The pigeon entered fire! | Shanti-Parva-Section-146 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 16)
பதிவின் சுருக்கம் : தன் மனைவியின் அறிவுரைப்படி விருந்தோம்பலில் ஈடுபட்ட ஆண்புறா, வேடன் குளிர்காய நெருப்பை மூட்டிக் கொடுத்தது; உணவு கேட்ட வேடனுக்கு ஒன்றும் கொடுக்க முடியாததால் தானே நெருப்புக்குள் புகுந்தது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, தன் மனைவி பேசியவையும், நெறிகளும், அறிவும் நிறைந்தவையுமான இந்த வார்த்தைகளைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சியடைந்த அந்தப் புறாவின் {ஆண்புறாவின்} கண்கள் கண்ணீரால் குளித்தன.(1) பறவைகளைக் கொல்வதையே தொழிலாகக் கொண்ட வேடனைக் கண்ட அந்தப் புறா, விதிப்படியான சடங்குகளின் அடிப்படையில் தயக்கமில்லாமல் அவனைக் கௌரவித்தது.(2)
அவனிடம் பேசிய அஃது {அந்த ஆண்புறா}, "உனக்கு நல்வரவு. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ மனநிறைவற்றவனாக இருக்கக்கூடாது. இஃது உன் இல்லமாகும்.[1](3) நான் என்ன செய்ய வேண்டும்? உன் விருப்பம் யாது என்பதை விரைவாகச் சொல்வாயாக. எங்கள் கரங்களில் புகலிடத்தை நீ வேண்டியதால் கொண்ட அன்பின் காரணமாகவே நான் உன்னைக் கேட்கிறேன்.(4) ஒருவனுடைய வீட்டுக்கு அவனுடையே எதிரியே வந்தாலும், அவன் விருந்தோம்பலுடன் வரவேற்கப்பட வேண்டும். இந்த மரம், இதை வெட்டுபவன் மேல் விழும் தன் நிழலை விலக்கிக் கொள்வதில்லை.(5) உறைவிடத்திற்காக ஏங்குபவனுக்கு, ஒருவன் விருந்தோம்பலின் கடமைகளைத் தவறில்லாமல் கவனத்தோடு செய்ய வேண்டும். உண்மையில், ஐந்து வேள்விகளைக்[2] கொண்ட இல்லற {கிருஹஸ்த} வாழ்வை நோற்கும் ஒருவன் இவ்வாறே செயல்பட வேண்டும்.(6) இல்லற வாழ்வை நோற்றும் விவேகமில்லாமல் சாத்திரங்களின்படியான ஐந்து வேள்விகளைச் செய்யாதிருந்தால், இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டையும் அவன் இழப்பான்.(7) உன் விருப்பங்கள் என்ன என்று நம்பிக்கைநிறைந்த, புத்தியுடனும் கூடிய வார்த்தைகளால் சொல்வாயாக. உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாதே" என்றது {ஆண்புறா}.(8)
[1] "உண்மையில், நீ உன் வீட்டிலிருப்பதைப் போல நினைத்துக் கொள்வாயாக. இந்த இடத்தில் உன் வீட்டில் இருப்பதைப் போலவே வசதியுடன் இன்புற்றிருப்பாயாக. நான் உனக்கு எந்தத் தொந்தரவையும் செய்ய மாட்டேன் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] பிபேக்திப்ராயின் பதிப்பில், "தேவர்களுக்கான வேள்வி, மூதாதையருக்கான வேள்வி, விருந்தினர்களுக்கான வேள்வி, சார்ந்தவர்களுக்கான வேள்வி, தனக்கான {சுயத்துக்கான} வேள்வி ஆகியவையே இந்த ஐந்து வேள்விகள்" என்ற அடிக்குறிப்பிருக்கிறது.
அந்தப் பறவையின் வார்த்தைகளைக் கேட்ட அந்த வேடன், அதனிடம், "நான் குளிரால் விறைத்துப் போயிருக்கிறேன். நான் குளிர்காய்வதற்கு வெப்பம் வேண்டும்" என்றான்.(9)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பறவை தரையில் இருந்து எண்ணற்ற காய்ந்த இலைகளைத் திரட்டி, நெருப்பைக் கொண்டு வர ஒரேயோர் இலையை மட்டும் தன் அலகில் எடுத்துச் சென்றது.(10) நெருப்பு இருக்கும் இடத்திற்குச் சென்ற அது,[3] சிறிது நெருப்பை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தது. பிறகு அந்தக் காய்ந்த இலைகளைக் கொண்டு நெருப்பை மூட்டியது,(11) அது பெரும் நெருப்பாகச் சுடர்விட்டெரிந்த போது, தன் விருந்தாளியிடம் அது, "நம்பிக்கையுடனும், அச்சமில்லாமலும் உன் அங்கங்களுக்கு வெப்பமூட்டுவாயாக {குளிர்காய்வாயாக}" என்றது.(12)
[3] கும்பகோணம் பதிப்பில், "அது கம்மாளன் வீட்டினருகிற் சென்று தீயை எடுத்துக் கொண்டு உடனே வந்தது" என்றிருக்கிறது.
இவ்வாறு சொல்லப்பட்ட அந்த வேடன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விறைத்துப் போன தன் அங்கங்களுக்கு வெப்பமூட்டினான். (ஏற்கனவே இருந்ததுபோல்) தன் உயிர் மூச்சை மீண்டும் அடைந்த அந்த வேடன், தனக்கு விருந்துபசரிப்பதும், இறகு படைத்ததுமான அதனிடம் {அந்தப் பறவையிடம்},(13) "பசி என்னை வாட்டுகிறது. நீ எனக்கு உணவு ஏதாவது கொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்" என்றான்.
அவனது வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பறவை,(14) "உன் பசியைப் போக்குவதற்குரிய கிடங்குகள் ஏதும் என்னிடம் இல்லை. காட்டுவாசிகளாகிய நாங்கள், எப்போதும் தினமும் கிடைப்பதைக் கொண்டே வாழ்கிறோம்.(15) காட்டின் தவசிகளைப் போலவே நாங்களும் நாளைக்கென ஒருபோதும் சேகரித்து வைப்பதில்லை" என்றது. இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பறவைக்கு (வெட்கத்தால்) முகம் வெளிறிப்போனது. பிறகு தான் என்ன செய்ய வேண்டும் என்று அமைதியாக ஆலோசித்த அது, விருப்பத்திற்குரியதாக இல்லாத தன் வாழ்வு முறையை மனத்தில் நினைத்துப் பார்க்கத் தொடங்கியது.(17) எனினும் விரைவில் அதன் மனம் தெளிவடைந்தது. பிறகு அந்தப் பறவை, தன் இனத்தைக் கொல்பவனான அவனிடம் {வேடனிடம்}, "நான் உன்னை நிறைவு செய்கிறேன். ஒரு கணம் பொறுப்பாயாக" என்றது.(18)
இதைச் சொன்ன அது, சில காய்ந்த இலைகளைக் கொண்டு நெருப்பை மூட்டி, மகிழ்ச்சியால் நிறைந்து,(19) "பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்கள், தேவர்கள் மற்றும் பித்ருக்களிடம் இருந்து ஒரு விருந்தினரை உபசரிப்பதில் பெரும் தகுதி {புண்ணியம்} உண்டு என்பதை அறிந்து கொண்டேன்.(20) ஓ! இனியவனே, என்னிடம் கருணை கொள்வாயாக. என் விருந்தினராக இருக்கும் உன்னை உபசரிப்பதிலேயே என் இதயம் நிலைத்திருக்கிறது என்ற உண்மையை உனக்குச் சொல்கிறேன்" என்றது.(21) இந்தத் தீர்மானத்தை அடைந்த அந்த உயர் ஆன்மப் பறவை, சிரித்த முகத்துடன் அந்நெருப்பை மூன்று முறை வலம் வந்து, அதன் தழல்களுக்குள் நுழைந்தது.(22)
அந்தப் பறவை நெருப்புக்குள் நுழைவதைக் கண்ட அந்த வேடன் தனக்குள்ளேயே, "நான் என்ன செய்துவிட்டேன்.(23) ஐயோ, என் செயல்களின் விளைவால் வந்த இந்தப் பாவம் இருள் நிறைந்ததும், பயங்கரமானதுமாகும் என்பதில் ஐயமில்லை. நான் மிகக் கொடூரனும், புறக்கணிக்கப்படத் தகுந்தவனுமாவேன்" என்று நினைக்கத் தொடங்கினான்.(24) உண்மையில், அந்தப் பறவை தன் உயிரையே விட்டதைக் கண்ட அந்த வேடன், தன் செயல்களில் விருப்பமில்லாதவனாக இது போல {பின்வருமாறு} பெரும் புலம்பலில் ஈடுபடத் தொடங்கினான்" {என்றார் பரசுராமர்}.(25)
சாந்திபர்வம் பகுதி – 146ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |