The superiority of Arjuna! | Shanti-Parva-Section-157 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 27)
பதிவின் சுருக்கம் : இலவ மரம் வாயு வருவதற்கு முன்பே தன் கிளைகளைத் தானே உதிர்த்துக் கொண்டது; சினத்துடன் வந்த வாயு தேவன் இலவமரத்தை எள்ளி நகையாடியது; பலவீனமான மன்னன், தன்னை நோக்கி பலவான் படையெடுத்து வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்க இந்த இலவ மரத்தின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர், இறுதியில் அர்ஜுனனின் மேன்மையை எடுத்துரைத்தது...
The Kapok and the wind god! | Shanti-Parva-Section-156 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "இதை மனத்திற்குள் தீர்மானித்துக்கொண்ட அந்தச் சால்மலி {இலவமரம்}, கவலையுடன் தன் முக்கிய மற்றும் துணைக் கிளைகள் அனைத்தையும் கீழே உதிர்த்தது.(1) தன் கிளைகள், இலைகள் மற்றும் மலர்களை உதிர்த்த அந்த மரம், தன்னை நோக்கி வரும் காற்றை உறுதியுடன் பார்த்தது.(2) சினத்தால் நிறைந்து, பெரும் மூச்சுவிட்டுக்கொண்டு, பெரும் மரங்களை வீழ்த்தியபடி அந்தச் சால்மலியை நின்ற இடத்தை நோக்கி விரைந்து வந்தது. காற்று.(3) உச்சி, கிளைகள், இலைகள் மற்றும் மலர்களை இழந்து நிற்கும் அதைக் கண்ட காற்றானவன் {வாயு தேவன்}, மகிழ்ச்சியால் நிறைந்து, முன்பு பெரும் வடிவத்தில் இருந்த அந்தக் காட்டின் தலைவனிடம் சிரித்துக் கொண்டே இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(4)
காற்றானவன் {இலவமரத்திடம்}, "ஓ! சால்மலி, சினத்தால் நிறைந்து வந்த நான், சரியாக நீ செய்தது போலவே உன் கிளைகள் அனைத்தையும் வெட்டியிருப்பேன்.(5) நீ இப்போது உன் செருக்குமிக்க உச்சியையும், மலர்களையும் இழந்திருகிறாய். உன் குருத்துகளும், இலைகளும் அற்றிருக்கிறாய். உன் தீய ஆலோசனைகளின் விளைவால் நீ என் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டாய்" என்றான் {வாயு தேவன்}".(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "காற்றின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சால்மலி பெரும் நாணத்தை உணர்ந்தது. நாரதர் சொன்ன வார்த்தைகளையும் நினைத்துப் பார்த்த அது {இலவமரம்}, தன் மடமைக்காகப் பெரிதும் வருந்தத் தொடங்கியது.(7) ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, இவ்வழியிலேயே பலவீனமான ஒரு மூடன், பலமிக்க எதிரியின் கோபத்தைத் தூண்டி, இறுதியில் கதையில் வந்த சால்மலியை {இலவ மரத்தைப்} போல வருந்த வேண்டியிருக்கும்.(8) மனிதர்கள் இணையான வலிமையைக் கொண்டிருந்தாலும், தங்களுக்குத் தீங்கிழைத்தவர்கள் மீது திடீரெனப் பகைமை பாராட்டக் கூடாது. மறுபுறம், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்கள் தங்கள் வலிமையைப் படிப்படியாக வெளிக்காட்ட வேண்டும்.(9) மூட மதி கொண்டவன், நுண்ணறிவு மிக்க ஒருவனிடம் ஒருபோதும் பகைமையைத் தூண்டக்கூடாது. அத்தகைய வழக்குகளில், நுண்ணறிவுமிக்க மனிதன், காய்ந்த புற்குவியலை ஊடுருவும் நெருப்பைப் போல (தன் எதிரியை) ஊடுருவுவான்.(10)
ஒருவன் கொண்டதில் நுண்ணறிவே விலைமதிப்புமிக்க உடைமையாகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அதே போல, வலிமையை விட மதிப்புமிக்க வேறெதையும் ஒரு மனிதன் இங்கே {இம்மையில்} அடைய மாட்டான்.(11) எனவே, குழந்தை, மூடன், குருடன், அல்லது செவிடனின் செயல்களை ஒருவன் (கருணையுடன்) பொறுப்பதைப் போலவே, அவன் பலத்தின் மேன்மையானவனால் இழைக்கப்படும் தவறுகளையும் பொறுக்க வேண்டும். ஓ! பகைவர்களைக் கொல்பவனே, இந்தக் கூற்றின் நீதி உன் வழக்கிலும் காணப்படுகிறது.(12) ஓ! பெரும் காந்தி கொண்டவனே, (துரியோதனனின்) பதினோரு அக்ஷௌஹிணிகளும், (உன்னால் திரட்டப்பட்ட) ஏழு அக்ஷௌஹிணிகளும் {ஆக மொத்தம் பதினெட்டு அக்ஷௌஹிணி படைகளும்}, தனியொருவனான உயர் ஆன்ம அர்ஜுனனின் வலிமைக்கு இணையானவையல்ல.(13) எனவே, தன் பலத்தைச் சார்ந்து போர்க்களத்தில் திரிபவனும், பகனைத் தண்டித்தவனின் {இந்திரனின்} மகனுமான அந்தச் சிறப்புமிக்கப் பாண்டவனாலேயே {அர்ஜுனனாலேயே} (துரியோதனனின்) துருப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.(14) ஓ! பாரதா, மன்னர்களின் கடமைகள் மற்றும் கடமைகளின் அறநெறிகள் ஆகியவற்றை உன்னிடம் விரிவாக உரையாடிவிட்டேன். ஓ! மன்னா, நீ கேட்க விரும்புவது வேறென்ன இருக்கிறது" {என்றார் பீஷ்மர்}.(15)
சாந்திபர்வம் பகுதி – 157ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |