The resolution of the fowler! | Shanti-Parva-Section-147 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 17)
பதிவின் சுருக்கம் : நெருப்பில் விழுந்த ஆண் புறாவைக் கண்டு ஞானம் அடைந்த வேடன்; தன் கொடூரத் தன்மையையும், பாவம் நிறைந்த தொழிலையும் நினைத்து அனைத்தையும் கைவிட்டு, பெண்புறாவை விடுவித்தது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, அந்தப் புறா நெருப்புக்குள் விழுவதைக் கண்ட வேடன், கருணையால் நிறைந்தவனாக மீண்டும்,(1) "ஐயோ, கொடூரனும், அறிவற்றவனுமான நான் என்ன காரியம் செய்து விட்டேன்? நிச்சயம் நான் ஓர் இழிந்த அற்பனே. நெடுங்காலம் நீடிக்கும் அளவுக்கு என் பாவம் மிகப் பெரியதாகும்" என்றான்.(2)
இத்தகைய சுய நிந்தனையில் ஈடுபட்ட அவன், மீண்டும் மீண்டும், "எந்த நன்மைக்கும் நான் தகுந்தவனல்ல. என் புத்தி தீயது. என் ஆதாரங்களில் நான் எப்போதும் பாவம் நிறைந்தவனாகவே இருக்கிறேன்.(3) ஐயோ, மதிக்கத்தக்க அனைத்து வகைத் தொழில்களையும் கைவிட்டு, நான் ஒரு வேடனானேன். கொடூரனும், இழிந்தவனுமான எனக்கு, இந்த உயர் ஆன்மப் பறவை தன் உயிரை விட்டு ஒரு முக்கிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.(4) நான் என் மனைவியரையும், மகன்களையும் கைவிட்டுவிட்டு, அன்புக்குரிய என் உயிர் மூச்சையே நான் நிச்சயம் விடப் போகிறேன். இந்த உயர் ஆன்ம புறா எனக்கு அந்தக் கடமையைப் போதித்திருக்கிறது.(5)
இந்த நாளில் இருந்து, என் உடலுக்கான வசதிகள் அனைத்தையும் மறுத்து, கோடை காலத்து வறண்ட குளத்தைப் போலவே அதை {உடலை} மெலியச்செய்யப் போகிறேன்.(6) பசி, தாகம், தவங்கள் ஆகியவற்றைத் தாங்கவல்லவனாகி, உடலெங்கும் நரம்புகள் தெரிய மெலிந்தவனாகி, மறுமையைக் குறிக்கும் நோன்புகளை நோற்கப் போகிறேன்.(7) ஐயோ, இந்தப் புறா தன் உடலைக் கைவிட்டு, ஒரு விருந்தினனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய வழிபாட்டை எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்த எடுத்துக் காட்டிலிருந்து போதனை பெற்ற நான், இதுமுதல் அறம் பயலப் போகிறேன். அறமே, (அனைத்து உயிரினங்களுக்கும்) உயர்ந்த புகலிடமாக இருக்கிறது. இறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான இந்த நல்ல புறாவிடம் காணப்பட்ட இத்தகைய அறத்தையே நான் பயிலப் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டான்.(8)
இத்தகைய தீர்மானத்தை அமைத்துக் கொண்டவனும், இந்த வார்த்தைகளைச் சொன்னவனும், முன்பு கடும் காரியங்களைச் செய்தவனுமான அந்த வேடன், மிகக் கடுமையான நோன்புகளை நோற்றுக் கொண்டே இவ்வுலகத்தில் திரும்பா பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினான்[1].(9) அவன் தன் தடித்த தடியையும், கூர்முனை கொண்ட இரும்புத் தடியையும் {சலாகத்தையும்}, வலைகள் மற்றும் சுருள்களையும், தன் இரும்புக்கூட்டையும் கைவிட்டு, தான் பிடித்து {அந்தக் கூண்டில்} அடைத்து வைத்திருந்த பெண்புறாவை விடுவித்தான்" {என்றார் பரசுராமர்}.(10)
[1] "மஹாபிரஸ்தானிகம் என்பது திரும்பிவராதிருக்க புறப்படுவதாகும். ஒருவன் தன் வீட்டில் இருந்து புறப்பட்டு, இவ்வுலகில் பயணித்து, அப்பயணத்திற்கு மரணத்தால் ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்வது மஹாபிரஸ்தானிகம் என்று சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 147ல் உள்ள சுலோகங்கள் : 10
ஆங்கிலத்தில் | In English |