Tuesday, April 17, 2018

பிரம்மதத்தனும் பூஜனியும்! - சாந்திபர்வம் பகுதி – 139

Brahmadatta and Pujani! | Shanti-Parva-Section-139| Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 09)


பதிவின் சுருக்கம் : ஏன் அதிக நம்பிக்கை கொள்ளக் கூடாது என்பதற்கு, மன்னன் பிரம்மதத்தனுக்கும், பூஜனி என்ற பறவைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிமைமிக்கவரே, எதிரிகள் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது என்று நீர் விதித்திருக்கிறீர். ஆனால், ஒரு மன்னன் யாரையும் நம்பவில்லையென்றால் எவ்வாறு அவன் தன்னைப் பராமரித்துக் கொள்ள முடியும்?(1) ஓ! மன்னா {பீஷ்மரே}, நம்பிக்கையிலிருந்தே மன்னர்களுக்குப் பேராபத்து எழுகிறது என்று சொல்கிறீர். ஆனால், ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னன் பிறரை நம்பாமல் எவ்வாறு தன் எதிரிகளை வெல்ல முடியும்?(2) அன்புகூர்ந்து என் இந்த ஐயத்தை நீர் விலக்குவீராக. ஓ! பாட்டா, நம்பிக்கையின்மை குறித்து நீர் சொன்னதைக் கேட்டு என் மனம் குழம்பியிருக்கிறது" என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, பிரம்மதத்தனின் வசிப்பிடத்தில் மன்னன் பிரம்மதத்தனுக்கும் பூஜனிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கேட்பாயாக.(4) காம்பில்யத்தில் உள்ள மன்னன் பிரம்மதத்தனின் அரண்மனை அந்தப்புரத்தில் பூஜனி என்ற பறவையும் அவனுடன் வெகுகாலம் வாழ்ந்து வந்தது.(5) ஜீவ ஜீவகப் பறவையைப் போலப் பூஜனியும் பலவிலங்குகளின் குரல்களில் பேசக்கூடியவளாக இருந்தாள். பிறப்பால் ஒரு பறவையாக இருப்பினும், அவள் பேரறிவு படைத்தவளாகவும், அனைத்து உண்மைகளையும் அறிந்தவளாகவும் இருந்தாள்.(6) அங்கே வாழ்ந்து வந்தபோது, அவள் பெரும் காந்தி கொண்ட ஒரு வாரிசை ஈன்றாள். அதே வேளையில் மன்னனும் தன் ராணியிடம் ஒரு மகனைப் பெற்றான்.(7) மன்னனின் மேற்கூரையில் புகலிடம் பெற்றதால் நன்றி நிறைந்திருந்த பூஜனி, தினமும் கடற்கரைக்குச் சென்று, தன் குஞ்சுக்கும், குழந்தையான இளவரசனுக்கும் என இரண்டு கனிகளைக் கொண்டு வந்ததாள்.(8) அதில் ஒன்றை தன் பிள்ளைக்கும், மற்றொன்றை இளவரசனுக்கும் கொடுத்தாள்.(9) அவள் கொண்டுவந்த கனிகள் அமுதம் போன்ற இனிமையுடனும், பலம் மற்றும் சக்தியைப் பெருக்கும் வல்லமையுடனும் இருந்தன. இப்படியே தினமும் அவள் அவற்றைக் கொண்டு வந்து கொடுத்தாள். பூஜனி கொடுத்த கனியை உண்டு அந்தக் குழந்தை இளவரசன் பெரும் பலத்தை அடைந்தான்.(10)

ஒரு நாள், செவிலியின் கரங்களில் இருந்த அந்தக் குழந்தை இளவரசன், பூஜனியின் சிறு பறவைக் குஞ்சைக் கண்டான். செவிலியின் கரங்களில் இருந்து கீழே இறங்கிய அந்தப் பிள்ளை, சிறுபிள்ளைத்தனமான உந்துதலால் உந்தப்பட்டு, அதனுடன் விளையாடிக் களித்தான்.(11) இறுதியாகத் தன் வயதே ஆன அந்தப் பறவையைக் கையில் உயர்த்திய அந்த இளவரசன், அந்தப் பிஞ்சின் உயிரை நசுக்கி வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் தன் செவிலியிடம் வந்தான்.(12) ஓ! மன்னா, வழக்கமாகக் கொண்டுவரும் கனிகளைத் தேடி வெளியே சென்றிருந்த அந்தப் பெண்பறவையானவள், {திரும்பி வந்ததும்} தன் குஞ்சு இளவரசனால் கொல்லப்பட்டுத் தரையில் கிடப்பதைக் கண்டாள்.(13)

தன் மகன் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட பூஜனி, கன்னங்களில் நீர் வடிய, துயரத்தால் எரிந்த இதயத்துடன், அதிகமாக அழுது,(14) "ஐயோ, ஒருவனும் ஒரு க்ஷத்திரியனுடன் வாழவோ, அவனுடன் நட்பு கொள்ளவோ, அவனுடனான எந்தத் தொடர்பிலும் இன்பம் கொள்ளவோ கூடாது. அவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய நோக்கம் ஏதும் இருந்தால், அவர்கள் மதிப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்களது நோக்கம் நிறைவேறியதும், அவர்கள் அந்தக் கருவியைக் கைவிடுவார்கள்.(15) க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் தீமை செய்வார்கள். அவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது. ஒரு தீங்கைச் செய்த பிறகும், அவர்கள் எப்போதும் தேற்ற முனைந்து, தீங்குக்கு உள்ளானவனுக்கு ஏதுமில்லாமலே உறுதிமொழி கூறுவார்கள். நன்றி கொன்ற, நம்பிக்கைதுரோகம் செய்த இந்தக் கொடூரனை நான் நிச்சயம் பழிவாங்குவேன்.(17) தான் பிறந்த அதே நாளில் பிறந்து, அதே இடத்தில் வளர்ந்தவனும், தன்னுடன் சேர்ந்து உண்பவனும், தனது பாதுகாப்பைச் சார்ந்திருந்தவனுமான ஒருவனின் உயிரை எடுத்து மூன்று பாவங்களை இவன் செய்திருக்கிறான்" என்றது.(18)இவ்வார்த்தைகளைத் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்ட பூஜனி, தன் உகிர்களைக் கொண்டு அந்த இளவரசனின் கண்களைத் துளைத்து, அந்தப் பழிச்செயலால் ஆறுதலை அடைந்து, மீண்டும்,(19) "வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு பாவச்செயலானது, கால இழப்பேதுமில்லாமல் அதைச் செய்தவனைத் தண்டிக்கும். மறுபுறம், ஒரு தீங்குக்காகப் பழிதீர்த்தவர்கள், அத்தகைய நடத்தையால் ஒருபோதும் தங்கள் தகுதியை இழக்கமாட்டார்கள்.(20) ஓ! மன்னா, ஒருவன் செய்த பாவச்செயலின் விளைவு அதை இழைத்தவனிடம் தென்படவில்லையெனினும், அஃது அவனுடைய மகன்கள், மகனுடைய மகன்கள், அல்லது மகளுடைய மகன்களிடம் நிச்சயம் தென்படும்.(21)

பிரம்மதத்தன், பூஜனியால் தனது மகன் குருடாக்கப்பட்டதைக் கண்டும், தன் மகன் செய்ததற்கான சரியான பழிதீர்ப்பாகவே அச்செயலைக் கருதியும் பூஜனியிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(22) பிரம்மதத்தன், "எங்களால் உனக்கு ஒரு தீங்கு செய்யப்பட்டது. பதிலுக்கு ஒரு தீங்கைச் செய்து நீ அதற்குப் பழிவாங்கிவிட்டாய். கணக்குத் தீர்ந்துவிட்டது. உன் வசிப்பிடத்தை விட்டுச் செல்லாதே. மறுபுறம், ஓ! பூஜனி, இங்கேயே தொடர்ந்து வசிப்பாயாக" என்றான்.(23)

பூஜனி {மன்னன் பிரம்மதத்தனிடம்}, "ஒருவனுக்கு ஒருமுறை தீங்கிழைத்துவிட்டு, அங்கேயே ஒருவன் தொடர்ந்து வசித்தால், அவனது அந்த நடத்தையைக் கல்விமான்கள் ஒருபோதும் மெச்சுவதில்லை. அத்தகைய சூழ்நிலைகளில், தீங்கிழைத்தவன் தன் பழைய இடத்தை விட்டுச் செல்வதே எப்போதும் சிறந்ததாகும்.(24) தீங்குக்கு உள்ளான தரப்பிடம் இருந்து பெறப்படும் தேறுதல் உறுதிமொழிகளில் ஒருவன் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது. அத்தகைய உறுதிமொழிகளை நம்பும் மூடன், விரைவில் அழிவையே அடைவான். கடும்பகையை ஒருபோது உடனே தணிக்கமுடியாது.(25) ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்டோரின் மகன்களும், பேரப்பிள்ளைகளும் (பரம்பரைச் சண்டையின் விளைவால்) அழிவை அடைவார்கள். தங்கள் வாரிசின் அத்தகைய அழிவின் விளைவால், அவர்கள் மறுமையையும் இழப்பார்கள்.(26) ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்ட மனிதர்களுக்கு இடையில், நம்பிக்கையின்மையே மகிழ்ச்சியை உண்டாக்கும். நம்பிக்கை துரோகம் செய்தவனை ஒருபோதும் கொஞ்சமேனும் நம்பக்கூடாது.(27) நம்பிக்கைக்குத் தகாத ஒருவன் ஒருபோதும் நம்பப்படக்கூடாது; அதே போல, நம்பத்தகுந்த மனிதனும் மிக அதிகமாக நம்பப்படக்கூடாது. ஒருவன் தன் மீது கொண்ட நம்பிக்கையால் அடுத்தவர்களை ஈர்க்க முயல வேண்டும். எனினும், அவன் அடுத்தவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது.(28) தந்தையும் தாயும் மட்டுமே முதன்மையான நண்பர்கள். மனைவியானவள் வித்துகளை விளையச் செய்யும் வெறும் பாத்திரம் {வயல்} மட்டுமே. மகன் என்பவன் வெறுமனே ஒருவனின் வித்து மட்டுமே. உடன் பிறந்தவனோ {பொருளைப் பங்கிட்டுக் கொண்டு போவதால்} ஒரு பகைவனாவான். நண்பனோ, தோழனோ, அவ்வாறே இருக்க வேண்டுமெனில் தன் உள்ளங்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும் {பசையுடன் இருக்க வேண்டும்}[1]. மகிழ்ச்சியையோ, துன்பத்தையோ அனுபவிப்பது ஒருவனின் சுயமே {ஆத்மாவே}.(29)

[1] கும்பகோணம் பதிப்பில், "மனிதன் கையில் ஈரமுள்ளவரையில் ஸ்நேஹிதனாகயிருப்பான்" என்றிருக்கிறது.

ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்ட மனிதர்களுக்கு மத்தியில், (உண்மையில்) அமைதியேற்படுவது பரிந்துரைக்கத் தகாததாகும். நான் இங்கே வாழ்வதற்கான காரணம் ஏதும் இப்போது இல்லை.(30) மற்றவனுக்குத் தீங்குக்கு உள்ளானவன் கொடைகளின் மூலமோ, கௌரவங்களின் மூலமோ தன்னை வழிபட்டால், தீங்கிழைத்த மனிதனின் மனமானது, இயற்கையாகவே நம்பிக்கையின்மையால் நிறைகிறது. அதிலும் குறிப்பாக, அத்தகைய நடத்தை பலமானவர்களால் வெளிப்படுத்தப்பட்டால், அது பலவீனர்களை நிச்சயம் அச்சத்தாலேயே நிறைக்கும்.(31) முதலில் கௌரவமடைந்து, பிறகு அங்கே அவமதிப்பையும், தீங்கையும் அடைந்தால், நுண்ணறிவுமிக்க ஒருவன் அந்த இடத்தைவிட்ட அகல வேண்டும். தன் எதிரியிடம் இருந்து அடுத்தடுத்துக் கௌரவத்தை அடைந்தாலும் அவன் இவ்வழியிலேயே நடந்து கொள்ள வேண்டும்.(32) உன் வசிப்பிடத்தில் உன்னால் கௌரவிக்கப்பட்டு நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். எனினும், இறுதியில் பகைக்கான ஒரு காரணம் எழுந்துவிட்டது. எனவே, எந்தத் தயக்கமும் இல்லாமல் நான் இந்த இடத்தைவிட்டு அகலவே வேண்டும்" என்றது.(33)

பிரம்மதத்தன் {பறவையான பூஜனியிடம்}, "ஒருவன் தான் அடைந்த தீங்குக்குப் பதிலாக ஒரு தீங்கைச் செய்தால், அஃது ஒருபோதும் குற்றமாகக் கருதப்படுவதில்லை. உண்மையில், பழிதீர்த்தவன், அத்தகைய நடத்தையால் {பாவக்} கணக்கையே தீர்க்கிறான். எனவே, ஓ! பூஜனி, இந்த இடத்தைவிட்டுச் செல்லாமல் தொடர்ந்து இங்கேயே வசிப்பாயாக" என்றான்.(34)

பூஜனி {மன்னன் பிரம்மதத்தனிடம்}, "தீங்கிழைத்தவனுக்கும், பதிலுக்குத் தீங்கிழைத்தவனுக்கும் இடையில் மீண்டும் எந்த நட்பும் உறுதியடைய முடியாது. இருவரின் இதயமும் நடந்ததை ஒருபோதும் மறக்காது" என்றது.(35)

பிரம்மதத்தன், "தீங்கிழைத்தவன் மற்றும் அந்தத் தீங்குக்குப் பழிதீர்த்தவன் ஆகியோருக்கிடையில் ஒற்றுமை ஏற்படுவது அவசியமாகும். அத்தகைய சேர்க்கையால், பரஸ்பர பகையும் தணிவது காணப்படுகிறது. அத்தகைய வழக்குகளில் புதிய தீங்குகளும் பின்தொடர்வதில்லை" என்றான்.(36)

பூஜனி, "(பரஸ்பரத் தீங்குகளால் எழும்) பகைமையை ஒரு போதும் சாகாது. தீங்குக்கு உள்ளானவன், "ஓ!, நல்லெண்ணத்துடன் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளால் நான் தேற்றப்பட்டேன்" என்றெண்ணி ஒருபோதும் தன் எதிரிகளை நம்பக்கூடாது. (தவறாக வைக்கப்படும்) நம்பிக்கையின் விளைவாலேயே இவ்வுலகில் மனிதர்கள் அடிக்கடி அழிவடைகிறார்கள். இந்தக் காரணத்தால், நாம் இனிமேல் ஒருபோதும் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருப்பதே அவசியமானதாகும்.(37) பலம் மற்றும் கூரிய ஆயுதங்களால் அடக்கப்பட முடியாதவன் கூட, (பழக்கப்படுத்தப்பட்ட) மலாகையின் {பெண் யானையின்} மூலம் (காட்டு) யானைகள் வெல்லப்படுவதைப் போல, (உண்மையற்ற) சமரசத்தின் பேரில் வெல்லப்படலாம்" என்றது.(38)

பிரம்மதத்தன், "ஒன்றாக வசிக்கும் இருவரில் ஒருவர் மற்றவருக்குப் பயங்கரத் தீங்கை இழைத்துவிட்டாலும் கூட, சண்டாளனுக்கும், நாய்க்கும் இடையிலான வழக்கைப் போல[2], அவர்களுக்கிடையில் அன்பும், பரஸ்பர நம்பிக்கையும் இயற்கையாகவே எழுகிறது.(39) ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொண்டவர்கள் ஒன்றாக வசிக்கும்போது, பகையின் கூர்மை மழுங்குகிறது. உண்மையில் அந்தப் பகைமை, தாமரை இதழின் மீது ஊற்றப்பட்ட நீரைப் போல வெகு காலம் நீடிக்காமல் உடனே மறைந்துவிடுகிறது" என்றான்.(40)

[2] கும்பகோணம் பதிப்பில், "நாயைக் கொன்று தின்னும் சண்டாளனுக்கும், நாய்க்கும் ஒன்றுக்கொன்று ஸ்நேஹமுண்டாவது போல உயிருக்கு அபாயத்தைச் செய்யும் மனிதர்களுடனும் சேர்ந்து வஸிப்பதால் ஸ்நேஹமுண்டாகும்" என்றிருக்கிறது.

பூஜனி {மன்னன் பிரம்மதத்தனிடம்}, "பகைமை ஐந்து காரணங்களால் எழுகிறது. கல்விமான்கள் அஃதை அறிவார்கள். பெண், நிலம், கடுஞ்சொல், இயல்பான ஒவ்வாமை, தீங்கு ஆகியவையே அந்த ஐந்து காரணங்களாகும்[3].(41) பகைமை நேரக்கூடிய மனிதன் தயாளனாக இருந்தால், வெளிப்படையாகவோ, மறைமுக வழிமுறைகளாலோ அவன் ஒருபோதும் கொல்லப்படக்கூடாது, அதிலும் குறிப்பாக க்ஷத்திரியனால் கொல்லப்படக்கூடாது. அத்தகைய ஒரு வழக்கில், மனிதனின் குற்றத்தை {துலாக்கோலில் எடைபார்ப்பது போல்} முறையாக நிறுத்திப் பார்க்க வேண்டும்[4].(42) கடலின் நீரில் இருக்கும் ஔர்விய நெருப்பைப் போல, பகையெனும் நெருப்பை, செல்வத்தின் கொடைகளாலோ, ஆற்றலை வெளிப்படுத்துவதாலோ, சமரசத்தாலோ, சாத்திரக் கல்வியினாலோ ஒருபோதும் தணிக்க முடியாது.(44) ஒருமுறை செய்யப்பட்ட தீங்கின் விளைவால் பகையெனும் நெருப்பானது ஒருமுறை பற்றிக் கொண்டால், ஓ! மன்னா, ஒருதரப்பை எரிக்காமல் அஃது ஒருபோதும் தணியாது.(45) ஒருவனுக்குத் தீங்கிழைத்தவன், (தீங்கிழைக்கப்பட்ட பிறகும்) அவன் செல்வத்தாலும், கௌரவங்களாலும் தன்னை வழிபட்டாலும், அவனை ஒருபோதும் தன்னுடைய நண்பனாகக் கருதக்கூடாது. தீங்கின் உண்மை, அத்தீங்குக்கு உள்ளானவனை அச்சத்தால் நிறைக்கிறது.(46) நான் உனக்கு ஒருபோதும் தீங்கிழைக்கவில்லை. நீயும் எனக்கு ஒருபோதும் தீங்கிழைத்ததில்லை. அதன் காரணமாகவே நான் உன் வசிப்பிடத்தில் வசித்தேன். அவை அனைத்தும் மாறிவிட்டது, தற்போது என்னால் உன்னை நம்ப முடியாது" என்றது.(47)

[3] "கிருஷ்ணனுக்கும், சிசுபாலனுக்கும் இடையிலான பகைமை இந்தக் காரணங்களில் முதல் காரணத்தால் உண்டானதாகும்; குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் உண்டான பகை இரண்டாம் காரணத்தால் உண்டானதாகும்; துரோணருக்கும், துருபதனுக்கும் இடையில் உண்டானது மூன்றாவது காரணத்தால்; பூனைக்கும், எலிக்கும் இடையில் உண்டானது நான்காவதால்; (தற்போதை கதையில் வரும்) இந்தப் பறவைக்கும், மன்னனுக்கும் இடையில் உண்டானது ஐந்தாவது காரணத்தால்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "பகைமைக்கு வழிநடத்திச் செல்லும்அந்தச் செயலை எதிரியானவன், கோபத்துக்கு உள்ளாகாமல் அமைதியாகக் கருதிப் பார்க்க வேண்டும் என்பது பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வெளியாயிருப்பதோ, மறைவாயிருப்பதோ குற்றத்தின் பலாபலத்தைத் தெரிந்து கொண்டு ஸ்நேஹிதனாயிருந்தாலும் வைரத்தைச் செய்தவனிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது" என்றிருக்கிறது.பிரம்மதத்தன் {பறவை பூஜனியிடம்}, "காலமே ஒவ்வொரு செயலையும் செய்கிறது. பல்வேறு வகைச் செயல்களும், காலத்தில் இருந்தே எழுகின்றன. எனவே யார், யாருக்குத் தீங்கிழைப்பது[5]?(48) பிறப்பும், இறப்பும் இவ்வழியிலேயே நேர்கின்றன. காலத்தின் விளைவாலேயே உயிரினங்கள் செயல்படுகின்றன, காலத்தின் விளைவாலேயே அவை வாழ்வை நிறுத்தவும் செய்கின்றன (அதாவது பிறப்பையும், இறப்பையும் அடைகின்றன).(49) சிலர் உடனே {ஒன்றாகவே} இறப்பது காணப்படுகிறது. சிலர் ஒவ்வொரு காலத்தில் தனித்தனியாகவும் இறக்கின்றனர். சிலர், நீண்ட காலம் வாழ்வதும் காணப்படுகிறது. விறகை எரிக்கும் நெருப்பைப் போலவே, காலமானது அனைத்து உயிரினங்களையும் பற்றுகிறது.(50) ஓ! அருளப்பட்ட மங்கையே, எனவே, உன் கவலையின் காரணம் நானல்ல, அதே போல நீயும் என் துயருக்கான காரணமல்ல. உடல் படைத்த உயினிங்களின் இன்பத்தையும், துன்பத்தையும் காலமே எப்போதும் விதிக்கிறது.(51) என்னிடம் அன்புடனும், நான் உனக்குத் தீங்கு செய்வேன் என்ற அச்சம் ஏதும் இல்லாமலும் நீ இங்கே தொடர்ந்து சுகமாக வசிப்பாயாக. நீ செய்தது என்னால் மன்னிக்கப்பட்டது. ஓ! பூஜனி நீயும் என்னை மன்னிப்பாயாக” என்றான்.(52)

[5] "அனைத்தையும் செய்வது காலமே என்றால், அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பூஜனி, “உன்னைப் பொறுத்தவரையில், காலமே அனைத்திற்கும் காரணமென்றால், உண்மையில் பூமியில் எவரும் பகைமை உணர்வுகளை வளர்க்க முடியாது. எனினும், நண்பர்களும், சொந்தங்களும் கொல்லப்படும்போது, ஏன் நண்பர்களும், சொந்தங்களும் பழிவாங்குகின்றனர்?(53) மேலும், பழங்காலத்தில் ஏன் தேவர்களும், அசுரர்களும் ஒரைவரையொருவர் தாக்கிக் கொண்டு போரிட்டனர்? இன்பம் மற்றும் துன்பம், பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றுக்குக் காலமே காரணம் என்றால்,(54) ஏன் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்தளிக்கின்றனர்? காலம் தான் அனைத்தையும் சமைக்கிறது என்றால், மருந்துகளுக்கான அவசியம்தான் என்ன?(55) மக்கள், துயரால் புலனுணர்வுகளை இழந்து, அறிவுபிறழ்ந்த அத்தகைய கொந்தளிப்பான பேச்சுகளில் ஏன் ஈடுபடுகின்றனர்? உன்னைப் பொறுத்தவரையில் காலமே செயல்களின் காரணமென்றால், அறச்செயல்களைச் செய்யும் நபர்கள் எவ்வாறு தங்கள் அறத்தகுதியை ஈட்ட முடியும்?(56) உன் மகன் என் பிள்ளையைக் கொன்றான். அதற்காக நான் அவனுக்குத் தீங்கிழைத்தேன். ஓ! மன்னா, அந்தச் செயலால் நான் உன்னால் கொல்லப்படத்தக்கவளானேன்.(57) என் மகனுக்கான துயரத்தால் உந்தப்பட்டு நான் உன் மகனுக்கு இந்தத் தீங்கைச் செய்துவிட்டேன். நான் ஏன் உன்னால் கொல்லப்படத்தக்கவளானேன் என்பதை இப்போது கேட்பாயாக.(58)

மனிதர்கள் தங்கள் உணவுக்காகக் கொல்லவோ, விளையாட்டுக்காகக் கூண்டில் அடைத்துவைக்கவோதான் பறவைகளை விரும்புகின்றனர். இத்தகைய கொலை, அல்லது அடைத்துவைத்தல் ஆகியவற்றுக்காகவே மனிதர்கள் என் இனத்தில் ஒவ்வொருவரையும் தேடுகிறார்களேயன்றி வேறு மூன்றாவது காரணம் ஏதும் கிடையாது.(59) மேலும் பறவைகளும், மனிதர்களால் கொல்லப்படுவோம், அல்லது அடைத்துவைக்கப்படுவோம் என்ற அச்சத்தால் பாதுகாப்பை நாடி தப்பி ஓடுகின்றனர். இறப்பு மற்றும் சிறை ஆகிய இரண்டும் வலிமிக்கவை என்று வேதங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(60) உயிர் என்பது அனைவருக்கும் அன்புக்குரியது {விருப்பத்திற்குரியது}. துயரத்தாலும், வலியாலும் அனைத்து உயிரினங்களும் துன்புறுகின்றன. அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியையே விரும்புகின்றன.(61) பல்வேறு மூலங்களில் இருந்து துன்பம் எழுகிறது. ஓ! பிரம்மதத்தா, முதுமை துன்பமே. செல்வமிழப்பு துன்பமே. ஏற்பில்லாத, அல்லது தீயவற்றுக்கு நெருக்கமான எதுவும் துன்பமே. நண்பர்கள் மற்றும் ஏற்புடைய பொருட்களில் இருந்து பிரிவோ, தொடர்பின்மையோ ஏற்படுவது துன்பமே.(62) இறப்பு மற்றும் சிறையில் துன்பமே எழுகிறது. பெண்கள் தொடர்புடைய காரணங்களாலும், பிற இயற்கையான காரணங்களாலும் துன்பம் எழுகிறது. பிள்ளைகளின் இறப்பால் எழும் துன்பமானது அனைத்துயிரினங்களையும் வெகுவாகப் பீடித்து அவற்றை {தங்கள் இயல்புகளில் இருந்து} மாறச் செய்கின்றன. (63)

சில மூட மனிதர்கள், பிறரின் துன்பங்கள் துன்பங்களே இல்லை என்று சொல்கின்றனர்[6]. மனிதர்களுக்கு மத்தியில் எந்தத் துன்பத்தையும் அனுபவிக்காதவன் மட்டுமே இவ்வாறு சொல்ல முடியும்.(64) எனினும் கவலையையும், துன்பத்தையும் அனுபவித்தவன் ஒருபோதும் அவ்வாறு சொல்லத் துணிய மாட்டான். அனைத்து வகைத் துன்பங்களின் வலியையும் உணர்ந்தவன், அடுத்தவரின் துன்பங்களைத் தன் துன்பத்தைப் போலவே உணர்வான்.(65) ஓ! மன்னா, நான் உனக்குச் செய்ததும், நீ எனக்குச் செய்ததும் நூறு வருடங்கள் ஆனாலும் {பாவங்கள்} கழுவப்பட முடியாதனவாகும்.(66) நாம் ஒருவருக்கொருவர் என்ன செய்து கொண்டோமோ, அதற்குப் பிறகு நமக்குள் எந்த இணக்கமும் ஏற்பட முடியாது. உன் மகனுக்கு ஏற்பட்டதை நீ அடிக்கடி சிந்திக்கும்போதெல்லாம், என் மீது நீ கொண்ட பகை புத்துயிர் பெறும்.(67) ஒருவன் ஒரு தீங்குக்காகப் பழிதீர்த்தபிறகு, தீங்குக்குள்ளானவனுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்ள விரும்பினால், உடைந்து போன மண் பாத்திரத்தைப் போலவே அத்தரப்புகளால் சரியாகச் சேர முடியாது.(68)

[6] “அஃதாவது, அவர்கள் பிற மக்களின் கவலையை அலட்சியமாகக் கருதுகிறார்கள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

நம்பிக்கையானது ஒருபோதும் மகிழ்ச்சியை உண்டாக்காது என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் விதித்திருக்கிறார்கள். பழங்காலத்தில் உசனஸே {சுக்கிராச்சாரியரே} பிரகலாதனிடம் இரண்டு ஸ்லோகங்களைப் பாடியுள்ளார்.(69) எதிரியின் உண்மையான, அல்லது பொய்யான வார்த்தைகளை எவன் நம்புவானோ, அவன் தேனைத் தேடும் ஒருவன் காய்ந்த புற்களால் மறைக்கப்பட்ட குழியில் விழுவதைப்போல அழிவையே அடைவான்[7].(70) உயிரோடு இருக்கும் பிள்ளைகளிடம் இறந்து போன அவர்களுடைய தந்தை செய்த சச்சரவுகளைக் குறித்து மனிதர்கள் பேசவே செய்வார்கள், எனவே பகைவர்கள் இறந்த பின்னரும் பகைகள் நீடிக்கின்றன[8].(71) மன்னர்கள் இணக்கம் செய்து கொண்டு பகைகளைத் தணித்தாலும், வாய்ப்பு ஏற்படும்போது நீர் நிறைந்த மண்குடங்களைக் கல்லில் மோதி உடைப்பதைப் போல அவர்கள் தங்கள் எதிரிகளை அழிப்பார்கள்.(72) ஒரு மன்னன் எவனுக்காவது தீங்கிழைத்துவிட்டால், அவன் மீண்டும் அவனை ஒருபோதும் நம்பக்கூடாது. தீங்கிழைக்கப்பட்டவனை ஒருவன் நம்புவதன் மூலம் அவன் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்” என்றான்.(73)

[7] “தேனைத் தேடிச் செல்பவர்கள், மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும், வண்டுகளின் {தேனீக்களின்} பறக்கும் பாதையைக் குறித்துக் கொண்டு அவற்றைப் பின்பற்றிச் செல்கின்றனர். எனவே அவர்கள் அடிக்கடி விழுகின்றனர்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[8] கும்பகோணம் பதிப்பில், “வைரங்கள் குலங்களில் பத்து யுகமானாலும் போகா. அந்தக் குலத்தில் ஒரு புருஷன் பிறந்தால் அவனுக்குச் சொல்லுகிறவர்களும் இருப்பார்கள்” என்றிருக்கிறது.

பிரம்மதத்தன், “எந்த மனதனும், (பிறரிடம்) நம்பிக்கை வைக்காமல் எந்த நோக்கத்தின் கனியையும் அடையமுடியாது. அச்சத்தை வளர்த்துக் கொள்வதால் ஒருவன் சவத்தைப் போலவே வாழ நேரிடும்” என்றான்.(74)பூஜனி, “எவனுடைய பாதமாவது புண்ணானால், அவன் எவ்வளவுதான் எச்சரிக்கையுடன் நடந்தாலும் {ஓடினாலும்}, அவன் நிச்சயம் விழுவான்.(75) கண்கள் எரிச்சல் கொண்ட ஒரு மனிதன் காற்றை எதிர்த்து தன் கண்களைத் திறந்தால், அந்தக் காற்றின் மூலம் அதிக வலியை உணர்வான்.(76) தன் பலத்தை அறியாமல், தீய பாதையில் கால் வைக்கும் ஒருவன், பிடிவாதமாக நடந்து சென்றால், அதன் விளைவாக அவன் விரைவில் தன் உயிரையே இழப்பான்.(77) முயற்சியற்ற ஒரு மனிதன், மழைக்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் தன் நிலத்தை உழுதால் , அவர் ஒருபோதும் அறுவடையை அடையான்.(78) கசப்போ, துவர்ப்போ, ஏற்றுக்கொள்ளக்கூடியதோ, இனிமையானதோவான ஊட்டச்சத்துள்ள உணவை தினமும் உண்பவன் நீண்ட வாழ்வை வாழ்வான்.(79) மறுபுறம், நலந்தரும் உணவை அலட்சியம் செய்து, விளைவுகளைப் பார்க்காமல் தீங்கானவற்றை உண்ணும் ஒருவன் விரைவில் மரணத்தை அடைவான்.(80)

விதியும், முயற்சியும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டோர் நல்ல மற்றும் பெரும் சாதனைகளைச் செய்கின்றனர், அதே வேளையில் ஆண்மையற்றவர்கள் விதியைக் கொண்டாடுகின்றனர்[9].(81) நன்மையான ஒரு செயல் கடுமையானதோ, மென்மையானதோ, அது செய்யப்படவே வேண்டும். எனினும், செயலின்மையுடன் இருக்கும் நல்லூழற்ற மனிதன் எப்போதும் அனைத்துவகை இடர்களிலும் மூழ்கியிருப்பான்.(82) எனவே, ஒருவன் அனைத்தையும் கைவிட்டு தன் சக்தியை வெளிப்படுத்த வேண்டும். உண்மையில் மனிதர்கள் அனைத்தையும் அலட்சியம் செய்து, தங்களுக்கு நன்மையை உண்டாக்குபவற்றையே செய்ய வேண்டும்.(83)

[9] கும்பகோணம் பதிப்பில், “பௌருஷமும் தெய்வமும் ஒன்றையொன்று அடுத்திருப்பவைகளாகும். அவைகளில் பௌருந்தான் பெரியதாகும். தைரியமில்லாதவர்கள் தெய்வத்தைக் கொண்டாடுகிறார்கள்” என்றிருக்கிறது.

அறிவு, துணிவு, புத்தி, பலம், பொறுமை ஆகியன ஒருவனின் இயற்கையான நண்பர்களாக இருக்கின்றன. ஞானம் கொண்டோர் தங்களது இவ்வுலக வாழ்வை இவ்வைந்தின் துணையுடன் கடக்கிறார்கள்.(84) வீடுகள், மதிப்புமிக்க உலோகங்கள், நிலம் {வயல்}, மனைவி, நண்பர்கள் ஆகியன நன்மையின் இரண்டாம் மூலங்களாகக் கல்விமான்களால் சொல்லப்படுகின்றன. ஒரு மனிதன் இவற்றை எங்கும் அடையலாம்.(85) ஞானம் கொண்ட மனிதன், எங்கும் மகிழ்ச்சியாக இருப்பான். அத்தகைய மனிதன் எங்கும் ஒளிர்ந்து கொண்டே இருப்பான். அவன் ஒருபோதும் பிறரை அச்சமடையச் செய்யமாட்டான். அவனை அச்சப்படுத்த முயன்றால், ஒருபோதும் அவன் அச்சத்திற்கு வசப்படமாட்டான்.(86) ஒரு புத்திசாலியால் எந்தக் காலத்தில் உடைமையாகக் கொள்ளப்படும் செல்வமானது, சிறியதாக இருப்பினும் அது நிச்சயம் பெருகும். அத்தகைய மனிதன் அனைத்துச் செயல்களையும் புத்திசாலித்தனத்துடன் செய்வான். தற்கட்டுப்பாட்டின் விளைவால் அவன் பெரும் புகழை அடைவதிலும் வெல்வான்.(87)

வீட்டைப்பார்த்துக் கொள்ளும் சிறுமதியாளர்கள், தன் அன்னைகளையே உண்ணும் ஒரு நண்டின் குஞ்சுகளைப்போலத் தங்கள் சதைகளையே உண்ணும் அடங்காப்பிடாரி மனைவிகளைக் கொள்வார்கள்[10].(88) அறிவை இழந்ததன் மூலம் தங்கள் விட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பில் உற்சாகமிழக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள்ளேயே, “இவர்கள் எங்கள் நண்பர்கள், இஃது எங்கள் நாடு. ஐயோ, இவற்றை நாங்கள் எவ்வாறு விட்டுச் செல்வோம்?” என்று சொல்கிறார்கள். ஒருவனுடைய நாடானது தொற்றுநோய், அல்லது பஞ்சத்தால் பீடிக்கப்பட்டால் அவன் அதை விட்டுச் செல்லவே வேண்டும். ஒருவன் தன் நாட்டில் அனைவராலும் மதிக்கப்பட்டு வாழவேண்டும், அல்லது அந்நிய நாட்டிற்குச் சென்று வாழ வேண்டும்.(90) இதன் காரணமாக நான் வேறு பகுதிக்குச் செல்லப்போகிறேன். ஓ! மன்னா, நான் உன் பிள்ளைக்குப் பெரும் தீங்கைச் செய்திருப்பதால் இந்த இடத்தில் இன்னும் இருக்க நான் துணியேன்.(91) கெட்ட மனைவி, கெட்ட மகன், கெட்ட மன்னன், கெட்ட நண்பன், கெட்ட கூட்டணி, கெட்ட நாடு ஆகியவற்றை ஒருவன் தொலைவிலேயே கைவிட வேண்டும்.(92) ஒரு கெட்ட மகனிடம் ஒருவன் நம்பிக்கை வைக்கக்கூடாது. கெட்ட மனைவியிடம் அவனுக்கு என்ன இன்பம் இருக்க முடியும்? கெட்ட நாட்டால் எந்த மகிழ்ச்சியும் இருக்க முடியாது. ஒரு கெட்ட நாட்டில் வாழ்வாதாரத்தை அடைவோம் என ஒருவனும் நம்ப முடியாது.(93) நிச்சயமற்ற பற்றுடன் கூடிய ஒரு கெட்ட நண்பனிடம் தோழமை இருக்க முடியாது. அவசியம் இல்லாதபோது ஏற்படும் ஒரு கெட்ட கூட்டணியால் அவமானமே ஏற்படும்.(94)

[10] கங்குலி இந்தச் சுலோகத்தை விளக்கவில்லை Like the progeny of a crab eating up their dam என்பதை அப்படியே மொழிபெயர்த்திருக்கிறேன். கும்பகோணம் பதிப்பில், “வீட்டிலுள்ள ஸ்நேஹத்தால் கட்டுப்பட்டவர்களும் அல்பபுத்தியுள்ளவர்களுமான மனிதர்களின் மாம்ஸங்களைக் கெட்டஸ்திரீயானவள், பெண் நண்டை அதன் குஞ்சுகள் மாய்ப்பது போல நாசமடையச் செய்வாள்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “அவர்கள், பெண் நண்டுகளையும், இளம் நண்டுகளையும்போலத் தங்கள் சதைகளையே உண்ணும் கெட்ட மனைவியரை அடைவார்கள்” என்றிருக்கிறது. அடிக்குறிப்பில் இந்த ஸ்லோகத்தை விளக்கும் திப்ராய், “இந்த இளம் நண்டுகள் குஞ்சுகள்தான் என்று இந்த உரை குறிப்பதாகச் சொல்வதற்கு ஏதும் இல்லை. எனவே, இது சில நண்டுகள், சிறு நண்டுகளை உண்பதைச் சொல்கிறதே தவிர வேறில்லை” என்கிறார்.

உண்மையில் எவை ஏற்புடையவையோ, அவற்றை மட்டுமே பேசுபவளே மனைவியாவாள். எவன் தந்தையை மகிழ்ச்சியுறச் செய்வானோ, அவனே மகனாவான். எவனிடம் நம்பிக்கை வைக்கமுடியுமோ அவனே நண்பனாவான். உண்மையில் எங்கே ஒருவனால் வாழ்வை ஈட்டமுடியுமோ, அதுவே அவனுடைய நாடாகாகும்.(95) {தன் மக்களை} ஒடுக்காமல், ஏழைகளைப் பேணி, தன் ஆட்சிப் பகுதிகளில் அச்சமேதும் இல்லாமல் பார்த்துக் கொள்பவனே மன்னன் ஆவான்.(96) தன் மன்னன் சாதனைகளைக் கொண்டவனாகவும், அறக்கண்களைக் கொண்டவனாகவும் இருந்தால், மனைவி, நாடு, நண்பர்கள், மகன், மன்னன் மற்றும் உறவினர்கள் ஆகிய அனைத்தையும் ஒருவன் பெறலாம்.(97) மன்னன் பாவம் நிறைந்தவனாக இருந்தால், அவனது ஒடுக்குமுறையின் விளைவால் அவனுடைய குடிமக்கள் அழிவை அடைவார்கள். ஒருவனுடைய முத்தொகுப்புக்கு (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றுக்கு) மன்னனே வேராவான். அவன் தன் குடிமக்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.(98) அவன் {மன்னன்}, தன் குடிமக்களின் செல்வத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெற்றுக் கொண்டு, அவர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். எந்த மன்னன் தன் குடிமக்களைப் பாதுகாக்கவில்லையோ, அவன் உண்மையில் கள்வனாவான்.(99) எந்த மன்னன், பாதுகாப்பதாக உறுதியளித்துவிட்டு, ஆதாய வேட்டையினால் அதை நிறைவேற்றவில்லையென்றால், பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட அந்த ஆட்சியாளன், தன் குடிமக்கள் அனைவரின் பாவங்களையும் தனதாக ஏற்று, முற்றாக நரகத்தில் மூழ்குவான்.(100) மறுபுறம், எந்த மன்னன், பாதுகாப்பதாக உறுதி அளித்துவிட்டு, அதை நிறைவேற்றுகிறானோ அவன் தன் குடிமக்களைப் பாதுகாப்பதன் விளைவால் அண்டத்திற்கே நன்மை செய்தவனாகக் கருதப்படுவான்.(101)

அனைத்து உயிரினங்களின் தலைவரான மனு, மன்னனுக்கு ஏழு பண்புநிலைகள் உண்டெனச் சொல்லியிருக்கிறார், தாய், தந்தை, ஆசான், பாதுகாவலன், நெருப்பு, வைஸ்வரவணன் {குபேரன்} மற்றும் யமன் ஆகிய நிலைகளே அவை.(102) ஒரு மன்னன் தன் மக்களிடம் கருணையுடன் நடந்து கொள்வதால் அவர்களுடைய தந்தையாக அழைக்கப்படுகிறான். அவனிடம் பொய்மையுடன் நடந்து கொள்ளும் குடிமகன், தன் அடுத்தப் பிறவியில் ஒரு விலங்காகவோ, ஒரு பறவையாகவோ பிறப்பை அடைகிறான்.(103) மன்னன், தன் மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமும், ஏழைகளைப் பேணிக் காப்பதன் மூலமும் அவர்களுக்குத் தாயாகிறான். தீயோரைச் சுடுவதன் மூலம் அவன் நெருப்பாகக் கருதப்படுகிறான், பாவம் நிறைந்தோரைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவன் யமன் என அழைக்கப்படுகிறான்.(104) தன் அன்புக்குரியவர்களுக்குச் செல்வக் கொடை அளிப்பதன் மூலம், அந்த மன்னன் விருப்பங்களை அளிப்பவனான குபேரனாகக் கருதப்படுகிறான். நெறி மற்றும் அறம் குறித்துப் போதிப்பதனால் அவன் ஆசானாகிறான். பாதுகாக்கும் கடமையை நடைமுறைப்படுத்துவதால் அவன் காவலனாகிறான்.(105)

தன் நகரங்கள் மற்றும் மாகாணங்களின் மக்களை மகிழ்ச்சியுறச் செய்யும் மன்னன், அத்தகையைக் கடமையை நோற்பதன் விளைவால் ஒருபோதும் தன் நாட்டை இழக்கமாட்டான்.(106) தன் குடிமக்களை எவ்வாறு கௌரவிக்க வேண்டும் என்பதை அறிந்த மன்னன், இம்மையிலும், மறுமையிலும் ஒருபோதும் துயருற மாட்டான்.(107) எந்த மன்னனின் குடிமக்கள் எப்போதும் கவலையில் நிறைவார்களோ, அதிக வரிச்சுமைக்கு உள்ளாகிறார்களோ, அனைத்து வகைத் தீமைகளிலும் மூழ்குகிறார்களோ, அவன் தன் எதிரிகளின் கரங்களில் தோல்வியை அடைவான்.(108) மறுபுறம், எந்த மன்னனின் குடிமக்கள் ஒரு தடாகத்தில் வளரும் பெரிய தாமரையைப் போல வளர்கிறார்களோ, அவன் {அந்த மன்னன்} இம்மையில் அனைத்து வெகுமதிகளையும் அடைந்து, இறுதியில் சொர்க்கத்திலும் கௌரவத்தை அடைவான்.(109) ஓ! மன்னா, பலவானோடு பகைமை ஒருபோதும் மெச்சப்படுவதில்லை. எந்த மன்னன், தன்னைவிடப் பலவானோடு பகைமை கொள்வானோ, அவன் தன் நாடு மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் இழப்பான்” என்றது {பூஜனி என்ற பறவை}”.(110)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னன் பிரம்மதத்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பறவை, மன்னனிடம் விடைபெற்றுக் கொண்டு, தான் தேர்ந்தெடுத்த பகுதிக்குச் சென்றுவிட்டாள்.(111) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இவ்வாறே பிரம்மதத்தனுக்கும் பூஜனிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் சொல்லிவிட்டேன். நீ வேறு என்ன கேட்க விரும்புகிறாய்?” {என்று கேட்டார் பீஷ்மர்}.(112)

சாந்திபர்வம் பகுதி – 139ல் உள்ள சுலோகங்கள் : 112

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top