Sakula Fishes! | Shanti-Parva-Section-137| Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : வரப்போகும் ஆபத்திலிருந்து விடுபடத்தக்க வழிமுறைகளை முன்பே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குச் சகுல மீன்களின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-137 |
பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, “எதிர்காலத்துக்குத் தேவையானதைக் கொடுப்பவன், விழித்த மனம் {நேரத்திற்கேற்ற நுண்ணறிவை / சமயோசித புத்தியைக்} கொண்டவன் ஆகிய இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனினும், காரிய தாமதம் செய்யும் மனிதன், தொலைந்து போகிறான்.(1) இது தொடர்பானதும், செயல்படும் வழியைத் தீர்மானிக்கும் காரியத்தில் காலதாமதம் செய்யும் ஒரு மனிதனைக் குறித்ததுமான பின்வரும் சிறந்த கதையைக் கவனமாகக் கேட்பாயாக.(2)
வெகு ஆழமில்லாததும், மீன்கள் நிறைந்ததுமான ஒரு தடாகத்தில் {குட்டையில்}, நண்பர்களும், நிலைத்த தோழர்களுமான மூன்று சகுல[1] மீன்கள் வசித்து வந்தன.(3) அந்த மூன்றில் ஒன்று, முன்னறிவு கொண்டதாகவும், வரப்போவதற்கு {எதிர்காலத்திற்குத்} தேவையானதை எப்போதும் தர {செய்ய} விரும்புவதகாவும் இருந்தது. மற்றொன்று பெரும் விழிப்புடைய மனத்தைக் கொண்டிருந்தது. மூன்றாவது {எதிலும்} காலதாமதம் செய்வதாக இருந்தது.(4)
[1] சகுலம் என்பதற்கு ஒருவகை மீன் என்றே சம்ஸ்க்ருத அகராதி பொருள் சொல்கிறது. இருப்பினும் இதற்கு உன்னதக் குலம், ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் என்று வேறு பொருள்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் “சகுலம்” என்ற இவ்வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. கங்குலியில் போலவே, பிபேக்திப்ராயின் பதிப்பில் சகுலம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அஃது எதைக் குறிக்கிறது என்பதற்கு விளக்கமேதும் இல்லை.
ஒரு நாள் அத்தடாகத்திற்கு வந்த குறிப்பிட்ட மீனவர்கள், பல்வேறு வடிகால்களின் மூலம் அதில் இருந்த நீரை ஒரு தாழ்வான பகுதிக்கு வடியச் செய்தார்கள்.(5) முன்னறிவு கொண்ட மீனானது, தடாகத்தின் நீர் படிப்படியாகக் குறைவதைக் கண்டு, ஆபத்தான அச்சந்தர்ப்பத்தில் தன் தோழர்கள் இருவரிடமும்,(6) “இந்தத் தடாகத்தில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பேராபத்து நேரப்போகிறது. நம் பாதை தடைபடும் முன்னர் வேகமாக நாம் வேறு ஏதாவது இடத்திற்குச் சென்று விடுவோம்.(7) நல்ல கொள்கையின் {நீதியின்} துணையுடன் எதிர்காலத் தீமையைத் தடுப்பவன், பயங்கர ஆபத்துகளுக்கு ஒருபோதும் ஆட்படமாட்டான். என் ஆலோசனைகள் உங்களிடம் மேலோங்கட்டும். நாம் அனைவரும் இந்த இடத்தை விட்டுச் செல்வோமாக” என்றது.(8)
அப்போது அந்த மூன்றில் காலத் தாமதம் செய்வது, “நன்றாகச் சொன்னாய். எனினும், இத்தகு அவசரத்திற்கு எந்தத் தேவையுமில்லை. இஃதுவே என் திட்டமான கருத்தாகும்” என்றது[2].(9)
[2] கும்பகோணம் பதிப்பில், “இங்கு நன்கு வஸிக்கலாம். அதற்குள் அவஸரப்பட வேண்டாமென்று எனக்கு நிச்சயமாகத் தோற்றமிருக்கிறது” என்று இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
விழித்த மனம் கொண்டதாகக் குறிப்பிடப்பட்ட மற்றொரு மீனானது, காலதாமதம் செய்யும் தன் தோழனிடம், “எதற்கான நேரமும் வாய்க்கும்போது, கொள்கையின்படி அதற்குரியதைத் தர {நேரத்திற்குத் தகுந்ததைச் செய்ய} நான் ஒருபோதும் தவறியதில்லை” என்றது[3].(10)
[3] கும்பகோணம் பதிப்பில், “ஸமயம் வரும்பொழுது எனக்கு ஒன்றும் நீதியை விட்டுத் தவறாது” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “சரியான நேரம் வாய்க்கும்போது, தேவைப்படும் எதையும் செய்வதை நான் தவிர்க்க மாட்டேன்” என்றது. பிபேக்திப்ராயின் பதிப்புத் தெளிவானதாக இருக்கிறது.
முன்னறிவையும், குறிப்பிடத்தக்க நுண்ணறிவையும் கொண்டது {மீனானது}, தன் தோழர்கள் இருவரின் பதில்களையும் கேட்டு, ஓர் ஓடையின் {வாய்க்காலின்} வழியாக உடனடியாகப் புறப்பட்டு மற்றொரு ஆழமான தடாகத்தை அடைந்தது.(11)
நீர் வற்றியதைக் கண்ட மீனவர்கள், பல்வேறு வழிமுறைகளின் மூலம் எஞ்சியிருந்த மீன்களை அடைத்தனர்.(12) எஞ்சியிருக்கும் குறைந்த அளவு தண்ணீரை அவர்கள் கலக்கியபோது, காலதாமதம் செய்யும் சகுலம் {மீன்} மற்ற மீன்களுடன் சேர்ந்து {அவர்களிடம்} பிடிபட்டது.(13)
நீண்ட கயிறுகளைக் கொண்டு, தாங்கள் பிடித்த மீன்களை மீனவர்கள் கட்டியபோது, விழித்த மனம் {சமயோசித புத்தி} படைத்த சகுலம், அவ்வாறு கட்டப்பட்டவற்றோடு {மீன்களோடு} தன்னைத் திணித்துக் கொண்டு தான் பிடிபட்டதாகக் காட்டிக் கொள்வதற்காகக் கயிற்றைக் கடித்துக் கொண்டு, அவற்றுக்கு மத்தியில் அமைதியாகக் கிடந்தது. மீனவர்கள், கயிற்றோடு கட்டப்பட்டிருந்த மீன்கள் அனைத்தும் பிடிபட்டிருப்பதாகக் கருதினர்.(14,15) பிறகு அவர்கள், அவற்றைக் கழுவுவதற்காக ஆழமான நீர் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர். சரியாக அந்த நேரத்தில், விழித்த மனம் படைத்த சகுலம், கயிற்றை விட்டு விரைவாகத் தப்பிச் சென்றது.(16)
எனினும், காலதாமதம் செய்த மீனானது, மடமை கொண்டதாகவும், அறிவற்றதாகவும், புத்தியற்றதாகவும் இருந்ததால், தப்பிக்க இயலாமல் மரணத்தைச் சந்தித்தது.(17)
இவ்வாறு, அந்தக் காலதாமதம் செய்யும் மீனைப் போலவே புத்தியில்லாத ஒவ்வொருவரும், ஆபத்துக் காலத்தில் தப்பிக்க இயலாமல் அழிவைச் சந்திக்கிறார்கள்.(18) மேலும், எந்த மனிதன் தன்னைப் புத்திசாலியாகக் கருதிக் கொண்டு, சரியான நேரத்தில் தனக்கான நன்மையை நாடவில்லையோ, அவன் {மேலே குறிப்பிடப்பட்ட} விழித்த மனம் கொண்ட சகுலத்தைப் போலவே பேராபத்துக்கு உள்ளாவான் {அப்போது அவன் விழித்த மனத்துடன் இருந்தால் தப்புவான்}.(19) எனவே, முன்னறிவு கொண்டவன், விழித்த மனம் கொண்டவன் ஆகிய இருவர் மட்டுமே மகிழ்ச்சியை அடைவதில் வெல்வார்கள்.(20)
காஷ்டை, கலை, மாதம், முகூர்த்தம், பகல், இரவு, லவம், மாதம், அரைமாதம் {பிறைநாட்கள்}, ஆறு பருவகாலங்கள் {ருது}, கல்பம், வருடம் என்று காலம் பல்வேறு பிரிவுகளாக இருக்கிறது.(21) பூமியின் பிரிவுகளே இடம் என்றழைக்கப்படுகிறது. காலம் கண்ணுக்குத் தெரியாதது. எந்தப் பொருள் அல்லது எந்த நோக்கத்தின் வெற்றியைப் பொறுத்தவரையிலும், மனம் அதைக் குறித்து எவ்வகையில் நினைக்க நிறுவப்பட்டுள்ளதோ, அந்த வகையிலேயே அஃது {வெற்றி} அடையப்படுகிறது, அல்லது அடையப்படாமல் போகிறது.(22)
முன்னறிவு கொண்டவன், விழித்த மனம் கொண்டவன் ஆகிய இந்த இருவரே, அறம் பொருள் விடுதலை {முக்தி / மோட்சம்} குறித்த அனைத்து உடன்பாடுகளிலும் முதன்மையான மனிதர்கள் என்று முனிவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.(23) எனினும், சிந்தித்து, ஆய்வு செய்த பிறகே அனைத்தையும் செய்யும் ஒருவன், அவனுடைய நோக்கங்களை {இன்பங்களை} நிறைவேற்றும் சரியான வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு, எப்போதும் அவற்றை அதிகமாக அடைவதில் வெல்கிறான். மேலும், காலம் மற்றும் இடத்திற்குரிய மதிப்புடன் செயல்படுபவர்களோ, வெறுமனே முன்னறிவும், விழித்த மனமுன் கொண்ட மனிதர்களைவிடச் சிறந்த விளைவுகளை அடைவதில் வெல்வார்கள்” என்றார் {பீஷ்மர்}.(24)
சாந்திபர்வம் பகுதி – 137ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |