The behaviour of the conqueror! | Shanti-Parva-Section-96 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 96)
பதிவின் சுருக்கம் : வெல்லப்பட்ட எதிரியை நடத்த வேண்டியதெவ்வாறு? கைப்பற்றப்பட்ட கன்னிகையிடம் நடந்து கொள்ளும் முறை என்ன? கைப்பற்றப்பட்ட உடைமைகளை எவ்வாறு கையாள வேண்டும்? எதிரிநாட்டு மக்கள் எவ்வாறு இணங்கச் செய்யப்பட வேண்டும்? வேர்களை உறுதியாகக் கொண்டவனும், உலகின் வழிகளை அறிந்தவனுமான மன்னன் எவன்? பிரதர்த்தன், திவோதாசன் மற்றும் நாபாகன் ஆகியோர் படையெடுத்துச் சென்று செய்ததென்ன? போன்றவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் ஒடுக்கும் செயல் மொத்த பூமியின் அரசுரிமையையும் ஒரு மன்னனுக்குக் கொடுக்கும் என்றாலும், அவன் ஒருபோதும் அவ்வாறு அடக்க விரும்பக்கூடாது. நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வெற்றியடையும் எந்த மன்னன்தான் அதன்பிறகு மகிழ்ச்சியடைவான்?(1) அநீதியால் களங்கப்படும் வெற்றியானது, நிச்சயமற்றதும், சொர்க்கத்திற்கு வழிநடத்தாததுமாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அத்தகு வெற்றியானது, மன்னன் மற்றும் பூமி ஆகிய இரண்டையும் பலவீனப்படுத்தும்.(2) கவசம் நழுவிய போர்வீரன், "நான் உன்னவன்" என்று சொல்லி சரணடைந்தவன், கரங்கூப்புபவன், தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவன் ஆகியோரை வெறுமனே கைப்பற்ற வேண்டுமேயன்றி ஒருபோதும் கொல்லக்கூடாது.(3) ஓர் எதிரி மன்னன், படையெடுப்பாளனின் துருப்புகளால் வெல்லப்பட்டால், பின்னவன் வெல்லப்பட்ட தன் எதிரியுடன் போரிடக்கூடாது. மறுபுறம், அவன் அவனைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து, "நான் உன் அடிமை" என்று சொல்லும் வகையில் ஒரு வருடகாலம் அவனை இணங்கியிருக்கச் செய்ய வேண்டும். அவன் அதைச் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், வெற்றியாளனின் வீட்டில் ஒரு வருடம் வாழும் வெல்லப்பட்ட அந்த எதிரி, புதிய வாழ்வுக் காலத்தையே அடைகிறான்[1].(4)
[1] "இந்த இடத்தில் மூலச் சொற்கள் மிக நீண்டவையாகச் சிக்கலானவையாக இருக்கின்றன. எனவே, நான் உரையாசிரியரின் விளக்கத்தையே இங்கே விரித்துச் சொல்லியிருக்கிறேன். இரண்டாவது வரியின் இறுதிப் பாதியைப் பொறுத்தவரையில் நான் நீலகண்டனின் விளக்கத்தைப் பின்பற்றவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவரை ஓராண்டு அடக்கி வைக்க வேண்டும். அதன்பிறகு அவன் மறுபிறப்புள்ளவனாகிறான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அவன் ஒரு வருடத்திற்கு அன்புடன் (வீட்டுக்காவலில்) தங்க வைக்கப்பட வேண்டும். அஃது அவன் மீண்டும் பிறந்ததைப் போல இருக்கும்" என்றிருக்கிறது.
ஒரு மன்னன், வெல்லப்பட்ட எதிரியின் வீட்டில் இருந்து ஒரு கன்னிகையைப் பலவந்தமாகக் கொண்டு வந்தால், அவளை ஒரு வருடம் {பாதுகாப்பாக} வைத்திருந்து, பிறகு அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறாளா, அல்லது வேறு எவரையும் திருமணம் செய்து கொள்கிறாளா என்று கேட்க வேண்டும். அவள் ஏற்கவில்லை என்றால், அவள் {அவளது நாட்டுக்கே} திரும்ப அனுப்பப்பட வேண்டும். பலவந்தமாக அடையப்பட்ட பிற செல்வங்களைப் {அடிமைகள் [பணியாட்கள்]} பொறுத்தவரையிலும் கூட இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.(5) கள்வர்கள் மற்றும் {மரண} தண்டனைக்குக் காத்திருப்போர் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்வத்தை மன்னன் ஒருபோதும் தனதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதிரியிடம் இருந்து பலவந்தமாகக் கைப்பற்றப்பட்ட பசுக்கள், பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அவ்விலங்குகளின் பாலை அருந்துவார்கள். எதிரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காளைகள் உழவுப் பணியில் நிறுவப்பட வேண்டும், அல்லது எதிரியிடமே மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்[2].(6) ஒரு மன்னன், மற்றொரு மன்னனிடமே போரிட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. எவன் மன்னனாக இல்லையோ அவன் வேறொரு மன்னனை ஒருபோதும் தாக்கக்கூடாது.(7) ஒரு பிராமணன், அமைதியை விரும்பியவனாக, போரிட்டுக்கொள்ளும் இரு படைகளுக்கு மத்தியில் அச்சமில்லாமல் சென்றால், இரு தரப்பும் உடனடியாகப் போரைக் கைவிட வேண்டும்.(8) ஒரு பிராமணனைக் கொல்லவோ, காயப்படுத்தவோ செய்பவனும் ஒரு நித்திய விதியை உடைப்பான். எந்த க்ஷத்திரியனாவது அவ்விதியை உடைத்தால், அவன் தன் வகையில் இழிந்தவனாவான்.(9) இதனுடன் சேர்த்து, அறத்தை அழித்து, நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறும் அந்த க்ஷத்திரியன், ஒரு க்ஷத்திரியனாக இருக்கத் தகாதவனாகவே கருதப்பட்டுச் சமூகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும்.(10)
[2] "இந்தச் சுலோகமும் மூலத்தில் மிக நீளமானதாக, சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் {5 மற்றும் 6ம் சுலோகங்கள்}, "பராக்ரமத்தால் அபகரிக்கப்பட்ட கன்னிகையை ஒரு வருஷத்திற்கு முன் வினவக்கூடாது {அடிக்குறிப்பில், ’ஒரு வருஷத்திற்குப் பின், "நீ மணம்புரிய விரும்புவது என்னையா, அல்லது மற்றவனையா’ என்று கேட்டு அவளிஷ்டம் போலச் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது}. பலாத்காரமாக அபகரிக்கப்பட்ட பொருளும் மற்றமுள்ள யாவும் இவ்விதமேயாகும். {அடிக்குறிப்பில், "சத்துருவினிடமிருந்து அபகரிக்கப்பட்ட வேலைக்காரன் முதலானவர்களையும், ஒரு வருஷம் சென்றவுடன் சத்துருவுக்கே கொடுத்துவிட வேண்டும். அப்படிச் செய்வது இனாம் கொடுத்தது போலாகும் என்பது பொருள்" என்றிருக்கிறது}. கொலை செய்யத்தக்கவனுடைய பொருளை வைத்துக் கொள்ளக்கூடாது; செலவு செய்துவிட வேண்டும். (அவனுடைய) பசுக்களின் பாலை பிராமணர்களே குடிக்கலாம்; காளைகளையும் உபயோகித்துக் கொள்ளலாம். அவன் குற்றவாளியாக இல்லாவிட்டால் அவனை க்ஷமிக்க வேண்டும்" என்றிருக்கிறது. அடிமை என்ற சொல் பணியாள் என்றே கொள்ளப்பட வேண்டும்.
வெற்றியடைய விரும்பும் ஒரு மன்னன் அத்தகு நடத்தையை ஒருபோதும் பின்பற்றக்கூடாது. நியாயமாக வென்ற வெற்றியை விட ஈட்டுதவற்கு வேறென்ன பெரிதாக இருக்கிறது?(11) (அண்மையில் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நாட்டில் உள்ள) எளிதில் சினங்கொள்கின்ற வர்க்கத்தினர், ஆறுதலான வார்த்தைகளாலும், கொடைகளாலும் தாமதமில்லாமல் இணங்கச்செய்யப்பட வேண்டும். இது மன்னன் பின்பற்றத் தகுந்த நல்ல கொள்கையாகும். இதைச் செய்வதற்குப் பதில் இம்மனிதர்களைக் கொள்கையில்லாத அளவில் ஆள முனைந்தால், அவர்கள் நாட்டைவிட்டுச் சென்று (வெற்றியாளனுடைய) எதிரிகளின் தரப்பைச் சேர்ந்து, (வெற்றியாளனை எதிர்ப்பதற்கானப்) பேரிடர் நேரக் காத்திருப்பார்கள்.(13) நிறைவில்லாத மனிதர்கள், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னனின் இடர்களைக் கவனித்து, ஆபத்தான காலங்களில் காலதாமதமின்றிப் பின்னவனுடைய {மன்னனுடைய} எதிரிகளின் தரப்பில் சேர்ந்து கொள்வார்கள்.(14) ஓர் எதிரி நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வஞ்சிக்கப்படக்கூடாது. அதே போல அவன் மரணம் அடையும் அளவுக்குக் காயப்படுத்தப்படக்கூடாது. அவ்வாறு தாக்கினால் அவனது உயிரே போய்விடக் கூடும்[3].(15)
[3] "வஞ்சகத்தின் உதவியுடன் போரிட்டால் எதிரி கொல்லப்படக்கூடாது, அவ்வாறு கொல்லப்பட்டால் அது பாவம்நிறைந்த செயலாகும். எனினும், நியாயமான போரில் ஓர் எதிரியைக் கொல்வது தகுதிவாய்ந்தது {புண்ணியம் நிறைந்தே} என்பதே இங்குப் பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
குறைந்த வளங்களே கொண்ட ஒரு மன்னன், அதை வைத்துக் கொண்டு நிறைவுடன் இருந்தால், அவன் வாழ்வதே பெரிதெனக் கருதுபவனாவான்[4].(16) எந்த மன்னன், பரந்து விரிந்த, செல்வம் நிறைந்த ஆட்சிப் பகுதிகளைக் கொண்டவனோ, பற்றுறுதியுடன் கூடிய குடிமக்களைக் கொண்டவனோ, மனநிறைவுடன் இருக்கும் பணியாட்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்டவனோ, அவனே தன் வேர்களை உறுதியாகக் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.(17) எந்த மன்னனின் ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள், சாத்திரங்களை நன்கறிந்தவர்கள், கௌரவங்களுக்குத் தகுந்த பிறர் ஆகியோர் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களோ, அவனே இவ்வுலகின் வழிகளை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(18) இத்தகு நடத்தையின் மூலமே இந்திரன் உலகத்தின் அரசுரிமையைப் பெற்றான். இந்த நடத்தையின் மூலமே பூமி சார்ந்த மன்னர்கள், இந்திரனின் நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(19)
[4] "இந்தச் சுலோகம் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை, அல்லது முன்பு சொன்னதற்குத் தொடர்புடையதாகவும் இல்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் {அந்த இரண்டு சுலோகங்களில்}, "விரோதியை அவமதித்து வஞ்சிக்கக்கூடாது. எவ்விதத்திலும் அதிகமாக அடிக்கவுங்கூடாது. அதிகமாக அடிக்கப்பட்ட மனிதன் ஒருஸமயம் உயிரையும் விட்டுவிடுவான். துன்பப்படுத்தப்பட்டவன் சிறிது திரவியத்தைப் பெற்றிருந்தும் ஸந்தோஷப்பட மாட்டான். அவ்விதமுள்ளவன் உயிர் ஒன்றை மாத்திரமே பெரிதாக நினைப்பான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "ஓர் எதிரி நிந்திக்கப்படவோ, எவ்வழியிலும் கடுமையாகத் தாக்கப்படவோ கூடாது. கடுமையாகத் தாக்கப்பட்டால் அம்மனிதனின் உயிரே முடிந்துவிடும். ஒருவன் சிறிதளவே உடைமைகளைப் பெற்றிருந்தாலும், அவன் பெரிய குற்றமேதும் இழைக்கப்படாததால் நிறைவுடன் இருக்க வேண்டும். உயிர் மட்டுமே எஞ்சியிருக்கிறது என்று இவ்வாறு மீண்டும் மீண்டும் அவன் நினைப்பான்" என்றிருக்கிறது.
மன்னன் பிரதர்த்தனன், பெரும்போரில் தன் எதிரிகளை அடக்கி, தானியங்கள், மருத்துவ மூலிகைகள் உள்ளிட்ட அவர்களுடைய செல்வமனைத்தையும் எடுத்துக் கொண்டாலும், அவர்களுடைய நிலத்தைத் தீண்டாமல் விட்டுவிட்டான்.(20) மன்னன் திவோதாசன், தன் எதிரிகளை அடக்கிய பிறகு, அவர்களுடைய வேள்வி நெருப்பில் எஞ்சியவற்றையும், (காணிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த) தெளிந்த நெய்யையும், அவர்களது உணவையும் எடுத்துக் கொண்டான். இதன் காரணமாக அவன் வெற்றி கொண்டதன் தகுதியை இழந்தான்[5].(21) மன்னன் நாபாகன் (தன் படையெடுப்புகள் முடிந்ததும்), கல்விமான்களான பிராமணர்கள் மற்றும் தவசிகளின் செல்வத்தைத் தவிர்த்து, மொத்த நாடுகளையும் அதன் ஆட்சியாளர்களோடு சேர்த்துப் பிராமணர்களுக்கான வேள்விக்கொடையாகக் கொடுத்தான்.(22) ஓ யுதிஷ்டிரா, பழங்காலத்தின் நீதிமிக்க மன்னர்கள் அனைவரின் நடத்தைகள் சிறப்பானவையாக இருக்கின்றன. அவற்றை நான் மொத்தமாக அங்கீகரிக்கிறேன்.(23) எந்த மன்னன் தன் செழிப்பை விரும்புவானோ, அவன் சிறப்பான அனைத்தின் துணை கொண்டு படையெடுக்க முனைய வேண்டுமேயன்றி, வஞ்சகத்துடனோ, செருக்குடனோ அல்ல" என்றார் {பீஷ்மர்}.(24)
[5] "மன்னன் பிரதர்த்தனன் முறையானதை எடுத்துக் கொண்டதால் எந்தப் பாவத்தையும் இழைக்கவில்லை. எனினும் மன்னன் திவோதாசன் எடுக்கக்கூடாததை எடுத்ததால் அவன் வெற்றிகொண்டதன் தகுதி {புண்ணியம்} அனைத்தையும் இழந்தான் என்பதே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 96ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |