Kayavya, a robber! | Shanti-Parva-Section-135| Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : சாத்திர விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவன் கள்வனாகயிருப்பினும், முக்தியை அடைவான் என்பதை விளக்க காயவ்யனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, இவ்வுலகில் {இம்மையில்} கட்டுப்பாடுகளை நோற்று, அடுத்த உலகில் {மறுமையில்} அழிவை அடையாத ஒரு கள்வனின் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) காயவ்யன் {காபச்யன் / காபவ்யன்} என்ற பெயரில், ஒரு க்ஷத்திரிய தந்தைக்கும், ஒரு நிஷாதத் தாய்க்கும் பிறந்த ஒரு கள்வனிருந்தான். காயவ்யன் க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுபவனாகவே இருந்தான். தாக்கவல்லவனும், நுண்ணறிவையும், துணிவையும் கொண்டவனும், பெரியோர் மற்றும் ஆசான்களை வழிபடுபவனாகவும் இருந்த அவன் {காயவ்யன்}, தவசிகளின் நடைமுறைகளைப் பின்பற்றுவோரைக் காத்து வந்தான். அவன் கள்வனாகவே இருப்பினும், சொர்க்கத்தில் புகழை வென்றான்.(2,3) காலையிலும், மாலையிலும் மான்களை விரட்டி அவற்றின் கோபத்தைத் தூண்டுபவனாக இருந்தான். நிஷாதர்கள் மற்றும் காட்டில் வாழும் விலங்குகளின் நடைமுறைகள் அனைத்தையும் நன்கறிந்தவனாக அவன் இருந்தான்.(4) காலம் மற்றும் இடத்துக்குத் தக்க தேவைகளை நன்கறிந்த அவன், மலைகளின் மீது உலாவி வந்தான். விலங்குகள் அனைத்தின் பழக்கவழக்கங்களை அறிந்திருந்தவனான அவனுடைய கணைகள் இலக்கை ஒருபோதும் தவறாதவையாகவும், அவனுடைய ஆயுதங்கள் பலமானவையாகவும் இருந்தன.(5)
தனியொருவனாகவே பல நூற்றக்கணக்கான துருப்புகளை வெல்லவல்லவனாகவும் அவன் இருந்தான். வயது முதிர்ந்தவர்களும், கண்பார்வையற்றவர்களும், செவிகேள்வியற்றவர்களுமாக இருந்த அவனது பெற்றோரைத் தினமும் காட்டில் வழிபட்டுவந்தான்.(6) கௌரவிக்கத் தகுந்த மனிதர்கள் அனைவரையும், தேன், இறைச்சி, கனிகள், கிழங்குகள், பிற வகைச் சிறந்த உணவுகள் ஆகியவற்றைக் கொண்டு விருந்தோம்பலுடன் மகிழ்வித்து, அவர்களுக்குப் பல நல்ல அலுவல்களையும் {பணிகளையும்} செய்து கொடுத்தான்.(7) உலகில் இருந்து ஓய்ந்து காடுகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்ட பிராமணர்களிடம் அவன் பெரும் மரியாதையை வெளிப்படுத்தினான்.(8) அவன் செய்த தொழிலின் நிமித்தமாகவும், பிறர் மேல் கொண்ட அச்சத்தின் காரணமாகவும், அவனிடம் இருந்து கொடைகளைப் பெற விருப்பமில்லாமல் இருந்தவர்களைப் பொறுத்தவரையில், பொழுது விடிவதற்கு முன்பே அவர்களுடைய வசிப்பிடங்களுக்குச் சென்று அவர்களின் வாசல்களில் இறைச்சியை விட்டு வருவான்[1].(9) ஒரு நாள், பண்பில் கருணையற்றவர்களும், கட்டுப்பாடுகளை அனைத்தையும் அலட்சியம் செய்பவர்களுமான பல்லாயிரம் கள்வர்கள், அவனைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுக்க விரும்பினர்.(10)
[1] “கேள்விக்குரிய பண்புகளைக் கொண்ட மனிதர்களிடம் இருந்து கொடைகளை ஏற்பது எப்போதும் நிந்திக்கத்தக்கதாகவே இருந்து வந்துள்ளது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “அரண்யத்திலுள்ள ஸந்யாஸம் பெற்ற பிராம்மணர்களை ரக்ஷித்துக் கொண்டு எப்பொழுதும் வனத்திலுள்ள மிருகங்களை அடித்து அவர்களின் பொருட்டு அனுப்பி வந்தான். திருடனுடைய போஜனமென்ற சங்கையால் அவனிடமிருந்து எவர்கள் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர்களுடைய வீடுகளில் அவன் காலையிலேயே (மாம்ஸங்களை) வைத்துவிட்டுச் செல்லுவான்” என்றிருக்கிறது.
அந்தக் கள்வர்கள், “காலம் மற்றும் இடத்துக்குத் தக்க தேவைகளை நீ அறிந்திருக்கிறாய். விவேகத்தையும், துணிவையும் கொண்டவனாகவும் இருக்கிறாய். நீ மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களிலும் நீ கொண்ட உறுதி பெரியதாக இருக்கிறது. எங்கள் அனைவராலும் மதிக்கப்படும் நீ, எங்கள் தலைவர்களில் முதன்மையானவனாக இருப்பாயாக. நீ வழிநடத்துவதைப் போலவே நாங்கள் செயல்படுவோம். ஒரு தந்தை, அல்லது தாயைப் போல நீ எங்களை முறையாகக் காப்பாயாக” என்றனர்.(12)
காயவ்யன், “பெண்களையோ, அச்சத்தால் சச்சரவில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களையோ, குழந்தையையோ, தவசியையோ ஒருபோதும் கொல்லாதீர்கள். போரிடுவதைத் தவிர்க்கும் எந்த ஒருவனும் {உங்களால்} ஒருபோதும் கொல்லப்படக்கூடாது, அதே போல எந்தப் பெண்ணும் கைப்பற்றப்படவோ, பலவந்தமாகக் கடத்தப்படவோ கூடாது.(13) பிராமணர்கள் அருளப்பட்டவர்களாகவே இருக்கட்டும், அவர்களின் நன்மைக்காகவே நீங்கள் எப்போதும் போரிட வேண்டும்.(14) உண்மை ஒருபோதும் தியாகம் செய்யப்படக்கூடாது. மனிதர்களின் திருமணங்கள் ஒருபோதும் தடுக்கப்படக்கூடாது. தேவர்களும், பித்ருக்களும், விருந்தினர்களும் வழிபடப்படும் வீடுகளுக்கு {உங்களால்} எந்தத் தீங்கும் இழைக்கப்படக்கூடாது.(15) உயிரினங்களுக்கு மத்தியில் பிராமணர்கள், உங்கள் கொள்ளைப்பவனியில் உங்களால் தவிர்க்கப்படத் தகுந்தவர்களாவர். உங்களுடையவை அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் அவர்களை வழிபட வேண்டும்.(16) எவன் பிராமணர்களின் கோபத்தைத் தூண்டுவானோ, எவனுடைய தோல்வியை அவர்கள் {பிராமணர்கள்} விரும்புவார்களோ, அவன் மூவுலகங்களிலும் ஒரு மீட்பனைக் காணத் தவறுவான்.(17) எவன் பிராமணர்களை இழிவாகப் பேசி, அவர்களுடைய அழிவை விரும்புவானோ, அவன், சூரியன் எழும்போதான இருளைப் போலவே அழிவை அடைவான்.(18) இங்கே வசித்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வீரத்தின் கடிகளை அடையலாம். உங்களுக்கு உரியதைக் கொடுக்க மறுப்பவர்களுக்கு எதிராகத் துருப்புகள் அனுப்பப்படும்.(19) தண்டக்கோலானது தீயவர்களுக்காகவே திட்டமிடப்பட்டதாகும். தன்வளர்ச்சிக்காக அது திட்டமிடப்பட்டதில்லை. நல்லோரை ஒடுக்குபவர்கள் கொல்லப்படத் தகுந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.(20) தீவினைக்கஞ்சாத வழிகளால் நாடுகளைப் பீடிப்பதன் மூலம் தங்கள் நற்பேற்றை வளர்த்துக் கொள்ள முனைவோர், வெகுவிரைவில் சடலத்தில் முளைத்த புழுக்களாகக் கருதப்படுவார்கள்.(21) சாத்திரங்களில் உள்ள கட்டுப்பாடுகளான இவற்றுக்கு உடன்பட்டுத் தங்களை நடத்திக் கொள்ளும் கள்வர்கள், கொள்ளையிடும் வாழ்வை வாழ்ந்தாலும்கூட வெகுவிரைவில் விடுதலையை {முக்தியை} அடைவார்கள்” என்றான் {காயவ்யன்}”.(22)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட அந்தக் கள்வர்கள், காயவ்யனின் கட்டளைகள் அனைத்துக்குக் கீழ்ப்படிந்த நடந்தார்கள். பாவத்தைத் தவிர்த்த அவர்கள் பெருஞ்செழிப்பையும் அடைந்தார்கள்.(23) இத்தகு வழியில் நடந்து கொண்டு, நேர்மையானவர்களுக்கு இவ்வாறு நன்மை செய்து, அதன் மூலம் கள்வர்களிடம் உள்ள தீய நடைமுறைகளை இவ்வாறு கட்டுப்படுத்திய காயவ்யன், (மறுமையில்) பெரும் வெற்றியை அடைந்தான்.(24) காயவ்யனின் இந்தக் கதையை எப்போதும் நினைக்கும் ஒருவன், எந்தக் காட்டுவாசிகளிடமிருந்தும் {காட்டு விலங்குகளிடம் இருந்தும்}, பூமி சார்ந்த எந்த உயிரினிடமிருந்தும் எந்த அச்சத்தையும் அடையமாட்டான்.(25) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இத்தகு மனிதனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சம் இருக்காது. தீய மனிதர்களிடமும் அவன் எந்த அச்சத்தையும் அடைய மாட்டான். {காயவ்யனின் கதை கேட்ட} இத்தகு மனிதன் காட்டுக்குச் சென்றால், ஒரு மன்னனுக்கான பாதுகாப்போடு அவனால் அங்கே வாழ முடியும்[2]” என்றார் {பீஷ்மர்}.(26)
[2] கும்பகோணம் பதிப்பில், “எவன் காபச்யனுடைய இந்தக் கதையை எப்பொழுதும் சிந்திக்கிறானோ அவன் அரண்யத்திலுள்ள பிராணிகளிடமிருந்தும் எவ்விதத்திலும் பயமடையமாட்டான். அவனுக்கு மனுஷ்யர்களிமிருந்தும் பயமில்லை; எவ்விதத்திலும் தேவர்களிடமிருந்துமில்லை; ஸாதுக்களிடமிருந்துமில்லை; அஸாதுக்களிடமிருந்துமிலை. அரசனே! அவன் காடுகளில் பசுக்களுக்குப் பதியாயிருப்பான்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “எவன் காபவ்யனின் இந்த நடத்தையை அடிக்கடி நினைத்துப் பார்க்கிறானோ, அவன் காட்டில் வசிப்போர் அல்லது எந்த உயிரினத்திடம் இருந்தும் எந்த அச்சத்தாலும் ஒருபோதும் பீடிக்கப்பட மாட்டான். தேவர்கள், அல்லது மனிதர்களிடமிருந்தும், அறவோரிடம், அல்லது தீயவர்களிடமிருந்தும் எந்த அச்சமும் அவனுக்கு இருக்காது. ஓ மன்னா, அவன் காட்டில் ஒரு தலைவனைப் போல வாழ்வான்” என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 135ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |