Treasury and treachery! | Shanti-Parva-Section-133| Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : கருவூலத்தின் அவசியம்; அதைப் பாதுகாப்பதன் அவசியம்; களவு; கள்வர்கள்; கள்வர்களைத் தண்டிக்கும் முறை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-133 |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன், தன் நாட்டில் இருந்தும், பகைவரின் நாடுகளில் இருந்தும் செல்வத்தைக் கவர்ந்து, தன் கருவூலத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும். அந்தக் கருவூலத்தில் இருந்தே அவனது அறத்தகுதி எழுகிறது. ஓ! குந்தியின் மகனே, கருவூலத்தின் விளைவாலேயே அவனுடைய நாட்டின் வேர்கள் விரிவடைகின்றன.(1) இந்தக் காரணங்களால் கருவூலம் நிரப்பப்பட வேண்டும்; நிரப்பப்பட்டதும், (பயனில்லா செலவினங்களை நிறுதி) அதைக் கவனமாகப் பாதுகாத்துப் பெருக்க வேண்டும். இதுவே நித்திய கடமையாகும்.(2) தூய்மை மற்றும் நியாயமான செயல்பாட்டாலோ, இதயமற்ற கொடூர செயல்பாட்டாலோ கருவூலத்தை நிரப்ப முடியாது. {இவற்றுக்கிடையில் உள்ள} நடுப்பாதையைப் பின்பற்றி அது நிரப்பப்பட வேண்டும்.(3) பலவீனமான மன்னன் எவ்வாறு கருவூலத்தை வைத்துக் கொள்ள முடியும்? பலவீனமான மனிதன் எவ்வாறு ஒரு நாட்டை வைத்துக் கொள்ள முடியும்? நாடில்லாமல் ஒருவன் எங்கிருந்து செழிப்பை அடைவான்?(4) உயர்ந்த அணிவரிசையில் உள்ள ஒரு மனிதனுக்கு ஆபத்து மரணத்தைப் போன்றதாகும். இதன் காரணமாக மன்னன், தன் கருவூலம், படை, கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை எப்போதும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.(5)
வெற்றுக் கருவூலத்தைக் கொண்ட மன்னனை மனிதர்கள் அனைவரும் அலட்சியம் செய்வார்கள். அத்தகு மன்னன் கொடுக்கும் சொற்பமானவற்றால் நிறைவடையாத அவனுடைய பணியாட்கள், ஒருபோதும் அவனுடைய தொழிலில் எந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.(6) மன்னன் தன் செழிப்பின் விளைவாலேயே பெரும் கௌரவங்களை அடைகிறான். உண்மையில், பார்வைக்கு வெளிப்படுத்தக்கூடாத பெண்வடிவ மறைவங்கங்களை மறைக்கும் ஆடைகளைப் போலச் செல்வமானது அவனுடைய பாவங்களை மறைக்கிறது.(7) மன்னன் முன்பு யாரோடெல்லாம் சச்சரவில் ஈடுபட்டிருந்தானோ, அவர்கள் அவனது புதிய செழிப்பைக் கண்டு துயரால் நிறைவார்கள். அவர்கள் அவனைக் கொல்லும் வாய்ப்புக்காக மட்டுமே காத்திருப்பவர்களாக இருப்பினும், நாய்களைப் போல மீண்டும் அவனுக்குப் பணி செய்வார்கள், அவனும் ஏதும் நடக்காததைப் போல அவர்களை ஏற்றுக் கொள்வான்.(8) ஓ! மன்னா, அத்தகு மன்னனால் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? மன்னன் எப்போதும் பெருமையை அடையவே முயற்சிக்க வேண்டும்.(9) அவன் ஒருபோதும் பணிவாக வணங்கியிருக்கக்கூடாது. உழைப்பே {முயற்சியே} ஆண்மையாகும். சாதகமற்ற தருணத்தில் அவன் எவருக்கும் முன் வளைவதைவிட உடைந்தே போகலாம். அதற்குப் பதில் அவன் காட்டுக்குச் சென்று காட்டு விலங்குகளுடன் வாழலாம்.(10)
ஆனால் அவன், கள்வர்களைப் போல அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மத்தியில் வாழவே கூடாது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, காட்டைச் சார்ந்த கள்வர்களே கூடக் கடுஞ்செயல்களை நிறைவேற்ற பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களைக் கொடுக்கலாம்.(11) நலன்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மன்னனே மீறினால், மக்கள் அனைவரும் அச்சத்தால் நிறைவார்கள். கருணையே அறியாத கள்வர்களே கூட இத்தகு மன்னனைக் கண்டு அஞ்சுவார்கள்[1].(12) இதன் காரணமாக, மன்னன் தன் மக்களின் இதயங்களை மகிழ்வுறச் செய்வதற்காக விதிகளையும் கட்டுப்பாடுகளையும் நிறுவவேண்டும். சின்னஞ்சிறு காரியங்களுக்கு விதிக்கப்படும் விதிகளைக்கூட மக்கள் மகிழ்ச்சியுடன் போற்றுவார்கள்.(13) இந்த உலகம் ஒன்றுமில்லாதது, எதிர்காலமும் தொன்மமே {இம்மையும், மறுமையும் கட்டுக்கதை} என்று நினைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். அத்தகையவன் ரகசிய அச்சங்களால் இதயம் கலங்கடிக்கப்பட்டவனாக இருப்பினும், இவ்வகை நாத்திகனை ஒருவன் ஒருபோதும் நம்பக்கூடாது[2].(14) காட்டில் உள்ள கள்வர்கள், பிற அறங்களைப் பின்பற்றி, உடைமகளை மட்டும் களவு செய்பவர்களாக இருந்தால், அந்தக் கொள்ளைகளைத் தீங்கற்றவையாகக் கருதலாம். கள்வர்கள் அத்தகு கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் விளைவால் பல்லாயிரம் உயிரினங்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.(15)
[1] “இலக்கண ரீதியில் பார்த்தால், இந்தக் கடைசி வரியானது, ‘கருணையற்ற மன்னனைக் கண்டு கள்வர்களே கூட அஞ்சுவார்கள்’ என்றும் பொருள் கொள்ளலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “அரண்யஞ்சென்று மிருகக் கூட்டங்களுடன் சேர்ந்து ஸஞ்சரித்துக் கொண்டும் இருக்கலாம். மர்யாதையை விட்டவர்களும், திருடர்கள் போன்றவர்களுமான மந்திரிகளுடன் சேர்ந்து ஸஞ்சரிக்கவே கூடாது. ஓ பாரத! திருதர்களுக்குக் கொடுமையான கார்யங்களைச் செய்யச் சேனை கிடைப்பது எளிது. மர்யாதையற்ற மனிதனிடமிருந்து எல்லா ஜனங்களும் நிச்சயம் நடுக்கமடைவார்கள். தயையின்றிச் செய்யும் திருடர்களும் மர்யாதையற்றவனிடம் ஸந்தேகப்படுவார்கள்” என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், “சிறிதாயிருப்பினும் கார்யங்களிலுள்ள மரியாதை உலகத்தில் பூஜிக்கப்படுவதாகும். ‘இவ்வுலகமுமில்லை; மேலுலகமுமில்லை’ என்ற எண்ணமுள்ள விவேகமில்லாத உலகமானது நாஸ்திகத் தன்மையாலும் பயத்தாலும் ஸந்தேகத்தாலும் நம்பிக்கையடையத் தக்கதாயிராது” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “சிறு கட்டுப்பாடும் மக்களால் மதிக்கப்படுகிறது. இம்மையும், மறுமையும் இல்லை என்று சில மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள். ஒருவன் இத்தகு நாத்திகனை நம்பக்கூடாது. அவன் ஐயத்தாலும், அச்சத்தாலும் செலுத்தப்படுகிறான்.
போரில் இருந்து தப்பி ஓடும் எதிரியைக் கொல்வது, {பிறன்} மனைவியரைக் கற்பழிப்பது, நன்றியின்மை, ஒரு பிராமணனின் உடைமையைச் சூறையாடுவது, ஒரு மனிதனின் மொத்த உடைமைகளையும் பறிப்பது,(16) கன்னியரைக் கெடுத்தல், கிராமங்கள் மற்றும் நகரங்களின் சட்டப்பூர்வமான தலைவர்களாகத் தொடர்ந்து நீடித்தல், பிறன் மனைவியருடன் ஒழுங்கங்கெட்ட கலவி ஆகியவற்றைக் கள்வர்களே கூடத் தீச்செயல்களாகக் கருதுகிறார்கள். கள்வர்கள் அவற்றை எப்போதும் தவிர்க்க வேண்டும்.(17) மேலும் மன்னர்கள், ({கள்வர்களுடன்} அமைதியை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம்) கள்வர்களுடைய இதயங்களில் நம்பிக்கை ஏற்படுத்த முயன்று, அவர்களுடைய போக்குவரத்துகள் அனைத்தையும் கண்காணித்த பிறகு, அவர்களை அழிப்பதில் வெல்வார்கள் என்பது நிச்சயம்.(18) இந்தக் காரணத்தால், கள்வர்களைக் கையாளும் காரியத்தில் அவர்களை உடனே {ஒரேயடியாக} அழிக்கும் தேவையில்லை[3]. அவர்களை மன்னனின் ஆளுகைக்குள் கொண்டு வர முயல வேண்டும். மன்னன், தானே அவர்களைவிடப் பலமிக்கவன் என்று கருதிக் கொண்டு, அவர்களிடம் ஒருபோதும் கொடுமையாக நடந்து கொள்ளக் கூடாது.(19) அவர்களை ஒரேயடியாக அழிக்காத மன்னர்களுக்குத் தாங்கள் அழிந்து விடுவோம் என்ற அச்சமில்லை. எனினும், அவர்களை {கள்வர்களை} அழித்தவர்கள், அந்தச் செயலின் விளைவால் எப்போதும் அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கும்” என்றார் {பீஷ்மர்}[4].(20)
[3] “அஃதாவது, அவர்களுடைய மனைவியர், பிள்ளைகள் காக்கப்பட வேண்டும். அவர்களுடைய வசிப்பிடங்களும், உடைகளும், வீட்டுக்குரிய பொருட்களும் அழிக்கப்படக்கூடாது என்று பொருள் கொள்ள வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] கங்குலியில் சுலோகம் 18 முதல் 20 வரை உள்ள பகுதிகள் கும்பகோணம் பதிப்பில், “ஆகையால் திருடன் இவைகளை விலக்க வேண்டும். ஓ பாரதா, மிச்சமின்றித் திருடினால், இந்தத் திருடனை அடுத்துக் கொல்ல வேண்டி (இவனுக்கு ஸ்நேஹமுண்டாகும்படி செய்துகொள்ள)க் கருதுகிறார்கள். பிறகு, இவனுடைய இடமுதலியவற்றைத் தெரிந்து கொண்டு இவனுடைய பொருளையும் மிச்சமில்லாமல் செய்துவிடுவார்கள் என்பது நிச்சயம். ஆகையால் திருடர்கள் தம்மிஷ்டப்படி செய்யத்தக்க பொருளையும் மிச்சமுள்ளதாகச் செய்ய வேண்டும். “நான் பலமுள்ளவனாயிருக்கிறேன்” என்று தீங்குகளைச் செய்யக்கூடாது. மிச்சமுள்ளதாகச் செய்யுந்திருடர்கள் எல்லாவிதத்தாலும் (தமக்கும்) மிச்சமிருப்பதைக் காண்பார்கள். மிச்சமின்றிச் செய்பவனுக்கு எப்பொழுதும் மிச்சமின்றிச் செய்வதால் பயமுண்டு” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “ஓ பாரதக் குலத்தோனே, அவர்கள் இவற்றை {சில தீமைகளைத்} தவிர்ப்பதால், ஒருவன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டால், அவர்களை அவன் முற்றாக அழிக்கக்கூடாது. அது தீர்மானிக்கப்பட்டதாகும். அவர்களை முற்றாக அழிப்பதற்குப் பதிலாக, அவர்கள் அவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அவன் பலவானாக இருந்தால், அவன் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். ஓ மகனே, அவர்களை அழிப்பவர்கள், தங்கள் அழிவையே அனைத்துத் திசையிலும் காண்பார்கள். அழிப்பவர்கள் எப்போதும், அழித்த அச்செயலின் விளைவால் அச்சத்துடன் வாழ வேண்டும்” என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 133ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |