Virtue, Wealth and Pleasure! | Shanti-Parva-Section-123| Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 123)
பதிவின் சுருக்கம் : அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பயன்களையும், அறத்தைக் கைவிட்டவன் செய்யத்தகு கேடுநீக்கும் செயல்முறைகளையும், இவை தொடர்பாகப் பழங்காலத்தில் மன்னன் ஆங்கரிஷ்டனுக்கும் முனிவர் காமந்தகருக்கும் இடையில் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-123 |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, அறம் பொருள், இன்பம் குறித்த முடிவான தீர்மானங்களை நான் கேட்க விரும்புகிறேன். அவற்றில் எதைச் சார்ந்து வாழ்வின் போக்கு செல்கிறது?(1) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய ஒவ்வொன்றின் வேராகவ இருப்பவை யாவை? மேலும் அம்மூன்றின் விளைவுகள் என்ன? அவை சில சமயங்களில் ஒன்றோடொன்று கலந்தும், சில வேளைகளில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தவையாகவும், சார்பற்றவையாகவும் {வேறுபட்டும்}இருக்கின்றன" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வுலகின் மனிதர்கள் நல்லிதயங்களுடனும், அறத்தின் துணையுடனும் செல்வத்தை அடைய முயலும்போது, காலம், காரணம் மற்றும் செயற்பாடு ஆகியவற்றைப் பொறுத்து, அறம், பொருள், இன்பம் ஆகியன ஒன்று கலந்த நிலையிலும், ஒன்றோடொன்று உடன் உறைந்த நிலையிலும் காணப்படுகின்றன[1].(3) செல்வமானது அறத்தில் வேர் கொண்டுள்ளது, மேலும் இன்பமோ, அச்செல்வத்தின் கனி {பயன்} என்றே சொல்லப்படுகிறது. மேலும் இந்த மூன்றும் மனவுறுதியிலேயே {சங்கல்பத்திலேயே} தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. மனவுறுதியானது, பொருள்கள் {நோக்கங்கள்} தொடர்புடையதாகும்.(4) மேலும் அனைத்துப் பொருட்களும் மொத்தமாக இன்ப விருப்பத்தை நிறைவு செய்யவே இருக்கின்றன. அப்போது, இந்த மூன்று திரட்டுகளும் இவற்றையே {மனவுறுதி மற்றும் நோக்கங்களையே} சார்ந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களில் இருந்து முற்றிலும் பிரிந்து இருப்பதே முக்தியாகும் {மோட்சமாகும்}.(5)
[1] "இந்தச் சுலோகத்தை, அறம் சார்ந்த கணவன் ஒருவன், தான் மணந்து கொண்ட மனைவியிடம் உரிய காலத்தில் கலவியை நாடும் செயலின் மூலம் உரையாசிரியர் விளக்குகிறார். கர்ப்பதானம் Garbhadhan என்ற பெயரில் அறியப்பட்ட சடங்கைச் செய்வதன் மூலம் அறத்தகுதியை அடையலாம். மேலும் {இரண்டாவதாக} அச்செயலில் அவனுக்கு இன்பமும் இருக்கிறது, மேலும் இறுதியில் கிடைக்கும் மகன் என்ற வகையில் அவன் மூன்றவதாகப் பொருளையும் அடைகிறான். {எனவே இக்காரியத்தின் மூலம் அவன் அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகிய மூன்றையும் அடைகிறான்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உலகத்தில் மனிதர்கள் பரிசுத்தமான மனமுள்ளவர்களாயிருக்கும்பொழுது, தர்மத்தை முன்னிட்டுப் புத்திரனென்னும் பொருளை அடைய வேண்டுமென்ற நிச்சயமுண்டாகி அதற்குரிய காலமும், அதற்கிடமான பத்நியும் நியாயமான காரியமும் நேர்ந்தால் (அறம்பொருள்இன்பங்களாகிற) மூன்றும் சேர்க்கையடைகின்றன" என்றிருக்கிறது.
உடலைப் பாதுகாக்க அறமும், அறம் ஈட்டுவதற்காகச் செல்வமும் நாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இன்பமானது புலன்களை நிறைவு செய்வதே ஆகும். எனவே, இம்மூன்றும் ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டிருக்கின்றன[2].(6) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன சொர்க்கத்திற்காகவும், அதுபோன்ற வெகுமதிகளுக்காகவும் நாடப்படும்போது, அவ்வெகுமதிகளே தொலைவில் இருப்பதால் அவை {சொர்க்கமும், அதுபோன்ற வெகுமதிகளும்} தொலைவில் இருப்பவையாகச் சொல்லப்படுகின்றன. எனினும், தன்னறிவின் நிமித்தமாக நாடப்படும்போது, அவை நெருக்கமாவதாகச் சொல்லப்படுகிறது. அவை அத்தகைய பண்பில் இருக்கும்போது, அவற்றை ஒருவன் நாட வேண்டும்[3]. ஒருவன் அவற்றை மனத்தாலும் கைவிடக்கூடாது. அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன கைவிடப்பட்டால், தவத்த்துறவுகளின் மூலம் ஒருவன் தன்னை விடுவித்துக் கொண்ட பிறகே அவற்றைக் கைவிட வேண்டும்[4].(7) முக்தியை நோக்கியதே இந்த மூன்று திரட்டுகளின் குறிக்கோளாகும். தகுந்த மனிதன் அஃதை அடைவான். ஒருவன் செய்யும் செயல்கள், நுண்ணறிவின் துணையுடன் நிறைவடையவோ, எதிர்பாரா விளைவுகளுக்கு வழிவகுக்கவோ செய்யும். அறத்தை விட (தொண்டு, உழவு போன்ற) வேறு பொருட்களே செல்வத்திற்கு வழிவகுப்பதால், செல்வத்தின் {பொருளின்} வேர் எப்போதும் அறத்தில் {மட்டுமே} இருப்பதில்லை. மேலும் (சிலர் செல்வமானது, வாய்ப்பு, அல்லது பிறப்பு, அல்லது அதுபோன்ற காரணங்களைக் கொண்டு ஈட்டப்படுவதால்) அதில் ஒரு முரண்பட்ட கருத்தும் இருக்கிறது. சில சமயங்களில், அடையப்படும் செல்வம் தீமையையே விளைவிக்கும். மேலும் செல்வத்தைத் தவிர (விரதங்கள், நோன்புகள் போன்ற) பிற பொருட்கள் அறத்தை அடைய வழிவகுக்கின்றன. எனவே, இதைப் பொறுத்தவரையில், அறியாமை கலந்த அறிவைக் கொண்ட மூடன், அறம் மற்றும் செல்வத்தின் {பொருளின்} உயர்ந்த குறிக்கோளான முக்தியை {மோட்சத்தை} அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(9) அறத்தின் கழிவுகள், வெகுமதியடையும் விருப்பத்தில் இருக்கின்றன; செல்வத்தின் {பொருளின்} கழிவுகள், அதை விளம்பரப்படுத்துவதில் இருக்கிறது; இந்தக் கசடுகள் தூய்மையடையும்போது, அவை பெரும் விளைவுகளை உண்டாக்குகின்றன.(10)
[2] "நன்மை, ஆசை மற்றும் இருள் {நற்பண்பு [சத்வகுணம்], ஆசைப்பண்பு [ரஜோகுணம்], இருள்பண்பு [தமோகுணம்]} என்ற மூன்று குணங்கள், அல்லது பண்புகள் மனிதனினுடைய செயல்களின் பண்புகளை விரித்துரைக்கின்றன. பகவத்கீதையின் இறுதிப் பகுதிகளைக் காண்க. எனவே, அத்தகு {ரஜோ குணம் கொண்ட} அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன பின்பற்றக்கூடிய உயர்ந்த நோக்கங்களல்ல. நற்பண்பை {சத்வகுணத்தைக்} கொண்ட நோக்கங்களே பின்பற்றத்தகுந்தவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
[3] "அஃதாவது, ஒருவன் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்காக மட்டுமே அறத்தையும், கனியில் விருப்பமில்லாமல் {பயனில் ஆசையில்லாமல்} செய்யப்படும் செயல்களுக்குச் செலவழிப்பதற்காக மட்டுமே செல்வத்தையும், உடலைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே இன்பத்தையும் நாட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
[4] தர்மாதிங்காமானைஷ்திகானம் Dharmadinkamanaishthikan, அதாவது தர்மத்தை {அறத்தை} முதலாகவும், காமத்தை {இன்பத்தை} இறுதியாகவும் கொள்தல், எனவே இவை அறம், பொருள் மற்றும் இன்பத்தைக் குறிக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இது தொடர்பாகப் பழங்காலத்தில் காமந்தகர் மற்றும் ஆங்கரிஷ்டன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடலில் குறிப்பிடப்படுகிறது.(11) ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்த மன்னன் ஆங்கரிஷ்டன், சுகமாக அமர்ந்திருந்தவரான முனிவர் காமந்தகரை {அணுகி} வணங்கி, அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டான்.(12)
{ஆங்கரிஷ்டன் காமாந்தகரிடம்}, "ஓ! முனிவரே, ஒரு மன்னன், காமத்தாலோ, மடமையினாலோ உந்தப்பட்டுப் பாவமிழைத்துவிட்டு, பின்பு அதற்காக வருந்தினால், எச்செயல்களைச் செய்வதன் மூலம் {அவனால்} அந்தப் பாவங்களை அழிக்க முடியும்?(13) மேலும் ஒரு மனிதன், அறியாமையால் உந்தப்பட்டும், நேர்மையாகச் செயல்படுகிறோம் என்று நம்பிக்கையிலும் பாவம் நிறைந்த செயலைச் செய்தான் என்றால், மனிதர்களுக்கு மத்தியில் {பொதுவாகவே} நடைமுறையில் இருக்கும் அந்தப் பாவத்தை மன்னனால் எவ்வாறு நிறுத்த முடியும்?" என்று கேட்டான்.(14)
{ஆங்கரிஷ்டன் காமாந்தகரிடம்}, "ஓ! முனிவரே, ஒரு மன்னன், காமத்தாலோ, மடமையினாலோ உந்தப்பட்டுப் பாவமிழைத்துவிட்டு, பின்பு அதற்காக வருந்தினால், எச்செயல்களைச் செய்வதன் மூலம் {அவனால்} அந்தப் பாவங்களை அழிக்க முடியும்?(13) மேலும் ஒரு மனிதன், அறியாமையால் உந்தப்பட்டும், நேர்மையாகச் செயல்படுகிறோம் என்று நம்பிக்கையிலும் பாவம் நிறைந்த செயலைச் செய்தான் என்றால், மனிதர்களுக்கு மத்தியில் {பொதுவாகவே} நடைமுறையில் இருக்கும் அந்தப் பாவத்தை மன்னனால் எவ்வாறு நிறுத்த முடியும்?" என்று கேட்டான்.(14)
காமந்தகர் {ஆங்கரிஷ்டனிடம்}, "அறம், செல்வம் {பொருள்} ஆகியவற்றைக் கைவிட்டு, இன்பத்தை மட்டுமே பின்தொடரும் மனிதன், அத்தகு நடத்தையின் மூலம் தன் நுண்ணறிவை இழப்பதையே அறுவடை செய்கிறான்.(15) நுண்ணறிவின் {புத்தியின்} அழிவைக் கவனமின்மை {மயக்கம்} பின்தொடர்கிறது. உடனே அறம் மற்றும் செல்வம் {பொருள்} ஆகிய இரண்டும் அழிவை அடைகின்றன. அத்தகு கவனமின்மையால் {மயக்கத்தால்}, கடும் இறைமறுப்பும் {நாத்திகமும்}, திட்டப்படியான தீயொழுக்கமும் உண்டாகின்றன.(16) பாவம்நிறைந்த ஒழுக்கம் கொண்ட அந்தத் தீய மனிதர்களை மன்னன் அடக்கிவைக்கவில்லையெனில், பாம்பு மறைந்திருக்கும் வீட்டிற்குள் இருக்கும் ஒருனைப் போல நல்ல குடிமக்கள் அனைவரும் அவனிடம் அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கும்.(17) குடிமக்கள் அத்தகைய மன்னனைப் பின்பற்ற மாட்டார்கள். பிராமணர்களும், பக்திமான்களும் {நல்லோரும்} அவ்வாறே செயல்படுவார்கள். விளைவாக, மன்னன் பேராபத்தையும், அழிவையுமே ஈட்டுவான்.(18) புகழ்க்கேட்டையும், அவமதிப்பையும் அடையும் அவன், துன்பகராமன இருப்பிலேயே தன் வாழ்வை நீட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.(19)
சாத்திரங்களைக் கற்ற மனிதர்கள், பாவத்தைத் தடுப்பதற்காகப் பின்வரும் வழிமுறைகளைக் குறிப்பிட்டிருக்கின்றனர். மன்னன், மூன்று வேதங்களையும் கற்பதற்கே தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அவன் பிராமணர்களை மதித்து, அவர்களுக்கு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.(20) அவன் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவனாக இருக்க வேண்டும். அவன் தூய்மைச் சடங்குகளைச் செய்பவனாக, புனித மந்திரங்களை ஓதுபவனாக இருந்து, தன் நேரத்தை மகிழ்ச்சியாகக் கடத்த வேண்டும். அவன், தீய குடிமக்களைத் தன்னிடம் இருந்தும் தன் நாட்டில் இருந்தும் விரட்டி, நல்லோரின் தோழமையை நாட வேண்டும்.(22) அவன், இனிய சொல், அல்லது நற்செயல்களின் மூலம் மனிதர்கள் அனைவரையும் நிறைவு செய்ய வேண்டும். அவன் அனைவரிடமும், "நான் உங்களுடையவன்" என்று சொல்லி, தன் எதிரியின் நற்பண்புகளையும் அறிவிக்கையிட வேண்டும்.(23) இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், அவன் விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, உயர்ந்த வெகுமதிகள் அனைத்தையும் வெல்வான். இத்தகையான ஒழுக்கத்தின் மூலம் அவனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் அழிவடையும்.(24) உன்னுடைய பெரியோர்கள் மற்றும் ஆசான்கள் குறிப்பிடும் உயர்ந்த கடமைகள் அனைத்தையும் நீ நிறைவேற்ற வேண்டும். உன்னைச் சார்ந்த பெரியோர்கள் மற்றும் ஆசான்களின் அருளின் மூலமாக உன்னால் நிச்சயம் பெரும்பேற்றை அடைய முடியும்" என்றார் {காமந்தகர்}".(25)
சாந்திபர்வம் பகுதி – 123ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |