The fowler and the pigeon! | Shanti-Parva-Section-143 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 13)
பதிவின் சுருக்கம் : வேடன் புறா கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! சாத்திரங்கள் அனைத்திலும் பெரும் ஞானம் கொண்டவரே, பாதுகாப்புக்காக ஏங்கும் சரணடைந்தவனைப் பேணிக் காப்பவனுக்குக் கிடைக்கும் தகுதி {புண்ணியம்} என்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, சரணடைந்தவனைப் பேணிக் காப்பதில் உள்ள தகுதி பெரியதாகும். ஓ! பாரதர்களில் சிறந்தவனே, இத்தகு கேள்விக் கேட்பதற்கு நீ தகுந்தவனே.(2) பழங்காலத்தைச் சேர்ந்த சிபி மற்றும் பிறரைப் போன்ற உயர் ஆன்ம மன்னர்கள், சரணடைந்தவர்களைப் பாதுகாத்துச் சொர்க்கத்தில் பெரும் அருளை அடைந்தார்கள்.(3) சரணடைந்த ஓர் எதிரியைப் பொறுத்தவரையில், அவனை முறையான சடங்குகளுடன் ஏற்று, தன் சொந்த சதையையே அவனுக்கு உணவாகக் கொடுத்த புறாவைக் குறித்து நாம் கேள்விப் படுகிறோம்" என்றார்.(4)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உண்மையில், பழங்காலத்தில் சரணடைந்த ஓர் எதிரிக்கு எவ்வாறு அந்தப் புறா தன் சதையைக் கொடுத்தது? ஓ! பாரதரே, அத்தகைய நடத்தையால் அடைந்த கதிதான் என்ன?" என்று கேட்டான்.(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிருகுவின் மைந்தர் (ராமரால் {பரசுராமரால்})[1] மன்னன் முசுகுந்தனுக்குச் சொல்லப்பட்டதும், கேட்பவரின் பாவங்கள் அனைத்தையும் கழுவவல்லதுமான இந்த அற்புதக் கதையைக் கேட்பாயாக. உரிய பணிவுடன் கூடிய முசுகுந்தனால், பிருகுவின் மைந்தரிடம் {பரசுராமரிடம்} இதே கேள்வி முன்வைக்கப்பட்டது.(7) ஓ! ஏகாதிபதி, பிருகுவின் மைந்தர் {பரசுராமர்}, பணிவாகக் கேட்க விரும்பிய அவனிடம் {முசுகுந்தனிடம்}, ஒரு புறா (சொர்கத்தின் உயர்ந்த அருளை அடைவதில்) எவ்வாறு வெற்றியை அடைந்தது என்ற இந்தக் கதையைச் சொன்னார்.(8)
[1] பிருகுவின் மைந்தர் சியவனன் ஆவார். இங்கே கங்குலி பிருகு பரம்பரையில் வந்தவரான பரசுராமரையே பிருகுவின் மைந்தராக அடைப்புக்குறிக்குள் குறிப்பிடுகிறார். கும்பகோணம் பதிப்பில் பிருகுவின் மைந்தர் என்றோ, பரசுராமர் என்றோ குறிப்பிடாமல் நேரடியாகச் சுக்கிராச்சாரியரே குறிப்பிடப்படுகிறார். பிபேக்திப்ராயின் பதிப்பில், இவர் பிருகுவின் மைந்தர் என்று குறிப்பிடப்படாமல் பார்க்கவர் என்று குறிப்பிடப்படுகிறார். அடிக்குறிப்பில் இவர் பரசுராமன் என்று பிபேக் திப்ராய் குறிப்பிடுகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
அந்தத் தவசி {பரசுராமர் முசுகுந்தனிடம்}}, "ஓ! வலிய கரங்களைக் கொண்ட ஏகாதிபதி {முசுகுந்தா}, அறம், பொருள், இன்பம் தொடர்பான உண்மைகள் நிறைந்த இந்தக் கதையை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(9) தீயவனும், பயங்கரமானவனும், அந்தகனுக்கு ஒப்பானவனுமான ஒரு வேடன், பழங்காலத்தில் ஒரு பெருங்காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(10) அவன் கருங்காக்கையைப் போலக் கருப்பாக இருந்தான், இரத்த நிறத்திலான கண்களைக் கொண்டவனாகவும் இருந்தான். அவன் யமனைப் போலவே தெரிந்தான். அவனது கால்கள் நீண்டிருந்தன, பாதங்கள் குறுகியவையாக இருந்தன, அவனது வாய்ப் பெரியதாக இருந்தது, தாடை துருத்திக் கொண்டிருந்தது.(11) அவனுக்கு நண்பனோ, உறவினனோ, சொந்தக்காரனோ எவனுமில்லை. அவன் வாழ்ந்த மிகக் கொடூரமான வாழ்க்கையால் அவர்கள் அனைவரும் அவனைக் கைவிட்டார்கள்.(12) உண்மையில், தன்னைத் தானே அழித்துக் கொள்பவனால் பிறருக்கு எந்த நன்மையும் செய்ய முடியாதாகையால், தீய நடத்தை கொண்ட மனிதனை ஞானிகள் மிகத் தொலைவிலேயே கைவிடுவார்கள்.(13) பிற உயிரினங்களை எடுத்து வாழும் கொடூரமானவர்களும், தீய ஆன்மா கொண்டவர்களுமான மனிதர்கள், அனைத்து உயிரினங்களின் துன்பங்களுக்கும் மூலமாக இருப்பதால், அவர்கள் எப்போதும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களே.(14)
ஓ! மன்னா {முசுகுந்தா}, அவன், தன் வலைகளை எடுத்துக் கொண்டு, காடுகளில் உள்ள பறவைகளைக் கொன்று, (தன் வாழ்வாதாரத்திற்காக) சிறகு படைத்த அந்த உயிரினங்களின் இறைச்சியை விற்று வந்தான்.(15) தீய ஆன்மா கொண்ட அந்த அற்பன், அத்தகைய நடத்தையைப் பின்பற்றி, தன் பாவ வாழ்வைப் புரிந்து கொள்ளாமலேயே நெடுங்காலம் வாழ்ந்து வந்தான்.(16) இத்தொழிலைப் பின்பற்றி நீண்ட காலம் தன் மனைவியுடன் இன்புற்று வந்த அவன், விதியால் மயக்கமடைந்து வேறு தொழில் எதையும் விரும்பாதிருந்தான்.(17) ஒரு நாள், தொழிலினிமித்தமாக அவன் காட்டில் திரிந்து கொண்டிருந்தபோது, மரங்களைக் குலுக்கி, அவற்றை வேரோடு சாய்த்துவிடுவதைப் போல ஒரு சூறாவளி தோன்றிற்று.(18) ஒரு கணத்தில், வணிகர்களின் படகுகள் மற்றும் கப்பல்களால் மறைக்கப்படும் கடலின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அடர்த்தியான மேகத்திரள்கள் தங்களுக்கு மத்தியில் விளையாடும் மின்னலின் கீற்றுகளுடன் வானத்தில் தோன்றின.(19) மேகங்களுக்குள் நுழைந்திருந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, பெரும் மழையைப் பொழிந்ததால், ஒரு கணத்தில் பூமியானது வெள்ளக்காடாக ஆனது.(20)
அவ்வாறு மழையானது தாரைத் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தபோது, வேடன் அச்சத்தால் தன் புலன் உணர்வுகளை இழந்தான். குளிரால் நடுங்கி, அச்சத்தால் கலங்கி அவன் காட்டின் ஊடாக உலவிக் கொண்டிருந்தான்.(21) பறவைகளைக் கொல்பவனான அவன், (நீரில்லாத) உயர்ந்த பகுதி எதையும் காணத் தவறினான்.(22) கடும் மழையின் விளைவால், பல பறவைகள் உயிரை இழந்து தரையில் விழுந்தன. சிங்கங்கள், கரடிகள் மற்றும் பிற விலங்குகள், உயர்ந்த இடங்களுக்குச் சென்று அங்கே ஓய்ந்து கிடந்தன.(23) பயங்கரப் புனல் மற்றும் மழையின் விளைவால் காட்டுவாசிகள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்திருந்தன. அச்சத்திலும், பசியிலும் இருந்த அவை, சிறு கூட்டங்களாகவும், பெருங்கூட்டங்களாகவும் காடுகளில் திரிந்து கொண்டிருந்தன.(24) எனினும், குளிரால் விறைத்துப் போன அங்கங்களைக் கொண்ட வேடனால், அவன் எங்கிருந்தானோ அங்கு நிற்கவும் முடியவில்லை, நகரவும் முடியவில்லை. அதே வேளையில், குளிரால் விறைத்து, தரையில் கிடக்கும் ஒரு பெண் புறாவை அவன் கண்டான்.(25)
அற்பனான அந்தப் பாவி, தானே அதே இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், அந்தப் பறவையைக் கண்டதும், அதை எடுத்து ஒரு கூண்டில் அடைத்தான். அவன், தானே துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்தாலும், தன் சக உயிரினம் ஒன்றைத் துன்பத்தால் பீடிக்கத் தயங்கவில்லை.(26) உண்மையில், அந்த அற்பன், அத்தகைய நேரத்திலும் கூடத் தான் அடிமையாகியிருந்த பழக்கவழக்கத்தின் சக்தியால் மட்டுமே அந்தப் பாவத்தை இழைத்தான். அப்போது அவன் அந்தக் காட்டுக்கு மத்தியில் மேகங்களைப் போன்ற நீல நிறத்தில் ஒரு பெரிய மரத்தைக் கண்டான்.(27) நிழலையும், உறைவிடத்தையும் விரும்பிய பறவைக் கூட்டங்களின் வசிப்பிடமாக அஃது இருந்தது. அஃது உலகத்தில் உள்ள ஒரு நல்ல மனிதனைப் போல அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகப் படைப்பாளனால் {பிரம்மனால்} அங்கே நிறுத்தப்பட்டிருந்தது.(28) விரைவில் வானம் தெளிந்து, நட்சத்திரக்கூட்டங்கள் மினுமினுங்க, மலர்ந்திருக்கும் அல்லி மலர்களுடன் சிரித்திருக்கும் ஒரு பெரிய தடாகத்தின் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.(29)
நட்சத்திரங்கள் நிறைந்த தெளிந்த வானை நோக்கித் தன் கண்களைச் செலுத்திய வேடன், குளிரில் நடுங்கிக் கொண்டே முன்னேறத் தொடங்கினான். மேகங்கள் அற்ற வானத்தைக் கண்ட அவன், அனைத்துப் புறங்களிலும் தன் கண்களைச் செலுத்தி, ஏற்கனவே இரவாகிவிட்டதையும் கண்டு,(30) "நான் இப்போது இருக்கும் இடத்தில் இருந்து என் வீடு மிகத் தொலைவில் இருக்கிறது" என்று நினைக்கத் தொடங்கினான். பிறகு அவன் அந்த இரவை அந்த மரத்தினடியிலேயே கழிப்பது எனத் தீர்மானித்தான்.(31) அதை {அந்த மரத்தைக்} கரங்கள் கூப்பி வணங்கிய அவன், அந்தக் காட்டின் ஏகாதிபதியிடம் {மரத்திடம்}, "இந்த மரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட தேவர்கள் அனைவரிடமும் உறைவிடம் வேண்டி நான் சரணடைகிறேன்" என்றான்.(32) இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன், படுக்கைக்காகச் சில இலைகளைப் பரப்பி, ஒரு கல்லில் தன் தலையை வைத்துக் கொண்டு, தன்னைக் கிடத்திக் கொண்டான். துன்பத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும், அந்த மனிதன் விரைவில் உறக்கத்தில் வீழ்ந்தான்" என்றார் {பீஷ்மர்}.(33)
சாந்திபர்வம் பகுதி – 143ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |