The counsel of she-pigeon! | Shanti-Parva-Section-145 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 15)
பதிவின் சுருக்கம் : புலம்பிக் கொண்டிருந்த ஆண்புறாவைக் கண்ட பெண்புறா, சரணடைந்தவனைக் காப்பதே உயர்ந்த கடமை என்று அதற்குச் சொல்லி வேடனை விருந்தோம்பலுடன் உபசரிக்கும்படி அந்த ஆண்புறாவை அறிவுறுத்தியது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, வேடனால் {வேடன் லூப்தகனால்} பிடிக்கப்பட்டிருந்த பெண்புறாவானது, மரத்திலுள்ள {ஆண்} புறாவின் பரிதாபகரமான புலம்பல்களைக்கேட்டு, தனக்குள்ளேயே பின்வருமாறு சொல்லத் தொடங்கியது[1].(1)
[1] பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த இடத்தில் அந்த வேடனின் பெயர் லுப்தகன் என்றிருக்கிறது.
அந்தப் பெண்புறா, "எனக்குத் தகுதியேதும் இருக்கிறதோ, இல்லையோ, அன்புக்குரிய என் தலைவர் {கணவர்}, என்னைக் குறித்து இவ்வாறு பேசுகிறார் என்றால், என் நற்பேற்றுக்கு அளவே இல்லை என்பது உண்மையே.(2) எவளிடம் அவளது தலைவன் நிறைவடையவில்லையோ அவள் மனைவியே அல்ல. பெண்களின் வழக்கில், அவர்களது தலைவர்கள் அவர்களிடம் மனநிறைவுடன் இருந்தால், அவளிடம் தேவர்கள் அனைவரும் அவ்வாறே இருப்பார்கள்.(3) நெருப்பின் முன்னிலையில் திருமணச் சேர்க்கை நடைபெறுவதால், கணவனே, மனைவியின் உயர்ந்த தேவனாவான்.(4) எந்த மனைவியிடம் அவளது கணவன் நிறைவில்லாமல் இருக்கிறானோ, அவள் மலர்களுடன் பூத்துக் குலுங்கும் கொடியானது காட்டுத்தீயில் கருகுவதைப் போலச் சாம்பலாகவே ஆவாள்" {என்று நினைத்தது}.(5)
வேடனால் கூட்டுக்கள் அடைக்கப்பட்ட பெண்புறா, இவ்வாறு சிந்தித்து, துன்பத்தால் பீடிக்கப்பட்டு, துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் தன் தலைவனிடம்,(6) "உமக்கு நன்மையானதை இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்டு என் ஆலோசனையின்படி செயல்படுவீராக. ஓ! அன்புத் தலைவரே, சரணடைந்த ஒருவனைக் காப்பராவீராக.(7) இந்த வேடன், குளிராலும், பசியாலும் பீடிக்கப்பட்டு, இங்கே உமது வசிப்பிடத்தில் கிடக்கிறான். இவனுக்கு விருந்தோம்பல் கடமைகளைச் செய்வீராக.(8) (உதவி நாடி) சரணடைந்தவனை அழிய விடும் ஒருவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்துக்கோ, உலகின் தாயான பசுவைக் கொன்ற பாவத்துக்கோ இணையான பாவத்தை இழைக்கிறான்.(9) நீர் தன்னறிவு கொண்டவராவீர். எனவே, பிறப்பின் வகையில் புறாக்களான நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறையைப் பின்பற்றுவதே உம்மைப் போன்ற ஒருவருக்குத் தகும்[2].(10)
[2] "நமது பலம் குறைவானதாகவே இருப்பினும், நம் வழியில் நமக்கான விருந்தோம்பல் கடமைகளைச் செய்வதே நமக்குத் தகும் என்பது பொருளாக இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஜாதியின் தர்மப்படி புறாக்களுக்குள்ள பிழைப்பு நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. உன்னைப் போன்ற புத்தியுள்ளவன் எப்பொழுதும் அஃதை அனுஸரிக்க வேண்டியது நியாயமாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பல்வேறு இனங்களின் தர்மத்தைப் பின்பற்றி, புறாக்களான நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் தர்மத்தைப் பின்பற்றுவோமாக" என்றிருக்கிறது.
எந்த இல்லறத்தான், தன்னால் இயன்ற அளவுக்கு அறம் பயில்கிறானோ, அவன் மறுமையில் வற்றாத அருள் உலகங்களை வெல்வான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(11) உமக்கு மகன்கள் இருக்கிறார்கள். உமக்குப் பரம்பரையும் இருக்கிறது. எனவே, ஓ! பறவையானவரே, அறம் மற்றும் பொருள் ஈட்டுவதற்காக உமது உடலுக்கான விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, இந்த வேடனின் இதயம் நிறைவுறுமாறு இவனை வழிபடுவீராக.(12) ஓ! பறவையானவரே, என்னைக் குறித்து வருந்தாதீர். (நான் முக்கியமில்லாதவள் என்பதைக் காண்பீராக), வேறு மனைவியரை ஏற்று நீர் தொடர்ந்து வாழ வேண்டும்"[3] {என்றது அந்தப் பெண்புறா}.(13)
[3] கும்பகோணம் பதிப்பில், "ஓ பக்ஷியே, நீ சரீரத்துக்கு வேண்டி (என் விஷயமாகத்) தாபத்தை அடையாதே. சரீரம் நடைபெறத்தக்க ஜீவனத்திற்கு வேண்டி வேறு தாரங்களை அடைவாய்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அறம் மற்றும் பொருளைப் பின்பற்றி, உமது உடலுக்கான விருப்பம் அனைத்தையும் கைவிடுவீராக. இவனது மனம் உற்சாகமடையும் வகையில் இவனைக் கௌரவிப்பீராக" என்றிருக்கிறது.
அந்த இனிய பெண்புறா, தான் அடைபட்டிருந்த வேடனின் கூட்டிலிருந்து தன் தலைவனின் மீது கண்களைச் செலுத்தி, கவலையால் உந்தப்பட்டு, அதனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னது" {என்றார் பரசுராமர்}.(14)
சாந்திபர்வம் பகுதி – 145ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |