The perverse thought of the Kapok! | Shanti-Parva-Section-155 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 25)
பதிவின் சுருக்கம் : இலவ மரத்தின் கிளைகள் ஏதும் ஒடியாமல் இருப்பதைக் கண்ட நாரதர், அதற்கும், வாயு தேவனுக்கும் இடையில் உள்ள நட்பைக் குறித்து வினவுதல்; அதற்கு அந்த இலவ மரம் தானே வாயுவை விட பலவான் என்றது; இலவம் வாயுவை இகழ்ந்ததை வாயுவிடம் சொல்லப்போகவதாகச் சொன்ன நாரதர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_ Shanti Parva-155 |
நாரதர், "ஓ! சால்மலி {இலவ மரமே}, பயங்கரமானவனும், தடுக்கப்பட முடியாதவனுமான காற்று தேவன் {வாயு}, நட்பினாலோ, நல்லுறவினாலோ எப்போதும் உன்னைப் பாதுகாக்கிறான் என்பதில் ஐயமில்லை.(1) ஓ! சால்மலி, காற்றுக்கும், உனக்கும் இடையில் நெருக்கமான உறவிருப்பதாகவே தெரிகிறது. "நான் உன்னவன்" என்ற இந்த வார்த்தைகளை நீ அவனிடம் சொன்னதாகவும், அதன்காரணமாகவே காற்று தேவன் உன்னைப் பாதுகாக்கிறான் எனவும் தெரிகிறது.(2) இவ்வுலகத்தில் காற்றினால் முறிக்கப்படாத மரத்தையோ, மலையையோ, மாளிகையையோ நான் கண்டதில்லை என்று நினைக்கிறேன்.(3) ஓ! சால்மலி, (எங்களுக்குத்தெரியாத) ஏதோ காரணத்தால், அல்லது காரணங்களால் காற்று உன்னைப் பாதுகாப்பதாலேயே நீ உன் கிளைகள், கொப்புகள் மற்றும் இலைகள் அனைத்துடன் இங்கே நிற்கிறாய் என்பதில் ஐயமில்லை" என்றார் {நாரதர்{.(4)
சால்மலி {அந்த இலவ மரம் நாரதரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, காற்றானவன் {வாயே தேவன்} என் நண்பனோ, தோழனோ, நலன் விரும்பியோ கிடையாது. உண்மையில் அவன், என்னைப் பாதுகாத்து ஆணையிடும் அளவுக்குப் பெரியவனும் அல்ல.(5) ஓ! நாரதரே, என் கடும் சக்தியும், வலிமையும் காற்றைவிடப் பெரியவையாகும். உண்மையில், காற்றின் பலமானது, என் பலத்தில் பதினெட்டில் ஒரு பாகத்துக்கு மட்டுமே ஒப்பாகும்.(6) காற்றானவன் சீற்றத்துடன் மரங்கள், மலைகள் மற்றுப் பிற பொருட்களைக் கிழித்துக் கொண்டு வரும்போதும், நான் என் பலத்தை வெளிப்படுத்தி அஃதை அடக்குகிறேன்.(7) உண்மையில், பல பொருட்களை உடைக்கும் காற்றானவன் மீண்டும் மீண்டும் என்னால் முறிக்கப்பட்டிருக்கிறான். ஓ! தெய்வீக முனிவரே, இந்தக் காரணத்தினால் நான் அவன் கோபத்துடன் வரும்போதும் அஞ்சுவதில்லை" என்றது {இலவ மரம்}.(8)
நாரதர், "ஓ! சால்மலி, உன்னுடைய உள்ளுணர்வு முற்றாகப் பிறழ்ந்திருப்பதாக {விபரீதமானதாகத்} தெரிகிறது. இதில் எந்த ஐயமுமில்லை. காற்றின் பலத்துக்கு இணையானதாகப் படைக்கப்பட்ட எந்தப் பொருளும் கிடையாது.(9) இந்திரனோ, யமனோ, வைஸ்ரவணனோ {குபேரனோ}, நீர்நிலைகளின் தலைவனான வருணனோ கூடக் காற்று தேவனின் {வாயுவின்} வலிமைக்கு இணையானவர்கள் இல்லை. எனவே, வெறும் மரமான உன்னைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?(10) ஓ! சால்மலி, இவ்வுலகின் எந்த உயிரினமும், எந்தச் செயலைச் செய்தாலும், உயிரை அளிப்பவனான காற்று தேவனே அனைத்து வேளைகளிலும் அந்தச் செயலின் காரணமாக இருக்கிறான்.(11) அந்தத் தேவன் முறைமையுடன் முயலும்போது, அவன் அனைத்து உயிரினங்களையும் எளிதாக வாழ வகைச் செய்கிறான். எனினும், அவன் முறையில்லாமல் முயன்றால், உலக உயிரினங்களுக்குப் பேரிடரே விளையும்.(12) வழிபாட்டுக்குத் தகுந்தவனும், அண்டத்தின் உயிரினங்களில் முதன்மையானவனுமான காற்று தேவனை வழிபடாமல் இருக்க உன்னைத் தூண்டுவது, உன் அறிவின் பலவீனமன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?(13) உண்மையில் நீ வீணான தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். ஓ! சால்மலி, உன் நுண்ணறிவானது, கோபத்தாலும், பிற தீய ஆசைகளாலும் குழப்பப்பட்டிருப்பதால் நீ பொய்மைகளை மட்டுமே பேசுகிறாய்.(14)
இத்தகைய பேச்சுகளில் நீ ஈடுபடுவதில் நான் நிச்சயம் உன்னிடம் கோபமே அடைகிறேன்.(15) நீ சொன்ன இந்த இழிவான வார்த்தைகள் அனைத்தையும் நானே காற்றுத் தேவனிடம் தெரிவிக்கப் போகிறேன்.(16) ஓ! சால்மலி {இலவ மரமே}, ஓ! தீய புத்தியைக் கொண்டவனே, உன்னைவிடப் பலமிக்கவையான சந்தனங்கள் {சந்தன மரங்கள்}, சியந்தனங்கள், சாலங்கள், சரளங்கள், தேவதாரங்கள், வேதாசங்கள் {நீர்நொச்சி மரங்கள்}, தன்வனங்கள் மற்றும் நல்லான்மாக்களைக் கொண்ட பல மரங்கள் ஒருபோதும் காற்றுக்கு எதிராக இத்தகைய வசைமாரிகளைச் சொன்னதில்லை.(17) அவை அனைத்தும், காற்றின் வலிமையையும், தாங்கள் ஒவ்வொருவரும் கொண்ட பலத்தையும் அறியும். இந்தக் காரணங்களுக்காக அந்த முதன்மையான மரங்கள், அந்தத் தேவனைப் பொறுத்தவரையில் தங்கள் தலைகளை வணங்குகின்றன.(18) எனினும், மடமையால் நீ காற்றின் எல்லையற்ற வலிமையை அறியவில்லை. எனவே, (நீ அவனைக்குறித்து இகழ்ந்ததைச்சொல்வதற்காகச்} நான் அந்தத் தேவனின் முன்னிலைக்குச் செல்லப்போகிறேன்" என்றார் {நாரதர்}.(19)
சாந்திபர்வம் பகுதி – 155ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |