அனைத்தின் தலைவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், பலமிக்கவனும், அருளப்பட்டவனும், தேவர்களுக்குத் தேவனுமான மஹாதேவனும் எப்போதும் விழிப்புடன் இருக்கிறான். அவன், கபர்தின், சங்கரன், ருத்திரன், பவன், ஸ்தாணு, உமையின் தலைவன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறான்[10].(52,53) இவ்வாறே தண்டனையானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் விழிப்புடன் இருகிறது. ஓர் அறம்சார்ந்த மன்னன், தண்டனையால் வழிநடத்தப்பட்டு முறையாக ஆள {ஆட்சி செய்ய} வேண்டும்” என்றான் {வசுஹோமன்}”.(54)
[9] “43 முதல் 51ம் சுலோகம் வரை உள்ள வரிகள் என்ன நோக்கத்துடன் சொல்லப்பட்டுள்ளது வழுவற்ற கருத்து ஏதும் என்னிடம் இல்லை. நீலகண்டர் இதில் அமைதியாக இருக்கிறார். உண்மையில் இவற்றுக்கு ஏதும் பொருள் உண்டா என்பது ஐயம் நிறைந்ததே” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[10] இறுதியில் சிவனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், சிவனா, விஷ்ணுவா என்று இந்தப் பகுதியில் ஐயப்பாடு எழும் இடங்களிலெல்லாம் சொல்லப்படுவது சிவனே என்று ஐயம் தெளியலாம்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வசுஹோமனின் இந்த அறிவுரையைக் கேட்டு, அதில் சொல்லப்பட்டுள்ளபடி நடக்கும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தையும் நிச்சயம் அடைவான்.(55) ஓ! மனிதர்களில் காளையே, அறத்தால் ஆளப்படுவதும், இந்த அண்டத்தைக் கட்டுப்படுத்துவதுமான தண்டனையைக் குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் பீஷ்மர்}.(56)
சாந்திபர்வம் பகுதி – 122ல் உள்ள சுலோகங்கள் : 56
ஆங்கிலத்தில் | In English |