Vishwamitra and dog's meat! | Shanti-Parva-Section-141 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 11)
பதிவின் சுருக்கம் : உண்ணத்தகாததை உண்டாவது உயிரைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் விஷ்வாமித்திரருக்கும், நாயின் இறைச்சியை உண்ணும் சண்டாளனுக்கும் இடையில் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Vishwamitra and dog's meat! | Shanti-Parva-Section-141 | Mahabharata |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உயர்ந்த அறம் சிதைந்து, அனைவராலும் அது மீறப்படும்போதும், மறமே {அதர்மமே} அறமாகும் {தர்மம்} போதும், அறமானது நேர் எதிரான வடிவத்தை ஏற்கும்போதும்,(1) நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் மறைந்து, அறம் தொடர்புடைய உண்மைகள் அனைத்தும் கலங்கி குழப்பமடையும்போதும், மன்னர்களாலும், கள்வர்களாலும் மக்கள் ஒடுக்கப்படும்போதும்,(2) நால்வகை வாழ்வுமுறைகளை {ஆசாரங்களைச்} சார்ந்த மனிதர்களின் கடமைகளில் கலக்கமடைந்து, செயல்கள் அனைத்தும் தங்கள் தகுதியை இழக்கும்போதும், காமம், பேராசை, மடமை ஆகியவற்றின் விளைவால் அனைத்துத் திசைகளிலும் மனிதர்கள் அச்சமடையும்போதும்,(3) அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று நம்பாதபோதும், பரஸ்பர காரியங்களில் அவை ஒன்றையொன்று வஞ்சித்து, வஞ்சனை நிறைந்த வழிமுறைகளால் ஒன்றையொன்று கொல்லும்போதும்,(4)
நாடு முழுவதும் வீடுகள் கொளுத்தப்படும்போதும், பிராமணர்கள் பெரிதும் பீடிக்கப்படும்போதும், மேகங்கள் ஒரு துளி மழையையும் பொழியாத போதும், ஒவ்வொருவரின் கரங்களும் அயலகத்தவனுக்கு எதிராகத் திரும்பும்போதும்,(5) வாழ்வின் தேவைகள் அனைத்தும் கள்வர்களின் ஆதிக்கத்திற்குள் வீழும்போதும், உண்மையில், அத்தகைய துன்ப காலம் நேரும்போதும், கருணையையும், தன் பிள்ளைகளையும் கைவிட விரும்பாத ஒரு பிராமணன் வாழ வேண்டிய வழிமுறைகள் என்ன? உண்மையில் ஒரு பிராமணன் அத்தகைய ஒரு காலத்தில் தன்னை எவ்வாறு பராமரித்துக் கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(6,7) உலகத்தைப் பாவம் பீடிக்கும் அத்தகைய காலத்தில் ஒரு மன்னன் எவ்வாறு வாழ வேண்டும்? ஓ! எதிரிகளை எரிப்பவரே, அறம் பொருள் ஆகிய இரண்டையும் இழக்காமல் மன்னன் எவ்வாறு வாழ வேண்டும்?" என்று கேட்டான்.(8)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, குடிமக்களின் அமைதி, செழிப்பு[1], நிறைவு, காலத்திற்கேற்ற மழை, நோய், மரணம், வேறு அச்சங்கள் ஆகியன அனைத்தும் மன்னையே சார்ந்திருக்கின்றன[2].(9) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கிருதம், திரேதை, துவாபரம், கலி ஆகிய யுகங்கள் அனைத்தும் மன்னனின் நடத்தையைச் சார்ந்தே நேர்கின்றன என்பதில் எனக்கு ஐயம் ஏதும் இல்லை.(10) உன்னால் விளக்கப்பட்டது போன்ற அவல காலம் நேரும்போது, அறவோர் மதிப்பீடுகளின் {ஞானப் பலத்தின்} துணை கொண்டு தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.(11) இது தொடர்பாகப் பழங்கதையில் வரும் விஷ்வாமித்திரருக்கும், சண்டாளர்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சண்டாளனுக்கும் இடையில் உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(12)
[1] "உண்மையில், "அடையப்பட்டதைக் காத்தலும், விரும்புவதை அடைதலும்" என்பது பொருள்" எனக் கங்குலிஇங்கே விளக்குகிறார்.[2] "இவை மன்னனை சார்ந்தவை என்பது, மன்னன் நல்லவனாக இருந்தால், செழிப்பு மற்றும் மேற்குறிப்பிட்ட பிறவும் காணப்படும் என்ற பொருள் கொண்டதாகும். மறுபுறம். மன்னன் ஒடுக்குபவனாகவும், பாவியாகவும் இருந்தால், செழிப்பு மறைந்து அனைத்து வகைத் தீமைகளும் நேரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
திரேதையின் {திரேதா யுகத்தின்} முடிவில், துவாபரத்தின் தொடக்கத்தில் தேவர்களுடைய அணையின் விளைவால் பனிரெண்டு {12} வருடங்களுக்கு நீண்ட ஒரு பயங்கரப் பஞ்சம் நேர்ந்தது.(13) திரேதையின் முடிவும், துவாபரத்தின் தொடக்கமுமாக இருந்த அந்தக் காலத்தில், பல உயிரினங்களுக்குத் தங்கள் உயிரை விட வேண்டிய முதிர்ந்த காலம் தோன்றிய போது,(14) சொர்க்கத்தின் ஆயிரங்கண் தேவன் மழையேதும் பொழியவில்லை. கோளான பிருஹஸ்பதி {குரு கிரகம்} பின்னோக்கி {வக்கிரகதியில்} நகரத் தொடங்கினான், சோமன் தன் சுற்றவட்டப் பாதையைக் கைவிட்டு, தெற்கு நோக்கி பின்வாங்கினான்.(15) ஒரு பனித்துளி கூடக் காணப்படவில்லையெனும் போது, மேகங்கள் திரள்வதைக் குறித்து என்ன சொல்ல முடியும்? ஆறுகள் அனைத்தும் சிறுத்து குறுகிய சிற்றோடைகளாகின.(16) குளங்கள், ஆறுகள், கிணறுகள், மலை அருவிகள் ஆகியன மறைந்து, தேவர்கள் செய்த காரிய வரிசையின் {குற்றத்தின்} விளைவால் தங்கள் அழகை இழந்தன.(17) நீர் வற்றியதால், நீர் விநியோகத்திற்காக ஈகையின் மூலம் நிறுவப்பட்ட இடங்கள் {தண்ணீர்ச்சாலைகள்} தனித்துவிடப்பட்டன[3].
[3] "இந்தியாவில், வெப்பமாதங்களின் போது, குளிர்ந்த நீரும், கற்கண்டும், நீரில் ஊறிய புல்லரிசியும் வைக்கப்படும் ஓலைவேயப்பட்ட நிழற்பந்தல்களை ஈகையாளர்கள் நிறுவுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள முக்கியச் சாலைகளில், வெப்ப மாதங்களில் இப்போதும், தாகம் கொண்ட பயணிகளின் தாகத்தை உண்மையில் போக்கும் இவை போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்களைக் காணலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிராமணர்கள், வேள்விகள் செய்வதையும், வேதங்கள் ஓதுவதையும் தவிர்த்தனர். அவர்கள் வசட்களையும் {வஷட்காரத்தையும்}, மற்ற தணிவுச் சடங்குகளையும் அதற்கும் மேலும் செய்யவில்லை.(18) உழவும், ஆநிரை வளர்த்தலும் கைவிடப்பட்டன. சந்தைகளும், கடைகளும் கைவிடப்பட்டன. வேள்வி விலங்குகளைக் கட்டும் கம்பங்களும் மறைந்தன. மக்கள் அதற்கு மேலும் வேள்விக்கான பல்வேறு வகைப் பொருட்களைத் திரட்டவில்லை. விழாக்கள் மற்றும் கேளிக்கைகள் அனைத்தும் அழிந்தன.(19) எங்கும் எலும்புக் குவியல்கள் தென்பட்டன, அனைத்து இடங்களிலும் உயிரினங்களின் கதறல்களும், அலறல்களும் எதிரொலித்தன. பூமியின் நகரங்கள் மற்றும் சிறுநகரங்கள் வசிப்பவர்கள் இல்லாமல் வெறுமையடைந்தன. கிராமங்களும், குக்கிராமங்களும் எரிக்கப்பட்டன.(20) கள்வர்களால் பீடிக்கப்பட்டுச் சிலரும், ஆயுதங்கள் மூலம் சிலரும், தீய மன்னர்களால் சிலரும், ஒருவருக்கொருவர் அச்சம் கொண்ட சிலரும் தப்பி ஓடத் தொடங்கினர்.(21) கோவில்களும், வழிபாட்டுத்தலங்களும் தனித்துவிடப்பட்டன.
முதிர்ந்தவர்கள் பலவந்தமாகத் தங்கள் வீட்டைவிட்டு விரட்டப்பட்டனர். பசுக்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், எருமைகள் ஆகியன (உணவுக்காகப்) போரிட்டு, பெரும் எண்ணிக்கையில் அழிவையடைந்தன. அனைத்துப் பக்கங்களிலும் பிராமணர்கள் இறக்கத் தொடங்கினர்.(22) பாதுகாப்பே இல்லாமல் போனது. செடிகொடிகள் காய்ந்தன. பூமாதேவி தன் பொலிவனைத்தையும் இழந்து, சுடலையில் நிற்கும் மரங்களைப் போல மிகப் பரிதாபமாக இருந்தாள்.(23) இங்கும் அறமில்லாத அந்தப் பயங்கரக் காலத்தில், ஓ! யுதிஷ்டிரா, பசியால் தங்கள் உணர்வுகளை இழந்த மனிதர்கள், ஒருவரையொருவர் உண்ணத் தொடங்கினர்.(24) முனிவர்களே கூடத் தங்கள் நோன்புகளைக் கைவிட்டு, தங்கள் நெருப்புகளையும், தேவர்களையும் கைவிட்டு, காடுகளில் உள்ள தங்கள் ஆசிரமங்களையும் கைவிட்டு, (உணவைத் தேடி) அங்குமிங்கும் திரியத் தொடங்கினர்.(25)
பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், புனிதமானவருமான பெரும் முனிவர் விஷ்வாமித்திரர், பசியால் பீடிக்கப்பட்டு, வீடற்றவராகத் திரிந்து கொண்டிருந்தார்.(26) அந்த முனிவர் {விஷ்வாமித்திரர்}, தமது மனைவி மற்றும் மகனை வேறொரு உறைவிடத்தில் விட்டுவிட்டு, நெருப்பற்றவராக,[4] வீடற்றவராக, தூய மற்றும் தூய்மையற்ற உணவில் அலட்சியம் கொண்டவராக இருந்தார்.(27) அவர் ஒருநாள், உயிரினங்களைக் கொல்வதற்கு அடிமையான கொடூர வேட்டைக்காரர்கள் வசிப்பதும், காட்டுக்கு மத்தியில் இருப்பதுமான ஒரு குக்கிராமத்தை அடைந்தார்.(28) அந்தச் சிறு குக்கிராமத்தில் உடைந்த கலன்கள் மற்றும் குடங்கள் நிறைந்திருந்தன. நாய்த்தோல்கள் அங்குமிங்கும் பரவிக் கிடந்தன. பன்றிகள், கழுதைகளை ஆகியவற்றின் எலும்புகளும், மண்டையோடுகளும் குவியல்களாகத் திரட்டப்பட்டுப் பல்வேறு இடங்களில் கிடந்தன.(29) சடலங்களில் இருந்து உருவப்பட்ட துணிகள் அங்கேயும், இங்கேயும் கிடந்தன, பயன்படுத்தப்பட்ட மலர்களாலான மாலைகளால் குடிசைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன[5]. பாம்புகள் உரித்த சட்டைகளைக் கொண்டு ஒப்பனைகள் செய்யப்பட்ட வீடுகளும் அங்கே இருந்தன.(30)
[4] "அவரது ஹோம நெருப்பு என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "ஏற்கனவே தேவர்களுக்குக் காணிக்கையாக்கப்பட்ட மலர்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பேரொலியுடன் சேவல்கள் மற்றும் கோழிகள் கரைதலும், கழுதைகள் கரடுமுரடாகக் கத்துவதும் அந்த இடத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஊர்வாசிகள் இங்கேயும், அங்கேயும் சச்சரவு செய்யும் கடும் குரல்களும் அங்கே கேட்கப்பட்டன.(31) ஆந்தைகள் மற்றும் பிற பறவைகளைக் கொண்ட தேவர்களின் கோவில்களும் இங்கேயும் அங்கேயும் இருந்தன. இரும்பு மணிகளால் எதிரொலித்துக் கொண்டிருந்த அந்தக் குக்கிராமத்தில், அனைத்துப் பக்கங்களிலும் நாய்க்கூட்டங்கள் நின்றுகொண்டிருந்தன, அல்லது படுத்துக் கிடந்தன.(32) பெரும் முனிவரான விஷ்வாமித்திரர், பசிக்கொடுமையால் உந்தப்பட்டும், உணவைத் தேடுவதில் ஈடுபட்டு, அந்தக் குக்கிராமத்தில் நுழைந்து, உண்பதற்கு எதையாவது கண்டுபிடிக்கச் சிறந்த முயற்சியைச் செய்தார்.(33) குசிகரின் மகன் {விஸ்வாமித்திரர்} தொடர்ந்து பிச்சையெடுத்தாலும், இறைச்சி, அல்லது சோறு, அல்லது கனி, அல்லது கிழங்கு, அல்லது எந்தப் பிற வகை உணவையும் அவர் அடையத் தவறினார்.(34)
அப்போது அவர் {விஷ்மாமித்திரர்}, “ஐயோ, எனக்குப் பெரும் துன்பம் வந்ததே” என்று வருந்தி, பலவீனத்தால் அந்தச் சண்டாளக் குக்கிராமத்திலேயே கீழே விழுந்தார்.(35) மேலும் அந்தத் தவசி, “நான் இப்போது எதைச் செய்வது சிறந்தது?” என்று சொல்லி தமனக்குள்ளேயே நினைக்கத் தொடங்கினார்.(35) உண்மையில், ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, உடனடி மரணத்தைத் தவிக்கும் வழிமுறைகளே அவரது எண்ணத்தை ஆட்கொண்டன.(36) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு சண்டாளனின் குடிசையில், ஆயுதத்தால் அண்மையில் கொல்லப்பட்ட ஒரு நாயின் பெரிய இறைச்சித் துண்டு தரையில் கிடப்பதைக் கண்டார்[6].(37) அந்தத் தவசி, சிந்தித்து, அந்த இறைச்சியைத் திருடுவது என்ற தீர்மானத்தை அடைந்தார். அவர் தமக்குள்ளேயே, “இப்போது உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக எந்த வழிமுறையும் எனக்கில்லை.(38) மேன்மையானவர்களுக்குக் கூடத் துன்பகாலத்தில் திருட்டு அனுமதிக்கப்பட்டதே. அஃது அவனது மகிமையைக் குறைக்காது. ஒரு பிராமணன்கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ள அதைச் செய்யலாம். இஃது உறுதியானதாகும்.(39) ஒருவன் முதலிடத்தில் ஓர் இழிந்தவனிடம் திருட வேண்டும். அதில் தவறினால் தனக்குச் சமமானவனிடம் திருட வேண்டும். இணையானவனிடமும் தவறினால், மேன்மையான அறவோனிடம் இருந்தும் ஒருவன் திருடலாம்.(40) என் உயிர் போகப்போகும் இத்தருணத்தில் நான் அந்த இறைச்சியைத் திருடப் போகிறேன். இத்தகைய திருட்டில் நான் எந்தத் தகுதியிழப்பையும் காணவில்லை. எனவே, நாயின் அடிமுதுகுப்பகுதியான[7] இந்த இறைச்சியை நான் திருடப் போகிறேன்” என்று நினைத்தார்.(41)
[6] கும்பகோணம் பதிப்பில், “அந்த முனிவர், உடனே சண்டாளன் வீட்டில் ஆயுதத்தால் கொல்லப்பட்ட நாயின் மாம்ஸத்தைச் சேர்ந்த ஒரு தடி விழுந்திருப்பதைக் கண்டார்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “ஆயுதத்தால் கொல்லப்பட்ட நாயின் இறைச்சி ஒரு சண்டாளனின் வீட்டில் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பதை அந்தத் தவசி கண்டார்” என்றிருக்கிறது.[7] கும்பகோணம் பதிப்பில், “நாய்த்தொடை”என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் நாயிறைச்சி என்று மட்டுமே இருக்கிறது. மற்றொரு இடத்தில் கங்குலியில் உள்ளதைப் போலே நாயின் முதுகு என்றே இருக்கிறது.
பெரும் தவசியான விஷ்வாமித்திரர், இந்தத் தீர்மானத்தை அடைந்து, சண்டாளன் இருந்த இடத்தில் உறங்குவதற்காகத் தன்னைக் கிடத்திக் கொண்டார்.(42) சிறிது நேரம் கழித்து, மொத்த சண்டாளக் குக்கிராமமும் உறங்கிய பிறகு, நள்ளிரவாவதைக் கண்டு, புனிதரான விஷ்வாமித்திரர், அமைதியாக எழுந்து அந்தக் குடிசைக்குள் நுழைந்தார்.(43) அதற்கு {அந்தக் குடிசைக்கு} உரிமையாளனான அந்தச் சண்டாளன், பீளை நிறைந்த கண்களுடன் உறங்குபவனைப் போல அங்கே கிடந்தான். விரும்பத்தகாத முகத்தோற்றம் கொண்ட அவன், உடைந்த மற்றும் ஒவ்வாத குரலில் இந்தக் கடும் வார்த்தைகளைச் சொன்னான்.(44)
அந்தச் சண்டாளன், “தாழ் திறப்பவன் எவன்? மொத்தச் சண்டாளக் குக்கிராமமும் உறங்கிக் கொண்டிருக்கிறது. எனினும் நான் விழிப்புடன் உறங்காதிருக்கிறேன். நீ யாராக இருப்பினும் கொல்லப்படுவாய்” என்றான். இந்த வார்த்தைகளே அந்தத் தவசியின் காதுகளை வரவேற்றன.(45)
அச்சத்தால் நிரம்பியவரும், வெட்கத்தால் முகம் சிவந்தவரும், திருட முயற்சித்த செயலின் விளைவால் கவலையில் இதயம் கலங்கியவருமான அவர்,(46) “ஓ! நீண்ட வாழ்வை அருளாகக் கொண்டவனே, நான் விஷ்வாமித்திரன். நான் பசிக் கொடுமையால் இங்கே வந்தேன். ஓ! நல்ல புத்தி கொண்டவனே, உன் பார்வை தெளிவாக இருந்தால் என்னைக் கொல்லாதிருப்பாயாக” என்று பதிலுரைத்தார்.(47)
தூய ஆன்மா கொண்ட அந்தப் பெரும் முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சண்டாளன், அச்சத்தால் தன் படுக்கையில் இருந்து எழுந்து அந்தத் தவசியை அணுகினான். மரியாதையால் தன் கரங்களைக் குவித்து, கண்ணீரால் குளித்த கண்களுடன் அவன் குசிகரின் மகனிடம் {விஷ்வாமித்திரரிடம்}, “ஓ! பிராமணரே, இந்த இரவில் நீர் இங்கே என்ன தேடுகிறீர்?” என்று கேட்டான்.(49)
அந்தச் சண்டாளனை[8] இணங்கச் செய்யும் வகையில் விஷ்வாமித்திரர், “நான் மிகவும் பசித்திருக்கிறேன், பசிக்கொடுமையால் இறக்கப் போகிறேன். நாயின் அடிமுதுகுப்பகுதியான[9] அந்த இறைச்சியை அபகரிக்க விரும்பினேன்.(50) பசித்தவனான நான் பாவியானேன். உணவை வேண்டுபவனுக்கு வெட்கம் ஏதும் கிடையாது. பசியே என்னை இந்தத் தீச்செயலைச் செய்யத் தூண்டியது. அதன் காரணமாகவே, நாயின் அடிமுதுகுப்பகுதியான அந்த இறைச்சியை {நாய்வால் இறைச்சியை} அபகரிக்க விரும்பினேன்.(51) எனது உயிர்மூச்சு அடங்குகிறது. பசியானது என் வேத கல்வியை அழித்தது. பலவீனனான நான், என் உணர்வுகளை இழந்துவிட்டேன். உணவின் தூய்மை, அல்லது தூய்மையின்மை குறித்து நான் கவலைப்படவில்லை.(52) உங்கள் குக்கிராமத்தில் வீடுவீடாகத் தெரிந்தும் எந்தப் பிச்சையும் அடையத்தவறிய நான், நாயின் அடிமுதுகுப்பகுதியான இந்த இறைச்சியை அபகரிக்கும் இந்தப் பாவச் செயலில் என் இதயத்தை நிலைநிறுத்தினேன்.(53) அக்னி, தேவர்களின் வாயாவான். அவன் அவர்களுடைய புரோஹிதனுமாவான். எனவே, தூய்மையான, சுத்தமான பொருட்களைத் தவிர வேறு எதையும் அவன் எடுத்துக் கொள்ளக்கூடாது. இருப்பினும் சில வேளைகளில் அந்தப் பெருந்தேவன் அனைத்தையும் உட்கொள்பவன் ஆகிறான். அந்த வகையில் நான் இப்போது அவனைப் போலவே இருக்கிறேன் என்பதை அறிவாயாக” என்றார்.(54)
[8] பிபேக் திப்ராயின் பதிப்பில், இந்த இடத்தில் அந்தச் சண்டாளனின் பெயர் மதங்கன் என்று குறிப்பிடப்படுகிறது, கங்குலி, மன்மதநாததத்தர், கும்பகோணம் பதிப்புகளில் பெயர் குறிப்பிடப்படவில்லை.[9] கும்பகோணம் பதிப்பில், “பசியுள்ளவனும், உள்ளடங்கிய உயிருள்ளவனுமான நான் நாயின் தொடையை அபகரிக்கிறேன்” என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், “இதற்கு வால் என்றும் பொருள் உண்டு, “ஜங்கா” என்பது பழைய உரை; அதற்கு, கெண்டைக்காலென்பது பொருள்” என்றிருக்கிறது.
அந்தப் பெரும் முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சண்டாளன் {மதங்கன்}, “நான் சொல்வதைக் கேட்பீராக. நான் சொல்லப்போகும் உண்மையின் வார்த்தைகளைக் கேட்டு, உமது அறத்தகுதி அழியாத வகையில் செயல்படுவீராக.(55) ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமது கடமை குறித்து நாம் உமக்குச் சொல்வதைக் கேட்பீராக. ஒரு நாயானது, ஒரு நரியைவிடத் தூய்மையற்றதாகும் என ஞானியர் சொல்கின்றனர்[10]. மேலும் ஒரு நாயின் அடிமுதுகு {வால்} பகுதியானது, அதனுடைய உடலின் பிற பகுதிகளைவிட மிகவும் இழிந்தது.(56) ஓ! பெரும் முனிவரே, ஒரு சண்டாளனுக்குச் சொந்தமானதைத் திருடுவது, அதையும் தவிர, தூய்மையற்ற உணவைத் திருடுவது போன்ற அறத்திற்கு ஒவ்வாத இந்தச் செயல், ஞானத்துடன் உம்மால் தீர்மானிக்கப்படவில்லை.(57) நீர் அருளப்பட்டிருப்பீராக, உமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழிமுறைகளைக் காண்பீராக. ஓ! பெரும்தவசியே, நாய் இறைச்சியில் கொண்ட கடும் விருப்பத்தின் விளைவால் உமது தவங்கள் {தவத்தகுதிகளான புண்ணியங்கள்} அழிவடைய வேண்டாம்.(58) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை அறிந்தவரான நீர், கடமை குழப்பத்தால் விளைந்த செயலைச் செய்யக்கூடாது.[11] அறம் நோற்போர் அனைவரிலும் முதன்மையான நீர் அறத்தைக் கைவிடாதீர்” என்றான் {மதங்கன் என்ற சண்டாளன்}.(59)
[10] கும்பகோணம் பதிப்பில், “மிருகங்களுள் நாய் அதமமென்று அறிந்தவர்கள் சொல்கிறார்கள்” என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், “நரியைவிட என்பது வேறு பாடம்” என்றிருக்கிறது.[11] “மறுபிறப்பாள வகையைச் சேர்ந்த மூன்று வகையினரில் எவரும் நாயின் இறைச்சியை உண்ணக்கூடாது. நீர் இத்ததகைய இறைச்சியை உண்டால், சண்டாளர்களைப் போன்ற மனிதர்களுக்கும், அந்த மூன்று வகையினருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாமல் போகும் என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா, இவ்வாறு சொல்லப்பட்டவரும், பெரும் முனிவருமான விஷ்வாமித்திரர் ஓ! பாரதக் குலத்தின் காளையே, பசியால் பீடிக்கப்பட்டவராக மீண்டும்,(60) “நீண்டகாலமாக நான் உணவேதும் உண்ணவில்லை. என் உயிரைத் தக்கவைத்துக்கொள்ளும் வேறு எந்த வழிமுறைகளையும் நான் காணவில்லை.(61) ஒருவன் இறந்து கொண்டிருக்கும்போது, அவனது சக்தியின் எந்த வழிமுறைகளையும், அவற்றின் பண்புகளைக் குறித்து மதிப்பிடாமல் பயன்படுத்தித் தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். தகுந்த நிலையை அடைந்த பிறகு அவன் தகுதி {புண்ணியம்} அடைய முயற்சிக்க வேண்டும்.(62) க்ஷத்திரியர்கள் இந்திரனின் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பிராமணர்களின் கடமையானது, அக்னியைப் போல நடந்து கொள்வதாகும். வேதங்களே நெருப்பாகும். அவையே பலம் கொண்டவையாகும். எனவே, என் பசியைத் தணித்துக் கொள்ள இந்தத் தூய்மையற்ற {நாய் கறி} உணவை நான் உண்ணப் போகிறேன்.(63) எதைக் கொண்டு உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமோ, அதைத் தயக்கமில்லாமல் செய்ய வேண்டும். வாழ்வது இறப்பை விடச் சிறப்பானது. வாழ்ந்தால் ஒருவன் அறம் ஈட்டலாம்.(64) என் உயிரைப் பாதுகாக்க வேண்டும் நான், என் புத்தி முழுவதையும் பயன்படுத்திய பிறகே, இந்தத் தூய்மையற்ற உணவை உண்ண விரும்புகிறேன். எனக்கு உன் அனுமதியைக் கொடுப்பாயாக.(65) உயிர்வாழ்வைத் தொடர்ந்தால், அறமீட்ட முயலும் நான், ஆகாயத்து ஒளிக்கோள்கள் அடர்த்தியான இருளையும் அழிப்பதைப் போல, பேரிடரின் விளைவாக நேரும் என் தற்போதை நடத்தையைத் தவங்களாலும், அறிவாலும் அழிப்பேன்" என்றார்.(66)
சண்டாளன் {விஷ்வாமித்திரரிடம்}, "(உம்மைப் போன்ற ஒருவர்) இந்த உணவை உண்பதனால் நீண்ட வாழ்வை அடைய முடியாது. அதே போல (உம்மைப் போன்ற ஒருவர், இத்தகு உணவிலிருந்து) பலத்தையும் அடையமுடியாது, அமுதம் கொடுக்கும் நிறைவையும் அடைய முடியாது. நீர் வேறு வகை உணவைப் பிச்சையெடுக்க முனைவீராக. நாயின் இறைச்சியை உண்பதில் உமது இதயம் செல்லாதிருக்கட்டும். மறுபிறப்பாள வகையினருக்கு நாய் தூய்மையற்ற உணவாகும்" என்றான்.(67)
விஷ்வாமித்திரர், "இது போன்ற பஞ்சகாலத்தில் எந்த வகை இறைச்சியும் எளிதாகக் கிடைப்பதில்லை. ஓ! சண்டாளா, மேலும் (உணவை விலை கொடுத்து வாங்க) என்னிடம் செல்வம் ஏதும் இல்லை. நானோ மிகவும் பசித்திருக்கிறேன். என்னால் இனியும் தாங்கிக் கொள்ள முடியாது. நான் முற்றிலும் நம்பிக்கையிழந்திருக்கிறேன். ஆறு வகைச் சுவைகள் அனைத்தும் இந்த நாயின் இறைச்சித்துண்டில் இருப்பதாக நான் நினைக்கிறேன்[12]" என்றார்.(68)
[12] கும்பகோணம் பதிப்பில், "பசியால் துன்பமுள்ளவனும், கதியற்றவனும், ஆசையற்றவனுமான நான் நாயின் தொடையை ஆறு ரஸமும் சேர்ந்ததைவிடப் பெரிதாக நினைக்கிறேன்" என்று இருக்கிறது.
சண்டாளன், "ஐந்து நகம் கொண்ட விலங்குகளில் ஐந்து வகை மட்டுமே[13] பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களுக்குத் தூய்மையான உணவாகச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளது. (உமக்கு) தூய்மையற்றதில் உமது இதயத்தை நிலைக்கச் செய்யாதீர்" என்றான்.(69)
[13] கும்பகோணம் பதிப்பில், "ப்ரம்மக்ஷத்ரிய வைசியர்களுக்கு ஐந்து நகங்களுள்ளவைகளான சல்யகம் {ஒருவகைப் பன்றி}, முள்ளம்பன்றி, உடும்பு, முயல், ஆமை இவ்வைந்து மட்டில் புஜிக்கத்தக்கவைகளாலும்; சாஸ்திரம் உமக்குப் பிரமாணமாக இருந்தால் புஜிக்கத்தகாததில் மனத்தை வைக்காமலிரும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இவை, "முள்ளெலி, முள்ளம்பன்றி, உடும்பு, முயல், ஆமை" என்றிருக்கிறது.
விஷ்வாமித்திரர், "பெரும் முனிவரான அகஸ்தியர், பசித்திருந்தபோது, வாதாபி என்ற பெயர் கொண்ட அசுரனை உண்டார். நான் துன்பத்தில் வீழ்ந்திருக்கிறேன். நான் பசித்திருக்கிறேன். எனவே, நாயின் அடிமுதுகான இந்த இறைச்சியை உண்ணப்போகிறேன்" என்றார்.(70)
சண்டாளன், "வேறு பிச்சைகளை நாடுவீராக. இத்தகைய காரியம் உமக்குத் தகாது. மேலும் இது போன்ற செயல் உம்மால் ஒருபோதும் செய்யப்படக்கூடாது. எனினும், {இதற்குப் பிறகும்} உமக்கு விருப்பமென்றால் இந்த நாய் இறைச்சியை நீர் எடுத்துக் கொள்ளலாம்" என்றான்.(71)
விஷ்வாமித்திரர், "நல்லோர் என்று அழைக்கப்படுபவரே, கடமை குறித்த காரியங்களில் உரிமை கொண்டவர்களாவர். அவர்களின் எடுத்துக்காட்டையே நான் பின்பற்றுகிறேன். நான் இப்போது இந்த நாய் அடிமுதுகை {நாய் வாலை} வேறு எந்த உயர்ந்த தூய்மையான உணவைவிடச் சிறந்ததாகக் கருதுகிறேன்" என்றார்.(72)
சண்டாளன், "நீதியற்றவனின் செயல்பாடு நித்திய நடைமுறையாக ஒருபோதும் கருதப்படாது. முறையற்ற செயலானது ஒருபோதும் முறையாகாது. மாயையால் பாவம் நிறைந்த ஒரு செயலைச் செய்யாதீர்" என்றான்.(73)
விஷ்வாமித்திரர், "முனிவனாக இருக்கும் மனிதன் பாவம் நிறைந்த செயலைச் செய்ய முடியாது. தற்போதைய வழக்கில், மானும், நாயும் (இரண்டும் விலங்குகள் என்பதால்) ஒன்றெனக் கருதுகிறேன். எனவே, நான் இந்த நாயின் அடிமுதுகை உண்ணப் போகிறேன்" என்றார்.(74)
சண்டாளன், "பிராமணர்கள் கேட்டுக் கொண்டதாலேயே, முனிவர் (அகஸ்தியர்) அந்தச் செயலைச் செய்தார். அந்தச் சூழ்நிலையில் அது பாவமாகாது. எதில் பாவமில்லையோ அதுவே அறம். தவிரவும், மூவகையினரின் ஆசான்களான பிராமணர்கள் அனைத்து வகையில் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றான்.(75)
விஷ்வாமித்திரர், "நானொரு பிராமணன். இந்த என் உடல் எனக்கு நண்பனே. இஃது எனக்கு மிகவும் அன்புக்குரியதும், உயர்ந்த மதிப்புக்குரியதுமாகும். உடலைத் தாங்கிக் கொள்ளும் விருப்பத்தாலேயே நான் இந்த நாயின் அடிமுதுகை எடுத்துக் கொள்ளப் போகிறேன். இனியும் உன்னிலும், உன் கடும் தோழர்களிடமும் எந்த அச்சமும் கொள்ளாத வகையில் என் ஆவல் அதிகரித்துவிட்டது" என்றார்[14].(76)
[14] கும்பகோணம் பதிப்பில், "ஆகையால், நான் புஜிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இதை எடுக்க விரும்புகிறேன். இவ்விதக் கொடிய காரியங்களுக்கு நான் பயப்படுகிறவனல்லேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் என் உடலைப் பராமரிக்க விரும்புவதால், இதை எடுத்துக் கொள்ளப் போகிறேன். இதனால் விளையும் எந்த வன்முறையிலும் நான் அச்சங்கொள்ளவில்லை" என்று இருக்கிறது.
சண்டாளன் {விஷ்வாமித்திரரிடம்}, "மனிதர்கள் தங்கள் உயிரையும் கொடுப்பார்கள், ஆனால் தூய்மையற்ற உணவில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்ய மாட்டார்கள். அவர்கள் பசியை வென்றே இவ்வுலகில் தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் அடைகிறார்கள். நீரும் பசியை வென்று அந்த வெகுமதிகளை அடைவீராக" என்றான்.(77)
விஷ்வாமித்திரர், "என்னைப் பொறுத்தவரையில், நான் கடும் நோன்புகளை நோற்பவன். என் இதயம் அமைதியிலேயே நிலைத்திருக்கிறது. அறத்தகுதிகள் அனைத்தின் வேரையும் பாதுகாப்பதற்காக, நான் தூய்மையற்ற உணவை உண்ணப் போகிறேன்.(78) தூய்மையான ஆன்மா கொண்ட மனிதன், இந்தச் செயலை நீதியென்றே கருதுவான். எனினும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனுக்கு, நாயின் இறைச்சியை உண்பது பாவமாகத் தோன்றும். நான் அடைந்திருக்கும் இந்தத் தீர்மானம் தவறாகவே இருப்பினும், (நான் இந்த நாயிறைச்சியை உண்டாலும்) அந்தச் செயலால் நான் உன்னைப் போன்ற ஒருவனாக {சண்டாளனாக} ஆக மாட்டேன்" என்றார்.(79)
சண்டாளன், "என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக முயற்சி செய்து, உம்மை இந்தப் பாவத்தில் இருந்து தடுப்பதே என் முடிவான தீர்மானமாகும். ஒரு பிராமணன் தீச்செயலைச் செய்வதால் உயர்ந்த நிலையில் இருந்து வீழ்கிறான். இதற்காகவே நாம் உம்மை நிந்திக்கிறேன்" என்றான்.(80)
விஷ்வாமித்திரர், "தவளைகள் கத்துவதைக் கருத்தில் கொள்ளாமல் பசுக்கள் {நீரைக்} குடிப்பதைத் தொடரும். எது நீதி (எது {நீதி} இல்லை) என்று உன்னால் உரிமை கேட்க முடியாது. தற்புகழ்ச்சி கொண்டவனாக இராதே" என்றார்.(81)
சண்டாளன், "நான் உமது நண்பனாகிவிட்டேணேன். இதன் காரணமாகவே நான் உமக்கு அறவுரை கூறுகிறேன். எது நன்மையோ, அதைச் செய்வீராக. {ஆசை} மயக்கத்தினால் பாவம் நிறைந்த செயலைச் செய்யாதீர்" என்றான்.(82)
விஷ்வாமித்திரர், "நீ என் மகிழ்ச்சியை விரும்பும் நண்பனாக இருந்தால், என்னை இந்தத் துன்பத்தில் இருந்து எழுப்புவாயாக. இந்த நாயின் அடிமுதுகை உண்டு, (பாவத்தால் அல்லாமல்) அறத்தின் உதவியால் காக்கப்பட்டதாகவே நான் கருதுவேன்" என்றார்(83).
சண்டாளன், "இந்த இறைச்சித் துண்டை உமக்குக் கொடுக்க நான் துணியேன், அதேபோல, நீர் என் உணவை திருடிக் கொள்ள அனுமதித்துத் துன்புறவும் மாட்டேன். நான் இந்த இறைச்சியை உம்மிடம் கொடுத்தாலும், ஒரு பிராமணராக இருந்து நீர் என்னிடம் இருந்து இதைப் பறித்தாலும், மறுமையில் நாம் இருவரும் துன்பலோகங்களிலேயே மூழ்குவோம்" என்றான்.(84)
விஷ்வாமித்திரர், "இன்று இந்தப் பாவச் செயலைச் செய்வதால், நான் மிகப் புனிதமான என் உயிரை நிச்சயம் காத்துக் கொள்வேன். என் உயிரைக் காத்துக் கொண்ட பிறகு, அறம்பயின்று என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்வேன். எனக்குச் சொல், (உணவில்லாமல் இறப்பது, அல்லது தூய்மையற்ற இந்த உணவை உண்டு என் உயிரைக் காத்துக் கொள்வது ஆகிய) இந்த இரண்டில் எது உகந்தது?" என்று கேட்டார்.(85)
சண்டாளன், "ஒருவன் தன் வகை, அல்லது தன் குலத்திற்கான கடமைகளை வெளிப்படுத்துவதில், (தனக்கு உரிய, அல்லது உரிமையில்லாத {கடமைகளைத் தீர்மானிப்பதில்}) அவனது சுயமே {ஆன்மாவே} சிறந்த நீதிபதியாகும். இந்த இரு செயல்களில் எது பாவம் நிறைந்தது என்பதை நீரே அறிவீர். எவன் நாயிறைச்சியைத் தூய்மையான உணவாகக் கருதுவானோ, அவன் உணவுக் காரியங்களில் எதையும் தவிர்க்க மாட்டான் என்று நான் நினைக்கிறேன்" என்றான்.(86)
விஷ்வாமித்திரர், "(தற்போது தூய்மையற்றதாக இருப்பதை) ஏற்பதிலும், (தூய்மையற்ற உணவை) உண்பதிலும் பாவம் இருக்கிறது. எனினும், ஒருவனுடைய உயிர் ஆபத்தில் இருக்கும்போது, இத்தகைய ஒன்றை ஏற்பதிலோ, இத்தகைய உணவை உண்பதிலோ எந்தப் பாவமும் இல்லை. தவிரவும், தூய்மையற்ற உணவை உண்பதானது, கொலை மற்றும் வஞ்சனையின் துணையில்லாமல் செய்யப்படும்போதும், மென்மையான கண்டனத்தையே அந்தச் செயல் தூண்டும் எனும்போதும், அது பெரிய விளைவெதையும் ஏற்படுத்தாது" என்றார்.(87)
சண்டாளன், "தூய்மையற்ற உணவை உண்பதற்கு இதுவே உமது காரணமாக இருக்குமானால், நீர் வேதங்களையும், ஆரிய[15] அறநெறியையும் மதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, நீர் செய்யப்போகும் செயலில் இருந்து பாடங்கற்கப் போகும் நான், தூய்மையான மற்றும் தூய்மையற்ற உணவில் உள்ள வேறுபாடுகளை அலட்சியம் செய்வதில் எந்தப் பாவமும் இல்லை என்றே கருதுவேன்" என்றான்.(88)
[15] இங்கே ஆரிய அறநெறி என்பது, உன்னத, அல்லது மேன்மையான அறநெறி என்ற பொருளைத் தரும்.
விஷ்வாமித்திரர், "(தவிர்க்கப்பட்ட உணவை) உண்பதால் ஒரு மனிதன் பெரும்பாவத்தை அடைந்தான் என்று எங்கும் காணப்படுவதில்லை. மதுவைக் குடிப்பதால் ஒருவன் வீழ்வான் என்பது (மனிதர்களைக் குடிக்காமல் தடுப்பதற்கான) ஒரு வார்த்தை ஆணை மட்டுமே. (அதே வகைச் சார்ந்த) தவிர்க்கப்பட வேண்டிய பிற செய்பாடுகள், அவை எவையாக இருப்பினும், உண்மையில் ஒவ்வொரு பாவத்தாலும், ஒருவனுடைய தகுதியை {புண்ணியத்தை} அழிக்க முடியாது" என்றார்.(89)
சண்டாளன், "(இதுபோன்ற) தகாத இடத்தில் இருந்து, (என்னைப் போன்ற) தூய்மையற்ற அற்பனிடமிருந்து, (என்னைப் போன்ற) தீய வாழ்வு வாழும் ஒருவனிடமிருந்து நாயிறைச்சியை அபகரிக்கும் கல்விமான், நல்லோர் என்றழைக்கப்படுவோரின் நடத்தைக்கு எதிரான செயலையே செய்கிறான். மேலும், இதன் விளைவாகவும், இத்தகை ஒரு செயலின் தொடர்பாலும், அவன் நிச்சயம் வருந்த வேண்டிய நிலை உண்டாகும்" என்றான்".(90)
பீஷ்மர் தொடர்ந்தார், "அந்தச் சண்டாளன், குசிகரின் மகனிடம் {விஷ்வாமித்திரரிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லி விட்டு அமைதியடைந்தான். அப்போது, பண்படுத்தப்பட்ட புத்தியைக் கொண்ட விஷ்வாமித்திரர், நாயின் முதுகான அந்த இறைச்சியை எடுத்துக் கொண்டார்.(91) அந்தப் பெரும் தவசி {விஷ்வாமித்திரர்}, தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நாயிறைச்சியை எடுத்துக் கொண்டு, காட்டுக்குச் சென்று தன் மனைவியுடன் உண்ண விரும்பினார்.(92) உரிய சடங்குகளுடன் தேவர்களை முதலில் நிறைவு செய்த பிறகு, தன் விருப்பப்படி நாயின் அடிமுதுகிலான அந்த இறைச்சியைத் தான் உண்ண வேண்டும் என்று தீர்மானித்தார்.(93) பிரம்ம சடங்குகளின்படி நெருப்பை மூட்டி, ஐந்திராக்நேயம் என்ற பெயரிலான ஏற்புடைய சடங்குளைச் செய்து, சரு வேள்வியில் அந்த இறைச்சியைத் தானே சமைக்கத் தொடங்கினார்[16].(94) ஓ! பாரதா, பிறகு அவர், தேவர்கள், பித்ருக்கள் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில் சாத்திரங்களில் சொல்லப்பட்ட படி அந்தச் சருவை தேவையான அளவில் பல பாகங்களாகச் செய்து, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களை (தங்கள் பங்குகளை ஏற்பதற்காக) அழைக்கும் வகையில் சடங்குகளைச் செய்யத் தொடங்கினார்.(95)
[16] கும்பகோணம் பதிப்பில், "வேதத்திற் சொல்லி விதிப்படி அக்னியைக் கொண்டுவந்து, இந்திரனுக்கும் அக்னிக்குமுள்ள விதிப்படி தாமே சருவைப் பாகஞ்செய்தார்" என்றிருக்கிறது.
அதேவேளையில், தேவர்களின் தலைவன் மழையைப் பொழியத் தொடங்கினான். அந்த மழையால், அனைத்து உயிரினங்களையும் மீட்ட அவன், மீண்டும் செடிகொடிகளைத் தழைத்து வளரும்படி செய்தான்.(96) எனினும், தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவித்துச் சடங்குகளைச் செய்த விஷ்வாமித்திரர், அவர்களை உரிய முறையில் நிறைவு செய்த பிறகு, அந்த இறைச்சியைத் தானே உண்டார்.(97) பிறகு தன் பாவங்கள் அனைத்தையும் தன் தவங்களால் எரித்த அந்தத் தவசி, நீண்ட காலத்திற்குப் பிறகு, மிக ஆச்சரியமான (தவ) வெற்றியை அடைந்தார்.(98) உயிரைத் தாங்கிக் கொள்வதைக் கருத்தில் கொள்ளும்போது, உயர் ஆன்மா கொண்டவனும், கல்விமானும், துன்பத்தில் வீழும்போது உற்சாகமிழந்த தன்னை மீட்டுக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்தவனுமான ஒருவன், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளைக் கொண்டும் இவ்வாறான முடிவையே எட்ட வேண்டும்.(99) இந்தப் புத்தியை அடைந்த ஒருவன் எப்போதும் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உயிரோடு இருக்கும் ஒருவனால் அறத்தகுதியை வென்று, மகிழ்ச்சியையும், செழிப்பையும் அடை முடியும்.(100) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்தக் காரணத்தினால், தூய்மையான ஆன்மா கொண்டவனும் கல்விமானுமான ஒருவன், அறம் மற்றும் அதன் எதிர் நிலை {மறம்} ஆகியவற்றைப் பகுத்தறியும் தன் நுண்ணறிவைச் சார்ந்த இவ்வுலகில் வாழவும் செயல்படவும் வேண்டும்" {என்றார் பீஷ்மர்}.(101)
சாந்திபர்வம் பகுதி – 141ல் உள்ள சுலோகங்கள் : 101
ஆங்கிலத்தில் | In English |