The Kapok and the wind god! | Shanti-Parva-Section-156 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 26)
பதிவின் சுருக்கம் : இலவ மரத்தின் வார்த்தைகளை வாயுத் தேவனிடம் தெரிவித்த நாரதர்; கோபமடைந்த வாயு, அந்த இலவமரத்தைத் தான் இதுவரை ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கான காரணத்தைச் சொல்லி, இனி அதற்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கப்போவதாகச் சொன்னது; வாயுவை எவ்வாறு சமாளிப்பது என்று மனத்திற்குள் திட்டம்போட்ட இலவமரம்...
The Kapok and the wind god! | Shanti-Parva-Section-156 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சால்மலியிடம் {அந்த இலவ மரத்திடம்} இவ்வாறு சொன்னவரும், பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவருமான நாரதர், காற்று தேவனைக் குறித்துச் சால்மலி சொன்னதனைத்தையும் அவனிடம் {வாயுவிடம்} சொன்னார்.(1)
நாரதர் {வாயுதேவனிடம்}, "இமயத்தின் சாரலில், கிளைகளாலும், இலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சால்மலி {இலவ மரம்} இருக்கிறது. அதன் வேர்கள் பூமிக்குள் ஆழமாக நீண்டு விரிந்து செல்கின்றன, அதன் கிளைகள் சுற்றிலும் பரந்து விரிந்திருக்கின்றன. ஓ! காற்று தேவா {வாயு தேவா}, அந்த மரம் உன்னை அவமதிக்கிறது.(2) உன்னைக் குறித்து நிந்தனை நிறைந்த வார்த்தைகள் பலவற்றை அது பேசுகிறது. ஓ! காற்றே, நீ கேட்குமாறு, நான் அதைத் திரும்பச் சொல்வது முறையாகாது.(3) ஓ! காற்றே, படைக்கப்பட்ட பொருட்கள் யாவிலும் நீ முதன்மையானவன் என்பதை நான் அறிவேன். நீ மிக மேன்மையானவன் என்பதையும், மிகப் பெரும் வலிமைமிக்கவன் என்பதையும், கோபத்தில் நீ அந்தகனுக்கு நிகரானவன் என்பதையும் நான் அறிவேன்" என்றார் {நாரதர்}".(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட காற்று தேவன், அந்தச் சால்மலியிடம் சென்று, அதனிடம் சினத்துடன் பின்வருமாறு பேசினான்.(5)
காற்று தேவன் {இலவமரத்திடம்}, "ஓ! சால்மலி, நாரதரின் முன்பு நீ என்னை இழிவாகப் பேசியிருக்கிறாய். நான் காற்று தேவன் என்பதை அறிவாயாக. நான் என் பலத்தையும், வலிமையையும் உனக்கு நிச்சயம் காட்டுவேன்.(6) நான் உன்னை நன்கறிவேன். நீ எனக்கு அந்நியன் இல்லை. பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்} இந்த உலகைப் படைப்பதில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிலகாலம் உனக்குக் கீழே ஓய்ந்திருந்தார்.(7) இந்நிகழ்வின் விளைவாலேயே நான் இதுவரை உனக்குக் கருணை காட்டி வந்தேன். ஓ! மரங்களில் இழிந்தவனே, இதன் காரணமாகவே நீ தீங்குக்கு உள்ளாகாமல் இருக்கிறாயேயன்றி, உன் சொந்த வலிமையின் விளைவாலல்ல.(8) அவமரியாதைக்குரிய பொருளாக என்னை நீ அற்பமாகக் கருதுகிறாய். நீ மீண்டும் என்னை அவமதிக்காத வகையில் நான் உனக்கு என்னை வெளிப்படுத்துகிறேன்" என்றான் {வாயு}".(9)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்டதும், ஏளனமாகச் சிரித்த அந்தச் சால்மலி, "ஓ! காற்று தேவா, நீ என்னிடம் கோபமாக இருக்கிறாய். என்னைப் பொறுத்துக்கொள்ளாதே, உன் வலிமையின் எல்லையைக் காட்டுவாயாக.(10) உன் கோபமனைத்தையும் என் மீது கக்குவாயாக. நீ கோபவசப்படுவதால் எனக்கு நீ என்ன செய்துவிடுவாய்? உன் வலிமையானது (தருவிக்கப்படுவதற்குப் பதிலாக) உனக்குச் சொந்தமானதாக இருந்தாலும் கூட, நான் உன்னிடம் அச்சம் கொள்ள மாட்டேன். நான் விலையில் உன்னை விட மேன்மையானவன் ஆவேன். உன்னைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.(11) நுண்ணறிவில் பலமிக்கவர்களே உண்மையில் பலவான்களாவர். மறுபுறம், உடல் பலத்தை மட்டுமே கொண்டவர்கள் பலவான்களாகக் கருதப்படுவதில்லை" என்றது.(12)
இவ்வாறு சொல்லப்பட்ட காற்று தேவன் {இலவ மரத்திடம்}, "நாளை நான் உன் பலத்தைச் சோதிக்கிறேன்" என்று சொன்னான். அதன் பிறகு இரவு வந்தது.(13) காற்றின் பலத்தையும், தன் பலத்தின் எல்லையையும் மனத்தால் தீர்மானித்த அந்தச் சால்மலி, தன் பலம் அந்தத் தேவனைவிடக் குறைவானதே என்பதைக் கண்டு, தனக்குள்ளேயே,(14) "நாரதரிடம் நான் சொன்னதனைத்தும் பொய்யே. நான் நிச்சயமாகக் காற்றைவிடப் பலம் குறைந்தவனே. உண்மையில், அவன் தன் பலத்தில் வலிமையாகவே இருக்கிறான்.(15) நாரதர் சொன்னதைப் போல, காற்றானவன் {வாயு தேவன்} எப்போதும் வலிமைமிக்கவனே. வேறு மரங்களை விட நான் பலவீனமானவன் என்பதில் ஐயமில்லை.(16) ஆனால் நுண்ணறிவில் எனக்கு எந்த மரமும் நிகரானதில்லை. எனவே, காற்றிடம் இருந்து எழும் இந்த அச்சத்தை என் நுண்ணறிவைச் சார்ந்து கவனித்துக் கொள்வேன்.(17) காட்டில் உள்ள பிற மரங்கள் அனைத்தும், இதே வகை நுண்ணறிவைச் சார்ந்திருந்தால், காற்று தேவன் கோபமடைந்தாலும் கூட அதிலிருந்து எந்தத் தீங்கும் நிச்சயம் நேராது.(18) எனினும், அவை அனைத்தும் அறிவற்றவையாக இருக்கின்றன, எனவே, காற்றுத் தங்களை அசைப்பதிலும், கிழிப்பதிலும் ஏன்? எவ்வாறு? வெல்கிறது என்பதை நான் அறிவதை போல அவற்றால் அறிய முடியவில்லை" என்று நினைக்கத் தொடங்கியது" {என்றார் பீஷ்மர்}.(19)
சாந்திபர்வம் பகுதி – 156ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |