The code of morality! | Shanti-Parva-Section-132| Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : துன்ப காலங்களில் மன்னனின் நடைமுறை; ஏன் ஒருவன் அவதூறு பேசக்கூடாது? மன்னன் பின்பற்ற வேண்டிய அறநெறிக் கோட்பாடு ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-132 |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த நெறி நிறைந்தவையும், (அற ஆட்சிக்குரியவையும்) உலகத்திற்கு நன்மையானவையுமான நடைமுறைகள் மறையும் போது, வாழ்வைத் தாங்கிக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் வளங்கள் அனைத்தும் கள்வர்களின் கைகளால் வீழும்போது,(1) உண்மையில், அத்தகு பேரிடர்மிக்கக் காலம் வரும்போது, ஓ! பாட்டா, மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளைப் பாசத்தால் கைவிட முடியாத நிலையில் இருக்கும் ஒரு பிராமணன், எந்த வழிமுறையில் தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகு நேரம் வரும்போது, அந்தப் பிராமணன் தன் அறிவின் உதவியைக் கொண்டு வாழ வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்தும் நல்லோருக்கானதே. தீயோருக்கோ இங்கேதும் இல்லை.(3) எவன் தீயவர்களிடம் இருந்து செல்வத்தை எடுத்து, நல்லோருக்கு அதைக் கொடுக்கிறானோ, அவன் ஆபத்து கால அறநெறியை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(4) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் மன்னன், தன் மக்களைக் கடுஞ்சீற்றமடையவும், கடும் எதிர்ப்பில் ஈடுபடவும் தள்ளாமல், உடைமையாளனால், “இஃது எனது” என்று சொல்லி கொடுக்கப்படாமல் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.(5) வேறு காலங்களில் அறிவால் தூய்மையடைந்தவனும், வலிமை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டவனுமான ஒரு ஞானமிக்க மனிதன், இத்தகு காலங்களில் நிந்தனைக்குள்ளாகும் வகையில் நடந்து கொண்டால், உண்மையில் அவன் நிந்தனைக்குத் தகுந்தவனல்ல.(6) எப்போதும் தங்கள் வலிமையை வெளிப்படுத்தித் தங்களைத் தாங்கிக் கொள்பவர்கள், ஒருபோதும் வேறு எந்த வழிமுறையைக் கொண்டும் வாழ விரும்பமாட்டார்கள். ஓ! யுதிஷ்டிரா, வலிமை கொண்டவர்கள், தங்கள் ஆற்றலின் உதவியைக் கொண்டே எப்போதும் வாழ்வார்கள்.(7)
(துன்ப காலங்களில்) எந்த வகை விலக்கும் இல்லாத பொதுவான சாத்திரங்களை (அத்தகு காலங்களில்) மன்னன் நடைமுறைப்படுத்த வேண்டும். நுண்ணறிவுமிக்க ஒரு மன்னனோ, அந்தச் சாத்திரங்களைப் பின்பற்றுகையில், மேலும் அதிகமாகச் செய்யலாம்[1].(8) எனினும் மன்னன், கௌரவிக்கப்பட வேண்டியவர்களும், மதிப்புமிக்கவர்களுமான ரித்விஜர்கள், புரோகிதர்கள், ஆசான்கள், பிராமணர்கள் ஆகியோரை அத்தகு நேரங்களிலும் ஒடுக்காமல் இருக்க வேண்டும். அத்தகு காலங்களிலும் அவர்களை ஒடுக்கினால் அவன் பழியையும், பாவத்தையும் இழைத்தவனாவான்.(9) உன்னிடம் நான் சொல்லும் இவை இவ்வுலகில் சட்டத்தோடு ஒட்டிய உரிமையாகக் கருதப்படுகிறது. உண்மையில் இதுவே (துன்ப கால நடைமுறைகளைக் காணக்கூடிய) நித்திய கண்ணாகும். ஒருவன் இந்த உரிமையின்படியே வழிநடத்தப்பட வேண்டும். ஒரு மன்னனை நல்லவன் என்றோ, தீயவன் என்றோ அழைக்க இதைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.(10)
[1] “உரையாசிரியர் பின்வரும் வகையில் இதை விளக்குகிறார். துன்ப காலத்திற்காக விதிக்கப்பட்டவையும், எந்த விலக்கும் இல்லாதவையுமான பொதுவான உரைகள், மன்னன் தன் கருவூலத்தை நிறைத்துக் கொள்ள, குடிமக்கள் மீதும், பகை நாடுகளின் மீதும் கனமான தீர்வைகளை விதிக்கலாம் என்று அனுமதிக்கின்றன. சாதாரண மன்னன், அத்தகு நேரங்களில் அவ்வகையிலேயே செயல்படுவான். எனினும், நுண்ணறிவுடன் கூடிய ஒரு மன்னனோ, அத்தகு தீர்வைகளை விதிக்கும்போது, அவற்றைத் தீயோரின் மீதும், தன் குடிமக்களிலும், பிற நாடுகளின் குடிமக்கள் மத்தியிலும் உள்ள தண்டிக்கத்தக்கோர் மீதும் விதித்து, நல்லோருக்குத் தொல்லை கொடுப்பதைத் தவிர்ப்பான்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.
கிராமங்களிலும், நகரங்களிலும் வசிக்கும்பல மனிதர்கள், பொறாமையாலும், கோபத்தாலும் ஊக்கமடைந்து, ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதைக் காண முடிகிறது. மன்னன் அவர்களின் வார்த்தைகளைக் கொண்டு ஒருபோதும் எவரையும் கௌரவிக்கவோ, தண்டிக்கவோ கூடாது.(11) ஒருபோதும் அவதூறு பேசப்படக்கூடாது. பேசப்பட்டாலும், அஃது ஒருபோதும் கேட்கப்படக்கூடாது. அவதூறுகள் தொடர்ந்தால், ஒருவன் தன் காதுகளை மூடிக் கொள்ள வேண்டும், அல்லது அந்த இடத்தை விட்டு அகல வேண்டும்.(12) அவதூறு பேசுவது தீய மனிதர்களின் பண்பாகும். அஃது ஒழுக்கச் சீர்கேட்டின் குறியீடாகும். மறுபுறம், ஓ! மன்னா, நல்லோரின் சபைகளில் பிற மனிதர்களின் நற்குணங்களைக் குறித்துப் பேசுபவர்களே நல்ல மனிதர்கள்.(13) அடக்கத்தக்கவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும்,, நன்றாக இழுக்கத்தக்கவையுமான இரு காளைகள், நுகத்தில் தங்கள் கழுத்துகளை நுழைத்து விருப்பத்துடன் வண்டியை இழுப்பதைப் போலவே மன்னனும் (துன்ப காலங்களில்) தன் சுமைகளைச் சுமக்க வேண்டும்.(14)
சிலர், ஒரு மன்னன் (அத்தகு காலங்களில்) பெரும் எண்ணிக்கையிலான கூட்டாளிகளை ஈட்டும் வகையில் தன்னை நடத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். சிலர் பழைய நடைமுறையே, அறத்தின் உயர்ந்த குறியீடு எனக் கருதுகின்றனர்.(15) சங்கர் மற்றும் லிகிதர் சொல்லும் நடத்தைக்கு ஆதரவாக இருக்கும் வேறு சிலர், இக்கருத்தை ஏற்பதில்லை. அவர்கள் வன்மத்தாலோ, பேராசையாலோ அக்கருத்தை ஏற்கவில்லை[2].(16) தீய நடைமுறைகளுக்கு அடிமையாக இருந்தால் ஆசான்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பெரும் முனிவர்கள் விதித்திருக்கும் எடுத்துக்காட்டுகளும் காணப்படுகின்றன. ஆனால் அத்தகு கருத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட சட்ட உரிமை ஏதும் இல்லை.(17) அத்தகு மனிதர்கள், வெறுக்கத்தக்க தீய நடைமுறைகள் குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது, தேவர்களின் தண்டனைக்கு அவர்களை விட வேண்டும்[3]. கபடப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் தன் கருவூலத்தை நிறைக்கும் மன்னன் நிச்சயம் அறத்திலிருந்து விழுந்தவனாவான்.(18)
[2] “புரோகிதர்களும், பிராமணர்களும் ஒருபோதும் தண்டிக்கப்படவோ, வரிவிதிக்கப்படவோ கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. இதுவே நித்திய நடைமுறை. எனவே இதுவே அறநெறியாகும். சங்கர் தன் சகோதரன் லிகிதர் தனக்குச் சொந்தமான ஒரு சில கனிகளைப் பறித்த போது, எவ்வாறு நடந்து கொண்டாரோ, அதை ஆதரிக்கும் வேறு சிலர் வேறு வகைக் கருத்தைக் கொண்டுள்ளனர். இப்படிக் கருதுபவர்களும் முந்தையவர்களைப் போலவே தங்கள் கருத்துக்கு உண்மையானவர் என்று பீஷ்மர் சொல்கிறார். புரோகிதர்களும், பிராமணர்களும் குற்றமிழைத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்வதற்காக அவர்களைப் பழி சொல்வது தகாது என்று பீஷ்மர் சொல்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். சங்கர், லிகிதர் குறித்த கதை சாந்தி பர்வம் பகுதி 23ல் வருகிறது. http://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-23.html[3] கும்பகோணம் பதிப்பில், “குருவாயிருந்தாலும் தர்ம விரோதமாகச் சென்றவனைச் சிக்ஷிக்க வேண்டுமென்று கூறும் ரிஷிகளின் வசனத்தையும் அறிவிக்கிறார்கள். ரிஷிகளின் வசனத்திற்கு ஒத்ததானப்ரமாணம் ஒன்றும் ஓரிடத்திலும் காணப்படவில்லை. விபரீததர்மத்திலிருக்கும் அதமனான மனிதனைத் தேவர்களும் சிக்ஷிக்கிறார்கள்” என்றிருக்கிறது.
நல்லோரால் அனைத்து வகையிலும் கௌரவிக்கப்படுவதும், வளமையான சூழ்நிலைக்குரியதும், நேர்மையான இதயம் ஒவ்வொன்றாலும் அங்கீகரிக்கப்படுவதுமான அறநெறிக் கோட்பாடே பின்பற்ற வேண்டும்.(19) நான்கு அடித்தளங்களைச் சார்ந்த கடமையை அறிந்தவனே கடமையை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான். பாம்பின் கால்களைக் கண்டுபிடிப்பது எப்படிக் கடினமானதோ, அப்படியே, கடமைகளைத் தாங்கும் காரணங்களைக் கண்டுபிடிப்பதும் கடினமானதாகும்[4].(20) விலங்குகளை வேட்டையாடும் ஒருவன், கணையால் தாக்கப்பட்ட மானின் பாதையைத் தரையில் உள்ள குருதிக் கறைகளைக் கொண்டு கண்டடைவதைப் போலவே, ஒருவன் கடமையின் காரணங்களைக் கண்டுபிடிக்க முயல வேண்டும்.(21) இவ்வாறே ஒரு மனிதன் நல்லோர் நடந்த பாதையில் அடக்கத்துடன் நடக்க வேண்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தைச் சேர்ந்த பெரும் அரச முனிகளின் நடத்தை அவ்வாறானதேயாகும்” என்றார் {பீஷ்மர்}.(22)
[4] “நான்கு அடித்தளங்களைச் சார்ந்த கடமை என்பது, வேதங்களில் விதிக்கப்படும், ஸ்மிருதிகளில் விதிக்கப்படும், பழைய நடைமுறை மற்றும் பழக்கவழக்கங்களால் அனுமதிக்கப்படும், ஒருவனின் இதயம் அல்லது மனசாட்சியால் அங்கீகரிக்கப்படும் கடமையாகும்” எனக்கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “எல்லா விதத்தாலும் ஆதரிக்கப்படுவதும், மனு முதலி ஸத்புருஷர்களால் ஆதரிக்கப்படுவதும், மஹிமையிற்சிறந்த பெரியோர்களைக் காரணமாகக் கொண்டு ஆதரிக்கப்படுவதும், தன் மனத்திற்குத் திருப்தியுள்ளதுமாயிருப்பது எதுவோ அதைத் தர்மமென்று நிச்சயிக்க வேண்டும். எவன் நான்கு குணங்களுக்கும் ஒத்ததான தர்மத்தை அறிகிறானோ அவன் தர்மத்தை அறிந்தவன். ஸர்ப்பத்தின் அடியைப் போலவே தர்மத்தின் அடியைத் தேடிக் காணுவது கஷ்டம்” என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 132ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |