A Salmali - White Silk-cotton tree! | Shanti-Parva-Section-154 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 24)
பதிவின் சுருக்கம் : ஒரு பலவீனமான மன்னன், பலமிக்க ஒருவனின் கோபத்துக்கு ஆளானால், அந்த ஆபத்தான வேளையில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; இந்தக் கேள்விக்கான விடையை விளக்க, ஓர் இலவ மரத்திற்கும், நாரதருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்...
Very Large Kapok (White Silk-Cotton) Tree in Lal Bagh gardens in Bangalore (Bangaluru), India பெஙகளூருவின் லால்பாக் பூங்காவில் உள்ள மிகப் பெரிய இலவ மரம் |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, பலவீனமானவனும், பயனற்றவனும், மென்மையான இதயம் கொண்டவனுமான ஒருவன், விவேகமில்லாமலும், தற்புகழ்ச்சிமிக்கப் பேச்சுகளின் மூலமும், மடமையினாலும், (விரும்பினால்) நன்மை செய்ய வல்லவனும், (விரும்பவில்லையெனில்) தண்டிக்கவல்லவனும், எப்போதும் செயல்படத் தயாராக இருப்பவனும், எப்போதும் தன் அருகிலேயே வசிப்பவனுமான பலமிக்க ஓர் எதிரியின் கோபத்தைத் தூண்டிவிட்டால், அந்தப் பலமிக்கவன் கோபத்தோடும், அவனை அழிக்கும் நோக்கோடும் எதிர்த்துப் படையெடுத்து வரும்போது, அந்தப் பலவீனமானவன், தன் பலத்தைச் சார்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும்?[1](1-3)
[1] கும்பகோணம் பதிப்பில், "பலமில்லாதவனும், அல்ப சேனையுள்ளவனும், எளியவனுமான மனிதன், அவிவேகத்தால் தற்புகழ்ச்சிகளோடு மட்டும் கூடியவனாகத் தகாத வார்த்தைகளால், பலமுள்ளவனும், எப்பொழுதும் அருகிலிருப்பவனும் உபகாரஞ்செய்வதிலும், அபகாரஞ்செய்வதிலும் ஸாமர்த்தியமுள்ளவனும், முயற்சியுள்ளவனுமான சத்துருவுக்கு விரோதத்தைச் செய்து, பின் அவன் (சத்ரு) அதிக கோபங்கொண்டு தன்னைக் களைய வேண்டுமென்ற விருப்பத்துடன் வரும்பொழுது தனக்கு உள்ள பலத்தைக் கொண்டு எவ்விதம் இருக்க வேண்டும்" என்று யுதிஷ்டிரனின் கேள்வி அமைகிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, சால்மலிக்கும் {இலவ மரத்திற்கும்}, பவனத்துக்கும் {காற்றுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(4) இமய மலையின் உச்சிகளில் ஒன்றில், ஒரு பெரிய (சால்மலி {இலவ}) மரம் இருந்தது. பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த அது, தன் கிளைகளைச் சுற்றிலும் பரப்பி விரிந்திருந்தது. மேலும் அதன் தண்டு பெரியதாகவும், அதன் கிளைகளும், இலைகளும் எண்ணற்றவையாகவும் இருந்தன.(5) உழைப்பால் களைத்தவையும், வியர்வையில் நீராடியவையுமான யானைகளும், பிற வகை விலங்குகள் பலவும் அதன் நிழலின் கீழ் வழக்கமாக இளைப்பாறின.(6) அதன் தண்டின் சுற்றளவு நானூறு முழங்களைக் கொண்டதாக இருந்தது, அதனைக் கிளைகளும், இலைகளும் பரப்பிய நிழல் அடர்த்தியாக இருந்தது. மலர்களும், கனிகளும் நிறைந்ததாக இருந்த அஃது, எண்ணற்ற ஆண், பெண் கிளிகளுக்கு வசிப்பிடமாக இருந்தது.(7) நீண்ட வழியில் பயணம் செய்யும் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களின் சிவிகைளும், காடுகளில் வசிக்கும் தவசிகளும், காட்டின் இனிய ஏகாதிபதியாக இருந்த அதன் நிழலின் கீழ் இளைப்பாறினர்.(8)
இலவம் இலைகள் - Leaves of Kapok tree |
ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒருநாள், தவசி நாரதர், அந்த மரத்தின் பரந்து விரிந்த எண்ணற்ற கிளைகளையும், அதன் தண்டின் சுற்றளவையும் கண்டு, அஃதை அணுகி, அதனிடம், "ஓ!, நீ இனிமை நிறைந்திருக்கிறாய். ஓ!, நீ வனப்புடன் இருக்கிறாய். ஓ! மரங்களில் முதன்மையானவனே, ஓ! சால்மலி {இலவ மரமே}, உன்னைக் காணும்போதெல்லாம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.(10) ஓ! அழகான மரமே, பல்வேறு வகைகளைச் சார்ந்த இனிமைநிறைந்த பறவைகளும், யானைகளும், பிற விலங்குகளும் உன் கிளைகளிலும், அவற்றுடைய நிழலின் கீழும் மகிழ்ச்சியாக வாழ்கின்றன.(11) ஓ! பரந்த கிளைகளைக் கொண்ட காட்டின் ஏகாதிபதியே, உன் கிளைகளும், உன் தண்டும் பெரியவையாக இருக்கின்றன. காற்றுத் தேவனால் {வாயுவால்} அவற்றில் ஏதும் முறிந்ததை நான் ஒருபோதும் கண்டதில்லை.(12)
ஓ! குழந்தாய் {இலவ மரமே}, பவனன் {வாயு} உன்னிடம் நிறைவடைந்து, உன் நண்பனாக இருப்பதால், இந்தக் காட்டில் உன்னை எப்போதும் பாதுகாக்கிறானா? பெரும் வேகமும், பலமும் கொண்ட சிறப்புமிக்கப் பவனன், நெடிய, பலமான மரங்களையும், ஏன் மலைச்சிகரங்களையே கூட அவற்றின் இடங்களில் இருந்து அசைத்துவிடுகிறான்.(14) நறுமணங்களைச் சுமக்கும் அந்தப் புனிதமானவன், (தான் விரும்பும்போது) வீசி, ஆறுகள், தடாகங்கள், கடல்கள் உள்ளிட்ட பாதாள உலகத்தையும் வற்றச் செய்துவிடுகிறான்.(15) நிச்சயம் நட்பாலேயே பவனன் உன்னைப் பாதுகாக்கிறான். இதன் காரணமாகத் தான் நீ எண்ணற்றக் கிளைகளைக் கொண்டவனாக இருப்பினும், இன்னும் இலைகளுடனும், மலர்களுடனும் அருளப்பட்டிருக்கிறாய்.(16)
ஓ! காட்டின் ஏகாதிபதியே {இலவ மரமே}, ஓ! குழந்தாய், இந்த இறகு படைத்த உயிரினங்கள், மகிழ்ச்சியால் நிறைந்து உன் கொப்புகளிலும், கிளைகளிலும் விளையாடிக் கொண்டிருப்பதால், இந்த உன் பசுமை இனிமையானதாக இருக்கிறது.(17) நீ பூத்துக் குலுங்கும் பருவத்தில், உன் கிளைகளில் வசிக்கும் இவை மென்மையாகப் பாடும்போது தோன்றும் இனிய இசை தனியாகக் கேட்கிறது.(18) ஓ! சால்மலி {இலவ மரமே}, தங்கள் இனங்களின் ரத்தினங்களான இந்த யானைகள், வியர்வையில் குளித்து, (மகிழ்ச்சிப்) பிளிறல்களில் ஈடுபட்டு, உன்னை அணுகி, இங்கே மகிழ்ச்சியைக் கண்டடைகின்றன.(19) அதேபோலக் காடுகளில் வசிக்கும் பிற இனத்தைச் சேர்ந்த பல்வறு விலங்குகளும், உன்னை அலங்கரிப்பதில் பங்காற்றுகின்றன. ஓ மரமே, உண்மையில் அனைத்து வகை உயிரினங்களும் உள்ள மேரு மலைகளைப் போலவே நீயும் மிக அழகாகத் தெரிகிறாய்.(20) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களாலும், தவங்களில் ஈடுபடும் பிறராலும், தியானத்தில் அர்ப்பணிப்புள்ள யதிகளாலும் நீ நாடப்படுவதால், இந்த உன் பகுதி சொர்க்கத்திற்கு ஒப்பாக இருக்கிறதென நான் நினைக்கிறேன்" என்றார் {நாரதர்}.(21)
சாந்திபர்வம் பகுதி – 154ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |