Ignorance! | Shanti-Parva-Section-159 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 29)
பதிவின் சுருக்கம் : அறியாமை குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அறியாமையின் பண்புகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...
Ignorance! | Shanti-Parva-Section-159 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, பேராசையே அனைத்துத் தீமைகளுக்கும் அடித்தளம் என்று நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! ஐயா, அறியாமையைக் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "முடிவு அருகிலேயே இருக்கிறது என்பதை அறியாதவனும், நன்னடத்தைக் கொண்டோரை எப்போதும் வெறுப்பவனுமான ஒருவன் அறியாமையின் மூலம் பாவமிழைத்தால், அவன் விரைவில் இவ்வுலகில் புகழ்க்கேட்டை ஈட்டுகிறான்.(2) அறியாமையின் விளைவால் ஒருவன் நரகில் மூழ்குகிறான். அறியாமையில் இருந்தே துன்பம் எழுகிறது. அறியாமையின் மூலமே ஒருவன் துன்பங்களை அனுபவித்துப் பேராபத்தை அடைகிறான்" என்றார்.(3)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா {பீஷ்மரே}, அறியாமையின் தோற்றம், இடம், வளர்ச்சி, சிதைவு, எழுச்சி, வேர், பிரிக்கமுடியாத பண்பு, போக்கு, காலம், காரணம், விளைவு ஆகியவற்றை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். இங்கே {இம்மையில்} உணரப்படும் துன்பமனைத்தும் அறியாமையிலேயே பிறக்கிறது" என்று கேட்டான்[1]. (4,5)
[1] "முதல் கேள்வியையும் சேர்த்து, மொத்தம் 12 கேள்விகளை யுதிஷ்டிரன் இங்கே எழுப்புகிறான் என உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே சொல்கிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பற்று, வெறுப்பு, கருத்தில் முடிவின்மை {குழப்பம் / அவிவேகம்}, இன்பம், துன்பம், வீண் தற்பெருமை, காமம், கோபம், செருக்கு, எதிலும் தாமதம், செயலின்மை {சோம்பல்}, ஆசை, பகைமை, பொறாமை, எரிச்சல், மற்றும் பிற வகையைச் சார்ந்த அனைத்துப் பாவச் செயல்களும் அறியாமை என்ற பொதுப் பெயராலேயே அறியப்படுகினறன[2].(7) ஓ! மன்னா, நீ கேட்ட அதன் {அறியாமையின்} போக்கு, வளர்ச்சி மற்றும் பிற பண்புகளைக் குறித்து இப்போது கேட்பாயாக.(8) ஓ! மன்னா, அறியாமை மற்றும் பேராசை ஆகிய இரண்டும் (பொருளில்) ஒன்றேயென அறிவாயாக. ஓ! பாரதா, இரண்டும் அதே கனிகளையும், அதே குற்றங்களையும்தான் உண்டாக்கும்.(9) அறியாமையானது, பேராசையையே தன் மூலமாகக் கொண்டிருக்கிறது. பேராசை வளர வளர, அறியாமையும் வளர்கிறது. பேராசை இருக்கும் இடங்களில் எல்லாம் அறியாமையும் இருக்கிறது. பேராசை குறையும்போது, அறியாமையும் குறைகிறது. பேராசையின் எழுச்சியில் அதுவும் எழுகிறது. அதன் போக்குப் பலவிதமாக இருக்கிறது.(10)
[2] "இதுவே அறியாமையின் பொதுப்பண்பைக் குறித்த முதல் கேள்விக்கான பதிலாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பேராசையின் வேராக கருத்தில் முடிவின்மை {குழப்பம் [அ] விவேகமில்லாமை} இருக்கிறது. மேலும் கருததில் முடிவின்மையே அதன் {பேராசையின்} பிரிக்கப்பட முடியாத பண்பாக இருக்கிறது. அறியாமையின் போக்கு அழிவில்லாததாகும் {நித்தியமானதாகும்}. எந்தக் காலத்தில் அறியாமை தோன்றுமோ, அப்போது பேராசைக்குரிய நோக்கங்கள் வெல்லப்படுவதில்லை.(11) ஒருவனுடைய அறியாமையிலிருந்து பேராசை எழுகிறது, பேராசையில் இருந்து அறியாமை எழுகிறது. (எனவே, பேராசையானது, அறியாமையின் காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டாகவும் இருக்கிறது). பேராசையே அனைத்துக் குற்றங்களையும் உண்டாக்குகிறது. இந்தக் காரணங்களுக்காகவே அனைவரும் பேராசையைத் தவிர்க்க வேண்டும்.(12) ஜனகன், யுவனாஸ்வன், பிருஷதஸ்வன், பிரஸேனஜித் ஆகியோரும், பிற மன்னர்களும், பேராசையை அடக்கியதன் விளைவாலேயே சொர்க்கத்தை அடைந்தனர்.(13) ஓ! குருக்களின் தலைவா {யுதிஷ்டிரா}, நீ அனைவரின் பார்வையிலும் உறுதியான தீர்மானத்துடன் பேராசையைத் தவிர்ப்பாயாக. பேராசையைத் தவிர்த்தால், நீ இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை அடைவாய்" என்றார் {பீஷ்மர்}.(14)
சாந்திபர்வம் பகுதி – 159ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |