Lamentation of the pigeon! | Shanti-Parva-Section-144 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 14)
பதிவின் சுருக்கம் : வேடன் புறா கதையைச் சொல்லிக் கொண்டிருந்த பரசுராமர், இரைதேடிச் சென்ற பெண்புறா வீடுதிரும்பாததால், அழுது கொண்டிருந்த ஆண்புறாவின் புலம்பலை முசுகுந்தனுக்கு எடுத்துச் சொன்னது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, அந்த மரத்தில் இருந்த கிளைகளில் ஒன்றில், அழகிய இறகுகளைக் கொண்ட புறா ஒன்று, தன் குடும்பத்தோடு பல வருடங்களாக வாழ்ந்து வந்தது.(1) காலையில் இரைதேடிச் சென்ற அதன் மனைவி இன்னும் திரும்பாமல் இருந்தது. இரவாகியும் தன் மனைவி திரும்பாததைக் கண்ட அந்தப் பறவை, புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கியது,(2) "ஓ!, இன்று நேர்ந்த புயல் பெரியது, மழை துன்பம் மிகுந்தது. ஐயோ, ஓ! அன்பு மனைவியே, நீ இன்னும் திரும்பவில்லையே.(3) இந்தக் காட்டில் என் அன்பு மனைவி நலமாக இருக்கிறாளா? அவளிடம் இருந்து பிரிந்த என் வீடு வெறுமையாகத் தோன்றுகிறதே.(4) இல்லறத்தானின் வீடானது, மகன்கள், பேரப்பிள்ளைகள், மருமகள்கள், பணியாட்கள் ஆகியோரால் நிரம்பியிருந்தாலும், இல்லத்தரசி இல்லாதிருந்தால் அது வெறுமையானதாகவே கருதப்படுகிறது.(5)
ஒருவனுடைய வீடு அவனுடைய இல்லமாகாது; ஒருவனுடையே மனைவி மட்டுமே அவனுடைய இல்லமாகிறாள். மனைவியில்லாத ஒரு வீடு காட்டைப் போல வெறுமையானது.(6) கண்கள் சிவந்தவளும், பல்வேறு வண்ண இறகுகளைக் கொண்டவளும், இனிய குரலை உடையவளுமான என் அன்பு மனைவி திரும்பவில்லையெனில், என் வாழ்வே எந்த மதிப்புமில்லாததாகப் போகும்.(7) சிறந்த நோன்புகளைக் கொண்ட அவள், ஒரு போதும் நான் உண்பதற்கு முன் உண்டதுமில்லை, நான் நீராடுவதற்கு முன் நீராடியதுமில்லை. நான் அமர்வதற்கு முன் அவள் ஒருபோதும் அமர்ந்ததில்லை, நான் படுப்பதற்கு முன் ஒருபோதும் படுத்ததுமில்லை.(8) நான் மகிழ்ந்தாள் அவளும் மகிழ்வாள், நான் வருந்தினால் அவளும் வருந்துவாள். நான் இல்லாத போது அவள் உற்சாகம் இழப்பாள், நான் கோபமாக இருந்தாலும், அவள் இனிமையாகப் பேசுவதை நிறுத்தியதில்லை.(9) தன் தலைவனுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடனும், தன் தலைவனையே எப்போதும் சார்ந்தும் இருந்த அவள், தன் தலைவனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் மட்டுமே எப்போதும் செய்து வந்தாள். பூமியில் இத்தகைய மனைவி கிடைத்த எந்த மனிதனும் புகழத்தக்கவனே.(10)
அந்த இனிமையான உயிரினம் நாள் களைத்தும், பசித்தும் இருப்பதை அறிவாள். என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவளும், அன்பில் நிலையானவளும், மிக இனிய இயல்பைக் கொண்டவளும், போற்றுதலுக்குரியவளுமான என் மனைவி, பக்தியுடன் என்னை வழிபட்டு வந்தாள்.(11) ஒருவன் தன் மனைவியின் தோழமையுடன் ஒரு மரத்தக்கடியில் வாழ்ந்தாலும், அதுவே அவனுடைய வீடாகும். மனைவியில்லாமல் மாளிகையில் வாழ்ந்தாலும், அஃது உண்மையில் வெறும் காடே ஆகும்.(12) ஒருவனுடைய மனைவியானவள், அறம், பொருள் மற்றும் இன்பம் சார்ந்த அவனுடைய செயல்கள் அனைத்திலும் துணைவியாக இருக்கிறாள். ஒருவன் அந்நிய நிலத்திற்குப் புறப்படும்போது அவனுடைய மனைவியே அவனது நம்பிக்கைக்குரிய தோழியாக இருப்பாள்.(13) ஒரு மனைவியே தன் தலைவனின் விலைமதிப்புமிக்க உடைமை என்று சொல்லப்படுகிறாள். இவ்வுலக வாழ்வின் அனைத்துக் காரியங்களிலும் மனைவி மட்டுமே தன் தலைவனின் துணையாவாள்[1].(14)
[1] "இதிலுள்ள கருத்து என்னவெனில், மனிதன் இவ்வுலகத்திற்குத் தனியாக வருகிறான், தனியாகவே போகிறான். ஒரு மனைவி மட்டுமே அவனுடைய தகுதிகளைப் பகிர்ந்து கொள்வதாலும், அவளில்லாமல் எந்தத் தகுதியையும் வெல்ல முடியாது என்பதாலும் அவளே அவனுடைய உண்மையான துணைவியாவாள். திருமணம் குறித்த இந்து கருத்தானது {இணையர் இருவரும்} முழுமையாகக் கலந்துவிடுவதாகும். திருமணமான நாள் முதலே அந்த இருவரும் அறச்சடங்குகள் மற்றும் பிற சடங்குகள் அனைத்திலும் ஒருவராகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நோயிலும், துயரிலும் ஒருவனுக்கு அவனுடைய மனைவியே சிறந்த மருந்தாக இருக்கிறாள்.(15) மனைவியைப் போல வேறு எந்த நட்பும் கிடையாது. மனைவியை விடச் சிறந்த புகலிடம் வேறேதும் கிடையாது. அறத்தகுதி ஈட்டும் செயல்களில் இவ்வுலகில் மனைவியை விடச் சிறந்த கூட்டாளி வேறு யாரும் கிடையாது.(16) எவனுடைய வீட்டில் கற்புக்கரசியும், ஏற்புடைய பேச்சைக் கொண்டவளுமான ஒரு மனைவி இல்லையோ, அவன் காடுகளுக்குச் செல்வதே சிறந்தது. அத்தகைய மனிதனுக்கு, வீட்டுக்கும், காட்டுக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது" {என்று சொல்லி ஆண் புறா புலம்பியது என்றார் பரசுராமர்}.(17)
சாந்திபர்வம் பகுதி – 144ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |