Covetousness - the root of sin! | Shanti-Parva-Section-158 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 28)
பதிவின் சுருக்கம் : பாவத்தின் மூலம் மற்றும் அதன் அடித்தளத்துக் குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பேராசையே பாவத்தின் மூலமும், அடித்தளமுமாக இருக்கிறது என்பதையும், நல்லோரின் இயல்புகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...
Covetousness - the root of sin! | Shanti-Parva-Section-158 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே, எந்த மூலத்திலிருந்து பாவம் உண்டாகிறது, அதன் {பாவத்தின்} அடித்தளம் எதில் இருக்கிறது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, பாவத்தின் அடித்தளம் எது என்பதைக் கேட்பாயாக. பேராசை மட்டுமே (தகுதிக்கும் {புண்ணியத்துக்கும்}, நன்மைக்கும்) பேரழிவை ஏற்படுத்துகிறது. பேராசையிலிருந்தே பாவம் உண்டாகிறது.(2) {பேராசை எனும்} இந்த மூலத்தில் இருந்தே பெரும் துன்பத்துடன் சேர்ந்து பாவமும், மறமும் {அதர்மமும்} பாய்கின்றன. இந்தப் பேராசையே, உலகில் காணப்படும் தந்திரங்கள் மற்றும் பாசாங்குகள் {போலித்தனம்} ஆகியவற்றின் ஊற்றாக இருக்கிறது. பேராசையே மனிதர்களைப் பாவமிழைக்கச் செய்கிறது.(3) பேராசையில் இருந்து கோபம் உண்டாகிறது; பேராசையில் இருந்து காமம் பாய்கிறது; பேராசையில் இருந்தே விவேகமின்மை, வஞ்சனை, செருக்கு, ஆணவம், வன்மம்,(4) பழி உணர்ச்சி, வெட்கமின்மை, செழிப்பிழப்பு, அறமிழப்பு {நற்பண்பிழப்பு}, கவலை, புகழ்க்கேடு ஆகியன எழுகின்றன.(5)
கஞ்சத்தனம், குதர்க்கம், முறையற்ற அனைத்து வகை ஆசைகள், பிறவிச் செருக்கு, கல்விச் செருக்கு, அழகுச் செருக்கு, செல்வச்செருக்கு,(6) அனைத்து உயிரினங்களிடமும் பரிதாபமின்மை, அனைத்திலும் தீமை, அனைத்திலும் நம்பிக்கையின்மை, அனைத்திலும் நேர்மையின்மை,(7) பிறரின் செல்வத்தைக் கவர்தல், பிறரின் மனைவியரை அபகரித்தல், கடுஞ்சொல், கவலை, பிறரைக் குறித்துத் தீங்காகப் பேசுதல்,(8) காம வேட்கை, பெருந்தீனி, அகால மரணம், வன்ம வேட்கை, பொய்மையில் தடுக்கப்பட முடியாத விருப்பம், ஆசைப்பசியை வெல்ல முடியாமை, தணியாத ஆசைகளில் காதுகளை ஈடுபடுத்தல்,(9) தீப்பேச்சு, தற்பெருமை, ஆணவம், கடமைகளைச் செய்யாதிருத்தல், மூர்க்கம், அனைத்துவகைத் தீச்செயல்களையும் செய்தல் ஆகிய இவை அனைத்தும் பேராசையில் இருந்தே எழுகின்றன.(10)
குழந்தைகள், அல்லது இளைஞர்கள், அல்லது முதியவர்களாக இருந்தாலும் மனிதர்களால் பேராசையைக் கைவிடமுடிவதில்லை. வாழ்வே சிதைந்தாலும் சிதையாமல் இருப்பதே பேராசையின் இயல்பாகும்.(11) அளவிடமுடியாத ஆழம் கொண்ட எண்ணற்ற ஆறுகள் தொடர்ந்து வெளியிடும் நீராலும் ஒருபோதும் நிறைவடையாத பெருங்கடலைப் போலவே, எந்த அளவுக்கு உடைமைகளை அடைந்தாலும் பேராசையானது நிறைவுபெற முடியாததாக இருக்கிறது.(12) எனினும், உடைமைகளால் ஒருபோதும் எது நிறைவடையாதோ, ஆசைகளை அடைவதால் எது தணிவடையாதோ, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், பெரும்பாம்புகள், உண்மையில் அனைத்து வகை உயிரினங்களாலும் எதன் உண்மை இயல்பைப் புரிந்து கொள்ள முடியாதோ, எது தடுக்கப்பட முடியாதோ, எது உலகின் பொய்மைகளை இதயத்தில் உண்டாக்கும் மடமையுடன் கூடியதோ அந்தப் பேராசையானது, தூய்மையடைந்த ஆன்மா கொண்டவனால் எப்போதும் வெல்லப்பட வேண்டும்.(13,14) செருக்கு, வன்மம், அவதூறு, கோணல்புத்தி, அடுத்தவரின் நன்மையைக் கேட்க இயலாமை ஆகியன, பேராசையின் ஆதிக்கத்தின் கீழ் தூய்மையற்ற ஆன்மாக்களாக இருப்போரிடம் காணப்படும் தீமைகளாகும்.(15)
மிகப் பெரிய அளவுகளிலான சாத்திரங்களைத் தங்கள் மனங்களில் கொண்டிருப்பவர்களும், பிறரின் ஐயங்களை விலக்கவல்லவர்களுமான பெரும் கல்விமான்களே கூட, இந்த ஆசையின் {அற்ப பொருளில் ஆசையுள்ளவர்களாக} விளைவால் பெரும் துன்பத்தை உணரும் பலவீனமான புத்தி கொண்டவர்களாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.(16) பேராசைக்கார மனிதர்கள் பொறாமையுள்ளவர்களாகவும், கோபக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நன்னடத்தையற்றவர்களாக இருக்கிறார்கள். குறுகிய இதயங்களைக் கொண்ட அவர்களது பேச்சுகள் இனிமையானவையாக இருக்கும். எனவே அவர்கள், புற்களால் மறைக்கப்பட்ட இருள்நிறைந்த குழிகளுக்கு ஒப்பானவர்களாக இருக்கிறார்கள்.(17) அவர்கள் அறப்போர்வையைப் போலியாக உடுத்திக் கொள்கிறார்கள். இழிந்த மனம் கொண்ட அவர்கள், (தேவைப்படும்போது) அறம் மற்றும் நற்குணத்தின் கொடியைத் தாங்கி இந்த உலகைக் களவாடுகிறார்கள். வெளிப்படையான காரணங்களின் பலத்தைச் சார்ந்திருக்கும் அவர்கள், அறத்தில் பல்வேறு வகையான தீய வழிகளை உண்டாக்குகிறார்கள். பொருளாசையின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதில் எண்ணம் கொண்ட அவர்கள், அறவழிகளை அழிக்கவே செய்கிறார்கள்.(18) பேராசையின் ஆதிக்கத்தின்கீழ் உள்ள தீய ஆன்மா கொண்டவர்கள் வெளிப்படையாக அறக்கடமைகளைச் செய்யும்போது, அதன் விளைவாக அவர்களால் இழைக்கப்பட்ட கேடுகள் மனிதர்களுக்கு மத்தியில் விரைவில் புழக்கத்திற்கு வருகின்றன.(19) ஓ! குருவின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரனே}, செருக்கு, கோபம், ஆணவம், உணர்வின்மை, இன்பம் மற்றும் துன்பத்தின் அடுக்குகள் {தாங்கிக் கொள்ள முடியாத இன்பங்கள் மற்றும் தாங்கிக் கொள்ள முடியாத துன்பங்கள்}, இறுமாப்பு {சுயமுக்கியத்துவம்} ஆகிய அனைத்தும் பேராசையின் ஆளுகையில் உள்ளோரிடம் காணப்படுகின்றன.(20)
பேராசையின் ஆதிக்கத்தில் எப்போதும் இருப்போரைத் தீயவர்கள் என்று அறிவாயாக. தூய நடைமுறைகளைக் கொண்ட நல்லோர் என்று அழைக்கப்படுபவர்களைக் குறித்து நீ கேட்டவற்றை உனக்கு இப்போது சொல்கிறேன்.(21) (மரணத்திற்குப் பிறகு) இவ்வுலகத்திற்குத் திரும்பும் கடமையில் அச்சமேதும் இல்லாதவர்களாக, அடுத்த உலகத்தில் {மறுமையில்} அச்சமேதும் இல்லாதவர்களாக, விலங்குணவுக்கு அடிமையாகாதவர்களாக, ஏற்புடையவற்றில் எந்த விருப்பம், மாறானவற்றில் விருப்பமின்மை ஆகியன இல்லாதவர்களாக,(22) நன்னடத்தையை விருப்பத்திற்குரியதாகக் கருதுபவர்களாக, தற்கட்டுப்பாடு உடையவர்களாக, இன்பத்தையும், துன்பத்தையும் இணையாகக் கருதுபவர்களாக, உண்மையைத் தங்கள் புகலிடமாகக் கொண்டவர்களாக,(23) பெற்றுக் கொள்ளாமல் {கொடை} கொடுப்பவர்களாக, கருணையுள்ளவர்களாக, பித்ருக்கள், தேவர்கள், விருந்தினர்களை வழிபடுபவர்களாக, (பிறரின் நன்மைக்காக) எப்போதும் முயற்சி செய்யத் தயாராக இருப்பவர்களாக,(24) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அண்டத்திற்கு எப்போதும் நன்மை செய்பவர்களாக, (மனத்தில்) பெருந்துணிவு கொண்டவர்களாக, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் நோற்பவர்களாக, அனைவரின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக, தங்களிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கவல்லவர்களாக, பிறருக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கவல்லவர்களாக இருப்போர், நல்லோர் என்றும், அறவோர் என்றும் கருதப்படுகிறார்கள்.(25)
அறத்தை மேம்படுத்தும் அவர்கள், அறவழியில் இருந்து விலக இயலாதவர்களாவர். அவர்களது நடத்தையானது, பழங்காலத்தின் அறம்சார்ந்த மனிதர்களால் நிறுவப்பட்ட மாதிரிக்கு இசைவாக இருக்குமேயன்றி ஒருபோதும் வேறாக இருக்காது.(26) அவர்கள் முற்றிலும் அச்சமற்றவர்கள்; அவர்கள் அமைதி நிறைந்தவர்கள்; அவர்கள் மென்மையானவர்கள்; அவர்கள் சரியான பாதையையே எப்போதும் பின்பற்றுவார்கள். கருணை நிறைந்த அவர்கள், நல்லோரால் எப்போதும் வழிபடப்படுவார்கள்.(27) அவர்கள் காமம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்டிருப்பார்கள். அவர்கள் உலகம் சார்ந்த எந்தப் பொருளோடும் பிணைப்பில்லாதவர்கள். அவர்களிடம் செருக்கிருக்காது. அவர்கள் சிறந்த நோன்புகளை நோற்பார்கள். அவர்கள் எப்போதும் மதிப்பிற்குரியவர்களாக இருப்பார்கள். எனவே, நீ எப்போதும் அவர்களுக்காகக் காத்திருந்து {அவர்களுக்குப் பணிவிடை செய்து}, அவர்களிடம் இருந்து அறிவுரைகளை நாடுவாயாக.(28) ஓ! யுதிஷ்டிரா, அவர்கள் செல்வத்திற்காகவோ, புகழுக்காகவோ ஒருபோதும் அறம் ஈட்டுவதில்லை. மறுபுறம் அவர்கள், உடலைப் பேணிக் கொள்வதைப் போன்ற ஒரு கடமையாகவே அதைச் செய்வார்கள்.(29) அச்சம், கோபம், அமைதியின்மை, கவலை ஆகியவை அவர்களிடம் எப்போதும் இருக்காது. அவர்கள் தங்கள் சக மனிதர்களைத் தவறாக வழிநடத்துவதற்காகப் புறத்தோற்றத்தில் அறப்போர்வை போர்த்திக் கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் எந்தப் புதிரும் {மர்மங்களும்} இருக்காது.(30)
அவர்கள் எப்போதும் முற்றான நிறைவுடன் இருப்பார்கள். பேராசையால் எழும் தீர்மானப்பிழை அவர்களிடம் இருக்காது. அவர்கள் எப்போதும் உண்மைக்கும், நேர்மைக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களது இதயம் ஒருபோதும் அறத்தில் இருந்து வீழாது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ எப்போதும் அவர்களை மதிக்க வேண்டும்.(31) {எதையும்} அடையும்போதோ, {எதையும்} இழக்கும்போதோ அவர்கள் ஒருபோதும் திளைக்கமாட்டார்கள். எதிலும் பற்றில்லாமல், செருக்கிலிருந்து விடுபட்ட அவர்கள், நற்பண்பின் {சத்வ} குணத்துடன் அனைத்திடமும் சம பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள்.(32) உறுதியான நடை கொண்டவர்களும், (தெய்வீக) அறிவைத் தேடுவதில் ஈடுபடுபவர்களும், அமைதி மற்றும் அறப்பாதையில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான அவர்களின் பார்வையில், ஈட்டலும் இழப்பும், இன்பமும் துன்பமும், ஏற்புடைமையும், ஏற்பில்லாமையும், வாழ்வும் மரணமும் இணையானவையாகவே இருக்கின்றன.(33) அறத்தின் கண் அத்தகை அன்பைக் கொண்ட அந்த உயர் ஆன்ம மனிதர்களை நீ உன் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கவனமின்மைக்குப் பலியாகாமல் எப்போதும் வழிபட வேண்டும். ஓ! அருளப்பட்டவனே, ஒருவனுடைய சொற்கள், தேவர்களுடைய உதவியின் மூலம் மட்டுமே நன்மையை உண்டாக்குகின்றன. பிற சூழ்நிலைகளின் கீழ் சொற்கள் தீய விளைவுகளையே உண்டாக்குகின்றன[1]" என்றார் {பீஷ்மர்}.(34)
[1] இந்த வரியை நீலகண்டர் இவ்வாறுதான் விளக்குவதாகத் தெரிகிறது. பீஷ்மர், தன் அறிவுரைகளின் விளைவுகளைக் குறித்து கவலை கொள்கிறார். அவர், தேவர் விரும்பினால் மட்டுமே அந்த அறிவுரைகள் பலன் தரும் என்றும்; மாறாக நடந்தால், அவரது வார்த்தைகள் ஒன்றுமில்லாமல் போகும் என்று சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 158ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |