Finesse of morality! | Shanti-Parva-Section-136| Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : கருவூலத்தைப் பெருகச் செய்யக் கைப்பற்றத்தகுந்த மற்றும் கைப்பற்றத்தகாத பொருட்களைப் பகுத்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-136 |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு மன்னன் தன் கருவூலத்தை நிறைத்துக் கொள்வது தொடர்பாக, பழங்காலத்துச் சாத்திரங்களை அறிந்தோர், பிரம்மன் பாடிய பின்வரும் வரிகளை {சுலோகங்களைப்} குறிப்பிடுகின்றனர்.(1) - வேள்விகளைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களின் செல்வம், தேவர்களுக்குக் காணிக்கையாக்கப்பட்ட செல்வம் ஆகியவை ஒருபோதும் கைப்பற்றப்படக்கூடாது. அறச்சடங்குகள் மற்றும் வேள்விகளை ஒருபோதும் செய்யாதோர் கள்வர்களுக்கு இணையாகக் கருதப்படுவதால், ஒரு க்ஷத்திரியன் அவர்களின் செல்வத்தைக் கைப்பற்றலாம்.(2) -
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும், அரசுரிமை தொடர்புடைய இன்பங்கள் அனைத்தும் க்ஷத்திரியர்களுக்குச் சொந்தமானவையே. பூமியின் செல்வங்கள் அனைத்தும் க்ஷத்திரியர்களுக்குச் சொந்தமானவையேயன்றி வேறு எவருக்கும் அல்ல.(3) அந்தச் செல்வத்தை க்ஷத்திரியன், தன் படைகளைப் பராமரிக்கவும், வேள்விகளைச் செய்யவும் பயன்படுத்த வேண்டும். எந்தப் பயனும் இல்லாத செடிகொடிகளைப் பறித்து, உணவாகப் பயன்படக்கூடிய காய்கறிகளைச் சமைப்பதற்காக அவற்றை மனிதர்கள் எரிக்கின்றனர்[1].(4)
[1] “தீயோரைத் தண்டிப்பதன் மூலம் மன்னனும் அதை {மேற்கண்ட உதாரணத்தைப்} போலவே நல்லோரைப் பாதுகாக்க வேண்டும் என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “புஜிக்கத்தகாத செடிகளையறுத்து (அவைகளை விறகாகக் கொண்டு) புஜிக்கத் தக்கவைகளையே பாகம் செய்கிறார்கள்” என்றிருக்கிறது.
தெளிந்த நெய் ஆகுதிகளின் மூலம் தேவர்கள், பித்ருக்கள் மற்றும் மனிதர்களுக்கு உணவளிக்காதவனின் செல்வம் பயனற்றது என்று கடமைகளை அறிந்த மனிதர்கள் சொல்கின்றனர்.(5) ஓ! மன்னா, ஓர் அறம்சார்ந்த மன்னன் இத்தகையோரின் செல்வத்தைக் கைப்பற்ற வேண்டும். அந்தச் செல்வத்தைக் கொண்டு பெரும் எண்ணிக்கையிலான நன்மக்களை நிறைவுசெய்ய முடியும். எனினும், அவன் செல்வத்தைத் தன் கருவூலத்தில் பதுக்கி வைக்கக் கூடாது.(6)
தீயோரிடம் இருந்து செல்வத்தை அடைந்தும், பறித்தும் நல்லோருக்குக் கொடுப்பதில் தன்னைக் கருவியாக்கிக் கொள்ளும் ஒருவன், மொத்த அறநெறிகளையும் அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(7) காய்கறிப் பொருட்கள் படிப்படியாக வளர்வது காணப்படுவதைப் போலவே மன்னன் தன் சக்தியின் அளவுக்கேற்ப, தன் படையெடுப்புகளை அடுத்த உலகிற்கும் நீட்டிக்க வேண்டும். போதுமான எந்தக் காரணமுமின்றி எறும்புகள் வளர்வது காணப்படுவதைப் போலவே, வேள்வியும் எந்தப் போதுமான காரணமும் இன்றியே எழுகிறது[2].(8)
[2] “கருவூலத்தில் கிடக்கும் பெரிய அளவிலான பணத்தைவிட உள்ளூர எழும் விருப்பமே வேள்வியைச் செய்ய வைக்கிறது என்பது இங்கே பொருளாக இருப்பதாகத் தெரிகிறது. விருப்பம் இருந்தல், அதை நிறைவேற்ற பணமும் படிப்படியாக வருகிறது. இந்த உவமையின் சக்தியானது, உண்மையில் எறும்புகள் (வெள்ளை எறும்புகள்) மேம்போக்கான காரணம் ஏதும் இன்றிப் பல்கிப் பெரும் உண்மையில் காணலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “பூமியைப் பிளந்து கொண்டு உண்டாகும் பிராணிகளும், வஜ்ரியென்னும் புழுக்களும் எப்படி (மெள்ள வெகுதூரம்) போகின்றனவோ அவ்விதம் அரசன் இயன்றவரையில் பரலோகங்களை ஜயிக்க வேண்டும். அஐகள் எவ்விதம் காரணமின்றி உண்டாகுமோ அவ்விதம் யாகமில்லாதவன் உண்டாவான். ஈக்களையும், கொசுக்களையும், எறும்புகளையும், புழுக்களையும் எவ்விடம் பசுக்களிடமிருந்து வெருட்டுவார்களோ அவ்விதமான செய்கையே யாகமில்லாதவர்களின் இருக்க வேண்டும்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இன்னும் வேறு மாதிரியாக இருக்கிறது.
(பால் கறக்கப்படும்போது) பசுக்கள் மற்றும் வளர்ப்பு விலங்குகளின் உடல்களில் இருந்து ஈக்கள், பூச்சிகள், எறும்புகள் ஆகியன விரட்டப்படுவதைப் போலவே வேள்வி செய்வதில் வெறுப்புள்ள மனிதர்கள் அனைவரும் நாட்டில் இருந்து விரட்டப்பட வேண்டும். இஃது அறநெறிக்கு இசைவானதே.(9) பூமியில் கிடக்கும் புழுதியானது, இரு கற்களுக்கிடையே அரைக்கப்படும்போது, மேலும் மேலும் நுண்ணியதாவதைப் போலவே, அறநெறி குறித்து மேலும் மேலும் சிந்தித்து விவாதிக்கப்படும்போதும் அது மேலும் மேலும் நுட்பமடைகிறது” என்றார் {பீஷ்மர்}.(10)
சாந்திபர்வம் பகுதி – 136ல் உள்ள சுலோகங்கள் : 10
ஆங்கிலத்தில் | In English |