The end which the fowler attained! | Shanti-Parva-Section-149 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 19)
பதிவின் சுருக்கம் : புறாக்கள் அடைந்த நற்பேற்றைக் கண்ட வேடன், தானும் அதே கதியை அடைய வேண்டும் என்றெண்ணி நெடும்பயணம் மேற்கொண்டான்; இறுதியில் ஒரு பெருங்காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நுழைந்து சொர்க்கத்தை அடைந்தான்; இந்தக் கதையைச் சொல்லி, இதனைக் கேட்பதன் மூலம் ஒருவன் அடையும் பலனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, ஓ! மன்னா, அந்த இணை {புறாக்கள்} தெய்வீகத் தேரில் அமர்ந்திருப்பதை வேடன் கண்டான். அந்த இணையைக் கண்ட அவன் {வேடன்}, (தன் பேறின்மையை நினைத்துக்) கவலையில் நிறைந்தவனாக, அதே கதியை அடையும் வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(1) அவன் தனக்குள்ளேயே, "அந்தப் புறாவைப் போன்ற துறவுகளின் மூலம் நான் அத்தகைய உயர்ந்த கதியை அடைய வேண்டும்" என்று நினைத்தான். பறவைகளைக் கொன்று வாழ்ந்த அந்த வேடன் இந்தத் தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, திரும்பி வராத பயணத்திற்குப் புறப்பட்டான்.(2) (உணவை அடைவதற்கு) எந்த முயற்சியும் செய்யாமல், காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த அவன், சொர்க்கத்தை அடையும் விருப்பத்தால் தன் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டான்.(3)
சிறிது தொலைவுக்குச் சென்றதும், பரந்ததும், குளுமையான தூய நீர் நிறைந்ததும், தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு வகை நீர்க்கோழிகளால் நிறைந்ததுமான ஓர் இனிமையான தடாகத்தைக் கண்டான்.(4) அத்தகைய தடாகத்தைப் பார்ப்பதாலேயே ஒருவனுடைய தாகம் தணிந்து விடும் என்பதில் ஐயமில்லை. ஓ! மன்னா {முசுகுந்தா}, எனினும் நோன்புகளால் மெலிந்திருந்த அந்த வேடன்,(5) அதில் தன் கண்களைச் செலுத்தாமல், இரைதேடும் விலங்குகள் வசித்த ஒரு காட்டின் பெரும்பரப்பை முன்கூட்டிய உறுதி செய்துகொண்டு, அதற்குள் மகிழ்ச்சியாக நுழைந்தான். அந்தக் காட்டுக்குள் நுழைந்தபிறகு, அவன் கூர் முனைகளைக் கொண்ட முட்களால் பெரிதும் பீடிக்கப்பட்டான்.(6)
அந்த முட்களால் கிழிபட்டு, புண்ணடைந்து, மேனியெங்கும் குருதியால் மறைக்கப்பட்ட அவன், பல்வேறு வகை விலங்குகள் நிறைந்ததும், மனிதர்களற்றதுமான அந்தக் காட்டில் திரியத் தொடங்கினான்.(7) பலமிக்கக் காற்றால் பெருமரங்களுக்கிடையில் நடந்த உராய்வின் விளைவாக ஒரு பெரிய காட்டுத்தீ எழுந்தது.(8) சீற்றமிக்க அந்தப் பூதம் {அக்னி}, யுக முடிவில் ஏற்படுவதைப் போலத் தன் காந்தியை வெளிப்படுத்திக் கொண்டு, நெடுமரங்கள், அடர்த்தியான புதர்கள் மற்றும் கொடிகளால் நிறைந்த அந்தப் பெருங்காட்டை எரிக்கத் தொடங்கியது.(9)
உண்மையில், காற்றின் மூலம் வீசப்பட்ட தழல்களுடனும், அனைத்துத் திசைகளிலும் பறக்கும் கீற்றுக் கூட்டங்களுடனும் கூடியவனும், அனைத்தையும் எரிப்பவனுமான அந்தத் தேவன் {அக்னி}, பறவைகளும், விலங்குகளும் நிறைந்த அந்த அடர்த்தியான காட்டை எரிக்கத் தொடங்கினான்.(10) தன் உடலைக் கைவிட விரும்பிய அந்த வேடன், பரவும் தீயை நோக்கி மகிழ்ச்சியான இதயத்துடன் ஓடினான்" {என்றார் பரசுராமர்}.(11) ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்நெருப்பால் எரிக்கப்பட்ட அந்த வேடன், தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்தவனாக, உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(12)
அவனது இதய நோய் விலகியது; இறுதியில் அவன், யக்ஷர்கள், கந்தர்வர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம்சூட்டப்பட்டவர்களுக்கு மத்தியில் இந்திரனைப் போன்ற காந்தியுடன் சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பவனாகத் தன்னைத் தானே கண்டான்.(13) இவ்வாறு அந்தப் புறாவும், அர்ப்பணிப்புமிக்க அதன் மனைவியும், அந்த வேடனுடன் சேர்ந்து தங்கள் தகுதிமிக்கச் செயல்களால் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(14) இவ்வாறு தன் தலைவனைப் பின்தொடரும் {தன் தலைவனிடம் அர்ப்பணிப்பு கொண்ட} ஒரு பெண், விரைவாகச் சொர்க்கத்தை அடைந்து, நான் சொன்ன பெண்புறாவைப் போலக் காந்தியுடன் ஒளிர்வாள்[1].(15)
[1] கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் புண்ய கர்மத்தால் ஆண்புறாவும், பதிவ்ரதையான பெண்புறாவும், வேடனும் ஸ்வர்க்கமடைந்தார்கள். இவ்விதமே, வேறு எந்த ஸ்திரீ பதியை அனுசரித்திருக்கிறாளோ அவளும் சீக்கிரமாகப் பெண்புறாவைப் போலத் தேவலோகத்திலிருந்து கொண்டு விளங்குவாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இவ்வழியிலேயே, தங்கள் மங்கலச் செயல்களின் காரணமாக ஆண்புறாவும், தன் கணவனிடம் அர்ப்பணிப்புக் கொண்டிருந்த பெண்புறாவும், லுப்தகனின் துணையுடன் உண்மையில் சொர்க்கத்திற்குச் சென்றனர். இவ்வழியில் தன் கணவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒரு பெண் இந்தப் பெண்புறாவைப் போல விரைவில் சொர்க்கத்தில் நிறுவப்பட்டு அங்கே ஒளிர்ந்து கொண்டிருப்பாள்" என்றிருக்கிறது. கணவனைப் பின்தொடர்வது என்று கங்குலியில் உள்ள சொற்றொடர் இந்த இரண்டு பதிப்புகளிலும் இல்லை. எனவே இந்தத் தொடரைக் கணவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட பெண் என்றே கொள்ள வேண்டும்.
இதுவே அந்த உயர் ஆன்ம வேடன் மற்றும் புறாவின் பழைய வரலாறாகும். இவ்வாறே அவர்கள் தங்கள் அறச் செயல்களால் உயர்ந்த தகுதியுள்ள கதியை அடைந்தனர்.(16) இந்தக் கதையைத் தினமும் கேட்கவோ, தினமும் உரைக்கவோ செய்பவனின் மனத்தில் தவறுகள் ஊடுருவினாலும் அவனுக்கு எந்தத் தீங்கும் நேராது.(17) ஓ! யுதிஷ்டிரா, ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவனே, சரணடைந்த ஒருவனைக் காப்பது உண்மையில் தகுதியுடையவோரின் உயர்ந்த செயலாகும். பசுவைக் கொன்றவனும், இந்தக் கடமையைச் செய்தால், அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடைவான்.(18) எனினும், சரணடைந்தவனைக் கொல்லும் மனிதனோ, ஒருபோதும் {அந்தப் பாவத்திலிருந்து} தூய்மையடையமாட்டான். புனிதமானதும், பாவத்தைத் தூய்மைப்படுத்துவதுமான இந்தக் கதையைக் கேட்பதன் மூலம் ஒருவன் துன்பத்தில் இருந்து விடுபட்டு, இறுதியில் சொர்க்கத்தை அடைவான்" என்றார் {பீஷ்மர்}.(19)
சாந்திபர்வம் பகுதி – 149ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |