Abandon your hope! | Shanti-Parva-Section-128| Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 128)
பதிவின் சுருக்கம் : மன்னன் வீரத்யும்னனுக்கும் தனு என்ற முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை மன்னன் சுமித்திரனுக்குச் சொன்ன முனிவர் ரிஷபர்; ரிஷபரின் வார்த்தைகளை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக்காட்டிய பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-128 |
{ரிஷபர் மான் வேட்டையாட வந்த மன்னன் சுமித்திரனிடம் தொடர்ந்தார்}, “மன்னன் {வீரத்யும்னன் தவசி தனுவிடம்}, “நான் வீரத்யும்னன் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு மன்னனாவேன். என் புகழ் திசைகள் அனைத்திலும் பரவியிருக்கிறது. என் மகன் பூரித்யும்னன் காணாமல் போனான். அவனைத் தேடியே நான் இந்தக் காட்டுக்கு வந்திருக்கிறேன்.(1) பிராமணர்களில் முதன்மையானோரே, அந்தப் பிள்ளை என் ஒரே மகனாவான். பாவமற்றவர்களே, வயதில் அவன் மிகவும் இளையவனாவான். எனினும், அவனை இங்கும் காண முடியவில்லை. அவனைக் காணவே நான் எங்கும் திரிந்து வருகிறேன்” என்றான்”.(2)
ரிஷபர் {சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “மன்னன் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், தவசி தனு தமது தலையைத் தொங்கவிட்டார். அவர் பதிலாக எந்த ஒரு வார்த்தையையும் சொல்லாமல் முற்றிலும் அமைதியாக இருந்தார்.(3) முற்காலத்தில் அந்தப் பிராமணர், இந்த மன்னனால் கௌரவிக்கப்படாதவராவார். ஓ! ஏகாதிபதி, ஏமாற்றமடைந்திருந்த அவர், அந்தக் காரணத்திற்காகவே நெடுங்காலம் கடுந்தவம் இருந்தார்;(4) மன்னர்கள் எவரிடம் இருந்தோ, வேறு எந்த வகையினரிடம் இருந்த கொடையாக எதையும் ஒருபோது ஏற்பதில்லை என்று தமது மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டார்.(5)
அவர் தமக்குள்ளேயே, “மூட அறிவு கொண்ட ஒவ்வொரு மனிதனையும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} கலங்கடிக்கிறது. நான் என் மனத்திலிருக்கும் நம்பிக்கையை {எதிர்பார்ப்பை} அகற்றுவேன்” என்று தீர்மானித்தார். இதுவே அவரது தீர்மானமாக இருந்தது. வீரத்யும்மன் அந்தத் தவசிகளில் முதன்மையானவரிடம் மீண்டும் இந்த வார்த்தைகளில் கேள்வியைக் கேட்டான்.(6)
மன்னன் {வீரத்யும்னன் தவசி தனுவிடம்}, “நம்பிக்கையுடைய மெலிவின் அளவென்ன? இந்த உலகில் அடைவதற்கு மிகக் கடினமானது எது? ஓ! புனிதமானவரே, அறநெறி மற்றும் பொருளை நன்கறிந்திருப்பதால், இவை யாவற்றையும் நீர் எனக்குச் சொல்வீராக?” என்று கேட்டான்”.(7)
ரிஷபர் {மன்னன் சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “புனிதமானவரும், மெலிந்த உடலைக் கொண்டவருமான அந்த முனிவர் {தனு}, (மன்னனிடம் தான் அடைந்த அவமானம் குறித்த) கடந்த கால நினைவுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து, மன்னனுக்கும் அவற்றைத் திரும்ப நினைவுப்படுத்திப் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னார்:(8)
அந்தத் தவசி {தனு மன்னன் வீரத்யும்னனிடம்}, “ஓ! மன்னா, மெலிந்ததில் நம்பிக்கைக்கு {எதிர்பார்ப்புக்கு} இணையானது வேறேதும் கிடையாது. நான் பல மன்னர்களிடம் வேண்டிக் கேட்டிருக்கிறேன். நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது} மனத்தின் முன் நிறுவும் {கொண்டுவரும்} காட்சியைப் போல அடைதற்கரிதான வேறெதுவும் இல்லை எனவும் நான் கண்டிருக்கிறேன்” என்றார்[1].(9)
[1] கும்பகோணம் பதிப்பில், “அரசனே, மெலிந்ததில் ஆசைக்குச்சரியானது ஒன்றுமில்லை. ராஜனே, அந்த ஆசையை ஜயிப்பது கடினமாகையால் தான் என்னால் அரசன் பிரார்த்திக்கப்பட்டான்” என்றிருக்கிறது.
மன்னன் {வீரத்யும்னன்}, “ஓ! பிராமணரே, உமது வார்த்தைகளைக் கொண்டு மெலிவு என்றால் என்ன? அவ்வாறல்லாதவை எவை? என்பதைப் புரிந்து கொள்கிறேன்[2]. நம்பிக்கையால் {எதிர்பார்ப்பின் மூலம்} மனத்தின் முன் நிறுவப்படும் காட்சிகள் எவ்வாறு அடைதற்கரியனவாக இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்கிறேன். உமது வார்த்தைகள் ஸ்ருதியில் சொல்லப்பட்டவை என்று நான் கருதுகிறேன்.(10) ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எனினும் என் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது. ஓ! தவசியே, என்னால் கேட்கப்படும் உமக்கு, அதை விரிவாக விளக்குவதே தகும்.(11) உமது உடலைவிட மெலிதானது எது? ஓ! புனிதமானவரே, ஓ! தவசிகளில் சிறந்தவரே, இதைக் குறித்துப் பேசுவது முறையென்றால் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(12)
[2] “அதாவது, நம்பிக்கையானது மெலிதானதாக இருந்தாலும், நம்பிக்கையுடன் தொடர்புடைய பொருட்கள் நேர்மாறானவை என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அதற்கு அந்த மெலிந்த துறவி {தனு மன்னன் வீரத்யும்னனிடம்}, “வேண்டுபவர்களில் {யாசகர்களில்} மனம் நிறைந்தவனைக் காண்பது மிக அரிதானதாகும். ஒருவேளை, இவ்வுலகில் அப்படிப்பட்ட எவரும் இல்லை என்றே கொள்ளலாம். ஓ! ஐயா, வேண்டும் ஒருவனை ஒருபோதும் அவமதியாதவன் இன்னும் அரிதானவனாவான்.(13) வேண்டுபவர்களுக்கு உறுதி அளித்துவிட்டு, தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, அவர்களுக்கு {வேண்டுபவர்களுக்குத்} தகுந்த நன்மையைச் செய்யாத மனிதர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கையானது என் உடலைவிட மெலிதானதாகும்[3].(14) நன்றியற்ற மனிதர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு}, அல்லது கொடூரன், சோம்பேறி, பிறருக்குத் தீங்கிழைப்பவன் ஆகியோர் மீது வைக்கப்படும் நம்பிக்கையானது என் உடலைவிட மெலிதானதாகும்.(15) ஒரே மகனுடைய தந்தை, தொலைந்து போன, அல்லது தவறவிட்ட தன் மகனைக் காணத் தனக்குள் வளர்த்துக் கொள்ளும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} என் உடலைவிட மெலிதானதாகும்.(16) ஓ! மன்னா, ஒரு வயதுமுதிர்ந்த பெண் {கிழவி} மகன்களைப் பெறக் கொள்ளும் நம்பிக்கையும், செல்வந்தர்களால் வளர்க்கப்படும் நம்பிக்கையும் என் உடலைவிட மெலிதானதாகும்.(17) வளர்ந்த கன்னியரின் இதயங்களில், திருமணம் குறித்து எவரும் பேசும்போது மட்டும் எழும் நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது}, என் உடலைவிட மெலிந்ததாகும்[4]” என்றார் {முனிவர் தனு}.(18)
[3] “அத்தகைய மனிதர்கள் எப்போதும் நம்பப்படக்கூடாதவர்க்ள என்பது பொருளாகும். எனினும், அவர்களிடம் நன்மையை நம்பி எதிர்பார்க்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகு நம்பிக்கையானது தமது உடலைவிட மெலிதானதாகும் என அந்தத் தவசி சொல்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] “14 மற்றும் 18ம் சுலோகங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் மாயை maya என்ற சொல்லானது மதம் mattah என்ற பொருளைக் கொண்டதென நீலகண்டரால் விளக்கப்படுகிறது. அதன் பொருளும் மிக வெளிப்படையானவையே. இருப்பினும் பர்துவான் மொழிபெயர்ப்பார்கள் வினோதமான வகையில் அதைத்தவறாகப் பொருள் புரிந்து கொள்கிறார். கே.பி.சின்ஹா சரியா பதிப்பைத் தருகிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். 18ம் சுலோகம், கும்பகோணம் பதிப்பில், “ஸரியான பிராயமிருக்கும்பொழுது விவாகத்தை விரும்பும் கன்னிகைகளுக்கு அந்த விவாகத்தைப் பற்றிய கதைகளைக் கேட்டு உண்டாகும் ஆசையானது என்னைவிட மிகவும் கிருசமானது” என்றிருக்கிறது.
ஓ! ஏகாதிபதி {சுமித்திரா}, இந்த வார்த்தைகளைக் கேட்டு, மன்னன் வீரத்யும்னனும், அவனது வீட்டைச் சேர்ந்த பெண்களும் அந்தப் பிராமணர்களில் காளையின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவரது பாதத்தைத் தீண்டி தலைவணங்கினர்.(19)
மன்னன் {வீரத்யும்னன்}, “ஓ! புனிதமானவரே, நான் உமது அருளை வேண்டுகிறேன். நான் என் மகனைக் காண விரும்புகிறேன். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, நீர் சொன்னது உண்மையே. நீர் சொன்ன உண்மைகளில் எந்த ஐயமும் இல்லை” என்றான்”.(20)
ரிஷபர் {சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “அறவோரில் முதன்மையானவரும், புனிதமானவருமான தனு, புன்னகைத்தபடியே, தமது கல்வி மற்றும் தவங்களின் மூலமாக மன்னனின் மகனை {பூரித்யும்னனை} அந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்.(21) அந்த இளவரசனை அங்கே கொண்டுவரச் செய்த அந்தத் தவசி மன்னனை (அவனது தந்தையைக்) கண்டித்தார்[5]. அப்போது அறவோரில் முதன்மையான அவர் {தவசி தனு}, தம்மையே அற தேவனாக {தர்மதேவனாக} வெளிப்படுத்திக் கொண்டார்.(22) உண்மையில் ஆச்சரியமிக்கத் தமது தெய்வீக வடிவை வெளிப்படுத்திய அவர், கோபம் மற்றும் பழிதீர்க்கும் விருப்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்ட இதயத்துடன் அருகில் இருந்த காட்டுக்குள் நுழைந்தார்.(23) ஓ! மன்னா {சுமித்திரா}, இவை யாவற்றையும் நான் கண்டேன். நான் {இப்போது} சொன்ன வார்த்தைகளையும் கேட்டேன். (அந்தத் தவசி குறிப்பிட்டவற்றில் எதையும் விட) மிக மெலிந்ததான உன் நம்பிக்கையை விரட்டுவாயாக” என்றார் {ரிஷபர்}”.(24)
[5] “முந்தைய காலத்தில் அந்த மன்னன் தவசியை அவமதித்த காரணத்திற்காகக் கண்டித்தார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம ரிஷபரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் சுமித்திரன், தன் இதயத்தில் இருந்ததும், (மெலிந்த தவசியால் குறிப்பிடப்பட்ட எந்த வகை நம்பிக்கையையும் விட) மெலிந்ததுமான நம்பிக்கையை {எதிர்பார்ப்பை} விரைவாகக் கைவிட்டான்.(25) ஓ! குந்தியின் மகனே, நீயும் இந்த என் வார்த்தைகளைக் கேட்டு இமய மலையைப் போல அமைதியடைந்து, அசைவற்றவனாக {உறுதிமிக்கவனாக} இருப்பாயாக.(26) துயரில் மூழ்கியவனான நீ, என்னைக் கேள்வி கேட்டு, நான் சொன்ன பதிலையும் கேட்டாய். ஓ! ஏகாதிபதி, உன் வருத்தங்களை அகற்றிக் கொள்வதே உனக்குத் தகும்” {என்றார் பீஷ்மர்}.(27)
சாந்திபர்வம் பகுதி – 128ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |