The pigeons in heaven! | Shanti-Parva-Section-148 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 18)
பதிவின் சுருக்கம் : வேடன் விடுவித்துவிட்டுச் சென்ற பெண்புறா, கணவனின் பிரிவைத் தாளாமல் தானும் நெருப்பில் விழுந்து இறந்தது; ஆண்புறாவை சொர்க்கத்தில் கண்ட பெண்புறா; சொர்க்கத்தில் இன்புற்றிருந்த புறாக்கள்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, அவ்விடத்தை விட்டு அந்த வேடன் அகன்றதும், பெண்புறாவானது, தன் கணவனை நினைத்துத் துயரில் அழுது, இந்தப் புலம்பல்களில் ஈடுபட்டது:(1) "ஓ! அன்புத் தலைவா, நீர் எனக்கு எந்தத் தீங்கையும் செய்ததாக ஒரேயொரு நிகழ்வையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. விதவைகள், பல குழந்தைகளுக்குத் தாய்மாராக இருந்தாலும், அவர்கள் நிலை பரிதாபகரமானதே. கணவனை இழந்த ஒரு பெண், ஆதரவற்றவளாகவும், தன் நணபர்களின் பரிதாபத்திற்குரிய ஒரு பொருளாகவும் இருக்கிறாள்.(2) நான் எப்போதும் உம்மால் பேணிக் காக்கப்பட்டேன், என் மீது நீர் கொண்ட பெருமதிப்பின் விளைவாக, இனிய, ஏற்புடைய, அழகிய, மகிழ்ச்சிகரமான வார்த்தைகளால் உம்மால் நான் கௌரவிக்கப்பட்டேன்.(3) பள்ளத்தாக்குகளிலும், ஆறுகளின் நீரோடைகளிலும், இனிமையான மர உச்சிகளிலும் நான் உம்மோடு விளையாடிக் களித்திருந்தேன்.(4)
வானத்தில் உலவும்போதும் நான் உம்மால் மகிழ்ச்சியாக வைக்கப்பட்டிருந்தேன். ஓ! அன்புத் தலைவா, ஆனால், உம்மோடு நான் முன்பு விளையாடியிருந்த அந்த இன்பங்கள் இப்போது எங்கே போயின?(5) தந்தை, உடன்பிறந்தவன், மகன் ஆகியோரிடம் இருந்து ஒரு பெண் பெறும் கொடைகள் ஒரு வரம்புக்குட்பட்டதே. அவளது கணவன் தரும் கொடைகள் மட்டுமே அவளுக்கு அளவற்றவையாகத் தெரியும். எனவே, தன் கணவனைப் புகழாத எந்தப் பெண்தான் இந்த உலகத்தில் இருப்பாள்?(6) ஒரு பெண்ணுக்குத் தன் தலைவனைப் போன்ற ஒரு பாதுகாவலும் கிடையாது, தன் தலைவனைப் போன்ற ஒரு மகிழ்ச்சியும் கிடையாது. தன் செல்வம், உடைமைகள் ஆகிய அனைத்தையும் கைவிடும் ஒரு பெண், தன் தலைவனை மட்டுமே ஒரே புகலிடமாகக் கொள்கிறாள்.(7) ஓ! தலைவா, இப்போது நான் உம்மிடம் இருந்து பிரிந்துவிட்டதால் இங்கே உயிரோடிருப்பது எனக்கு எந்தப் பயனையும் தராது. தன் தலைவனை இழந்த எந்தக் கற்புடைய பெண்தான், உயிரெனும் சுமையைத் தாங்கிக் கொள்ளத் துணிவாள்?" என்று புலம்பியது {அந்தப் பெண்புறா}.(8)
தன் கணவனிடம் அர்ப்பணிப்புக் கொண்டிருந்த அந்தப் பெண்புறா, கவலையால் நிறைந்து, இத்தகைய பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டு, இறுதியில் சுடர்மிக்க நெருப்புக்குள்ளேயே விழுந்தது.(9) அப்போது அவள், (இறந்து போன) தன் கணவன், கங்கணங்களால் அலங்கரிக்கப்பட்டு, உயர் ஆன்மா கொண்டோரால் புகழப்பட்டு, தகுதிமிக்கோர் சூழ ஒரு (தெய்வீகத்) தேரில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.(10) உண்மையில் அவன், சிறந்த மலர்மாலைகளால் அலங்கரிக்கப்படவனாக, சிறந்த ஆடைகளை உடுத்தியவனாக, அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனாக ஆகாயத்தில் இருந்தான். இவ்வுலகத்தில் தகுதியுடன் செயல்பட்டவர்களால் செலுத்தப்பட்ட எண்ணற்ற தெய்வீகத் தேர்கள் அவனைச் சுற்றிலும் இருந்தன.(11) தெய்வீகத் தேரொன்றில் அமர்ந்திருந்த அந்தப் பறவையானவன், இவ்வுலகில் தான் செய்த செயல்களுக்கு உரிய கௌரவங்களை அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்ந்து, தன் மனைவியின் துணையுடன் தொடர்ந்து இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தான்" {என்றார் பரசுராமர்}.(12)
சாந்திபர்வம் பகுதி – 148ல் உள்ள சுலோகங்கள் : 12
ஆங்கிலத்தில் | In English |