Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 98)
பதிவின் சுருக்கம் : சுதேவனின் வரலாற்றையும், போர் எனும் வேள்வியில் ரித்விக்குகள், சத்யஸ்கள் முதலிய அங்கங்களையும், போரில் இறந்தவர்கள் அடையும் உலகங்களையும் இந்திரன் அம்பரீஷனுக்குச் சொன்னது...
Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, புறமுதுகிடாமல் போரில் மரணமெய்தும் வீரர்கள் ஈட்டும் உலகங்கள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக அம்பரீஷனுக்கும், இந்திரனுக்கும் நடந்த உரையாடல் பழங்கதை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.(2) நாபாகனின் மகனான அம்பரீஷன் அடைதற்கரிய சொர்க்கத்திற்குச் சென்று, அந்தத் தெய்வீக உலகங்களில் இந்திரனின் துணையுடன் தன் படைத்தலைவன் {சுவேதன்} இருப்பதைக் கண்டான்.(3) அந்த மன்னன் {அம்பரீஷன்}, பலமிக்கத் தன் படைத்தலைவன், தெய்வீக வடிவுடன் அனைத்து வகைச் சக்தியாலும் ஒளிர்ந்து கொண்டு, ஓர் அழகிய தேரில் அமர்ந்து கொண்டு (அந்த வாகனத்திலேயே) மேலும் மேலும் உயர்ந்த உலகங்களுக்குச் செல்வதைக் கண்டான்.(4) தன் படைத்தலைவனான சுதேவனின் செழிப்பைக் கண்டு, மேலும் மேலும் உயர்ந்த உலகங்களுக்கு அவன் செல்வதையும் கண்ட உயர் ஆன்ம அம்பரீஷன், ஆச்சரியத்தால் நிறைந்து, பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு வாசவனிடம் {இந்திரனிடம்} பேசினான்.(5)
அம்பரீஷன் {இந்திரனிடம்}, "கடல் சூழ்ந்த மொத்த உலகையும் முறையாக ஆண்டு, அறத்தகுதியை ஈட்ட சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி நால்வகையினருக்கான பொதுவான கடமைகள் அனைத்தையும் பயின்று,(6) பிரம்மச்சரிய வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் கடுந்தவத்துடன் பயின்று, என் ஆசான்களிடமும், மதிப்பிற்குரிய பிற பெரியோரிடமும் கடமைநிறைந்த பணிவுடன் காத்திருந்து {பணிவிடை செய்து}, வேதங்களையும், அரச கடமைகள் சார்ந்த சாத்திரங்களையும் உரிய நடைமுறையுடன் கற்று,(7) உணவு மற்றும் பானங்களால் விருந்தினர்களையும், சிரார்த்தங்களில் காணிக்கையளித்துப் பித்ருக்களையும், கவனமாகச் சாத்திரங்களைக் கற்று முனிவர்களையும் நிறைவு செய்து, (அறப்புதிர்களில் உரிய வடிவங்களிலான) தொடக்கத்தை ஏற்படுத்தி, சிறந்தவையும், உயர்ந்தவையுமான பல வேள்விகளைச் செய்து தேவர்களையும் நிறைவு செய்து,(8) ஓ! வாசவா {இந்திரா}, சாத்திரங்களில் அறிவுறுத்தியுள்ளபடி க்ஷத்திரியக் கடமைகளை முறையாக நோற்று, பகைவரின் படைமீது அச்சமில்லாமல் என் கண்களைச் செலுத்தி போரில் பல வெற்றிகளை நான் அடைந்தேன்.(9) ஓ! தேவர்களின் தலைவா, இந்தச் சுதேவன் முன்பு என் படைகளின் தலைவனாக இருந்தான். அமைதியான ஆன்மா கொண்ட போர்வீரன் அவன் என்பது உண்மையே. எனினும், என்ன காரணத்தால் அவன் {சுவேதன்} என்னை விஞ்சி நிற்கிறான்?(10) உயர்ந்தவையும், பெரியவையுமான வேள்விகளில் அவன் ஒருபோதும் தேவர்களை வழிபட்டதில்லை. விதிப்படி அவன் (அடிக்கடி கொடுக்கப்படும் விலையுயர்ந்த கொடைகளால்) பிராமணர்களை ஒருபோதும் நிறைவு செய்ததில்லை. அவ்வாறிருக்கையில், {இங்கே சொர்க்கத்தில்} அவன் {சுவேதன்} எவ்வாறு என்னை விஞ்சி நிற்கிறான்?" என்று கேட்டான்[1].(11)
[1] கும்பகோணம் பதிப்பில் இங்கே கங்குலியில் இல்லாத ஒரு செய்தி சொல்லப்படுகிறது. அதன் சுருக்கம் பின்வருமாறு: "அம்பரீஷனுக்குப் பகைவர்களாக இருந்த ஸம்யன், வியமன், ஸுயமன் ஆகிய மூன்று ராட்சசர்களை அவனது சேனாதிபதியான சுதேவன் கொன்றான். நூறுகோடி பரிவாரமுள்ள பெரிய ராட்சசப் படையுடன் வந்த அந்த மூவரும் அம்பரீஷனின் குடிமக்களைச் சிறையிலடைத்து, துன்புறுத்தினார்கள். அம்பரீஷனிடம் முக்கியத்துவமில்லாமல் இருந்த சுதேவனை அழைத்து அந்த ராட்சசர்களைக் கொல்ல வேண்டும் என்று அவர்களிடம் அனுப்பினான். அசுரர் படையைக் கண்ட சுதேவன் அது தன்னால் இயலாதென்று கருதி, படையைத் திருப்பி அனுப்பிவிட்டு, சிவனைப் போற்றி, தன் தலையை அறுத்துக் கொள்ள முயன்றான். அப்போது கருணை கொண்ட சிவன், தனுர்வேதம், பெரிய தேர், பிநாகமெனும் வில், கத்தி மற்றும் அஸ்திரங்களை அவனுக்கு அளித்து, அவன் அந்தத் தேரில் இருக்கும் வரை அழிவடையமாட்டான். எனவே தேரில் இருந்து இறங்க வேண்டாம் என்றும் சொல்லி அனுப்பினான். பிறகு அந்தச் சுதேவன் தன் மக்களை விடுவித்து, ராட்சசர்களைக் கொன்று, வியமனை எதிர்த்த மற்போரில் {மண்ணில் இறங்கிப் போரிட்டதால்} இறுதியாகக் கொல்லப்பட்டான். வியமனும் வீழ்த்தப்பட்டான். அந்தச் சுதேவனுக்குப் போரெனும் பெரிய வேள்வி உண்டானது, அதனால் அவன் இந்தத் தகுதியை அடைந்திருக்கிறான் என்று இந்திரன் அம்பரீஷனிடம் சொன்னான். அப்போது அம்பரீசன் இந்திரனிடம், "போரெனும் வேள்வியில் ஆகுதிகள் எவை? நெய் எவை? தக்ஷிணை எவை? ரித்விக்குகள் யாவர்?" என்று கேட்டான். அதற்குப் பதிலாக இந்திரன் கங்குலியில் உள்ளதைப் போலப் பின்வருமாறு சொன்னான்"
இந்திரன் {அம்பரீஷனிடம்}, "ஓ! ஐயா, இந்தச் சுதேவனைப் பொறுத்தவரையில், பெரும் வேள்வியெனும் போரில் அவன் அடிக்கடி ஈடுபட்டான். போரில் ஈடுபடும் வேறு எந்த மனிதனும் அதே நிலையையே அடைவான்.(12) கவசம் போன்ற போர்வீரன் ஒவ்வொருவனும், போர் வியூகத்தில் எதிரிகளை எதிர்த்து விரைந்து, அந்த வேள்வியில் நிறுவப் பட்டவனாகிறான். உண்மையில், அத்தகு மனிதன், இவ்வழியில் செயல்படுவதால், போரெனும் வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுவான் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கும் ஒன்றாகும்" என்றான்.(13)
அம்பரீஷன் {இந்திரனிடம்}, "அந்த வேள்வியில் எவை ஆகுதியாகின்றன? எவை அதன் நீர்க்காணிக்கைகளாகின்றன? தக்ஷிணை என்பது என்ன? மேலும் ரித்விக்குகளாகக் கருதப்படுபவர் யாவர்? ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(14)
இந்திரன் {அம்பரீஷனிடம்}, "யானைகளே அவ்வேள்வியில் ரித்விக்குகளாகின்ற, குதிரைகள் அதர்யுக்களாகின்றன. பகைவரின் சதை அதன் ஆகுதிகளாகின்றன, குருதியே அதன் நீர்க்காணிக்கையாகிறது.(15) நரிகள், கழுகுகள், கருங்காக்கைகள், சிறகு படைத்த கணைகள் ஆகியன சத்யஸ்களாகின்றன. இவை இந்த வேள்வியில் நீர்க்காணிக்கையாக்கப்படுவனவற்றில் எஞ்சியதைப் பானம் செய்து, அதன் ஆகுதிகளில் எஞ்சியவற்றை உண்கின்றன.(16) சுடர்மிக்கவையும், கூரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான வேல்கள், ஈட்டிகள், வாள்கள், கணைகள், கோடரிகள் ஆகியன வேள்வி செய்பவர்களின் கரண்டிகளாகின்றன.(17) நேரானவையும், கீரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையும், பகைவரின் உடல்களைத் துளைக்கவல்லவையும், நன்கு வளைக்கப்பட்ட விற்களில் இருந்து ஏவப்படுபவையுமான கணைகள், இரு வாய்க் கொண்ட கரண்டிகளாகின்றன.(18) புலித் தோலாலான வாளுரையில் இருப்பவையும், தந்தக் கைப்பிடி அமைந்தவையும், யானையின் துதிக்கையை வெட்டவல்லவையுமான வாள்கள் இவ்வேள்வியின் ஸ்ப்யங்களாகின்றன[1]. சுடர்மிக்கவையும், கூரியவையும், கடின இரும்பாலானவையுமான வேல்கள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் கோடரிகளால் உண்டாக்கப்பட்ட கீறல்கள், தொகை மற்றும் காலத்திற்கு உடன்பட்டு மதிப்பு மிக்க மனிர்களிடம் இருந்து அடையப்படும் அபரிமிதமான செல்வங்களாகின்றன.(20)
[2] "வேள்வி மேடையில் கோடுகள் வரையப் பயன்படும் ஒரு மரத்தடியின் பெயரே ஸ்பயமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். ஸ்ப்யம் வேள்விக்குப் பயன்படும் ஒரு பொருள் என்று கும்பகோணம் பதிப்பில் அடிக்குறிப்பிருக்கிறது.
மூர்க்கமான தாக்குதலின் விளைவால் களத்தில் பாயும் குருதியானது, இந்த வேள்வியின் ஹோமத்தில், பெரும் தகுதி {புண்ணியம்} நிறைந்ததும், அனைத்து விருப்பங்களையும் அருளவல்லதுமான இறுதி ஆகுதியாகிறது.(21) அணிவகுக்கும் படைகளின் முன்னணியில் கேட்கப்படும் வெட்டு, துளை போன்ற ஒலிகள், யமனின் வசிப்பிடத்தில் வேதம் ஓதுபவர்களால் பாடப்படும் சாமங்களாகின்றன.(22) பகைவருடைய அணிவகுப்பில் உள்ள முன்னணி படையணிகள், ஆகுதிகளை வைக்கும் பாத்திரங்களாகின்றன. கவசம் தரித்த மனிதர்கள் யானைகள் மற்றும் குதிரைகளின் கூட்டமானது, அந்த வேள்வியின் சியேனசிதமெனும் நெருப்பாகிறது[3].(23) ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதும் எழுந்து நிற்கும் தலையற்ற முண்டங்கள், அந்த வேள்வியைச் செய்யும் வீரனுக்காகச் செய்யப்படுவதும், கருங்காலி மரத்திலானதுமான எண்கோண {எட்டு பக்கமுள்ள} யூபமாகிறது {வேள்வித்தண்டாகிறது}.(24) அங்குசங்களால் தூண்டப்படும் யானைகளின் பிளிறல்கள், இடாஹ்வானம் எனும் மந்திரங்களாகின்றன. ஓ! மன்னா, பேரிகைகளும், வசத்களாகும் உள்ளங்கையொலிகளும், அதன் திரிசாமன் உத்காத்ரியாகின்றன {மூன்று சாமங்களையுடைய உத்காதாவாகின்றன}.(25)
[3] வெள்வியில் நெருப்பை வைப்பதற்காகப் பருந்து வடிவமாகக் கட்டப்படும் மேடை இஃது எனக் கும்பகோணம் பதிப்பில் அடிக்குறிப்பிருக்கிறது.
ஒரு பிராமணனின் உடைமை கைப்பற்றப்படும்போது, அந்த உடைமையைக் காக்க எவன் தன் இன்னுயிரையும் விடத் துணிவானோ, அவன் தன்னர்ப்பணிப்புக்கான அந்தச் செயலால், முடிவிலா கொடைகளைக் கொண்ட ஒரு வேள்விக்கான தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான்.(26) எந்த வீரன் தன் தலைவனுக்காக அணிவகுப்பின் முன்னணியில் அச்சத்துடன் புறமுதுகிடாமல் ஆற்றலை வெளிப்படுத்துவானோ, அவன் எனக்கு {இந்திரனுக்குச்} சொந்தமான புகழ் உலகங்களை ஈட்டுகிறான்.(27) எவனுடைய போர் வேள்வியானது புலித்தோல் உறைகளுள்ள வாள்களாலும், பரிகாயுதத்திற்கு ஒப்பான கரங்களாலும் பரப்பப்பட்டிருக்கிறதோ, அவன் எனக்குச் சொந்தமான புகழ் உலகங்களைப் போன்ற உலகங்களை வெல்கிறான்.(28) வெற்றியடையத் தீர்மானித்து, எந்தத் துணைக்காகவும் காத்திராமல் பகைவனின் பகையணிகளுக்குள் ஊடுருவும் போர்வீரன், எனக்குச் சொந்தமானவை போன்ற புகழ் உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(29)
பயங்கரமானதும், கடப்பதற்குக் கடினமானதும், பேரிகைகளையே தவளைகளாகவும், ஆமைகளாகவும் கொண்டதும், வீரர்களின் எலும்புகளையே அதன் மணற்பரப்பாகக் கொண்டதும், குருதியும், சதையும் புழுதியாகக் கொண்டதும், வாள்கள் மற்றும் கேடயங்களைத் தெப்பங்களாகக் கொண்டதும், கொல்லப்பட்ட போர்வீரர்களின் மயிர்களையே பாசியாகவும், மிதக்கும் புற்களாகவும் கொண்டதும், குதிரை, யானை மற்றும் தேர்களின் கூட்டங்களைப் பாலங்களாக {அணைகளாகக்} கொண்டதும், கொடிமரங்கள், கொடிகள் ஆகியவற்றைப் பிரம்புப் புதராகக் கொண்டதும், கொல்லப்பட்ட யானைகளின் உடல்களைப் படகுகளாகவும், பெரும் முதலைகளாகவும் கொண்டதும், வாள்கள், கத்திகள் ஆகியவற்றைப் பெரும் கப்பல்களாகக் கொண்டதும், கழுகுகள், கங்கங்கள், கருங்காக்கைகளை அதில் மிதக்கும் தெப்பங்களாகக் கொண்டதும், துணிவும் சக்தியும் கொண்டோராலும் கடக்கக் கடினமானதும், மருண்டோரை அச்சங்கொள்ள வைப்பதுமான ஒரு குருதிப்புனலைப் போர்க்களத்தில் பாயச்செய்யும் போர்வீரனே, இறுதி நீராடலுடன் கூடிய அந்த வேள்வியை நிறைவு செய்தவனாகச் சொல்லப்படுகிறான்.(30-34) எந்த வீரனின் பீடமானது, பகைவரின் தலைகள், குதிரைகள் மற்றும் யானைகளின் தலைகளுடன் பரவச் செய்யப்பட்டிருக்கிறதோ, அவனே எனக்குச் சொந்தமானவற்றைப் போன்ற புகழ் உலகங்களை அடைகிறான்.(35)
எந்த வீரன், பகைவரின் படையில் உள்ள முன்னணி படையைத் தன் மனைவியரின் அறைகளாகக் கருதுவானோ, எவன் தன் படையில் உள்ள முன்னணி படையை வேள்வி காணிக்கைகளை வைப்பதற்கான பாத்திரமாகக் கருதுவானோ, எவன் தனக்குத் தெற்கே நிற்கும் போராளிகளைத் தன் சத்யஸ்களாகவும், வடக்கே நிற்பவர்களை அக்நிதரர்களாகவும் கருதுகிறானோ, எவன் பகைவரின் படைகளைத் தான் மணந்து கொண்ட மனைவியைப் போலப் பார்க்கிறானோ, அவன் புகழ் உலகங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்.(36,37) இரு படைகளுக்கு இடையில் கிடக்கும் திறந்தவெளியானது, வேள்வி செய்பவனின் வேள்விப் பீடமாகவும், மூன்று வேதங்கள் அவனது மூன்று வேள்வி நெருப்புகளாகவும் ஆகின்றன. அந்தப் பீடத்தில், வேத நினைவின் துணையுடன், அவன் தன் வேள்வியைச் செய்கிறான்.(38) மகிமையற்ற எந்த வீரன், அச்சத்தால் போரில் இருந்து புறமுதுகிட்டு பகைவர்களால் கொல்லப்படுவானோ அவன் நரகில் மூழ்குகிறான். இதில் எந்த ஐயமும் கிடையாது.(39) மறுபுறம், எந்தப் போர்வீரன், ஏற்கனவே, மயிர், சதை, எலும்புகளால் பரப்பப்பட்டிருக்கும் அந்த வேள்விப்பீடத்தைத் தன் குருதியால் நனையச் செய்கிறானோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் நிச்சயம் வெல்கிறான்.(40)
எந்தப் பலமிக்கப் போர்வீரன், பகைவர் படையின் தளபதியைக் கொன்று, வீழ்ந்துவிட்ட எதிராளியின் வாகனத்தில் ஏறுகிறானோ, அவன் விஷ்ணுவின் ஆற்றலைக் கொண்டவனாகவும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதியின் நுண்ணறிவைக் கொண்டவனாகவும் கருதப்படுகிறான்.(41) எந்தப் போர்வீரன், எதிரி படையின் தளபதியையோ, அவனது மகனையோ, மதிப்பிற்குரிய வேறு பிற தலைவரையோ உயிருடன் கைப்பற்றுகிறானோ, அவன் எனக்குச் சொந்தமானவற்றைப் போன்ற புகழ் உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(42) ஒருவன், போரில் கொல்லப்பட்ட ஒரு வீரனுக்காக ஒருபோதும் வருந்தக்கூடாது. ஒரு கொல்லப்பட்ட வீரன், தனக்காக வருந்த எவருமில்லாமல் இருந்தால், அவன் சொர்க்கதிதற்குச் சென்று சொர்க்கவாசிகளின் பெரும் மதிப்பை ஈட்டுகிறான்.(43) மனிதர்கள் (அவனுடைய {போரில் கொல்லப்பட்டவனின்} முக்திக்காகத்) தங்கள் உணவையும் பானத்தையும் அர்ப்பணிக்க விரும்புவதில்லை. அல்லது (செய்தியை அறிந்ததும், அவர்கள் நீராடவோ, அவனுக்காக வருந்தவோ செய்வதில்லை. அத்தகு மனிதனுக்குக் கிடைக்கப்போகும் புகழை {புகழ் உலகங்களைச்} சொல்லப் போகிறேன் கேட்பாயாக[4].(44)
[4] கும்பகோணம் பதிப்பில், "யுத்தத்தில் அடிக்கப்பட்டவனுக்கு அன்னதானத்தையும் உதகதானத்தையும் ஸ்நானத்தையும் தீட்டுக்காத்தலையும் (பெரியோர்கள்) செய்ய விரும்புகிறார்களில்லை. அவனுக்குரிய உலகங்களை என்னிடமிருந்து கேள்" என்று இருக்கிறது.
எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருக்கும் அப்சரஸ்களில் முதன்மையானவர்கள், (கொல்லப்பட்ட வீரனின் ஆத்மாவை வரவேற்பதற்காக) அவனைத் தங்கள் தலைவனாக அடைய ஆசை கொண்டு பெரும் வேகத்துடன் செல்வார்கள்.(45) போரில் தன் கடமையை முறையாக நோற்கும் க்ஷத்திரியன் அச்செயலின் மூலம், தவங்கள் மற்றும் புண்ணியச் செயல்களின் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான். உண்மையில், அத்தகு நடத்தையானது அவனுடைய அழிவில்லா கடமை வழியை இயைந்து செல்கிறது. அத்தகு மனிதன், நான்கு வகை வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தின் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அடைகிறான்.(46) முதியோரும், சிறுவர்களும் கொல்லப்படக்கூடாது; பெண்டிரும் கொல்லப்படக்கூடாது; தப்பி ஓடுபவனோ, தன் உதடுகளில் வைக்கோலைக் கொண்டவனோ கொல்லப்படக் கூடாது; "நான் உன்னவன்" என்று சொல்பவனும் கொல்லப்படக்கூடாது[5].(47) திதி மற்றும் தனு ஆகியோரின் மகன்களான ஜம்பன், விருத்திரன், பலன், பாகன், சதமாயன் {மஹாகாயன்}, விரோசனன், தடுக்கப்பட முடியாதவனான நமுசி, எண்ணிலடங்கா மாயைகளைக் கொண்டவனான சம்பரன், விப்ரசித்தி ஆகியோரையும், பிரஹ்லாதனையும் போரில் கொன்ற பிறகே நான் தேவர்களின் தலைவனாக ஆனேன்." என்றான் {இந்திரன்}.(48,49)
[5] "ஒரு வைக்கோலை எடுத்து உதடுகளுக்கிடையில் வைத்துக் கொள்வது, நிபந்தனையற்ற சரணடைதலின் குடியீடாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சக்ரன் {இந்திரன்} சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை அங்கீகரித்த மன்னன் அம்பரீஷன், (போரைத் தங்கள் வழிமுறைகளாகக் கொண்டு) போர் வீரர்கள் எவ்வாறு (அழகிய சொர்க்கலோகங்களை அடைவதைப் பொறுத்தவரையில்) தங்களுக்கான வெற்றியை ஈட்டினார்கள் என்பதை அறிந்து கொண்டான்" {என்றார் பீஷ்மர்}.(50)
சாந்திபர்வம் பகுதி – 98ல் உள்ள சுலோகங்கள் : 50
ஆங்கிலத்தில் | In English |