Power and expiation of sinfulness! | Shanti-Parva-Section-134| Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : அறத்திற்கும், செல்வத்திற்கும் பலமே வேர் என்றும், அந்தப் பலத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்றும், தீச்செயல்கள் பலவற்றைச் செய்த பாவிகள் தங்கள் பாவத்தைத் தணிக்க வேண்டிய முறைகள் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-134 |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நுண்ணறிவும், ஞானமும் மிக்க ஒரு க்ஷத்திரியனுக்கு, அறத்தகுதி (ஈட்டல்), செல்வம் (அடைதல்) ஆகியவை முக்கியக் கடமைகளாகும் எனக் கடமை குறித்து அறிவிக்கும் இந்த உரையைச் சாத்திரங்களை அறிந்தோர் சொல்கின்றனர். கடமை {தர்மம்} குறித்த நுண்ணிய விவாதங்கள், எதிர்கால உலகம் {மறுமை} குறித்த காணாத விளைவுகள் ஆகியவற்றின் நிமித்தமாக இந்த இரு கடமைகளையும் நிறைவேற்றுவதை அவன் தவிர்க்கக்கூடாது.(1) தரையில் உள்ள காற்தடங்களைக் கண்டு, அவை ஓநாயுடையவையா? இல்லையா? என்று விவாதிப்பது வீண் என்பதைப் போல அறம் மற்றும் மறத்தின் இயல்பு குறித்த விவாதங்கள் அனைத்தும் வீணே. அறம் மற்றும் மறத்தின் கனிகளை இவ்வுலகில் எவரும் ஒருபோதும் காண்பதில்லை[1].(2) எனவே, ஒரு க்ஷத்திரியன் அதிகாரத்தை {பலத்தை} அடையவே முயற்சிக்க வேண்டும். எவன் பலவானோ அவனே அனைத்தின் தலைவனாவான். ஒரு படையை அடைய செல்வம் வழிவகுக்கும். பலவோன் நுண்ணறிவுமிக்க ஆலோசகர்களை அடைவான்[2].(3) செல்வம் இல்லாதவன் உண்மையில் வீழ்ந்தவனே. குறைவாக இருக்கும் எதுவும், ஒரு விருந்தில் எஞ்சிய கழிவுக்கு{எச்சிலுக்கு} ஒப்பானதாகக் கருதப்படுகிறது[3]. ஒரு பலமிக்க மனிதன் தீச்செயல்கள் பலவற்றைப் புரிந்தாலும், அச்சத்தின் காரணமாக எவரும் (அவனை நிந்திக்கவோ, தடுக்கவோ செய்யும்) எதையும் சொல்லவோ, செய்யவோ மாட்டார்கள். அறமும், பலமும் உண்மையுடன் தொடர்புடையதாக இருந்தால், அவர்களால் பேராபத்துகளில் இருந்து மக்களைக் காக்க முடியும்.(4) எனினும், இவ்விரண்டையும் ஒப்பிட்டால், பலமே அறத்தைவிட மேன்மையானதாகத் தோன்றும். பலத்திலிருந்தே அறம் எழுகிறது. அசையாத பொருட்கள் அனைத்தும் பூமியில் நிலைத்திருப்பதைப் போலறம் பலத்திலேயே நிலைத்திருக்கிறது.(5)
[1] கும்பகோணம் பதிப்பில், “இது தர்ம் இது அதர்மமென்று, மரத்திலுள்ள கனியைப் போலத் தர்மார்த்தங்களின் பயன்களை எவனும் எக்காலத்திலும் இவ்வுலகில் கண்டதில்லை” என்றிருக்கிறது.[2] “அஃதாவது, எவன் செல்வத்தையும், படைகளையும் கொண்டிருக்கிறானோ அவன் என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] “ஓர் ஏழை இவ்வுலகப் பொருட்கள் அனைத்திலும் குறைவானதையே பெற்றிருப்பான். எனினும் அந்தக் குறைந்த அளவானது, ஒரு பலமிக்கவனின் உணவில் எஞ்சியவற்றைப் போன்றதே என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
புகையானது, (தன் அசைவுக்காக) காற்றைச் சார்ந்திருப்பதைப் போல, அறமும் பலத்தைச் சார்ந்திருக்கிறது. இவ்விரண்டில் பலவீனமான அறம், கொடியானது மரத்தைச் சார்ந்திருப்பதைப் போலப் பலத்தையே சார்ந்திருக்கிறது.(6) மகிழ்ச்சியானவர்களைச் சார்ந்திருக்கும் இன்பத்தைப் போல அறமானது பலமிக்கவர்களைச் சார்ந்திருக்கிறது. பலமிக்க மனிதர்களால் செய்யமுடியாதது ஏதுமில்லை. பலமிக்கவர்களிடம் உள்ள அனைத்தும் தூய்மையானதே.(7) ஒரு பலமற்ற மனிதன் தீச்செயல்களைச் செய்தால் ஒருபோதும் தப்ப முடியாது. அவனது நடதையைக் காணும் மனிதர்கள், ஓநாயைக் கண்டதைப் போல அதிர்ச்சியடைவார்கள்.(8) செல்வநிலையில் இருந்து வீழும் ஒருவன், அவமானமும், கவலையும் நிறைந்த வாழ்வை வாழ்கிறான். அவமானமும் நிந்தனையும் நிறைந்த வாழ்வானது மரணத்தைப் போன்றதாகும்.(9) ஒருவனுடைய பாவ நடத்தையின் விளைவால், அவன் நண்பர்கள் மற்றும் தோழர்களால் கைவிடப்படுகிறான், பிறரின் வார்த்தைக் கணைகளால் அவன் மீண்டும் மீண்டும் துளைக்கப்படுகிறான். அதன் நிமித்தமாக அவன் துயரில் எரிய வேண்டியிருக்கும்.(10)
(பாவத்தால் கறைபடிந்தவனாக இருந்தால் அந்தப்) பாவத்தைத் தணிப்பதற்கு ஒருவன் மூன்று வேதங்களைப் பயின்று, பிராமணர்களை வழிபட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்து,(11) பார்வை, சொல், செயல் ஆகியவற்றால் அனைத்து மனிதர்களையும் நிறைவு செய்து, கபடங்கள் அனைத்தையும் கைவிட்டு, உயர்ந்த குடும்பங்களில் திருமணம் செய்து கொண்டு,(12) தன் சிறுமைக்கு வருந்தி, பிறர் பெருமைகளை அறிக்கையிட்டு, மந்திரங்களை ஓதி, வழக்கமான நீர்ச்சடங்குகளைச் செய்து, மென்மையான நடத்தையை ஏற்று, அதிகமாகப் பேசுவதைத் தவிர்த்து,(13) கடுந்தவங்களைச் செய்து, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் புகலிடத்தை நாட வேண்டும். உண்மையில், தீச்செயல்கள் பலவற்றைச் செய்த ஒருவன், மனிதர்களால் சொல்லப்படும் நிந்தனைகளுக்குக் கோபப்படாமல் இவை அனைத்தையும் செய்ய வேண்டும்.(14) தன்னை இவ்வழியில் நடத்திக் கொள்வதால், ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, உலக மதிப்பை மீண்டும் அடைவான். உண்மையில், அவன் இவ்வுலகில் {இம்மையில்} பெரும் மதிப்பையும், அடுத்த உலகில் {மறுமையில்} பெரும் கௌரவத்தையும் வென்று, இத்தகு நடத்தையைப் பின்பற்றுவதன் மூலமும், தன் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும் அவன் இங்கே {இம்மையில்} பல்வேறு வகையான் இன்பங்களை அனுபவிப்பான்” என்றார் {பீஷ்மர்}.(15)
சாந்திபர்வம் பகுதி – 134ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |