The justice of Indrota! | Shanti-Parva-Section-152 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 22)
பதிவின் சுருக்கம் : இந்திரோதர் ஜனமேஜயனுக்குச் சொன்ன அறிவுரைகள்; ஜனமேஜயனைப் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவனுக்குக் குதிரை வேள்வி செய்து கொடுத்த இந்திரோதர்...
Shanti-Parva-Section-152 | Mahabharata In Tamil |
சௌனகர் {இந்திரோதர் ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்தக் காரணங்களுக்காக, மிகக் கலங்கிய இதயம் கொண்ட உன்னிடம் நான் அறம் குறித்து உரையாடப்போகிறேன். அறிவையும், பெரும்பலத்தையும், நிறைவான இதயத்தையும் கொண்ட நீ, அறத்தைத் தானாக விரும்பி நாடுகிறாய்.(1) ஒரு மன்னன், முதலில் மிகக் கடுமையானவனாகி, பிறகு கருணையைக் காட்டி, தன் செயல்களின் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையைச் செய்கிறான். இது நிச்சயம் மிக ஆச்சரியமானதே ஆகும்.(2) நீ முதலில் கடுமையானவனாக இருந்தாய். ஆனால் இப்போதோ, அறம் நோக்கி உன் கண்களைத் திருப்பியிருக்கிறாய்.(3) ஆடம்பர உணவு மற்றும் இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, நீண்ட காலமாகவே நீ கடுந்தவங்களைச் செய்து வருகிறாய். ஓ! ஜனமேஜயா, பாவத்தில் மூழ்கியிருக்கும் மன்னர்களிடம் இவையனைத்தும் {காணப்படுவது} நிச்சயம் ஆச்சரியமானதே.(4)
செல்வமிக்கவன் பரந்த மனம் கொண்டவனாவதோ, தவத்தைச் செல்வமாகக் கொண்ட ஒருவன், அதை {தவசக்தியைச்} செலவு செய்யத் தயங்குவதோ ஒருபோதும் ஆச்சரியமானதில்லை. ஒருவர் மற்றொருவரிடமிருந்து தொலைவில் வாழ்வதில்லை என்று சொல்லப்படுகிறது[1].(5) எது தவறாகத் தீர்மானிக்கப்படுகிறதோ, அஃது அதிகமான துன்பத்தையே உண்டாக்கும். மறுபுறம், எது நல்ல உறுதியான தீர்மானத்தின் துணையுடன் நிறைவேற்றப்படுகிறதோ, அது சிறப்பான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது[2].(6) ஓ! பூமியின் தலைவா, வேள்வி, கொடை, கருணை, வேதங்கள், உண்மை ஆகிய இவ்வைந்தும் தூய்மைப்படுத்துவனவாகும். ஆறாவதானது, நன்றாகச் செய்யப்படும் தவமாகும். ஓ! ஜனமேஜயா, இறுதியானது {தவமானது} மன்னர்களுக்கு உயர்வான தூய்மையைத் தரும்.(7) அதை நீ முறையாகக் கைக்கொண்டால், நீ நிச்சயம் பெரும் தகுதியையும் {புண்ணியத்தையும்}, அருளையும் ஈட்டுவாய். புனிதத் தலங்களுக்குப் பயணம் செய்வதும் உயர்ந்த தூய்மையைத் தரும் என்று சொல்லப்படுகிறது.(8)
[1] "சுலோகம் 5-க்கான இந்த உரையானது இறுதிநிலை எய்தாத வரைவாகவே இங்கே தரப்படுகிறது. செல்வந்தன் ஈகையாளனாவது ஆச்சரியமில்லை. மேலும், தவசியானவர் தன் சக்தியைச் செயல்படுத்துவதில் விருப்பமில்லாதவராக இருக்கிறார். (அகஸ்தியர் தன் மனைவியை நிறைவு செய்வதற்காகச் செல்வத்தை உண்டாக்க விரும்பவில்லை என்பதை நாம் இங்கே சாட்சி பகரலாம்). இந்த இருவரும் ஒருவருவருக்கொருவர் தொலைவில் வாழமாட்டார்கள் என்பதன் பொருளானது, ஒரு செல்வந்தன் ஈகையாளனாகும் அதே காரணமே, ஒரு தவசியைத் தான் கொண்ட செல்வத்தை {தவசக்தியைக்} கையாள மிகக் கவனமாக இருக்க வைக்கிறது என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸம்பத்துள்ளவன் தாதாவாயிருப்பதும், க்ருபணன் தவத்தைப் பொருளாகக் கொண்ட முனியாயிருப்பதும் ஆச்சர்யமல்லவென்று சொல்லுகிறார்கள். அது ஸமீபத்திலிருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு பலவீனன், ஈகையாளனாவதோ, துன்பத்திலிருக்கும் மனிதன் தவத்தை நாடுவதும் ஆச்சரியமானதில்லை. இந்நடத்தையானது, அவர்களின் நிலைக்கு நெருக்கமானது எனச் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.[2] "எது அசமிக்ஷிதமோ asamikshitam, அதுசமகிரம் samagram kaarpanyam கார்ப்பன்யம் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நன்றாக ஆலோசிக்கப்படாதவையெல்லாம் கார்ப்பண்யமாகும். அது நன்றாக ஆலோசனையுடனிருக்குமாகில் அதில் அதனால் குணமுண்டாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இந்தத் தவறான தன்மையானது முறையாகக் கருதப்படுவதில்லை. எனவே, ஒருவன் அதைச் சரியாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது மட்டுமே அவன் அதன் பண்புகளைப் பாராட்டுவான்" என்றிருக்கிறது.
இது தொடர்பாக யயாதி பாடிய பின்வரும் சுலோகம் குறிப்பிடப்படுகிறது: "எந்த மனிதன் உயிரையும், நீண்ட வாழ்வையும் ஈட்டுவானோ, அவன் அர்ப்பணிப்புடன் வேள்விகளைச் செய்த பிறகு, அவற்றை (முதிர்ந்த வயதில்) கைவிட்டு {துறந்து}, தவங்களைச் செய்ய வேண்டும்" {என்பது அந்த ஸ்லோகம்}.(9) குருவின் களம் {குருக்ஷேத்திரம்} புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதி ஆறு அதைவிடப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதியைவிட, சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் இன்னும் அதிகமான புனிதம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது; சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தையும்விடப் பிருதூதகம்[3] என்றழைக்கப்படும் தீர்த்தம் மிகப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. பிருதூதகத்தில் நீராடி, அதன் நீரைப் பருகிய ஒருவன், அகால மரணமடையமாட்டான்.(10) மஹாஸரஸுக்கும், புஷ்கரை என்ற பெயரில் இருக்கும் தீர்த்தங்கள் அனைத்திற்கும், பிரபாஸத்துக்கும், மானஸத்தின் {மானசரோவரின்} வடக்குத் தடாகத்துக்கும் {உத்தர மானஸத்துக்கும்}, காலோதகத்துக்கும் நீ செல்ல வேண்டும். அதன் பிறகு, நீ உயிரையும், நீண்ட வாழ்நாளையும் அடைவாய்.(11) சரஸ்வதியும், திருஷத்வதியும் ஒன்றுகலக்கும் இடத்திலேயே மானஸத் தடாகம் இருக்கிறது[4]. வேத அறிவைக் கொண்ட மனிதர்கள் இந்த இடங்கள் அனைத்திலும் நீராட வேண்டும். கடமைகள் அனைத்திலும் ஈகையே சிறந்தது என்றும், ஈகையைவிடத் துறவு சிறந்ததென்றும் மனு சொல்லியிருக்கிறார்.(12)
[3] வனபர்வம் 83ல் தீர்த்தயாத்ரா உபபர்வத்தில் இந்தத் தீர்த்தம் குறித்துச் சொல்லப்படுகிறது. https://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section83d.html இது ஹர்யானாவில் இன்றும் இருக்கும் பெஹோவா Pehowa என்ற இடம் என்று சொல்லப்படுகிறது. அங்கிருக்கும் கார்த்திகேயன் கோவில் புகழ்மிக்கதாகும். ஆனால் சல்லிய பர்வத்தில் வரும் பலராமனின் சரஸ்வதி தீர்த்த யாத்திரையில் இந்த இடம் குறிப்பிடப்படுவதாகத் தெரியவில்லை.[4] கும்பகோணம் பதிப்பில், "ஸரஸ்வதியிலும், த்ருஷத்வதியிலும் ஸ்நானஞ்செய்யும் மனிதன் தாபமடைவானோ?" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், சரஸ்வதி மற்றும் திருஷத்வதியின் சங்கமத்தில் நீ நீராட வேண்டும்" என்றிருக்கிறது. இந்த இரு பதிப்புகளிலும் மானஸம் இவற்றுடன் இணைக்கப்படவில்லை.
இது தொடர்பாகச் சத்தியவான் செய்த பின்வரும் ஸ்லோகம் குறிப்பிடப்படுகிறது. "ஒரு குழந்தையைப் போல எளிமைமிக்கவனாகவும், தகுதியோ {புண்ணியமோ}, பாவமோ அற்றவனாகவும் (ஒருவன்) செயல்பட வேண்டும்.(13) அனைத்து உயிரினங்களையும் பொறுத்தவரையில், இவ்வுலகில் துன்பமோ இன்பமோ கிடையாது. (துன்பம் என்று அழைக்கப்படுவதும், இன்பம் என்று அழைக்கப்படுவதும், தவறாக உண்டான கற்பனையின் விளைவுகளே ஆகும்). இதுவே அனைத்து உயிரினங்களின் உண்மையான இயல்பாகும்.(14) அனைத்து உயிரினங்களிலும், துறவை மேற்கொண்டு, தகுதிமிக்க {புண்ணியமான}, பாவம் நிறைந்த செயல்கள் இரண்டையும் தவிர்ப்பவர்களின் வாழ்வே மேன்மையானதாக இருக்கிறது" {இதுவரை உள்ளதே சத்தியவானின் ஸ்லோகமாக இருக்க வேண்டும்}. ஒரு மன்னனுக்குச் சிறப்புடைய செயல்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்.(15) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வலிமையையும், ஈகையையும் வெளிப்படுத்தி நீ சொர்க்கத்தை வெல்வாயாக. வலிமை மற்றும் சக்தியின் பண்புகளைக் கொண்ட மனிதனே அறமீட்டுவதில் வெல்கிறான்[5].(16)
[5] "இங்கே சொல்லப்படும் பலம் vala என்பது பொறுமை (தாங்கிக் கொள்ளும் பலம்) என்றும், ஓஜஸ் Ojas(சக்தி) என்பது, புலனடக்கம் என்றும் நீலகண்டர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பலத்தாலும், தனங்களாலும் ஸ்வர்க்கத்தை ஜயி; பரிசுத்தியையும் அடை. எவனுக்குப் பலமும், கருவிகளுள்ள சக்திகளுமிருக்கின்றனவோ அந்த மனிதனே தர்மத்திற்கு ப்ரபுவாவான்" என்றிருக்கிறது.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்களுக்காகவும், இன்பத்துக்காகவும் இந்தப் பூமியை நீ ஆள்வாயாக. நீ முன்பு பிராமணர்களைப் பழித்தாய். இப்போது அவர்களை நிறைவு செய்வாயாக.(17) {முன்பு} உனக்கு ஐயோ என்று அவர்கள் கதறி இருந்தாலும், அவர்களை நீ கைவிட்டிருந்தாலும், தன்னறிவால் வழிநடத்தப்படும் நீ, ஒருபோதும் அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்லை என்று முழுப் பற்றுடன் உறுதியேற்பாயாக. உனக்குத் தகுந்த செயல்களில் ஈடுபட்டு, உனக்கான உயர்ந்த நன்மையை நாடுவாயாக.(18) ஆட்சியாளர்களில் சிலர் பனிபோல் குளுமையாக இருக்கிறார்கள்; சிலர் நெருப்பைப் போலச் சீற்றத்துடன் இருக்கிறார்கள்; சிலர் ஏரை {கலப்பையைப்} போல (தங்கள் எதிரிகளை வேரோடு பிடுங்குபவர்களாக) இருக்கிறார்கள்; மேலும் சிலரோ இடியைப் போல (திடீரெனத் தங்கள் எதிரிகளை எரிப்பவர்களாக) இருக்கிறார்கள்.(19) தன்னழிவைத் தவிர்க்க விரும்புபவன், பொதுவாகவோ, சிறப்பான காரணங்களுக்காகவோ தீய அற்பர்களுடன் ஒருபோதும் கலவாமல் இருக்க வேண்டும்.(20)
ஒரு முறை மட்டுமே செய்யப்பட்ட பாவச் செயலுக்காக ஒருவன் வருந்துவதன் மூலம் அவன் தூய்மையடையலாம். இருமுறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி ஒருபோதும் அதைச் செய்வதில்லை என்று உறுதியேற்பதன் மூலம் அவன் தூய்மையடையலாம்.(21) மும்முறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி எப்போதும் அறம் மட்டுமே பயில்வேன் என்ற தீர்மானத்தின் மூலம் அவன் தூய்மையடையலாம். அத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்திருந்தால், அவன் புனிதத் தலங்களுக்குப் பயணிப்பதன் மூலம் தூய்மையடையலாம். செழிப்பில் விருப்பம் உள்ள ஒருவன், அருள்நிலையையே விளைவாகக் கொண்ட அனைத்தையும் செய்ய வேண்டும்.(22) நறுமணங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள் அதன் விளைவாக நறுமணமாகவே இருப்பார்கள். மறுபறம் கடும் நாற்றத்திற்கு மத்தியில் வாழ்பவர்கள் இழிவாகவே இருப்பார்கள்.(23) தவத்துறவுகளைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். (ஹோம) நெருப்பை ஒரு வருடம் வழிபடுவதன் மூலம் ஒருவன் பல்வேறு வகைப் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(24)
கருவைக் கொன்ற குற்றத்தைச் செய்த ஒருவன், நெருப்பை மூன்று வருடங்கள் வழிபடுவதன் மூலம் தூய்மையடைகிறான். கருவைக் கொன்ற குற்றவாளியானவன், மஹாசரஸ், புஷ்கரை, பிரபாசம், வட மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தங்களுக்குப் புறப்பட மட்டுமே செய்தாலும், அவற்றில் இருந்து ஒரு நூறு யோஜனைகள் தொலைவிலேயே தூய்மையடைகிறான்[6].(25) உயிரினங்களைக் கொன்றவன், எத்தனை உயிரினங்களைக் கொன்றானோ, அதே அளவுக்கு அந்த வகை உயிரினங்களைக் கடும் துன்பத்தில் இருந்து காப்பதன் மூலம் தன் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(26) அகமர்ஷன மந்திரங்களை மூன்று முறை உரைத்த பிறகு, நீரில் மூழ்குவதன் மூலம் ஒருவன், ஒரு குதிரை வேள்வியில் {அஸ்வமேத யாகத்தில்} இறுதி நீராடிய கனிகளை அறுவடை செய்யலாம் என்று மனு சொல்லியிருக்கிறார்[7].(27) அத்தகைய செயலானது ஒருவனுடைய பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்குவதன் விளைவாக, அவன் உலகில் மதிப்பையும் அடைகிறான். (தங்களைச் சுற்றியிருப்போருக்குக் கீழ்ப்படியும்) ஆதரவற்ற மூடர்களைப் போல அனைத்து உயிரினங்களும் அத்தகைய மனிதனுக்குக் கீழ்ப்படியும்.(28)
[6] "வட்டார மொழியைச் சார்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் 25ம் ஸ்லோகத்தின் இரண்டாம் வரியில் பிழை செய்திருக்கிறார்கள். ஒரு மனிதன் நூறு யோஜனைகள் தொலைவில் இருந்து எந்தப் புனித நீர்நிலைகளுக்காவது புறப்பட்டால் தூய்மையடைவான் என்று அவர்கள் பொருள் கொள்வதாகத் தெரிகிறது. இந்தப் பொருள் ஏற்கப்பட்டால், நூறு யோஜனைகளுக்குள் வாழும் எந்த மனிதனும் தூய்மையடைய முடியாது என்றாகும். உண்மையில், நூறு யோஜனைகளுக்குள் இருக்கும் பல்வேறு தலங்களை அணுகுவதற்குள்ளாகவே ஒரு மனிதன் தூய்மையடைய முடியும் என்பதே அந்தத் தீர்த்தங்களின் திறனைச் சொல்வதாக அமையும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ப்ரூணஹத்தி செய்தவன் மஹாஸரஸ், புஷ்கரம், ப்ரபாஸம், உத்தரமானஸம் இவைகளுக்காக நூறு யோஜனஞ்செல்வதால் விடுதல் பெறுவான்" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில் இந்த வரியே இல்லை.[7] "இந்த மந்திரங்கள் ஒவ்வொரு பிராமணனின் காலை, நடுப்பகல், மாலை வேண்டுதல்களின் அங்கமானவையாகும். அகமர்ஷணர், பெரும் புனிதரான வேதகால முனிவராவார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, பழங்காலத்தில், தேவர்களும், அசுரர்களும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதியை அணுகி அவரிடம் பணிவாக, "ஓ! பெரும் முனிவரே, அறத்தின் கனிகளை நீர் அறிவீர், அதேபோல, மறுமையில் நரகத்திற்கு வழிவகுக்கும் பிற செயல்களின் கனிகளையும் நீர் அறிவீர்.(29) எவனிடம் (துன்பம் மற்றும் இன்பம் ஆகிய) இரண்டும் இணையாக இருக்கிறதோ, அவன் தகுதி {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள மாட்டானா? ஓ! பெரும் முனிவரே, அறவோரின் கனிகள் என்ன என்பதையும், ஓர் அறவோன் தன் பாவங்களை எவ்வாறு அகற்றுகிறான் என்பதையும் எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டனர்.(30)
பிருஹஸ்பதி, "மடமையினால் ஒருவன் பாவம் செய்திருந்தால், அவன் தகுதிவாய்ந்த {புண்ணியமான} செயல்களின் இயல்பைப் புரிந்து கொண்டு அவற்றைச் செய்வான் என்றால், காரங்களின் மூலம் அழுக்குத் துணியை வெளுப்பதைப் போல அவன் அத்தகைய அறத்தின் மூலம், தன் பாவத்திலிருந்து தூய்மையடையலாம்.(31) பாவத்தை இழைத்துவிட்டு ஒருவன் தற்புகழ்ச்சி செய்யக்கூடாது. நம்பிக்கையின் மூலமும், வன்மத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமும் அவன் அருள்நிலையை அடைவதில் வெல்வான்.(32) நல்லோரின் குற்றங்கள் வெளிப்படும்போது, அதை மறைப்பவன், குற்றங்களை இழைத்தவனாக இருந்தாலும் அருள்நிலையை அடைவான்.(33) காலையில் எழும் சூரியன், இருளனைத்தையும் விலக்குவதைப் போலவே, அறச்செயல்களின் மூலம் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தையும் விலக்கிக் கொள்கிறான்" என்று பதிலுரைத்தார் {என்றார் இந்திரோதர்}".(34)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சுனகரின் மகனான இந்திரோதர், மன்னன் ஜனமேஜயனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குதிரை வேள்வியைச் செய்து கொடுப்பதில் அவனுக்குத் துணையாக இருந்தார்.(35) தன் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவனும், அருள் நிலையை மீண்டும் அடைந்தவனும், சுடர்மிக்க நெருப்பைப் போலக் காந்தியுடன் ஒளிர்ந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த மன்னன் {ஜனமேஜயன்}, முழுவடிவைக் கொண்ட சோமன் சொர்க்கத்தில் நுழைவதைப் போலத் தன் நாட்டுக்குள் நுழைந்தான்" {என்றார் பீஷ்மர்}.(36)
சாந்திபர்வம் பகுதி – 152ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |