Can dead be restored to life? | Shanti-Parva-Section-153 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 23)
பதிவின் சுருக்கம் : இறந்து போன ஒரு பிராமணப் பிள்ளைக்கு இறுதி காரியங்களைச் செய்யச் சுடுகாட்டுச் சென்ற உற்றார் உறவினர்; துயர் தாளாமல் அழுது கொண்டிருக்கும் அவர்களை விரைவில் அங்கிருந்து போகச் சொன்ன கழுகு; பிள்ளை மீது கொண்ட பாசத்தை நினைவுகூரச் செய்து அவர்களை அங்கேயே தங்கச் செய்த நரி; சாத்திரங்களை அறிந்த ஞானமிக்கக் கழுகும், நரியும் மீண்டும் மீண்டும் அவர்களுக்குப் போதித்த அறிவுரைகள்; செய்வதறியாமல் திகைத்து நின்ற உற்றார் உறவினர்; கழுகு மற்றும் நரியின் தந்திரங்கள்; மகாதேவன் சங்கரனின் பெருமை...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-153 |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, மரணமடைந்த பிறகு உயிர் மீண்ட எந்த மனிதனையாவது நீர் பார்த்ததோ, கேட்டதோ உண்டா?"(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, பழங்காலத்தில் ஒரு கழுகுக்கும், நரிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட இந்தக் கதையைக் கேட்பாயாக. உண்மையில், இந்தக் கதை நைமிசக்காட்டில் {வைதிச நகரத்தில்}[1] நடைபெற்றது.(2) ஒரு காலத்தில் ஒரு பிராமணன், பெரும் சிரமங்களுக்குப் பிறகு, அகன்ற விழிகளைக் கொண்ட ஒரு மகனை அடைந்தான். அந்தப் பிள்ளை, குழந்தை பருவத்திற்குரிய உடல் வலிப்பால் மரணமடைந்தான்.(3) (அவனுடைய சொந்தக்காரர்கள்) சிலர், துயரால் மிகவும் கலக்கமடைந்து, உரத்த புலம்பல்களில் ஈடுபட்டு, அந்தக் குடும்பத்தின் ஒரே செல்வமான அந்த இளம்பிள்ளையை எடுத்துச் சென்றனர்.(4) இறந்து போன அந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டு, சுடலையின் {சுடுகாட்டின்} திசையை நோக்கி அவர்கள் சென்றனர். அங்கே வந்து அந்தப் பிள்ளையை ஒருவர் மார்பில் ஒருவர் கிடத்திக் கொண்டு துயரால் கசந்து பெரிதும் அழுதார்கள்.(5) தங்கள் அன்புக்குரிய அந்தப் பிள்ளையின் முந்தைய பேச்சுகளைக் கனத்த இதயத்துடன் நினைவுகூர்ந்த அவர்களால், அவனது உடலை வெறுந்தரையில் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்ப முடியவில்லை.(6)
[1] கும்பகோணம் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும் இந்த இடம் வைதிச நகரம் என்று குறிப்பிடப்படுகிறது.
அவர்களது கதறல்களால் அழைக்கப்பட்ட ஒரு கழுகு அங்கே வந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னது: "இங்கிருந்து சென்றுவிடுங்கள், தாமதிக்காதீர்கள், ஒரே பிள்ளையாக இருந்தாலும் நீங்கள் இவனைக் கைவிடவே வேண்டும்.(7) காலப்போக்கில் இங்கே கொண்டுவரப்படும் ஆயிரக்கணக்கான ஆண்களையும், ஆயிரக்கணக்கான பெண்களையும் எப்போதும் இந்த இடத்திலே விட்டுவிட்டுச் சொந்தக்கார்கள் {உற்றார் உறவினர்} சென்றுவிடுவார்கள்.(8) இந்த மொத்த அண்டமும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் கட்டுப்பட்டது என்பதைக் காண்பீராக. சேர்க்கையும், பிரிவும் மீண்டும் மீண்டும் நேர்வதே காணப்படுகிறது.(9) சொந்தங்களின் சடலங்களைச் சுடலைக்குக் கொண்டுவருபவர்களும், (பற்றால்) அந்த உடல்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாழ்வுக்காலம் முடிந்ததும், தங்கள் செயல்களின் விளைவால் இந்தப் பூமியில் இருந்து {அவர்களும்} மறையவே செய்கிறார்கள்.(10) கழுகுகளும், நரிகளும், எலும்புகளும் நிறைந்ததும், ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தில் ஆழ்த்துவதும், பயங்கரமான இடமுமான இந்தச் சுடலையில் நீங்கள் காலந்தாழ்த்துவதற்கு எந்த அவசியமும் இல்லை.(11) நண்பனோ, பகைவனோ, காலத்தின் ஆதிக்கத்திற்கு ஒருமுறை அடிபணிந்துவிட்டால், மீண்டும் அவனால் ஒருபோதும் உயிரோடு வர முடியாது. உண்மையில், உயிரினங்கள் அனைத்தின் விதியும் அத்தகையதே.(12) இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் இறப்பான். இறந்து, காலனால் விதிக்கப்பட்ட வழியில் சென்றவனை உயிருடன் மீட்பவன் எவன் இருக்கிறான்?(13) மனிதர்கள் தங்கள் தினசரி உழைப்பை முடிக்கும் இந்தக் காலத்தில், சூரியன் அஸ்த மலைகளுக்கு ஓயச் செல்கிறான். இந்தப் பிள்ளையிடம் கொண்ட பற்றைக் கைவிட்டு உங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வீராக" என்றது {கழுகு}.(14)
கழுகின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சொந்தக்காரர்களின் துன்பம் விலகுவதாகத் தெரிந்தது, அந்தப் பிள்ளையை வெறுந்தரையில் கிடத்திவிட்டு அவர்கள் செல்லத் தயாரானார்கள்.(15) பிள்ளை இறந்துவிட்ட உண்மையைத் தங்களுக்குத் தாங்களே உறுதி செய்து கொண்டு, அவனை மீண்டும் காண்பதில் நம்பிக்கையிழந்து, உரத்த புலம்பல்களில் ஈடுபட்டபடி, அவர்கள் தாங்கள் வந்த பாதையிலேயே செல்லத் தொடங்கினர்.(16) ஐயங்கடந்த உறுதியுடன், இறந்தவனை மீட்பதில் நம்பிக்கையிழந்து, தங்கள் குலத்தின் வாரிசைக் கைவிட்ட அவர்கள், அந்த இடத்தைவிட்டுத் திரும்ப ஆயத்தமாகினர்.(17)
அந்த நேரத்தில் அண்டங்காக்கையைப் போன்று கரிய நிறத்தைக் கொண்ட ஒரு நரியானது, தன் வளைக்குள் இருந்து வெளியே வந்து, அவ்வாறு சென்று கொண்டிருந்த அந்தச் சொந்தக்காரர்களிடம், "இறந்து போன அந்தப் பிள்ளையின் சொந்தக்காரர்களான உங்களுக்கு அவனிடம் நிச்சயம் எந்தப் பற்றும் இல்லை.(18) மூடர்களே, அங்கே வானத்தில் சூரியன் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான். அச்சமில்லாமல் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். காலத்தின் பண்புகள் பல்வேறு வகைப்பட்டனவாக இருக்கின்றன. இவன் மீண்டும் உயிர்பெறக்கூடும்.(19) தலையில் சில குசப் புற்களைக் கிடத்தி, இந்த அன்புக்குரிய பிள்ளையைச் சுடலையில் கைவிட்டுவிட்டு, இந்த அன்புக்குரியவனிடம் உள்ள பற்றனைத்தையும் கைவிட்டு, இரும்பாலான இதயங்களுடன் நீங்கள் ஏன் செல்கிறீர்கள்?(20) எவனுடைய உதடுகளில் இருந்து சொற்கள் பிறந்தவுடன், அவை உங்களைப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினவோ, அந்த இனிய பேச்சைக் கொண்ட இளம்பிள்ளையிடம் நிச்சயம் உங்களுக்கு அன்பேதும் இல்லை.(21)
பறவைகளும், விலங்குகளும் கூடத் தங்களின் வாரிசுகளிடம் கொள்ளும் அன்பைப் பாருங்கள். அவை தங்கள் குட்டிகளை வளர்ப்பதால் அவற்றுக்கு எந்தப் பயனும் கிடையாது.(22) (கனி {பலன்}, அல்லது வெகுமதி மீது கொண்ட விருப்பத்தால் ஒருபோதும் செய்யப்படாத) முனிவர்களின் வேள்விகளைப் போல, நான்கு கால் உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றின் பற்றுக்குச் சொர்க்கத்தில் எந்த வெகுமதியும் கிடையாது.(23) அவை தங்கள் பிள்ளைகளின் மூலம் மகிழ்ந்தாலும், அவற்றிடமிருந்து இம்மையிலோ, மறுமையிலோ எந்தப் பலனையும் அடைவது காணப்படவில்லை. இருப்பினும் அவை தங்கள் பிள்ளைகளைப் பற்றுடன் பேணி வளர்க்கின்றன.(24) அவற்றின் பிள்ளைகளோ வளர்ந்த பிறகு, அவற்றினுடைய {பெற்றோரின்} முதிர்ந்தவயதில் ஒருபோதும் அவற்றைப் பேணிக் காப்பதில்லை. இருப்பினும் அவை தங்கள் பிள்ளைகளைக் காணாமல் வருத்தமடைவதில்லையா?(25) துன்பத்தின் ஆதிக்கத்தை அடையும் மனிதர்களிடம் உண்மையில் எங்கே பற்றுக் காணப்படுகிறது? உங்கள் குலத்தைத் தழைக்கச்செய்பவனான இந்தப் பிள்ளையை இங்கே விட்டுவிட்டு நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்?(26)
சிறிது காலம் இவனுக்காகக் கண்ணீர் சிந்துங்கள், இன்னும் சற்று நேரம் இவனைப் பற்றுடன் பார்த்துக் கொள்ளுங்கள். உண்மையில், அன்புக்குரிய பொருட்களைக் கைவிடுவது மிகக் கடினமான காரியமாகும்.(27) பலவீனன், சட்டப்படி தண்டிக்கப்பட்டவன், சுடலைக்குச் சுமந்து செல்லப்படுபவன் ஆகியோரின் அருகில் நண்பர்கள் காத்திருப்பார்களேயன்றி வேறு யாரும் காத்திருப்பதில்லை.(28) உயிர் மூச்சு அனைவருக்கும் அன்புக்குரியதே, அனைவரும் பற்றின் ஆளுகையை உணரவே செய்கிறார்கள். இடைநிலை உயிரினங்களைச் சார்ந்த இவற்றால்கூட[2] பேணப்படும் பற்றைக் காண்பீராக.(29) தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்களைக் கொண்டவனும், நீராடி, மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, புதிதாகத் திருமணம் செய்த இளைஞனைப் போல அழகாக இருக்கும் இந்தச் சிறுவனைக் கைவிட்டுவிட்டு, உண்மையில் உங்களால் எவ்வாறு செல்ல முடிகிறது?" என்று கேட்டது {நரி}.(30) துயரைத் தூண்டும் இத்தகைய உணர்வெழுச்சியில் ஈடுபட்ட நரியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மனிதர்கள், சடலத்தை நோக்கித் திரும்பினார்கள்.(31)
[2] "அதாவது, பறவைகளும், விலங்குகளும் என்பது பொருள். "விலங்குகள் மற்றும் பறவைகளிடம் கூட நல்லோரால் பேணி வளர்க்கப்படும் பற்றைக் காணுங்கள்" என்று வட்டார மொழிபெயர்ப்பாளர்கள் இதைத் தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கீழே பசு முதலிய பிறப்பிலிருப்பவைகளுக்கும் ஸ்நேஹம் எவ்விதமிருக்கிறதென்று பாருங்கள்" என்றிருக்கிறது.
அப்போது கழுகு, "ஐயோ, மனோபலமற்ற மனிதர்களே, கொடூரமானதும், இழிந்ததும், சிறுமதி படைத்ததுமான நரியின் பேச்சைக் கேட்டு நீங்கள் ஏன் திரும்புகிறீர்கள்?(32) , (ஆன்மா) ஏதும் இல்லாததும், அசைவற்றதும், மரக்கட்டை போல விறைத்துப் போனதும், ஐம்பூதங்களின் தலைமையான தேவர்களால் {ஐம்பூதங்களால்} கைவிட்ட ஒரு பூதத்தொகுப்புக்காக {உடலுக்காக} நீங்கள் ஏன் துக்கத்தில் ஈடுபடுகிறார்கள்? நீங்கள் ஏன் உங்களுக்காக வருந்தவில்லை?(33) பாவத்திலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நீங்கள் கடுந்தவங்களைச் செய்வீர்களாக? தவமுறைகளின் மூலம் அனைத்தையும் அடையலாம். புலம்பல்களால் என்ன செய்ய முடியும்?(34) உடலோடு தீயூழும் பிறக்கிறது. அந்தத் தீயூழின் விளைவாலேயே, இந்தச் சிறுவன் உங்களை முடிவிலா துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறந்துவிட்டான்.(35)
செல்வம், பசுக்கள், தங்கம், விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், பிள்ளைகள் ஆகிய அனைத்தும் தவங்களிலேயே தங்கள் வேர்களைக் கொண்டிருக்கின்றன. மேலும் தவங்களோ (பரமாத்மாவையும் ஆன்மாவையும் ஒன்றிணைக்கும்) யோகத்தின் விளைவால் நேர்பவையாகும்.(36) உயிரினங்களுக்கு மத்தியில் இன்பம் மற்றும் துன்பத்தின் அளவானது, முற்பிறவியின் செயல்களைச் சார்ந்தே அமைகிறது.(37) தந்தையின் செயல்களால் மகனோ, மகனின் செயல்களால் தந்தையோ {எந்தப் பாவத்திலும்} கட்டுப்படுவதில்லை. நன்மையும், தீமையுமான தங்கள் சொந்தச் செயல்களுக்குக் கட்டுப்பட்டே அனைவரும் இந்தப் பொது வழியைக் கடக்க வேண்டும்.(38) கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்து நீதியற்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். சாத்திர வழிகாட்டுதலின்படி தேவர்களிடமும், பிராமணர்களிடமும் மரியாதையாகக் காத்திருக்க வேண்டும்.(39) கவலையையும், உற்சாகமின்மையையும் கைவிட்டு, பெற்ற பாசத்தைத் தவிர்ப்பீராக. பிள்ளையை இந்தத் திறந்தவெளியில் விட்டுவிட்டு, தாமதமில்லாமல் இங்கிருந்து செல்வீராக.(40)
செயலைச் செய்தவனே, தான் செய்த நன்மையான, அல்லது தீமையான செயலின் கனிகளை {பலன்களை} அனுபவிப்பான். அவற்றோடு சொந்தங்களின் தொடர்பு என என்ன இருக்கிறது?(41) (இறந்து போன) சொந்தக்காரன் எவ்வளவுதான் அன்புக்குரியவனாக இருப்பினும், அவனை இந்த இடத்தில் சொந்தக்காரர்கள் கைவிட்டு செல்ல வேண்டும். கண்ணீரால் குளித்த கண்களுடன் அவர்கள், இறந்தவனிடம் கொண்ட பற்றை வெளிப்படுத்துவதை நிறுத்தி சென்றுவிடுவார்கள்.(42) ஞானியோ மூடனோ, செல்வந்தனோ ஏழையோ, நல்ல மற்றும் தீய செயல்களைச் செய்யும் அனைவரும் காலத்திற்கு அடிபணியவே வேண்டும்.(43) துக்கம் அனுசரிப்பதன் மூலம் நீங்கள் என்ன செய்வீர்கள்? இறந்து போன ஒருவனுக்காக ஏன் நீங்கள் வருந்துகிறீர்கள்? அனைத்திற்கும் காலனே தலைவனாவான், அவனது இயல்புக்குத்தக்கவே அவன் அனைத்தின் மீதும் தன் கண்களைச் சமமாகச் செலுத்துகிறான்.(44) இளமைச் செருக்குக் கொண்ட, அல்லது ஆதரவற்ற குழந்தைப்பருவத்தில் உள்ள, பல வருடங்கள் சுமையைத் தாங்குபவர், அல்லது தாயின் கருவறையில் கிடப்பவர் என அனைவரும், காலத்தின் தண்டனைக்கு உட்பட்டவர்களே. உண்மையில், உலகத்தின் போக்கு அத்தகையதாகவே இருக்கிறது" என்றது {கழுகு}.(45)
நரி, "ஐயோ, பிள்ளையிடம் கொண்ட பாசத்தின் காரணமாகந் துன்பத்தால் அழுது மிகவும் வருந்தும் உங்கள் பற்றானது, சிறுமதி கொண்ட கழுகால் குறைக்கப்படுகிறதே.(46) அமைதி நிரம்பியவையும், ஆறுதலுண்டாக்க வல்லவையும், நன்கு பயன்படுத்தப்படுபவையுமான அதன் {கழுகுடைய} வார்த்தைகளின் விளைவால்தான், கைவிடுவதற்குக் கடிமானப் பற்றைக் கைவிட்டு, அதோ ஒருவன் நகரத்திற்குச் செல்கிறான்.(47) ஐயோ, சுடலையில் கிடக்கும் பிணமான இறந்து போன பிள்ளைக்காக, உரக்க அழுத மனிதர்களின் துயரமானது, கன்றை இழந்த பசுவைப் போன்றது என நான் நினைத்தேன்.(48) எனினும், பூமியில் உள்ள மனிதர்களுடைய துயரத்தின் அளவு என்ன என்பதை நான் இன்று புரிந்து கொண்டேன்.(49) (எனினும், அவர்களுடைய பற்று பலமானதில்லை என்றே தெரிகிறது). ஒருவன் எப்போதும் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் விதியை அவனால் வெல்ல முடியும். முயற்சியும், விதியும் ஒன்று சேர்ந்த கனிகளை {பலன்களை} உண்டாக்குகின்றன.(50) ஒருவன் எப்போதும் நம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும். மனத்தளர்ச்சியுடன் எவ்வாறு மகிழ்ச்சியை அடைய முடியும்? மன உறுதியின் மூலமே விருப்பத்திற்குரிய பொருட்களை {நோக்கங்களை} வெல்ல முடியும். பிறகு ஏன் நீங்கள் இதயம் இல்லாதவர்களாக இவ்வாறு செல்கிறீர்கள்?(51) உங்கள் மடியில் பிறந்தவனும், தன் தந்தைமாரின் {மூதாதையரின்} குலங்களைத் தழைக்கச் செய்பவனுமான இந்த மகனைக் காட்டில் கைவிட்டு நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?(52) சூரியன் மறைந்து, மாலை சந்தி வரும் வரையில் இங்கே இருப்பீராக. அதன்பிறகு, நீங்கள் இந்தச் சிறுவனை எடுத்துச் செல்லுங்கள், அல்லது இங்கேயே இவனுடன் இருங்கள்" என்றது {நரி}.(53)
கழுகு, "மனிதர்களே, எனக்கு இன்று முழுமையாக ஆயிரம் ஆண்டு வயதாகிறது, ஆனால், உயிரினங்களில் இறந்த போன ஆணோ, பெண்ணோ, உறிதியற்ற பாலினமோ, அவை இறந்து போன பிறகு உயிரோடு மீண்டதை நான் ஒருபோதும் கண்டதில்லை.(54) சில கருவறையில் இறக்கின்றன; சில பிறந்ததும் இறக்கின்றன; சில (குழந்தை பருவத்திலேயே) தவழும்போது இறக்கின்றன; சில இளமையில் இறக்கின்றன; மேலும் சில முதுமையில் இறக்கின்றன.(55) விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தின் நல்லூழும் நிலையற்றவையாகும். அசையும், மற்றும் அசையாத உயிரினங்களின் வாழ்வுக் காலங்கள் முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.(56) மனைவியர், அன்புக்குரியவர்கள் ஆகியவர்களை இழந்து, பிள்ளைகள் (இறந்த) கவலையால் நிறையும் மனிதர்கள், தினமும் இந்த இடத்தை விட்டு கவலை நிறைந்த இதயத்துடன் வீட்டுக்குச் செல்கின்றனர்.(57) துயரால் பீடிக்கப்பட்ட சொந்தங்கள், எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கானோரான நண்பர்கள் மற்றும் பகைவர்களை இந்த இடத்தில் விட்டு விட்டு, தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.(58) விலங்கின் வெப்பமில்லாததும், உயிரற்றதும், மரக்கட்டை போல விறைத்திருப்பதுமான இந்த உடலைக் கைவிடுவீராக. மரக்கட்டை போல ஆகிவிட்டதும், வேறு புதிய உடலில் உயிர் நுழைந்துவிட்டதுமான இந்தப் பிள்ளையின் உடலைவிட்டுவிட்டு நீங்கள் ஏன் செல்லாமல் இருக்கிறீர்கள்?(59) (நீங்கள் காட்டிவரும்) இந்தப் பற்றுப் பொருளற்றதாகும், பிள்ளையை ஆரத்தழுவிக் கொள்வதும் கனியற்றதே ஆகும். அவன் தன் கண்களால் காணவோ, தன் காதுகளால் கேட்கவோ இல்லை.(60) நீங்கள் இவனை இங்கேயே விட்டுவிட்டு, தாமதமில்லாமல் இங்கிருந்து செல்வீராக.(61) வெளிப்படையாகக் கொடூரமாகத் தெரிவதும், ஆனால் உண்மையில் அறிவு நிறைந்திருப்பதுமான என் வார்த்தைகளைக் கேட்டு, உயர்ந்த அறமான முக்தி {மோட்சம்} குறித்து நேரடியாகப் புரிந்து கொண்டு, உங்களுக்குரிய இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வீராக" என்றது {கழுகு}.(62)
ஞானம் மற்றும் அறிவைக் கொண்டதும், நுண்ணறிவைக் கொடுக்க வல்லதும், அறிவை விழிப்படையச் செய்வதுமான கழுகால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மனிதர்கள், அந்தச் சுடலையை விட்டு அகலத் தயாரானார்கள். உண்மையில், துன்பத்திற்குரிய பொருளை {உடலைப்} பார்ப்பதாலும், அந்தப் பொருளின் முந்தைய செயல்களை நினைப்பதாலும், துன்பமானது இரட்டிப்பாகவே செய்கிறது.(63) கழுகின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மனிதர்கள், அந்த இடத்தைவிட்டுச் செல்லத் தீர்மானித்தனர். சரியாக அதே நேரத்தில் விரைந்த நடையுடன் அங்கே வந்த நரியானது, மரண உறக்கத்தில் கிடந்த அந்தப் பிள்ளையின் மீது தன் கண்களைச் செலுத்தியது.(64)
அந்த நரி, "கழுகு சொல்வதைக் கேட்டு, தங்க நிறம் கொண்டவனும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தன் மூதாதையர்களுக்கு ஈமப்பிண்டம் கொடுக்க வல்லவனுமான இந்தப் பிள்ளையைக் கைவிட்டுச் செல்வதேன்?(65) நீங்கள் இவனைக் கைவிட்டுவிடுவதால், உங்கள் பற்றோ, உங்களது பரிதாபகரமான புலம்பல்களோ முடிவை எட்டப்போவதில்லை. மறுபுறம், உங்கள் துயரம் நிச்சயம் அதிகரிக்கவே செய்யும்.(66) சம்புகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு சூத்திரன், உண்மை ஆற்றலைக் கொண்டவனான ராமனால் கொல்லப்பட்டு அறம் உயர்த்திப் பிடிக்கப்பட்டபோது, (இறந்து போன) ஒரு பிராமணப் பிள்ளை உயிரோடு மீட்கப்பட்டான்[3].(67) அதே போலவே, அரசமுனியான ஸ்வேதனின் மகன் (அகாலத்தில்) மரணமடைந்தான். ஆனால் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த ஏகாதிபதி, இறந்து போன தன் பிள்ளையை மீட்பதில் வெற்றியடைந்தான்.(68) அதேபோலவே, உங்கள் வழக்கிலும், ஏதோ ஒரு தவசியோ, தேவனோ, உங்களுக்கு உங்கள் விருப்பத்தை அளிக்க விரும்பி, பரிதாபமாக அழும் உங்களிடம் கருணை காட்டலாம்" என்றது {நரி}.(69) இவ்வாறு நரியால் சொல்லப்பட்ட மனிதர்கள் பிள்ளையின் மீது கொண்ட பற்றினாலும், பீடித்த துயரத்தினாலும் மீண்டும் வந்து அந்தப் பிள்ளையின் தலையைத் தங்கள் மடியில் கிடத்திக் கொண்டு, அதிகமாக அழுது புலம்பத் தொடங்கினர். அவர்களின் கதறல்களால் அழைக்கப்பட்ட கழுகானது, அந்த இடத்திற்கு வந்து, மீண்டும் அவர்களிடம் பின்வரும் வார்த்தைகளைப் பேசியது.(70)
[3] "இறந்து போன ஒரு பிராமணச் சிறுவனின் உயிரை மீட்ட ராமனின் கதையே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. ராமனின் ஆட்சிகாலத்தில், அவனுடைய நாட்டில் அகால மரணங்கள் ஏதும் நிகழாமல் இருந்தன. எனினும், ஒருநாள், ராமனின் அரசவைக்கு வந்த ஒரு பிராமணத் தந்தை, தன் மகன் அகாலத்தில் இறந்துவிட்டதாகப் புகாரளித்தார். உடனே ராமன் அதற்கான காரணத்தைக் குறித்து விசாரிக்கத் தொடங்கினான். நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் ஏதோ பாவச் செயல் செய்யப்படுவதே இந்தக் காரியத்திற்கான காரணம் என்ற ஐயம் எழுந்தது. விரைவில் ராமன், சம்புகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு சூத்திரன், ஆழ்ந்த கானகமொன்றின் மத்தியில் தவத்துறவுகளில் ஈடுப்பட்டு வருவதைக் கண்டான். பிறப்பால் சூத்திரனான ஒருவன், இந்த மனிதன் செய்யும் காரியத்தைச் செய்யக்கூடாது என்பதால் அந்த மன்னன் {ராமன்} உடனே அவனுடைய தலையை வெட்டினான். அறம் உயர்த்திப் பிடிக்கப்பட்டதும், இறந்து போன பிராமணச் சிறுவன் உயிர் மீண்டான். இது ராமாயணத்தின் உத்தரக் காண்டத்தில் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் சம்புகனைக் குறித்த குறிப்பு இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் உள்ள அடிக்குறிப்பில், "இது வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டத்தில் உள்ள கதையாகும். ஒரு சூத்திரன் தவிர்க்கப்பட வேண்டிய செயல்களைச் செய்து வந்ததன் விளைவால் நாட்டில் ஏற்பட்ட அதர்மத்தின் காரணமாக ஒரு பிராமணனின் மகன் இறந்தான். ராமன் அந்தச் சூத்திரனைக் கொன்றான்" என்றிருக்கிறது.
கழுகு, "இந்தப் பிள்ளையை ஏன் நீங்கள் உங்கள் கண்ணீரால் நீராட்டுகிறீர்கள்? உங்கள் உள்ளங்கைகளால் ஏன் இவனை இவ்வாறு நசுக்குகிறீர்கள்? கடுமைமிக்க நீதிமன்னனுடைய {தர்மராஜாவான யமனின்} கட்டளையின் பேரில் இந்தப் பிள்ளை, விழிப்பறியா உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறான்.(71) தவத்தகுதியைக் கொண்டோரும், செல்வத்தைக் கொண்டோரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டோரும் என அனைவரும் மரணத்திற்கு அடிபணிகிறார்கள். இந்த இடமே கூட இறந்தவர்களுக்கானதுதான்.(72) இளமையான, முதுமையான ஆயிரக்கணக்கான சொந்தங்களைக் கைவிட்டு, வெறுந்தரையில் உருளும் மற்ற சொந்தங்கள், தங்கள் இரவுகளையும், பகல்களையும் துயரத்தில் கழிப்பது காணப்படுகிறது.(73) துன்பப் பொறிகளில் சிக்கவைக்கும் இந்தப் பற்றுணர்வை நிறுத்துவீராக. இந்தப் பிள்ளை உயிருடன் மீண்டு வருவான் என்பது நம்பிக்கையையும் கடந்த ஒரு நிலையாகும்.(74) நரி சொல்வதால் இவன் உயிரை மீண்டும் அடைந்துவிட மாட்டான். ஒருவன் ஒரு முறை இறந்து, தன் உடலை விட்டுச் சென்றுவிட்டால், அவனது உடல் மீண்டும் ஒருபோதும் அசைவை அடைவதில்லை.(75) நூற்றுக்கணக்கான நரிகள் தங்கள் உயிரையே விட்டாலும், நூறு வருடங்களேயானாலும் இந்தப் பிள்ளையை அவற்றால் உயிர்மீட்க முடியாது.(76) எனினும், ருத்திரன், குமாரன், பிரம்மன், அல்லது விஷ்ணு ஆகியோரில் எவரும் இந்தப் பிள்ளைக்கு வரமளித்தால் மட்டுமே, இவன் மீண்டும் உயிர் பெற முடியும்.(77)
கண்ணீர் சிந்துவதோ, நீண்ட பெருமூச்சுகளை விடுவதோ, அதிகமாக அழுது புலம்புவதோ ஒருவனுடைய உயிரை மீட்டுத் தராது.(78) நான், நரி, நீங்கள், இவனுடைய சொந்தங்கள் என நாம் அனைவரும் நம் தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்கள் அனைத்துடன் (இவன் சென்ற) அதே வழியிலேயே செல்லப்போகிறோம்.(79) ஞானம் கொண்ட ஒருவன், இந்தக் காரணத்திற்காகவே, பிறர் விரும்பாத நடத்தை, கடுஞ்சொற்கள், பிறருக்குத் தீங்கிழைப்பது, அடுத்தவரின் மனைவியரிடம் இன்புற்றிருப்பது, பாவம் மற்றும் பொய்மை ஆகியவற்றைத் தொலைவிலேயே தவிர்க்க வேண்டும்.(80) அறம், உண்மை, பிறருக்கான நன்மை, நீதி, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, மனத்தூய்மை, நேர்மை ஆகியவற்றைக் கவனமாக நாடுவீராக.(81) தாய்மாரும், தந்தைமாரும், சொந்தங்களும், நண்பர்களும் உயிரோடு இருக்கும்போது, அவர்கள் மீது கண்களைச் செலுத்தாதவர்கள் பாவத்தையே இழைக்கிறார்கள்.(82) இறந்த பிறகு, கண்களால் காணாமலும், சிறிதும் கலங்காமலும் உள்ள நிலையை அடைந்திருக்கும் அவர்களுக்காக அழுவதால் உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டது {கழுகு}.(83) இவ்வாறு சொல்லப்பட்ட மனிதர்கள், தங்கள் பிள்ளை மீது கொண்ட பற்றின் காரணமாகத் துயரத்தில் எரிந்து, கவலையில் நிறைந்து (சுடலையில்) அந்த உடலை விட்டுவிட்டுத் தங்கள் இல்லங்களுக்குச் செல்ல நினைத்தனர்.(84)
நரி, "ஐயோ, மனிதர்களின் உலகம் பயங்கரமானது. இங்கே எந்த உயிரினத்தாலும் தப்ப முடியாது. மேலும் ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்நாள் காலமும் குறைவானது. அன்புக்குரிய நண்பர்கள் {மரணத்தால்} எப்போதும் பிரிகிறார்கள்.(85) இது வன்மங்களும், பொய்மைகளும், அவதூறுகளும், தீய செய்திகளும் நிறைந்த உலகமாக இருக்கிறது. துயரையும், வலியையும் அதிகரிக்கும் இந்தச் சம்பவத்தைக் கண்ட பிறகு, ஒருக்கணமும் நான் இந்த மனிதர்களின் உலகத்தை விரும்பமாட்டேன்.(86) ஐயோ, இந்தப் பிள்ளையின் மரணத்தால் வருந்தி எரிந்து கொண்டிருந்தாலும், கழுகின் சொல்கேட்டு இவ்வாறு திரும்பிச் செல்லும் மூட மனிதர்களே உங்களுக்கு ஐயோ.(87) தீய அற்பர்களே, தூய்மையற்ற ஆன்மா கொண்டதும் பாவம் நிறைந்ததுமான கழுகின் வார்த்தைகளைக் கேட்டு, பெற்ற பாசத்தைக் கைவிட்டு நீங்கள் எவ்வாறு செல்லலாம்?(88) இன்பமானது, துன்பத்தாலும், துன்பமானது இன்பத்தாலும் பின்தொடரப்படுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த இந்த உலகத்தில், இந்த இரண்டும் ஒருபோதும் இடையறாமல் நேர்வதில்லை.(89) அற்ப புத்தி கொண்ட மனிதர்களே, இவ்வளவு அழகுடையவனும், உங்கள் குலத்தின் ரத்தினமும், உங்கள் மகனுமான இந்தப் பிள்ளையை வெறுந்தரையில் கைவிட்டுவிட்டு எங்கே செல்வீர்கள்?(90) அதியழகும், இளமையும், சுடர்மிக்கத் தோற்றமும் கொண்ட இந்தப் பிள்ளை இன்னும் உயிரோடிருக்கிறான் என்ற கருத்தை உண்மையில் என் மனத்தில் இருந்து அகற்றவே முடியவில்லை.(91) இவன் இறந்திருக்கக்கூடாது[4]. நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சியை அடையப் போகிறீர்கள் என்பது தெரிகிறது. இந்தப் பிள்ளையின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் நீங்கள் நிச்சயம் இன்று நல்லூழை அடைவீர்கள்.(92) (இரவில் நீங்கள் இங்கே இருந்தால்) வசதியின்மை மற்றும் வலிக்கான வாய்ப்புகளை எதிர்பார்க்க வேண்டும் என்பதால், சொந்த வசதியில் உங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, அற்ப புத்தி கொண்டவர்களைப் போல இந்த அன்புக்குரியவனை விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்கள்?" என்று கேட்டது {நரி}".(93)
[4] "அஃதாவது, இவன் நிச்சயம் மீண்டும் உயிருடன் திரும்ப வருவான் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இறந்து போன அந்தப் பிள்ளையின் சொந்தங்கள், ஏற்புடைய பொய்மைகளைச் சொல்லும் பாவியும், ஒவ்வொரு இரவும் உணவு தேடித் திரியும் இந்தச் சுடலைவாசியுமான நரியால், அந்த இடத்திலேயே இருக்குமாறு தூண்டப்பட்டு, என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் இருந்தனர்.(94,95)
அந்தக் கழுகு, "ஆந்தைகளின் அலறல்களை எதிரொலிப்பதும், பூதங்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோரால் நிரம்பியதுமான இந்தக் காட்டில் உள்ள இந்த இடம் பயங்கரமானதாகும்.(96) நீல மேகத் திரள்களைப் போல இதன் தன்மை அச்சந்தருவதும், பயங்கரமானதுமாகும். சடலத்தைக் கைவிட்டு, இறுதிச் சடங்குகளை நிறைவு செய்வீராக.(97) உண்மையில், உடலைக் கைவிட்டு, சூரியன் மறைந்து அடிவானம் இருளடைவதற்கு முன்பே அந்தச் சடங்குகளை நிறைவு செய்வீராக.(98) பருந்துகள் கடுமையாகக் கத்துகின்றன. நரிகள் சீற்றத்துடன் ஊளையிடுகின்றன. சிங்கங்கள் முழங்குகின்றன. சூரியன் மறைகிறான்.(99) ஈமச்சிதைகளின் நீலப் புகையின் விளைவால் சுடலையின் மரங்கள் கரிய வண்ணத்தை ஏற்று வருகின்றன. இந்த இடத்தில் உள்ள ஊனுண்ணும் விலங்குகள், பசியால் பீடிக்கப்பட்டு, சீற்றத்துடன் கதறுகின்றன.(100) இந்த அச்சந்தரும் இடத்தில் வாழ்கின்ற பயங்கர வடிவங்களைக் கொண்ட அந்த உயிரினங்கள் அனைத்தும், கடுமையான பண்புகளைக் கொண்ட ஊனுண்ணும் விலங்குகள் அனைத்தும் உங்களை விரைவில் தாக்கும்.(101) இந்தப் பயங்கரக் காடு உண்மையில் அச்சம் நிறைந்ததாகும். உங்களை ஆபத்து அணுகும்.(102) உண்மையில், உங்கள் நல்லுணர்வுக்கு எதிரானவையும், போலியானவையும், கனியற்றவையுமான இந்த நரியின் வார்த்தைகளை நீங்கள் கேட்டால், நிச்சயம் நீங்கள் அனைவரும் அழிவையே அடைவீர்கள்" என்றது {கழுகு}.(103)
அப்போது நரி, "எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே நில்லுங்கள். சூரியன் ஒளிரும் வரை இந்தப் பாலைவனத்தில் எந்த அச்சமும் கிடையாது. பகலின் தேவன் மறையும்வரை, பெற்ற பாசத்தால் தூண்டப்பட்டு இங்கே நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.(104) நீங்கள் விரும்பியவாறு அழுது புலம்பி, எந்த அச்சமும் இல்லாமல் இந்தப் பிள்ளையைக் கருணைக் கண்ணுடன் நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். இந்தக் காடு அச்சந்தருவதாக இருப்பினும், உங்களை எந்த ஆபத்தும் அணுகாது.(105) உண்மையில் இந்தக் காடானது, அழகு மற்றும் அமைதியின் பண்புகளை எடுத்து இயம்புகிறது. இங்கேதான் ஆயிரக்கணக்கான பித்ருக்கள் இந்த உலகத்தை விட்டுச் சென்றனர். சூரியன் ஒளிரும் வரை இங்கே காத்திருங்கள். இந்தக் கழுகின் வார்த்தைகள் என்ன செய்துவிடும்?(106) கலங்கிய புத்தியுடன் நீங்கள் இந்தக் கழுகின் கொடூரமான கடுஞ்சொற்களைக் கேட்டால், உங்கள் பிள்ளை ஒருபோதும் உயிருடன் மீண்டு வர மாட்டான்" என்றது {நரி}".(107)
பீஷ்மர் தொடர்ந்தார், "அப்போது கழுகு, அந்த மனிதர்களிடம் சூரியன் மறைந்துவிட்டதாகச் சொன்னது. நரியோ அவ்வாறு இல்லை என்றது. கழுகு, நரி ஆகிய இரண்டும் பசியின் கொடுமையை உணர்ந்து, இறந்த பிள்ளையின் சொந்தங்களிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தன[5].(108) அவை இரண்டும் தங்கள் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தங்கள் மடிக்கச்சையை உயர்த்திக் கொண்டன. பசியாலும், தாகத்தாலும் களைத்திருந்த அவை, சாத்திரங்களைச் சொல்லி இவ்வாறு தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டன.(109) ஞானம் கொண்டவையும், பறவை மற்றும் விலங்கு ஆகிய இந்த இரண்டு உயிரினங்களின் அமுதம் போன்ற இந்த இனிய வார்த்தைகளால் (மாறி மாறி) தூண்டப்பட்ட {இறந்த போன பிள்ளையின்} சொந்தங்கள் ஒரு முறை செல்லவும், மறுமுறை காத்திருக்கவும் விரும்பினர்.(110) இறுதியாகத் துயராலும், உற்சாகமின்மையாலும் அசைக்கப்பட்ட அவர்கள் அங்கேயே காத்திருந்து, அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதில் திறம் மிக்க அந்த விலங்கும், பறவையும் (தங்களிடம் பேசி) தங்களை மயக்க மட்டுமே செய்திருக்கின்றன என்பதை அவர்கள் அறியவில்லை.(111) ஞானம் கொண்டவையான அந்த விலங்கும், பறவையும் இவ்வாறு சச்சரவு செய்து கொண்டிருந்த போது, இறந்து போன பிள்ளையின் சொந்தங்கள் அவை பேசியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, பெருந்தேவனான சங்கரன், தன் தெய்வீகத் துணையால் (உமையால்) தூண்டப்பட்டு, கருணைக் கண்ணீரால் குளித்த கண்களுடன் அங்கே வந்தான்.(112)
[5] கும்பகோணம் பதிப்பில், "அரசனே, அஸ்தமயமானால் கழுகு வராது; இரவில் நரி இருக்கும். ஆகையால், பசியுடன் கூடிய அந்தக் கழுகும், நரியும் இறந்தவனைச் சேர்ந்த அந்த ஜனங்களை இவ்விதம் சொல்லின" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
இறந்து போன பிள்ளையின் சொந்தங்களிடம் பேசிய அந்தத் தேவன் {சிவன்}, "நான் வரங்களை அளிக்கும் சங்கரன்" என்றான். துயரால் கனத்த இதயத்துடன் இருந்த அந்த மனிதர்கள், அந்தப் பெருந்தேவனின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவனிடம் மறுமொழியாக,(113) "ஒரே பிள்ளையான இவனை இழந்த நிலையில் நாங்கள் அனைவரும் மரணத்தருவாயில் இருக்கிறோம். எங்கள் மகனான இவனுக்கு உயிரை அளித்து, எங்கள் அனைவருக்கும் உயிரை அளிப்பதே உனக்குத் தகும்" என்றனர்.(114) இவ்வாறு வேண்டப்பட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன், தன் கரங்களில் சிறிது நீரை எடுத்து, இறந்து போன அந்தப் பிள்ளைக்கு நூறு வருட வாழ்வை அருளினான்.(115) எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபடுபவனான அந்தச் சிறப்புமிக்கப் பிநாகைதாரி {சிவன்}, நரி, கழுகு ஆகிய இரண்டுக்கும் அவற்றின் பசி தணியுமாறு ஒரு வரத்தை அருளினான்.(116) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அவர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.(117) விடாப்பிடியான நம்பிக்கையாலும், உறுதியான தீர்மானத்தாலும், பெருந்தேவனின் அருளாலும், ஒருவனுடைய செயல்களின் கனிகள் {பலன்கள்} தாமதமில்லாமல் அடையப்படும்.(118)
சூழ்நிலைகளின் சேர்க்கையையும், அந்தச் சொந்தங்களின் {அந்தப் பிள்ளையின் உற்றார் உறவினருடைய} உறுதியையும் பார். கவலைநிறைந்த இதயங்களுடன் அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களுடைய கண்ணீர் துடைக்கப்பட்டு, வற்றச் செய்யப்பட்டது.(119) குறுகிய காலத்திற்குள், அவர்களின் உறுதியான தீர்மானத்தின் மூலம் அவர்கள் எவ்வாறு சங்கரனின் அருளை அடைந்தார்கள், அவர்களது துன்பங்கள் எவ்வாறு அகன்றன, அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியடைந்தனர் என்பதைப் பார்.(120) ஓ! பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உண்மையில், கவலையில் இருந்த அந்தச் சொந்தங்கள், சங்கரனின் அருளின் மூலம், பிள்ளையின் உயிர் மீட்கப்பட்டத்தில் ஆச்சரியத்தால் நிறைந்து, மகிழ்ச்சியடைந்தனர்.(121) ஓ! மன்னா, பிள்ளையின் காரணமாகத் தாங்கள் அடைந்திருந்த துயரைக் கைவிட்ட அந்தப் பிராமணர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, உயிர் மீட்கப்பட்ட அந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டு தங்கள் நகரத்திற்குத் திரும்பச் சென்றனர். நான்கு வகையினர் அனைவருக்கும் இதைப் போன்ற நடத்தையே விதிக்கப்பட்டிருக்கிறது.(122) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு {முக்தி} ஆகியவை நிறைந்த இந்த மங்கலமான கதையை மீண்டும் மீண்டும் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் மகிழ்ச்சியை அடைவான்" {என்றார் பீஷ்மர்}[6].(123)
[6] இது மஹபாரதச் சாந்தி பர்வத்தின் ஆபத்தர்மாநுசாஸன பர்வமாகும். அஃதாவது, ஆபத்துக் காலத்தில் ஒரு மன்னன் பின்பற்ற வேண்டிய தர்மங்களை {கடமைகளைச்} சொல்லும் உபபர்வமாகும். சாந்திபர்வத்தின் இந்த 153ம் பகுதியானது, 152ம் பகுதிக்கும், 154க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாததாக இருக்கிறது. இராமாயணத்தில் உத்தரகாண்டம் பகுதியில் பெரும்பாலானவை இடை செருகல் என்று நம்பப்படுகிறது. அந்த உத்தரகாண்டத்தில் வரும் சம்புகன் கதை இந்தப் பகுதியில் நரியால் மேற்கோள் காட்டப்படுவதாகப் பீஷ்மரால் சொல்லப்படுகிறது. இராமாயணத்தில் வரும் சம்புகன் கதை இடைசெருகலாக இருந்தால் இந்தப் பகுதியும் இடைசெருகலாகவே இருக்க வேண்டும். பிபேக்திப்ராயின் பதிப்பானது, மஹாபாரதத்தில் {இடைசெருகல் என்ற} ஐயத்திற்கிடமான பகுதிகள் அனைத்தும் நீக்கப்பட்ட செழுமையான படைப்பின் மொழியாக்கமாகும். இந்தப்பகுதி இடைசெருகலாகக் கருதப்பட்டிருந்தால் அங்கே இது நீக்கப்பட்டிருக்கும். ஆனால் பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இந்தப் பகுதி முழுமையும் இருக்கிறது. இந்தப் பகுதி மஹாபாரத அறிஞர்களின் ஆய்வுக்குரியதே.
சாந்திபர்வம் பகுதி – 153ல் உள்ள சுலோகங்கள் : 123
ஆங்கிலத்தில் | In English |