Heroism! | Shanti-Parva-Section-97 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 97)
பதிவின் சுருக்கம் : மன்னர்கள் குற்றமற்றவர்களாக ஆகும் வழிமுறைகள்; மன்னன் ஏன் ஒரு வேள்வியின் தன்வடிவமாகச் சொல்லப்படுகிறான்? அச்சத்திலிருப்போரைப் போராதுகாத்தல் மற்றும் அச்சமின்மை ஆகிய வீரர்களின் பண்புகள்; நோய்ப்படுக்கையில் மரணம் மற்றும் வீரமரணம் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா, க்ஷத்திரியர்களின் நடைமுறைகளைவிடப் பாவம் நிறைந்தவை வேறெவையும் இல்லை. போருக்கு அணிவகுத்துச் செல்லும் போதோ, போரிலோ மன்னன் பெரும் எண்ணிக்கையிலானவர்களைக் கொல்கிறான்[1].(1) எந்தச் செயல்பாடுகளின் மூலம் மன்னன் புகழ் உலகங்களை வெல்கிறான்? ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! கல்விமானே நான் அறிய விரும்பும் இவற்றை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
[1] "நீலகண்டர் மஹாஜனம் mahajanam என்பதைப் படைகளின் துணையும் செல்லும் வைசிய வணிகள் என்று பொருள் கொள்கிறார். அவரைப் பின்பற்றி வட்டார மொழிபெயர்ப்பாளர்களும் அந்தச் சொல்லுக்கான பொருளை அதே வகையில் கொள்கின்றனர். எனினும், இது தவறானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அந்தச் சொல்லுக்கு, "பெரும் எண்ணிக்கையிலான மக்கள்" என்பதே பொருள். க்ஷத்திரிய நடைமுறைகள் பாவம் நிறைந்தவை என்று சொல்வதற்குத் துருப்புகளுக்கு மத்தியில் உள்ள வைசியர்களின் படுகொலை மட்டுமே காரணம் என யுதிஷ்டிரன் ஏன் குறிப்பிட வேண்டும்? அபயாணம் Apayanamஎன்பது "தப்பி ஓடுவது" என்ற பொருளைத் தரும். நான் "அணிவகுப்பு" என்ற பொருளைத் தரும் அரயாணம் Arayana என்ற சொல்லையே விரும்புகிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அரசன் விரோதமாக நடத்தும் பொழுதும் யுத்தத்திலும் பல ஜனங்களைக் கொல்கிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மன்னன் போருக்குப் படையெடுத்துச் சென்று பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொல்கிறான்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தீயோரைத் தண்டித்தல், நல்லோரை இணைத்துக் கொண்டு அவர்களைப் பேணி வளர்த்தல், வேள்விகள் செய்தல் மற்றும் கொடைகள் அளிதல் ஆகியவற்றின் மூலம் மன்னர்கள் குற்றமற்றவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆகிறார்கள்.(3) வெற்றியடைய விரும்பும் மன்னர்கள் பல உயிரினங்களைப் பீடிக்கிறார்கள் என்பது உண்மையே. இருப்பினும் வெற்றி அடைந்த பிறகு அவர்கள் அவை அனைத்தையும் முன்னேற்றவும், வளர்ச்சியடையச் செய்யவும் உதவுகிறார்கள்.(4) கொடைகள், வேள்விகள், தவங்கள் ஆகியவற்றால் அவர்கள் தங்கள் பாவங்களை அழித்து, உயிரினங்கள் அனைத்திற்கும் செய்யும் நன்மையால் தங்கள் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அதிகரித்துக் கொள்கிறார்கள்.(5)
நிலத்தைச் சீரமைப்பவன், அதைச் சீரமைப்பதற்காக நெற்கதிர்களையும், களைகளையும் எடுக்கிறான். எனினும், அவனது செயல்பாடுகள் நெற்கதிர்களை அழிக்காமல் அவற்றை மேலும் வளமாக வளரச் செய்கின்றன.(6) ஆயுதங்களைத் தரிப்போர், அழிவுக்குத் தகுந்த பலரை அழிக்கிறார்கள். எனினும், அத்தகு பரந்த அழிவானது, எஞ்சியிருப்போரை வளரவும், முன்னேறவும் செய்கிறது.(7) கொள்ளை, கொலை, துன்பம் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்கும் ஒருவன், இவ்வாறு அவர்களின் வாழ்வைக் கள்வர்களிடம் இருந்து காப்பதன் விளைவால், செல்வம், உயிர் மற்றும் உணவு ஆகியவற்றைக் கொடுப்பவனாகக் கருதப்படுகிறான்.(8) எனவே, மன்னன், அனைவரின் அச்சங்களையும் விலக்கும் தக்ஷிணையுடன் கூடிய வேள்வியைச் செய்து தேவர்களைத் துதிப்பதன் மூலம் இம்மையில் புகழையும், மறுமையில் இந்திரனின் சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தையும் அடைகிறான்[2].(9)
[2] "குடிமக்களைப் பாதுகாப்பது என்பது அனைத்து வேள்விகளின் தகுதியையும் ஈட்டித் தரும் ஒரு வேள்வியோடு இங்கு ஒப்பிடப்படுகிறு. அவ்வேள்வியில் இறுதிக் கொடையானது அனைவரின் அச்சம் விலகுவதே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிராமணர்களின் நிமித்தமாக எழுந்த போர்களில் எதிரிகளுடன் போரிட்டு உயிரை விடும் மன்னன், அளவிலா கொடைகளுடன் கூடிய ஒரு வேள்வியின் உடல் வடிவமாகவே கருதப்படுகிறான்.(10) ஒரு மன்னன், தன் அம்பறாத்தூணிகள் நிறந்த கணைகளைத் தன் எதிரிகளின் மீது அச்சமில்லாமல் ஏவினால், பூமியில் அவனுக்கும் மேன்மையான எவனையும் தேவர்களும் கூடக் காண்பதில்லை.(11) அவ்வாறிருக்கையில், அவன் தன் எதிரிகளின் உடல்களை எத்தனை கணைகளால் துளைக்கிறானோ, அழிவில்லாதவையும், அனைத்து விருப்பங்களையும் அருளவல்லவையுமான அத்தனை உலகங்களையும் அவன் {மறுமையில்} அனுபவிக்கிறான்.(12) அத்தருணத்தில் அவனது உடலில் இருந்து வழியும் குருதியானது, அவனது உடல்வலியுடன் சேர்த்து அவனது பாவங்கள் அனைத்தையும் கழுவுகிறது.(13) ஒரு க்ஷத்திரியின் போரில் அனுபவிக்கும் வலியானது, அவனது தகுதியை {புண்ணியத்தை} மேம்படுத்தச் செயல்படும் தவங்களைப் போல ஆகிறது எனச் சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் சொல்கின்றனர்.(14)
அச்சத்திலிருக்கும் நல்லோர், மேகங்களிடம் மழையை வேண்டும் மனிதர்களைப் போலப் போருக்கு விரைந்து சென்றிருக்கும் வீரர்களிடம் உயிரை வேண்டி பின்னால் நிலைக்கிறார்கள்.(15) வீரர்கள், அவ்வாறு வேண்டுவோரை போரின் ஆபத்துகளை அடைய விடாமல், தாங்களே ஆபத்துகளைச் சந்தித்து அவர்களைப் பின்புறம் இருக்கச் செய்தால், அவர்களுடைய தகுதி {புண்ணியம்} மகத்தானதாகிறது.(16) மேலும் அச்சத்திலிருக்கும் அந்த மனிதர்கள், அந்தத் துணிச்சல்மிக்கச் செயலைப் பாராட்டி, தங்களைப் பாதுகாப்போரை எப்போதும் மதித்தால், அவர்கள் முறையானதையும், நீதியானதையும் செய்கிறார்கள். அவர்கள் வேறு வகையில் செயல்பட்டால், அவர்களால் தங்களை அச்சத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாது.(17) தோற்றத்தில் இணையான மனிதர்களுக்கிடையிலேயே பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. பயங்கரக் கலவரத்துக்கு மத்தியில் சிலர் பகைவரின் படையணிகளை எதிர்த்து விரைகின்றனர்.(18)
உண்மையில், வீரர்களானவர்கள், சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையைப் பின்பற்றி, எதிரிக்கூட்டத்தை எதிர்த்து விரைகிறார்கள். எனினும், கோழைத்தனமான அச்சத்திலிருப்பவன், ஆபத்தில் இருக்கும் தன் தோழர்களைக் கைவிட்டுத் தப்பி ஓடுவதில் பாதுகாப்பை அடைய முனைகிறான்.(19) அதுபோன்ற இழிந்தவர்கள் உன் குலத்தில் பிறக்க வேண்டாம். தங்கள் தோழர்களைப் போரில் கைவிட்டு, காயமில்லா அங்கங்களுடன் வீடு திரும்புவோருக்கு இந்திரனின் தலைமையிலான தேவர்களே பேரிடரை உண்டாக்குவார்கள். எவன் தன் தோழர்களைக் கைவிட்டு தன் உயிர் மூச்சைக் காக்க விரும்புகிறானோ, அவன் தண்டங்களாலோ, கற்களாலோ அடித்துக் கொல்லப்பட வேண்டும், அல்லது காய்ந்த புற்படுக்கையில் உருட்டி தீயிட்டுக் கொல்லப்பட வேண்டும். அத்தகு குற்றமுள்ள நடத்தை கொண்ட க்ஷத்திரியர்கள், விலங்குகளைக் கொல்லும் முறையில் கொல்லப்பட வேண்டும்.(20-22)
இளைப்பாறும் படுக்கையில், மலம் மற்றும் சிறுநீரை வெளியிட்டு, பரிதாபமாகக் கதறி அழுது மரணத்தை அடையும் க்ஷத்திரியன் பாவம் நிறைந்தவனாவான்.(23) சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் உடலில் காயமின்றி ஒரு க்ஷத்திரியன் அடையும் மரணத்தை மெச்சுவதில்லை.(24) ஓ! ஐயா, வீட்டில் மரணத்தை அடையும் க்ஷத்திரியன் புகழுக்குத் தக்கவனன்று. அவர்கள் {க்ஷத்திரியர்கள்} வீரர்களாவர். அவர்களுடைய வீரமில்லா எந்தச் செயலும் பாவம் நிறைந்ததும், மகிமையற்றதுமாகும்.(25)
ஒரு நோயாளி, தன் உடல் மற்றும் துணிகளில் இருந்து நாற்றம் வெளிப்படும் நிலையில், வற்றிய முகத்துடன், "இஃது என்ன துயரம்? இது வலிநிறைந்தது! நான் பெரும் பாவியாவேன்" என்று சொல்லி தன் உறவினர்களைத் துயரில் ஆழ்த்துகிறான்.(26) உடல்நலமிக்கவர்களின் நிலையில் நாட்டங்கொள்ளும் அவன், (தான் அடையும் சித்திரவதைகளுக்கு மத்தியில்) மரணத்தையே திரும்பத் திரும்ப விரும்புகிறான். எவன் கண்ணியமும், செருக்கும் மிக்க வீரனோ, அவன் இத்தகு மகிமையற்ற மரணத்திற்குத் தகுந்தவனல்ல.(27) உறவினர்கள் சூழ போரில் தன் எதிரிகளைக் கொல்லும் க்ஷத்திரியன், கூரிய ஆயுதங்களின் முனையிலேயே இறக்க வேண்டும்.(28) இன்பமடையும் ஆசையில், கோபத்தால் நிறையும் ஒரு வீரன், சீற்றத்துடன் போரிட்டால், எதிரிகளால் தன் உடலில் ஏற்படும் காயங்களின் வலியை உணர மாட்டான்.(29) போரில் மரணத்தை அடையும் அவன், புகழ் நிறைந்த உயர்ந்த தகுதியை {புண்ணியத்தை} ஈட்டி, தன் வகைக்கான உலகத்தை எட்டி, இறுதியாக இந்திரனின் சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தையும் அடைகிறான்.(30)
போரில் புறமுதுகிடாத வீரன் ஒருவன், தன் உயிரைத் துச்சமாக மதித்து போரின் முன்னணியில் தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் போரிட்டு, இந்திரனின் தோழமையை அடைகிறான்.(31) பகைவர்களுக்கு மத்தியில், உன்னதமற்ற அச்சத்தையோ, உற்சாகமின்மையையோ வெளிப்படுத்தாமல் எந்த வீரன் மரணத்தை அடைகிறானோ, அவன் மறுமையில் அழிவில்லா அருளைக் கொண்ட உலகங்களை ஈட்டுவதில் வெல்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(32)
சாந்திபர்வம் பகுதி – 97ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |