Indrota's grave reproval! | Shanti-Parva-Section-150 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 20)
பதிவின் சுருக்கம் : அறியாமல் செய்யப்பட்ட பாவத்தைத் தணிக்கும் காரியத்தை விளக்க ஜனமேஜயனின் வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதர்களில் சிறந்தவரே, அறியாமையால் ஒருவன் பாவமிழைத்துவிட்டால், அவனால் எவ்வாறு அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடைய முடியும்? இது குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, சுனகரின் மகனான மறுபிறப்பாளர் இந்திரோதரால் ஜனமேஜயனுக்குச் சொல்லப்பட்டதும், முனிவர்களால் புகழப்படுவதுமான பழைய உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில் பரிக்ஷித்தின் மகனும், ஜனமேஜயன்[1] என்றழைக்கப்பட்டவனும், பெரும் சக்தியுடையவனுமான ஒரு மன்னன் இருந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பூமியின் தலைவன், அறியாமல் ஒரு பிராமணனைக் கொன்ற குற்றவாளியானான்.(3) இதனால், அவனது புரோகிதரோடு சேர்ந்து பிராமணர்கள் அனைவரும் அவனைக் கைவிட்டனர். பகலும் இரவும் வருத்தத்தால் எரிந்த அந்த மன்னன் காடுகளுக்குள் ஓயச் சென்றான்.(4) குடிமக்களாலும் கைவிடப்பட்ட அவன், உயர்ந்த தகுதியை அடைவதற்காக இந்த நடவடிக்கையை எடுத்தான். வருத்ததால் எரிந்த அந்த ஏகாதிபதி, கடுந்தவங்களைச் செய்தான்.(5)
[1] இந்தப் பரிக்ஷித்தும், ஜனமேஜயனும், அர்ஜுனனின் பேரனும், கொள்ளுப் பேரனும் கிடையாது. பழங்காலத்தைச் சேர்ந்த இவர்கள் வேறு.
பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} செய்த பாவத்தைக் கழுவுவதற்காகப் பல பிராமணர்களை விசாரித்தபடி நாடுவிட்டு நாடு சென்று மொத்த உலகத்திலும் திரிந்து கொண்டிருந்தான்.(6) அவன் பாவக்கழிப்படைந்த கதையை இப்போது நான் உனக்குச் சொல்கிறேன். தன் பாவச் செயலை நினைத்து எரிந்து கொண்டிருந்த ஜனமேஜயன், அவ்வாறு திரிந்து கொண்டே இருந்தான்.(7) ஒருநாள் அவ்வாறு அவன் திரிந்து கொண்டிருந்தபோது, கடும் நோன்புகளைக் கொண்டவரும், சுனகரின் மகனுமான இந்திரோதரைச் சந்தித்து, அவரை அணுகி அவரது பாதங்களைத் தீண்டினான்.(8)
தன் முன்னே இருக்கும் மன்னனைக் கண்ட அந்தத் தவசி அவனை வன்மையாகக் கண்டிக்கும் வகையில், "நீ பெரும் பாவத்தை இழைத்தவனாவாய். நீ கருவைக் கொன்ற குற்றவாளியாவாய். நீ ஏன் இங்கு வந்தாய்?(9) எந்தக் காரியம் உன்னை இங்கே கொண்டு வந்தது? எந்த வழிமுறைகளிலும் நீ என்னைத் தீண்டாதே. போ, சென்றுவிடு. நீ இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.(10) உன் மேனி குருதியைப் போல நாறுகிறது. உன் தோற்றம் சவத்தைப் போல இருக்கிறது. தூய்மையற்றவனாக இருப்பினும் தூயவன் போலத் தெரியும் நீ, இறந்தும் உயிருள்ளவன் போல நகர்ந்து கொண்டிருக்கிறாய்.(11) எப்போதும் பாவத்தையே நோக்கமாகக் கொண்டதால் உள்ளூர இறந்தவனான நீ தூய்மையற்ற ஆன்மா கொண்டவனாவாய். உறங்கி விழிப்பவனாக இருப்பினும், உன் வாழ்வு பெருந்துயரிலேயே கடக்கிறது.(12) ஓ! மன்னா, உன் வாழ்வு பயனற்றதாகும். மிக அவலமான வாழ்வை நீ வாழ்கிறாய். உன்னதமற்ற பாவ காரியங்களுக்காகவே நீ படைக்கப்பட்டிருக்கிறாய். தந்தைமார், பல்வேறு வகை அருள்களை அடைவதற்காக மகன்களை விரும்புகிறார்கள். அவர்கள் வேள்விகளையும், தவங்களையும் செய்வார்கள் என்று நம்பி, தேவர்களை வழிபட்டு, துறவைப் பயில்கிறார்கள்.(14)
உன் மொத்த குலத்தின் மூதாதையரும் உன் செயல்களின் விளைவால் நரகத்தில் வீழ்ந்துவிட்டதைப் பார். உன் தந்தைமார் {மூதாதையர்} வைத்திருந்த நம்பிக்கைகள் அனைத்தும் கனியற்றவையாகின.(15) பிற மனிதர்கள் யாரை வழிபட்டு நீண்ட வாழ்வையும், புகழையும், சொர்க்கத்தையும் அடைகிறார்களோ, அந்தப் பிராமணர்களிடம் நீ எப்போதும் வெறுப்பும், வன்மமும் கொண்டவனாக இருப்பதால் நீ வீணாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.(16) (நேரம் வரும்போது) இவ்வுலகத்தை விட்டுச் செல்லும் நீ, உன் பாவச் செயல்களின் விளைவால், தலைகுப்புற (நரகத்தில்) விழுந்து, அந்நிலையிலேயே எண்ணற்ற ஆண்டுகள் நீடித்திருப்பாய்.(17) அங்கே இரும்பு அலகுகளைக் கொண்ட கழுகுகள் மற்றும் மயில்களால் நீ துன்புறுத்தப்படுவாய். அதன் பிறகு அங்கிருந்து இந்த உலகத்திற்கு வரும் நீ, இழிந்த வகை உயிரினங்களில் உன் பிறப்பை எடுப்பாய்.(18) ஓ! மன்னா, இந்த உலகம் {இம்மை} ஒன்றுமில்லாதது, அடுத்த உலகம் {மறுமை} நிழலின் நிழலாகும் என நீ நினைத்தால், நரக உலகங்களின் யம தூதர்கள், உன் நம்பிக்கையின்மையைக் களைந்து, உன்னை நம்ப வைப்பார்கள்" என்றார் {இந்திரோதர்}.(19)
சாந்திபர்வம் பகுதி – 150ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |