Collective wisdom! | Shanti-Parva-Section-142 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 12)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் மறுப்பு; பல்வேறு மூலங்களில் இருந்து அடையப்பட வேண்டிய அறிவுத்திரட்டு; சாத்திரங்களைக் குறை சொல்லும் கல்வி வணிகர்களின் போக்கு; க்ஷத்திரியனின் கடமை; அமைச்சர்கள் நியமனம்; கடுமையும், மென்மையும் கையாளப்பட வேண்டிய தருணங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Vishwamitra and dog's meat! | Shanti-Parva-Section-142 | Mahabharata |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எது பயங்கரமானதோ, எது பொய்மை போல் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படக்கூடாதோ, அதுவே (கடமையாக) குறிப்பிடப்பட்டால், நான் தவிர்க்க வேண்டிய செயல்தான் என்ன? பிறகு, கள்வர்களும் ஏன் மதிக்கப்படக்கூடாது?(1) நான் மயக்கமடைகிறேன். என் இதயம் வலிக்கிறது[1] அறநெறியில் என்னைக் கட்டும் முடிச்சுகள் அனைத்தும் தளர்கின்றன. என் மனத்தை அமைதிப்படுத்தவும், உம்மால் பரிந்துரைக்கப்படும் வழியில் செயல்படத் துணியவும் என்னால் இயலவில்லை" என்றான்.(2)
[1] கும்பகோணம் பதிப்பில், "இந்தக் கோரமான காரியம் செய்யத் துணியப்பட்டதென்பது நம்பத்தகாததும், பொய்போன்றதுமாயிருக்கிறது. எதை இந்த மனிதன் விலக்கவேண்டுமோ அவ்விதமான ஒரு விலக்குத் திருடர்களுக்கிருக்கிறதா? நான் மயக்கமடைகிறேன்; வருத்தப்படுகிறேன்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "கடமை குறித்து வேதங்களில் கேட்டு கற்றவற்றில் இருந்து மட்டுமே நான் உனக்குப் போதிக்கவில்லை. நான் எதைச் சொன்னேனோ, அதை ஞானம் மற்றும் அனுபவத்தின் விளைவால் சொல்லியிருக்கிறேன். இது கல்விமான்களால் திரட்டப்பட்ட தேனாகும் {ஞானத்திரட்டாகும்}.(3) மன்னர்கள் பல்வேறு மூலங்களில் இருந்து ஞானத்தைத் திரட்ட வேண்டும். ஒரு தரப்பிலான அறநெறியின் துணை கொண்டு ஒருவனால் உலகத்தில் நடைபோட முடியாது.(4) புத்தியில் இருந்தே கடமை எழ வேண்டும்; ஓ! குருக்களின் மகனே, நல்லோரின் நடைமுறைகளே எப்போதும் உறுதி செய்யப்பட வேண்டும். என் வார்த்தைகளைக் கவனிப்பாயாக.(5) மேன்மையான புத்தி கொண்ட மன்னர்களால் மட்டுமே, வெற்றியை எதிர்பார்த்து ஆட்சி செய்ய முடியும். புத்தியின் துணையுடனும், பல்வேறு மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட அறிவால் வழிநடத்தப்பட்டும் ஒரு மன்னன் அறநெறியை நோற்க வேண்டும்.(6)
ஒரு தரப்பைச் சார்ந்த அறநெறிகளில் பெறப்பட்ட விதிகளைக் கொண்டு ஒருவன் மன்னனுக்குரிய கடமைகளை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது. பலவீனமனம் கொண்ட மன்னன், தன் முன்னுள்ள எடுத்துக்காட்டுகளில் இருந்து எந்த ஞானத்தையும் பெறாததன் விளைவால், (தன் கடமைகளை வெளிப்படுத்துவதில்) ஒருபோதும் அவனால் ஞானத்தை வெளிப்படுத்த முடியாது.(7) அறம் {தர்மம்} சில வேளைகளில் மறத்தின் {அதர்மத்தின்} வடிவை ஏற்கிறது. மறமும் சில வேளைகளில் அறத்தின் வடிவை ஏற்கிறது. இஃதை அறியாதவன், அவ்வகையில் எழும் உண்மையான நிகழ்வைச் சந்திக்கும்போது குழப்பமடைவான்.(8) இந்த அறிவை அடைந்த ஒரு ஞானமுள்ள மன்னன், சந்தர்ப்பம் நேரும்போது, தன் மதிப்பீட்டின் துணை கொண்டு அதன்படியே செயல்பட வேண்டும். அத்தகைய நேரத்தில் அவன் செய்யும் செயலானது, சாதாரண மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.(9) சிலர் உண்மை அறிவைப் பெற்றிருக்கிறார்கள். சிலர் போலி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு வகை அறிவின் இயல்பையும் உண்மையில் உறுதி செய்து கொள்ளும் ஒரு ஞானமிக்க மன்னன், நல்லோராகக் கருதப்படுவோரிடமிருந்து அறிவை அடைகிறான்.(10)
அறநெறிகளை உண்மையில் உடைப்பவர்களே, சாத்திரங்களில் குறை காண்கிறார்கள். செல்வமில்லாதவர்கள், செல்வத்தை அடையும் உடன்படிக்கைகளில் உள்ள முரண்களை அறிவிக்கின்றனர்.(11) தங்களைத் தாங்கிக் கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே அறிவை அடைய முயல்வோர், ஒருபுறம் அறநெறிக்கு எதிரிகளாக இருந்தாலும், அவர்கள் பாவம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(12) சாத்திரங்களை அறியாதோரால், அறிவின் வழிகாட்டுதலுடன் தங்கள் செயல்கள் அனைத்திலும் இயங்க இயலாததைப் போலவே, முதிரா {பண்படாத} புத்தி கொண்ட தீய மனிதர்களால், ஒருபோதும் உண்மைப் பொருட்களை அறிய முடியாது.(13) அவர்கள், சாத்திரங்களின் குறைகளில் மட்டுமே செலுத்தப்படும் கண்களைக் கொண்டு சாத்திரங்களைக் குறை கூறுகிறார்கள். அவர்கள் சாத்திரங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொண்டாலும் கூட, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள தடையாணைகள் நல்லவை அல்ல என்று அறிவிக்கும் தங்கள் வாடிக்கையான பழக்கத்தையே தொடர்வார்கள்.(14) அத்தகைய மனிதர்கள், பிறரின் அறிவை குறைகூறுவதன் மூலம், தங்கள் அறிவின் மேன்மையையே அறிவித்துக் கொள்கிறார்கள். வார்த்தைகளையே தங்கள் கணைகளாகக் கொள்ளும் அவர்கள், தாங்களே அறிவியலின் உண்மையான தலைவர்களைப் போலப் பேசுவார்கள்.(15)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவர்களைக் கல்வி வணிகர்களாகவும்[2], மனிதர்களில் ராட்சசர்களாகவும் அறிவாயாக. வெறும் போலிக்காரணங்களின் துணையின் மூலம், நல்லோராலும், ஞானியராலும் நிறுவப்பட்ட அறநெறியை அவர்கள் கைவிடுகிறார்கள் {ஏளனம் செய்வார்கள்}.(16) விவாதம், அல்லது ஒருவனுடைய சொந்த புத்தி ஆகிய இரண்டாலும் அறநெறிகளின் உரைகளைப் புரிந்து கொள்ள முடியாது என்று நாம் கேள்விப்படுகிறோம். இதுவே பிருஹஸ்பதியின் கருத்தாகும் என இந்திரனே {நேரடியாக என்னிடம்} சொல்லியிருக்கிறான்.(17) எந்தச் சாத்திர உரையும், காரணமில்லாமல் விதிக்கப்படவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். மேலும் சிலர், சாத்திரங்களை முறையாகப் புரிந்து கொண்டாலும், ஒருபோதும் அதன்படி செயல்படாமல் இருக்கிறார்கள்.(18) ஞானியரில் ஒரு வகையினர், அறநெறியானது, உலக நடைமுறைக்காக அங்கீகரிக்கப்படதேயன்றி வேறெதற்காகவும் இல்லை என்று அறிவிக்கிறார்கள். உண்மை ஞானியானவன், நன்மைக்காக விதிக்கப்பட்ட அறநெறியைத் தானே அறிந்து கொள்ள வேண்டும்.(19) கோபம், அறிவுக் குழப்பம், அறியாமை ஆகியவற்றின் ஆதிக்கத்தில் ஒரு ஞானியே அறநெறி குறித்துப் பேசினாலும், அந்த உரையும் ஒன்றுக்கும் உதவாமலே போகும்[3].(20)
[2] கும்பகோணம் பதிப்பில், "பாரத, ராக்ஷஸர்கள் போன்ற அவர்கள் வித்யாவர்த்தகர்களென்று அறிந்து கொள்" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "பொறாமையாலும், சாஸ்திரத்தில் அவிவேகத்தாலும், அறியாமையாலும் சொல்லவரும் பண்டிதனுடைய சாஸ்திரம் ஸதஸில் தோன்றாததாகும்" என்றிருக்கிறது.
சாத்திரங்களின் உண்மையான எழுத்திலும், உண்மையான தன்மையிலும் இருந்து பெறப்பட்ட நுண்ணறிவின் துணையுடன் அறநெறி குறித்துச் செய்யப்படும் உரையாடல்கள் போற்றத்தகுந்தவையே அன்றி வேறெதன் உதவியுடனும் செய்யப்படுபவை அல்ல. அறியாமையில் இருப்பவனின் வார்த்தைகளைக் கேட்டாலும், அறிவு நிறைந்தவனாக இருந்தாலும், அவன் நல்லவனாகவும், ஞானியாகவும் கருதப்படுவான்.(21) பழங்காலத்தில் உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, "அறிவுச் சோதனையில் நிற்க முடியாத சாத்திரங்கள் சாத்திரங்களே அல்ல" என்று ஐயங்கள் அனைத்தையும் விலக்கவல்ல இந்த உண்மையைத் தைத்தியர்களுக்குச் சொன்னார்[4].(22) ஐயங்களுடன் கலந்த அறிவுடைமையோ, இல்லாமையோ அதே பொருளைக் கொண்டவையே. வேர்களைக் கிழித்து அத்தகைய {ஐயம் கொண்ட} அறிவை விரட்டுவதே உனக்குத் தகும்.(23) இந்த என வார்த்தைகளைக் கேளாதவன் தவறாக வழியில் செல்ல முனைபவனாகக் கருதப்பட வேண்டும். கடுஞ்செயல்களைச் செய்வதற்காகவே அவை உண்டாக்கப்பட்டன என்பதை நீ காணவில்லையா?(24)
[4] கும்பகோணம் பதிப்பில், "(சாத்திரத்திற்கும், யுக்திக்கும் ஒத்ததைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று) முன்காலத்தில் சுக்ராசாரியர் அஸுரர்களை நோக்கி ஸந்தேகத்தை அறுக்கத்தக்க விஷயத்தை உபதேசித்திருக்கிறார்" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில், "பழங்காத்தில் தைத்தியர்களின் ஐயங்களை விலக்குவதற்காக உசனஸ், "புனித உரைகளில் பொருள் இல்லை என்றால், அவை அருவருக்கத்தக்கவையாகும். விளக்கப்பட முடியாத அறிவு என்ற ஏதுமில்லை" என்றார்" என்றிருக்கிறது.
ஓ! அன்புக்குழந்தாய், என் பிறப்பின் வகைக்கான கடமைகளைச் செய்து, எண்ணற்ற க்ஷத்திரியர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிய என்னைப் பார். இதற்காக என்னிடம் மகிழ்ச்சி கொள்ளாத சிலர் இருக்கின்றனர்.(25) ஆடு, குதிரை ஆகியவையும் க்ஷத்திரியனும் அதே போன்ற காரியத்திற்காகவே (அனைவருக்கும் பயன்படுவதற்காக) பிரம்மனால் படைக்கப்பட்டனர். எனவே, ஒரு க்ஷத்திரியன் இடையறாமல் அனைத்து உயிரினங்களின் மகிழ்ச்சியையே நாட வேண்டும்.(26) கொல்லத்தகாதவனைக் கொல்லும் பாவமும், கொல்லத்தகுந்தவனைக் கொல்லாமல் விடும் பாவமும் ஒன்றே. நிறுவப்பட்ட காரியங்களின் வரிசை இவ்வாறே இருக்கையில், பலவீன மனம் கொண்ட ஒரு மன்னன் அதை ஒருபோதும் கவனிக்காமல் இருக்கவே நினைக்கிறான்.(27) எனவே ஒரு மன்னன் தன் குடிமக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்யக் கடுமையை வெளிப்படுத்த வேண்டும்[5]. இது செய்யப்படவில்லையெனில், அவர்கள் ஒருவரையொருவர் விழுங்க ஓநாய்களைப் போல எந்நோக்கமுமின்றித் திரிவார்கள்.(28) எவனுடைய ஆட்சிப்பகுதிகளில், நீரில் உள்ள சிறு மீன்களை அபகரிக்கும் காகங்களைப் போலக் கள்வர்கள் பிறர் பொருளைக் கொள்ளையிடுவார்களோ, அவன் க்ஷத்திரியர்களில் இழிந்தவனாவான்.(29)
[5] கும்பகோணம் பதிப்பில், "கொல்லத்தகாதவனைக் கொல்லுவதில் எந்தத் தோஷமோ அது கொல்லத்தக்கவனைக் கொல்லாதிருப்பதில் கூறப்படுகிறது. இதுதான் மரியாதையாகும். அதை இவன் விலக்கிக் கொள்ள வேண்டும். ஆகையால், அரசன் கடுமையாக இருந்து பிரஜைகளைத் தம்தர்மத்தில் நிலைக்கச் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "கொல்லத்தகாதவனைக் கொல்லும் பாவமும், கொல்லத்தக்கவனைக் கொல்லாத பாவமும் ஒன்றே எனப் புனித உரைகள் சொல்கின்றன. இது நிச்சயம் பலவீன மனம் கொண்ட க்ஷத்திரியர்கள் வெறுத்து ஒதுக்கும் விதியாகும். மன்னன் குடிமக்களைத் தங்கள் சுய தர்மத்தில் நிறுவவில்லையெனில், அவர்கள் {குடிமக்கள்} அழிவை அடைவார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் உரை தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.
நீ, உயர்ந்த பிறப்பையும், வேத அறிவையும் கொண்ட மனிதர்களை உன் அமைச்சர்களாக நியமித்துக் கொண்டு, உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, பூமியை ஆட்சி செய்வாயாக.(30) நிறுவப்பட்ட பழக்கவழக்கங்களையும், திட்டங்களையும் அறியாதவனான ஒரு க்ஷத்திரியன், தன் மக்களுக்கு முறையற்ற வரிகளை விதித்தால், அவன் தன் வகையில் ஆண்மையற்றவனாக {நபும்ஸகனாக / அலியாகக்} கருதப்படுகிறான்.(31) ஒரு மன்னன் கடுமையாகவும் இருக்கக்கூடாது, மென்மையானவனாகவும் இருக்கக்கூடாது. அவன் நீதியுடன் ஆண்டால் புகழத்தகுந்தவனாகிறான். இந்த இரு பண்புகளையும் மன்னன் கைவிடக் கூடாது; மறுபுறம் அவன் (கடுமை தேவைப்படும் சந்தர்ப்பங்களில்) கடுமையாகவும், தேவையான நேரங்களில் மென்மையாகவும் இருக்க வேண்டும்.(32) க்ஷத்திரியக் கடமைகளை நோற்பது வலிநிறைந்ததாகும். நான் உன்னிடம் பெரும் அன்பு கொண்டிருக்கிறேன். நீ கடும் செயல்களைச் செய்ய உண்டாக்கப்பட்டவனாவாய். எனவே, நீ உன் நாட்டை ஆள்வாயாக.(33) பெரும் நுண்ணறிவைக் கொண்ட சக்ரன் {இந்திரன்}, துன்ப காலங்களில் தீயோரைத் தண்டிப்பதும், நல்லோரைப் பாதுகாப்பதுமே ஒரு மன்னனுடைய பெருங்கடமை என்று சொல்லியிருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(34)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "(அரசகடமைகளைப் பொறுத்தவரையில்) எந்தச் சூழ்நிலையிலும் மீறப்படக்கூடாத விதி ஏதும் இருக்கிறதா? ஓ! அறவோரில் முதன்மையானவரே, நான் உம்மைக் கேட்கிறேன். ஓ! பாட்டா, எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(35)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன், கல்விக்காகவும், அர்ப்பணிப்புள்ள தவங்களுக்காகவும், வேத விதிகளுக்கு இசைவான நடத்தையில் கொண்ட வளத்துக்காகவும் மதிப்புக்குரிய பிராமணர்களை எப்போதும் வழிபட வேண்டும். உண்மையில் இஃது உயர்ந்த மற்றும் புனிதமான கடமையாகும்.(36) தேவர்களிடம் நீ நடந்து கொள்வதைப் போலவே பிராமணர்களுடனான உன் நடத்தையும் இருக்கட்டும். ஓ! மன்னா, பிராமணர்கள் கோபமடைந்தால் பல்வேறு தீமைகளை இழைக்க முடியும்.(37) அவர்கள் நிறைவு செய்யப்பட்டால், உயர்ந்த புகழ் உனது பங்காகும். மாறாக இருந்தால், உன் அச்சம் பெரிதாக இருக்கும். நிறைவுடன் இருந்தால், பிராமணர்கள் அமுதமாவார்கள். கோபமடைந்தால் அவர்களே நஞ்சுமாவார்கள்"[6] என்றார் {பீஷ்மர்}.(38)
[6] 35 முதல் 38 வரை உள்ள சுலோகங்கள் இந்தப் பகுதியோடு சரியாக ஒட்டுவதாகத் தெரியவில்லை.
சாந்திபர்வம் பகுதி – 142ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |