Bharadwaja and Satrunjaya! | Shanti-Parva-Section-140 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : பாரத்வாஜர் மற்றும் சத்ருஞ்சயன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடலின் மூலம் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய செங்கோல், மன்னர்களின் பல்வேறு கடமைகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-140 |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, படிப்படியாக யுகம் குறைவதன் விளைவால், அறம் மற்றும் மனிதர்கள் ஆகிய இரண்டும் அழியும்போதும், உலகம் கள்வர்களால் பீடிக்கப்படும்போதும், ஓ! பாட்டா, ஒரு மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, அத்தகைய துன்பத்தில் மன்னன் பின்பற்ற வேண்டிய கொள்கை குறித்து நான் உனக்குச் சொல்கிறேன்.(2) அத்தகைய நேரத்தில், கருணையைக் கைவிட்டு அவன் எவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை உனக்குச் சொல்கிறேன். இது தொடர்பாகப் பாரத்வாஜருக்கும், மன்னன் சத்ருஞ்சயனுக்கும் இடையில் நடந்த உரையாடலைப் பழங்கதை குறிப்பிடுகிறது.(3)
சௌவீரர்களுக்கு மத்தியில் சத்ருஞ்சயன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பெருந்தேர்வீரனாகவும் இருந்தான். பாரத்வாஜரிடம் சென்ற அவன், பொருளறிவியலின் உண்மைகளைக் குறித்து அந்த முனிவரிடம் கேட்கும் வகையில்,(4) “அடையப்படாத பொருளை எவ்வாறு அடைய வேண்டும்? மேலும் அடைந்த பிறகு, அஃதை எவ்வாறு பெருக்க வேண்டும்? பெருக்கப்பட்ட பிறகு, அஃதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? மேலும் பாதுகாக்கப்பட்ட பிறகு, அஃதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?” என்று கேட்டான். பொருளறிவியலின் உண்மைகளைக் குறித்து இவ்வாறு கேட்கப்பட்டதும் அந்த மறுபிறப்பாள முனிவர் {பாரத்வாஜர்}, அவ்வுண்மைகளை அந்த ஆட்சியாளனுக்கு விளக்கும் வகையில் சிறந்த அறிவு நிரம்பிய பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்.(6)
முனிவர் {பாரத்வாஜர்}, “ஒரு மன்னன் எப்போதும் தன் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடனே {செங்கோலுடனே} இருக்க வேண்டும். அவன் எப்போதும் தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். எந்தத் தவறும் இல்லாதவனாகத் தான் இருந்து கொண்டு, தன் எதிரியின் தவறுகளைக் கவனிக்க வேண்டும். உண்மையில், அவனது கண்ணானது இந்தக் காரியத்திற்கே எப்போதும் பயன்படுத்தப்பட வேண்டும்.(7) கரத்தில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் மன்னனைக் காணும்போது, அனைவரும் அச்சத்தால் தாக்கப்படுவார்கள். இந்தக் காரணத்தால் மன்னன் தண்டக் கோலைக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் ஆள வேண்டும்.(8) கல்வி மற்றும் உண்மை ஞானம் கொண்ட மனிதர்கள் தண்டனையை மெச்சுகிறார்கள். எனவே, விதியின் நான்கு தேவைகளான இணக்கம் {சாமம்}, கொடை {தானம்}, வேற்றுமை உண்டாக்கல் {பேதம்}, தண்டனை {தண்டம்} ஆகியவற்றில் தண்டனையே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது.(9) புகலிடத்தின் அடித்தளங்கள் வெட்டப்படும்போது, ஏதிலிகள் அனைவரும் அழிவை அடைவார்கள். ஒரு மரத்தின் வேர்கள் வெட்டப்படும்போது, கிளைகளால் எவ்வாறு வாழ முடியும்?(10) ஞானம் கொண்ட ஒரு மன்னன், தன் எதிரியின் வேர்களையே அறுக்க வேண்டும். பிறகு அவனை வெற்றிக் கொண்டு, அந்த எதிரியின் கூட்டாளிகளையும், சார்பாளர்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வர வேண்டும்.(11)
மன்னனுக்குப் பேரிடர் ஏற்படும்போது, அவன் காலமேதும் இழக்காமல், ஞானத்துடன் ஆலோசித்து, முறையாகத் தன் ஆற்றலை வெளிப்படுத்தி, திறனுடன் போரிட்டு, ஞானத்துடன் பின்வாங்கவும் வேண்டும்.(12) பேச்சில் மட்டுமே மன்னன் தன் பணிவை வெளிப்படுத்த வேண்டுமேயன்றி, இதயத்தில் கத்தியின் கூர்மையுடன் இருக்க வேண்டும். அவன் காமம், கோபம் ஆகியவற்றைக் கைவிட்டு, இனிமையாகவும் மென்மையாகவும் பேச வேண்டும்.(13) ஒரு பகைவனுடன் சேர்க்கை உண்டாகும்போது, முன்னறிவு கொண்ட ஒரு மன்னன், அவனிடம் குருட்டு நம்பிக்கை ஏதும் வைக்காமல் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காரியம் முடிந்ததும், தன் புதுக் கூட்டாளியிடம் இருந்து வேகமாக விலக வேண்டும்.(14) ஒருவன் தன் பகைவனிடம் ஒரு நண்பனைப் போல இனிய உறுதிமொழிகளைக் கொடுத்து இணக்கம் கொள்ள வேண்டும். எனினும், அறையில் உள்ள ஒரு பாம்பைப் போலவே அந்த எதிரியிடம் எப்போதும் அச்சத்துடன் இருக்க வேண்டும்.(15)
எவனுடைய புத்தி (உன்னுடைய புத்தியால்) ஆதிக்கம் செய்யப்படுமோ, அவனிடம், கடந்த காலங்களைக் குறிப்பிட்டு உறுதி கூற வேண்டும். தீய புத்தியைக் கொண்டவனிடம் எதிர்கால நன்மைகளைக் குறிப்பிட்டு உறுதி கூற வேண்டும்.(16) எனினும், ஞானம் கொண்ட மனிதனிடம், தற்காலத் தொண்டுகளைக் குறிப்பிட்டு உறுதி கூற வேண்டும். செழிப்பை அடைய விரும்பும் மனிதன், தன் கரங்களைக் கூப்ப வேண்டும், உறுதிமொழி கூற வேண்டும், இனிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும், தலைவணங்கி வழிபட வேண்டும், மேலும் கண்ணீரும் சிந்த வேண்டும்[1].(17) காலம் சாதகமாக இல்லாதவரை ஒருவன் தன் எதிரியைத் தன் தோள்களிலும் தாங்கலாம். எனினும், வாய்ப்பு ஏற்படும்போது, ஒரு மண்குடத்தைக் கல்லில் மோதுவதைப் போல அவனைத் துண்டுகளாக உடைத்துவிட வேண்டும்.(18) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னன் உமியிலுள்ள நெருப்பைப் போலப் பிரகாசமில்லாமல் நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதைவிட ஒரு கணமே என்றாலும் திந்துக மரத்திலெடுத்த கரியைப் போலச் சுடர்விட்டெரியவதே சிறந்தது.(19) பல காரியங்களைச் செய்ய வேண்டிய மனிதன், ஒரே ஒரு நன்றியற்ற மனிதனிடம் எந்தக் காரியத்தையும் செய்யாமல் இருப்பதில் ஐயங்கொள்ளக்கூடாது. வெற்றியடைந்தால் ஒருவன் மகிழ்ச்சியாக இருப்பான். வெற்றியடையாவிட்டால் அவன் மதிப்பை இழப்பான்.(20) எனவே, அத்தகைய மனிதர்களின் செயல்களை நிறைவேற்றுவதைப் பொறுத்தவரையில், ஒருவன், அவற்றை முழுமையாக நிறைவேற்றாமல் ஏதாவதொன்றை முடிக்காமல் மிச்சம் வைக்க வேண்டும். கோகிலம் {குயில்}, பன்றி, மேரு மலை, வெற்று அறை ஆகியவற்றையும், நடிகன் மற்றும் அர்ப்பணிப்புள்ள நண்பன் ஆகியோரையும் போல, ஒரு மன்னன், தனக்கான நன்மையைச் செய்து கொள்ள வேண்டும்[2].(21)
[1] “இவற்றில் ஒன்றையோ, சந்தர்ப்பத்திற்குத் தேவைப்பட்டால் அனைத்தையுமோ செய்ய வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] “தன் நண்பர்கள், அல்லது குடிமக்களைப் பிறரைக் கொண்டு பராமரிப்பதில் கோகிலத்தை {குயிலைப்} போலச் செயல்பட வேண்டும்; தன் எதிரிகளை அவர்களது வேர் வரை அழிப்பதில் பன்றியைப் போலச் செயல்பட வேண்டும்; தன்னை யாரும் மீறிப் போகதபடி அவன் மேரு மலையைப் போலச் செயல்பட வேண்டும்; உடைமைகளைச் சேகரித்து வைப்பதற்காக அவன் வெற்று அறையைப் போல இருக்க வேண்டும்; பல்வேறு வேடங்களை ஏற்று அவன் ஒரு நடிகனைப் போலச் செயல்பட வேண்டும்; தன் அன்புக்குரிய குடிமக்களின் காரியங்களைக் கவனிப்பதில் அவன் அர்ப்பணிப்புமிக்க நண்பனைப் போலச் செயல்பட வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மிகக் கவனமாக நடந்து கொள்ளும் மன்னன், தனக்கு இடரே ஏற்பட்டாலும், அடிக்கடி தன் எதிரிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்களது நன்மையைக் குறித்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும்.(22) செயல்படாமல் இருப்பவர்களால் ஒருபோதும் செழிப்பை வெல்ல முடியாது; ஆண்மையும் முயற்சியும் அற்றவர்களாலும்; பகட்டு எனும் களங்கம் கொண்டவர்களாலும், செல்வாக்கின்மையில் அச்சம் கொண்டவர்களாலும்; எப்போதும் காலந்தாழ்த்துபவர்களாலும் ஒருபோதும் செழிப்பை வெல்ல முடியாது.(23) தன் தவறுகளை எதிரி கணிக்காதவகையில் ஒரு மன்னன் செயல்பட வேண்டும். எனினும், அவன் தன் எதிரிகளின் தவறுகளைக் கண்டு கொண்டே இருக்க வேண்டும். அவன் தன் அங்கங்களை மறைத்துக் கொள்ளும் ஆமையைப் போலச் செயல்பட வேண்டும். உண்மையில் அவன் தன் ஓட்டைகள் அனைத்தையும் எப்போதும் மறைத்துக் கொள்ள வேண்டும்.(24) அவன் ஒரு நாரையைப் போலப் பொருளாதாரம் தொடர்புடைய அனைத்துக் காரியங்களைக் குறித்தும் சிந்திக்க வேண்டும்[3]. அவன் தன் ஆற்றலை ஒரு சிங்கத்தைப் போல வெளிப்படுத்த வேண்டும்.அவன் ஓர் ஓநாயைப் போலக் காத்துக் கிடந்து, பாய வேண்டும். ஒரு கணையைப் போல அவன் தன் எதிரிகளைத் துளைக்க வேண்டும்.(25)
[3] “ஒரு நாரையானது மீனை எதிர்பார்த்து நீரினருகில் மணிக்கணக்கில் பொறுமையாகக் காத்திருக்கும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
குடி {மது}, பகடை {சூது}, பெண்கள், வேட்டை, இசை ஆகியவற்றை முறையாக அனுபவிக்க வேண்டும். இவற்றுக்கு அடிமையாவது தீமையையே உண்டாக்கும்.(26) அவன் விற்களை மூங்கில்களால் செய்து கொள்ள வேண்டும். அவன் மானைப் போல உறங்க வேண்டும்; தேவைப்படும் நேரத்தில் அவன் குருடனாகவும், செவிடனாகவும் இருக்க வேண்டும்.(27) ஞானம் கொண்ட ஒரு மன்னன் காலம் மற்றும் இடத்தைக் கருத்தில் கொண்டு தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். இவை சாதகமாக இல்லையெனில், ஆற்றல் வீணாகும்.(28) மன்னன், {நல்ல} காலத்தையும், சாதகமில்லாத காலத்தையும் குறித்துக் கொண்டு, தன் பலம் மற்றும் பலவீனங்களைச் சிந்தித்து, எதிரியுடன் ஒப்பிடுகையில் தன் பலத்தைப் பெருகச் செய்து செயல்பட வேண்டும்.(29) படைபலத்தின் மூலம் அடக்கப்பட்ட ஓர் எதிரியை நொறுக்காமல் இருக்கும் மன்னன், கருவுறும் நண்டைப் போலத் தன் மரணத்தையே தேடிக் கொள்வான்.(30)
மன்னன் மலர்களையன்றி கனிகளைக் காட்டக் கூடாது. கனிகளைக் காட்டினால் அடைய முடியாத உயரத்தில் இருக்கவேண்டும்; கனியாமல் {முதிராமல்} இருப்பினும், கனிந்ததாக {முதிர்ந்ததாகக்} காட்ட வேண்டும். இத்தகைய வழியில் அவன் தன்னை நடத்திக் கொண்டால், தன் எதிரிகள் அனைவரையும் எதிர்த்து உயர்வான்.(31) மன்னன் முதலில் (உறவை நாடித் தன்னை அணுகுவோரிடம்) நம்பிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும். பிறகு, அந்த நம்பிக்கைகளின் நிறைவேற்றத்திற்கான வழியில் அவன் தடைகளை ஏற்படுத்த வேண்டும். அவன் அந்தத் தடைகள் வெறும் சந்தர்ப்பவசத்தாலேயே ஆனவை என்று சொல்ல வேண்டும். அடுத்ததாக அவன் அந்தச் சந்தர்ப்பங்களும் உண்மையில் முக்கியமான காரணங்களாலேயே விளைந்தவை என்பதைச் சொல்ல வேண்டும்.(32) அச்சத்திற்கான காரணமேதும் உண்மையில் வராமல் இருக்கும் வரை, மன்னன் அச்சத்திலிருப்பவனைப் போலத் தன் ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும். எனினும், அச்சத்திற்கான காரணம் தோன்றியதும், அவன் அச்சமில்லாமல் தாக்க வேண்டும்.(33) எந்த மனிதனும் ஆபத்துக்கு உள்ளாகாமல் நன்மைய அறுவடை செய்ய முடியாது. மேலும், ஆபத்துக்கு மத்தியில் அவன் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதில் வென்றால், அவன் பெரும் நன்மைகளை ஈட்டுவது நிச்சயம்[4].(34) ஒரு மன்னன் எதிர்கால அச்சங்கள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவை இருக்கும்போது அவற்றை வெல்ல வேண்டும்; அவை மீண்டும் வளர்ந்நால், அவற்றை வென்ற பிறகும், வெல்லப்படாதவையாக அவற்றைக் கருத வேண்டும்.(35)
[4] “அஃதாவது, அவன் ஆபத்தினூடாகப் பாதுகாப்பாகக் கடந்து செல்வது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எதிர்கால மகிழ்ச்சியைத் தேடி நிகழ்கால மகிழ்ச்சியைக் கைவிடுவது ஒருபோதும் நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதனின் கொள்கையாக இருக்க முடியாது.(36) எந்த மன்னன் ஓர் எதிரியுடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டு நம்பிக்கையுடன் உறங்குவானோ, அவன் மரத்தின் உச்சியில் தூங்கி, விழுந்த பிறகு விழிக்கும் மனிதனைப் போன்றவனாவான்(37) ஒருவன் துயரில் வீழும்போது, அவன் மென்மையான, அல்லது கடுமையான சக்தியின் எந்த வழிமுறைகளிலாவது தானாக எழு வேண்டும்; அவ்வாறு எழுந்ததும் தகுதி வாய்ந்தவனாக ஆன பிறகு, அவன் அறத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.(38) மன்னன் எப்போதும் தன் எதிரிகளின் எதிரிகளைக் கௌரவிக்க வேண்டும். அவன் தன் ஒற்றர்களையே எதிரிகளால் நியமிக்கப்பட்ட முகவர்களாகவே கருத வேண்டும்.(39) மன்னன் தன் ஒற்றர்களை எதிரி அடையாளம் காணாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் நாத்திகர்களையும், தவசிகளையும் ஒற்றர்களாக்கி தன் எதிரியின் ஆட்சிப்பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும்.(40)
நந்தவனங்கள், கேளிக்கையிடங்கள், பயணிகளின் தாகத்திற்காகக் குடிநீர் கொடுக்கும் இல்லங்கள், தீர்த்தங்கள், பொதுச் சபைகள் ஆகிய இடங்களில், அறவிதிகளுக்கு எதிராகக் குற்றமிழைப்பவர்களும், அனைவரின் தரப்பினருக்கும் முள்ளாக இருப்பவர்களுமான பாவம் நிறைந்த கள்வர்கள் நுழைவார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.(41,42) மன்னன் நம்பத்தகாதவர்களை நம்பக்கூடாது; அதேபோல நம்பத்தகுந்தவர்களிடமும் அதிக நம்பிக்கை வைக்கக்கூடாது. நம்பிக்கையிலிருந்தே ஆபத்து எழுகிறது. முன்பே எதையும் சோதிக்காமல் {எதன்மேலும்} நம்பிக்கை வைக்கப்படக்கூடாது.(43) மன்னன், சரியாகத் தோன்றும் காரணங்களால் எதிரிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, அவன் தவறான அடியெடுத்து வைக்கும்போது அவனைத் தாக்க வேண்டும்.(44) எவனிடம் எந்த அச்சமுமில்லையோ, அவனிடம் மன்னன் அஞ்ச வேண்டும்; அச்சத்தக்கவர்களுக்கு அவன் எப்போதும் அஞ்சவே வேண்டும். அஞ்சத்தகாதவர்களிடம் எழும் அச்சமானது மொத்த அழிவுக்கு வழிவகுத்துவிடும்.(45)
(அறத்தகுதி அடைவதில்) கவனம், எண்ணங்களை வெளியிடாமை, தவசிகளின் சிவப்பு {காவி} உடை {காஷாய வஸ்திரம்}, சடாமுடி மற்றும் தோல்களைத் தரித்தல் ஆகியவற்றின் மூலம் ஒருவன் தன் எதிரியை நம்ப வைக்க வேண்டும். பிறகு (வாய்ப்பு ஏற்படும்போது) ஓர் ஓநாயைப் போல அவன் மீது பாய வேண்டும்.(46) செழிப்பை விரும்பும் மன்னன், தன் நோக்கங்களைத் தடைசெய்ய முனையும் மகனையோ, உடன்பிறந்தவனையோ, தந்தையையோ, நண்பனையோ கொல்லத் தயங்கக் கூடாது.(47) ஆசானே கூட ஆணவம் கொண்டவராகவும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதை அறியாதவராக, அறமற்ற பாதைகளில் நடப்பவராக இருந்தால், அவரும் தண்டனையின் மூலம் கட்டுப்படுத்தப்படத் தகுந்தவரே ஆவார்.(48) கூரிய கொடுக்குகளைக் கொண்ட பூச்சிகள், தாங்கள் அமரும் மரத்தின் பூக்கள் மற்றும் கனிகள் அனைத்தையும் வெட்டுவதைப் போலவே மன்னனும், கௌரவங்கள், வணக்கம், கொடைகள் ஆகியவற்றின் மூலம் எதிரியை நம்பிக்கை கொள்ளச் செய்து, அவனுக்கு எதிராகத் திரும்பி அவனிடம் உள்ள அனைத்தையும் கைப்பற்ற வேண்டும்.(49) பிறரின் முக்கிய அங்கங்களைத் துளைக்காமல், பல கடுஞ்செயல்களைச் செய்யாமல், மீனவனைப் போல உயிரினங்களைக் கொல்லாமல் ஒருவனாலும் பெருஞ்செழிப்பை அடைய முடியாது.(50)
உயிரினங்களில் பகைவர்கள், அல்லது எதிரிகள் என்றழைக்கப்படும் தனிவகை இனங்கள் ஏதும் கிடையாது. சூழ்நிலையின் சக்திக்கு ஏற்றபடியே மனிதர்களுக்கு நண்பர்களோ, பகைவர்களோ ஏற்படுகிறார்கள்.(51) மன்னன், தன் எதிரி எவ்வளவுதான் பரிதாபகரமான புலம்பல்களில் {அழுவதில்} ஈடுபட்டாலும், அவனை ஒருபோதும் தப்பிக்க அனுமதிக்கக்கூடாது. மறுபுறம், அவற்றால் அசைக்கப்படாமல், தனக்குத் தீங்கிழைத்த மனிதனை அழிப்பதே அவனது கடமையாகும்.(52) செழிப்பை விரும்பும் மன்னன் தன்னால் எவ்வளவு மனிதர்களை இணைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு பேரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு , அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தன் குடிமக்களிடம் நடந்து கொள்ளும் முறையில் அவன் எப்போதும் வன்மத்தில் இருந்து விடுபட்டவனாக இருக்கவேண்டும். அவன் செல்வத்தை எடுக்க எண்ணும்போது, எது ஏற்புடையதோ அதையே அவன் பேச வேண்டும். செல்வத்தை எடுத்த பிறகு, அவன் அதே போன்றவற்றையே பேச வேண்டும். ஒருவனுடைய தலையை வீழ்த்திய பிறகு, அவன் அதற்காக வருந்தி, கண்ணீர் சிந்த வேண்டும்.(54)
செழிப்பை விரும்பும் மன்னன், இனிய சொற்கள், கௌரவங்கள், கொடைகள் ஆகியவற்றின் மூலம் பிறரைத் தன்னை நோக்கி இழுக்க வேண்டும். இவ்வாறே அவன் மனிதர்களைத் தன் தொண்டில் கட்ட வேண்டும்.(55)
மன்னன் ஒருபோதும் கனியற்ற சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது. தன் இரு கரங்களின் துணையை மட்டுமே கொண்டு அவன் ஒருபோதும் ஓர் ஆற்றைக் கடக்கக்கூடாது. மாட்டுக் கொம்புகளை உண்பது கனியற்றதும், ஒருபோதும் வலுவூட்டாததுமாகும். அவற்றை உண்டால், ஒருவனின் பற்கள் உடைவதோடு, சுவையாலும் அவன் நிறைவடைய மாட்டான்.(56) முத்தொகையானது {அறம், பொருள், இன்பம்}, பிரிக்கப்படமுடியாத மூன்று துணைப் பண்புகளுடன்கூடிய மூன்று தீமைகளைக் கொண்டிருக்கிறது. கவனமான அந்தத் துணைப் பண்புகளைக் கருத்தில் கொண்டு, அந்தத் தீமைகள் தவிர்க்கப்பட வேண்டும்[5].(57) திரும்பச் செலுத்தப்படாத கடன், தணிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் நெருப்பு ஆகியவையும் எதிரிகளில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்போரும் மீண்டும் மீண்டும் வளர்ந்து பெருகுபவையாகும். எனவே, இவை அனைத்தும் முற்றாகத் தணிக்கப்பட்டு, அழிக்கப்பட வேண்டும்.(58) எப்போதும் வளர்வதான கடனானது, மொத்தமாகத் தணிக்கப்படாதவரை நிச்சயம் நீடிக்கும். தோற்கடிக்கப்பட்ட எதிரிகளின், புறக்கணிக்கப்பட்ட நோய்களின் வழக்கும் அதே போன்றவையே. இவை எப்போதும் பேரச்சத்தையே உண்டாக்கும். (எனவே, ஒருவன் இவற்றை எப்போதும் வேரோடு அழிக்கப்பட வேண்டும்).(59) அனைத்துச் செயல்களும் முழுமையாகச் செய்யப்பட வேண்டும். ஒருவன் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு முள்ளைப் போன்ற ஒரு சிறிய பொருளே கூட, சரியாகப் பிடுங்கப்படவில்லையென்றால், விடாப்பிடியான செத்தையாக {அழுகலுக்கு} வழிவகுக்கும்.(60)
[5] “முத்தொகையானது அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றைக் கொண்டதாகும். நீதியில்லாமல் ஒவ்வொன்றையும் பின்பற்றும்போது தீமைகள் அனைத்தும் எழுகின்றன. செல்வத்தின் வழியில் அறம் தடையாக நிற்கிறது; அறத்தின் வழியில் செல்வம் தடையாக நிற்கிறது; இந்த இரண்டின் வழியிலும் இன்பம் தடையாக நிற்கிறது. அற்பர்களின் வழக்கில் பிரிக்கப்பட முடியாத இந்த மூன்று துணைப் பண்புகளும் எவை என்றால், செல்வத்திற்கான வழிமுறையாக அறம் பயிலப்படுவது; இன்பத்தின் வழிமுறைகளால் செல்வம் நாடப்படுவது; புலனுணர்வுகளை நிறைவு செய்வதற்காக இன்பம் நாடப்படுவது என்பவையாகும். அதுவே நல்லோரின் வழக்கில், அந்தப் பிரிக்கப்பட முடியா துணைப்பண்புகளும் எவை என்றால், அறத்தின் எல்லையாக ஆன்மாவின் தூய்மை இருப்பது; செல்வத்தின் எல்லையாக வேள்விகளைச் செய்வது; இன்பத்தின் எல்லையாக உடலைக் கொள்வது ஆகியனவாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மக்கள் தொகையைக் கொல்வது, அதன் சாலைகளைச் சிதைப்பது, அல்லது அவற்றுக்குத் தீங்கிழைப்பது, அவற்றின் வீடுகளை இடிப்பது, எரிப்பது ஆகியவற்றின் மூலம் ஒரு மன்னன் ஒரு பகை நாட்டை அழிக்க வேண்டும்.(61) ஒரு மன்னன் ஒரு கழுகைப் போலத் தொலைநோக்குப் பார்வை கொண்டவனாக இருக்க வேண்டும், நாரையைப் போல அசைவற்றவனாக, நாயைப் போல எச்சரிக்கையுள்ளவனாக, சிங்கத்தைப் போலத் துணிவுள்ளவனாக, காக்கையைப் போல அச்சமுள்ளவனாக, கவலையில்லாமல் பகைவர்களின் ஆட்சிப்பகுதிகளுக்குள் எளிதாக நுழையும் ஒரு பாம்பைப் போலவும் இருக்க வேண்டும்.(2) ஒரு மன்னன், ஒரு வீரனிடம் கரங்கூப்பியும், ஒரு கோழையிடம் அச்சத்தை ஏற்படுத்தியும், பேராசைக்காரனிடம் செல்வக்கொடை கொடுத்தும் சமமானவனிடம் போர் தொடுத்தும் அவர்களை வெல்ல வேண்டும்.(63) குழுக்களின் தலைவர்களுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்குவதிலும், தனக்கு அன்பானவர்களிடம் இணக்கத்தை ஏற்படுத்துவதிலும் அவன் கவனமாக இருக்க வேண்டும். அவன் தன் அமைச்சர்களை ஒற்றுமையின்மையிலும், அழிவிலும் இருந்து காக்க வேண்டும்.(64) மன்னன் மென்மையாக இருந்தால் மக்கள் அவனை அவமதிப்பார்கள். அவன் கடுமையாக இருந்தாலோ, மக்கள் தங்களைப் பீடிப்பதாகக் கருதுவார்கள். அவன் கடுமை தேவைப்படும் நேரங்களில் கடுமையாகவும், மென்மை தேவைப்படும் நேரங்களில் மென்மையாகவும் இருக்க வேண்டும் என்பதே விதி.(65) மென்மையால் மென்மை வெட்டப்பட வேண்டும். மென்மையைக் கொண்டு ஒருவனால் கடுமையானதையும் அழிக்க முடியும். மென்மையால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. இதன்காரணமாகக் கடுமையைவிட மென்மையே கூர்மையானதாகச் சொல்லப்படுகிறது.(66)
எந்த மன்னன், மென்மை தேவைப்படும் நேரத்தில் மென்மையாகவும், கடுமை தேவைப்படும் நேரத்தில் கடுமையாகவும் நடந்து கொள்கிறானோ, அவன் தன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டு, தன் எதிரிகளைத் தண்டிக்க வேண்டும்.(67) அறிவும், ஞானமும் கொண்ட மனிதனிடம் பகையை உண்டாக்கிக் கொள்ளும் ஒருவன், (தன் எதிரியிடம் இருந்து) தொலைவாக இருக்கிறோம் என்று நம்பிக்கையில் ஆறுதலடையக் கூடாது. நுண்ணறிவுமிக்க மனிதனின் கரங்கள், தனக்குத் தீங்கிழைத்தவனுக்குத் தொலைவிலிருந்தே தீங்கிழைக்கவல்லவையாகும் {அவை நீண்டவையாகும்}.(68) உண்மையில் கடக்க முடியாததைக் கடக்க முயற்சிக்கக்கூடாது. எதிரியால் மீட்க இயன்றவற்றை அவனிடம் இருந்து பறிக்கக்கூடாது. தோண்டுவதால் ஒன்றின் வேரை அடைய முடியாது என்றால், அவன் தோண்டுவதற்கு முயற்சிக்கவே கூடாது. எவனுடைய தலையை வெட்ட முடியாதோ, அவனை ஒருவன் ஒருபோதும் தாக்கக்கூடாது.(69) ஒரு மன்னன் எப்போதுமே இவ்வழியில் நடந்து கொள்ளக்கூடாது. நான் சொல்லும் இந்த நடத்தைகளைத் துன்ப காலங்களில் மட்டுமே பின்பற்ற வேண்டும். எதிரிகளால் தாக்கப்படும்போதும், எவ்வாறு நீ உன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை உனது நன்மையின் பொருட்டே நான் சொல்கிறேன்” என்றார் {பாரத்வாஜர்}.(70)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சௌவீரர்களின் ஆட்சியாளன் {சத்ருஞ்சயன்} தனக்கான நன்மையை வேண்டி அந்தப் பிராமணரால் {பாரத்வாஜரால்} சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவரது அறிவுரைகளை உற்சாகமாக ஏற்று, தன் சொந்தங்கள், நண்பர்களுடன் சேர்ந்து சுடர்மிக்கச் செழிப்பை அடைந்தான்” {என்றார் பீஷ்மர்}.(71)
சாந்திபர்வம் பகுதி – 140ல் உள்ள சுலோகங்கள் : 71
ஆங்கிலத்தில் | In English |