The swearing of Janamejaya! | Shanti-Parva-Section-151 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 21)
பதிவின் சுருக்கம் : தான் செய்த பாவங்களுக்காக வருந்துவதாகவும், தன்னைக் கண்டிப்பது தகுந்ததே என்றும் இந்திரோதரிடம் ஜனமேஜயன் சொல்வது; பிராமணர்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன் என்ற உறுதிமொழியேற்றுக் கொண்டால் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொள்வதாகச் சொன்ன இந்திரோதர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்ட ஜனமேஜயன், அந்தத் தவசியிடம் {இந்திரோதரிடம்}, "கண்டிக்கத் தகுந்தவனையே நீர் கண்டிக்கிறீர். பழிக்கத்தக்கவனையே நீர் பழிக்கிறீர்.(1) என்னையும், என் செயல்களையும் நீர் கடிந்துரைக்கிறீர். என்னிடம் கருணை கொள்ளுமாறு நான் உம்மை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். என் செயல்கள் அனைத்தும் பாவம் நிறைந்தவையே. எனினும், நெருப்புக்கு மத்தியில் இருப்பவனைப் போல நான் வருந்துகிறேன்.(2) என் செயல்களை நினைத்து என் மனம் மிகவும் உற்சாகமிழக்கிறது. உண்மையில் நான் யமனைக் குறித்து அதிகம் அஞ்சுகிறேன்.(3) என் இதயத்தில் இருந்து அந்தக் கணையைப் பிடுங்காமல் என்னால் எவ்வாறு உயிரைத் தாங்கிக் கொள்ள முடியும்? ஓ! சௌனகரே {சுனகரின் மகனே [இந்திரோதரே]}, உமது கோபத்தை அடக்கி, இப்போது எனக்குப் போதிப்பீராக.(4) முந்தைய காலத்தில் பிராமணர்களிடம் நான் பெரும் மதிப்பைக் காட்டினேன். அவர்களிடம் அதே மதிப்பையே மீண்டும் காட்டுவேன் என நான் உளமாற அறிவிக்கிறேன். என் குலம் அழிய வேண்டாம். நான் பிறந்த குலம் புழுதியில் மூழ்க வேண்டாம்.(5)
பிராமணர்களுக்குத் தீங்கிழைத்தவர்கள், அதன் காரணமாக, வேத ஆணைகளின் விளைவால் உலகம் குறித்த அனைத்து உரிமைகளையும், சக மனிதர்களுடனான சமூகச் சேர்க்கையையும் இழந்தவர்கள், தங்கள் குலங்கள் தொடரத் தங்கள் பெயர்களைத் தாங்கும் எவனையும் கொண்டிருப்பது முறையாகாது.(6) நான் துயரில் மூழ்கியிருக்கிறேன். எனவே, (என் நடத்தையைச் சரி செய்து கொள்வதைக் குறித்த) என் தீர்மானங்களை நான் மீண்டும் சொல்கிறேன். ஏழைகளைப் பாதுகாப்பதற்காகக் கொடைகளை ஏற்காத தவசிகளைப் போல என்னைப் பாதுகாக்குமாறு நான் உம்மை வேண்டுகிறேன்.(7) பாவிகளான அற்பர்கள், வேள்விகளைத் தவிர்ப்பதால் ஒருபோதும் சொர்க்கத்தை அடைவதில்லை.[1] (இந்த உலகத்தை விட்டுச்) சென்றதும், புளிந்தர்களையும், காசர்களையும் போல அவர்கள் நரகக் குழிகளிலேயே தங்கள் காலத்தைக் கழிப்பார்கள்[2].(8) கல்விமானான ஓர் ஆசான் தன் சீடனுக்கோ, ஒரு தந்தையானவர் தனது மகனுக்கோ ஞானத்தைக் கொடுப்பதைப் போல அறியாமை கொண்ட எனக்கு நீர் அதை {ஞானத்தைக்} கொடுப்பீராக. ஓ! சௌனகரே, என்னிடம் நிறைவு கொள்வீராக" என்றான் {ஜனமேஜயன்}.(9)
[1] "இங்கே (அதஸ் adas என்பதன் குற்றம்சொல்லும்) அமும் amum ஆனது, ’அஃது’ என்பதையே குறிக்கிறது, ’இஃது’ என்பதைக் குறிக்கவில்லை என்பது தெளிவு. எனவே, இது சொர்க்கத்தைக் குறிக்கிறதேயன்றி, இவ்வுலகைக் குறிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் "யஜ்ஞமில்லாதவர்கள் எவ்விதத்திலும் மேலுலகத்தை அடையமாட்டார்கள்" என்றிருக்கிறது.[2] "இவர்கள் தூய்மையற்ற நடத்தை கொண்ட மிலேச்ச இனங்களாவர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புளிந்தர்களென்னும் ஒருவகை மிலேச்சர்கள் போல அவர்கள் தலைகீழாக விழுவார்கள்" என்றிருக்கிறது.
சௌனகர் {இந்திரோதர் ஜனமேஜயனிடம்}, "ஞானமில்லாத ஒருவன், பல முறையற்ற செயல்களைச் செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? இஃதை அறிந்த ஒரு ஞானமுள்ள மனிதன், உயிரினங்கள் (மடமையால் செய்யும் குற்றங்களில்) ஒருபோதும் கோபமடைவதில்லை[3].(10) ஞான மாளிகையின் உச்சியில் ஏறிய ஒருவன், பிற மக்களின் துயருக்கான பொருளாகி, அவர்களுககாக வருந்தினால், அவனது சுயம் {ஆன்மா} மிகத் தூய்மையானதாக இருக்க வேண்டும். ஒருவனுடைய ஞானத்தின் விளைவால் அவன் மலையுச்சியில் இருந்து கொண்டு கீழிருக்கும் மக்களை ஆய்வு செய்பவனைப் போல, உலகின் உயிரினங்கள் அனைத்தையும் ஆய்வு செய்கிறான்.(11) எவன் நல்லோரின் கடிந்துரைக்குப் பொருளாகிறானோ, எவன் நல்லோரை வெறுப்பானோ, எவன் அவர்களின் பார்வையில் இருந்து தன்னை மறைத்துக் கொள்வானோ அவனால் ஒருபோதும் எந்த அருளையும் அடைவதில் வெல்ல முடியாது, அவன் ஒருபோதும் செயல்களின் முறைமைகளை {ஒழுங்குமுறைகளைப்} புரிந்து கொள்ளவே மாட்டான்[4].(12) வேதம் மற்றும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி பிராமணனின் சக்தியையும், உன்னதத்தன்மையையும் நீ அறிவாய். எந்த வழியில் உன் இதயம் அமைதியை அடையமோ அஃதை இப்போதே செய்து, பிராமணர்களையே உன் புகலிடமாக்கிக் கொள்வாயாக.(13) உன் மேலுள்ள கோபத்தைப் பிராமணர்கள் நிறுத்திக் கொண்டால், அதுவே சொர்க்கத்தில் உன் இன்பநிலையை உறுதிசெய்யும். மேலும், பாவத்துக்கு நீ வருந்துவாயானால், உன் பார்வை தெளிவடையும், அறங்காண்பதில் நீ வெல்வாய்" என்றார் {இந்திரோதர்}.(14)
[3] "பம்பாய் பதிப்பில், இந்த வரி வேறு மாதிரியாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அறிவிற்சிறந்த பிராம்மணனும் (கோபமடைந்தால்) அயுக்தமான காரியத்தையும் செய்வான். இதில் என்ன ஆச்சரியம்? ஆகையால் இவ்விதமான விவேகமுள்ளவனாயிருந்து எவன் பிராணிகள் விஷயத்தில் கோபமடைவான்?" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில் இது வேறு பாடம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஞானமிக்க ஒருவன் தகுந்த செயல்கள் பலவற்றைச் செய்வதில் ஆச்சரியமேதுமில்லை. எது நடந்ததோ, எது நடக்கபோகிறதோ அது குறித்து ஒரு கல்விமான் கவலைப்படுவதில்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அவன் தற்போதைய நிலை குறித்தே கவலைப்படுவான்" என்றிருக்கிறது.[4] "பம்பாய் பதிப்பில், இந்த வரி வேறு மாதிரியாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லா ஸாதுக்களிடத்திலும் வெறுப்புற்ற மனுமுள்ளவனும், அவர்களைவிட்டு விலகியிருப்பவனும், அவர்களால் நிந்திக்கப்பட்டவனுமாயிருக்கும் ஒருவனும் அறிவை அடையமாட்டான்; ஆச்சரியங்களையும் காணமாட்டான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நிலையற்ற எவனும், ஆன்மத்தரமற்றவனும், நல்லோர் அனைவராலும் நிந்திக்கப்படுபவனும், தன்னை மறைத்துக் கொள்பவனும், செயலின் நடைமுறையைக் காணமாட்டான்" என்றிருக்கிறது.
ஜனமேஜயன், "நான் என் பாவங்களுக்காக வருந்துகிறேன். அறத்தை அழிக்க நான் ஒருபோதும் முயல மாட்டேன். நான் அருளை அடையவே விரும்புகிறேன். என்னிடம் நீர் நிறைவு கொள்வீராக" என்றான்.(15)
சௌனகர் {இந்திரோதர்}, "ஓ! மன்னா, ஆணவத்தையும், செருக்கையும் அகற்றி, நீ என்னிடம் மரியாதை காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்[5]. அறக்கட்டளைகளை எப்போதும் நினைவுகூர்பவனாக, அனைத்து உயிரினங்களின் நன்மையில் நீ ஈடுபடுவாயாக.(16) அச்சத்தாலோ, குறுகிய மனத்தாலோ, பேராசையாலோ நான் உன்னைக் கண்டிக்கவில்லை. நான் சொல்லப்போகும் உண்மையின் வார்த்தைகளை இங்கிருக்கும் பிராமணர்களோடு சேர்ந்து கேட்பாயாக.(17) நான் எதையும் கேட்கவில்லை. எனினும், அறவழிகளை நான் உனக்குப் போதிப்பேன். (நான் இப்போது செய்யப் போகும் செயலுக்காக) அனைவரும் என்னை நிந்தித்து {தவளைகள் போல், கழுதைகள் போல்) கத்தவும், கதறவும் செய்வார்கள்.(18) அவர்கள் என்னைப் பாவி என்றும் அழைக்கக்கூடும். என் சொந்தங்களும், நண்பர்களும் என்னை விலக்கக்கூடும்[6]. எனினும், என் சொந்தங்களும், நண்பர்களும், நான் பேசப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, வாழ்வின் கடினங்களை நிச்சயம் விரைவாகக் கடப்பார்கள்.(19) பெரும் ஞானம் கொண்ட சிலர் (என் நோக்கங்களைச்) சரியாகப் புரிந்து கொள்வார்கள். ஓ! குழந்தாய், ஓ! பாரதா, பிராமணர்களைக் குறித்த என் பார்வைகள் என்ன என்பதை அறிந்து கொள்வாயாக.(20) என் முயற்சிகளின் மூலம் (நான் சொல்வதைக் கேட்ட பிறகு) அவர்கள் அனைத்து அருளையும் அடையும் வகையில் செயல்படுவாயாக. ஓ! மன்னா, பிராமணர்களுக்கு மீண்டும் தீங்கிழைக்கமாட்டேன் என்ற உறுதிமொழியையும் நீ அளிப்பாயாக" என்றார் {இந்திரோதர்}.(21)
[5] "அஃதாவது, என் போதனைகள் வேண்டுமென்றால் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "பிராமணனைக் கொன்றவனிடம் பேசுவது கூடப் பாவமாகக் கருதப்படும் அளவுக்கு வெறுப்புணவு பெரியதாக இருந்திருக்கிறது. அத்தகைய ஒரு மனிதனுக்கு, வேதங்கள் மற்றும் அறநெறிகளின் உண்மைகளைப் போதிப்பது, அறத்தையே களங்கப்படுத்துவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஜனமேஜயன், "எண்ணத்தாலோ, வார்த்தையாலோ, செயலாலோ, நான் இனி ஒருபோதும் பிராமணர்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன் என்று உமது பாதங்களைத் தீண்டி உறுதிமொழியேற்கிறேன்" என்றான்.(22)
சாந்திபர்வம் பகுதி – 151ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |