Dhamam - Self restraint! | Shanti-Parva-Section-160 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 30)
பதிவின் சுருக்கம் : கடமைகளில் முக்கியமானது எதுவெனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; தற்கட்டுப்பாடு எனும் புலனடக்கமே அறங்களில் பேரறம் என்றும், தற்கட்டுப்பாட்டில் உள்ள ஒரேயொரு குறையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...
Dhamam - Self restraint! | Shanti-Parva-Section-160 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! அற ஆன்மாவே, வேத கல்வியிலும், அறமீட்டும் விருப்பத்திலும் கவனமாக ஈடுபடும் ஒருவனுக்கு, எது பெரும் தகுதியை[1] {புண்ணியத்தை} உண்டாக்குவதாகச் சொல்லப்படுகிறது?(1) இவ்வுலகில் உயர்ந்த தகுதியை உண்டாக்கவல்லதாகக் கருதப்படுவது, சாத்திரங்களின் பல்வேறு வகைகளில் நிறுவப்பட்டிருக்கிறது. ஓ! பாட்டா, இம்மை, மறுமை ஆகிய இரண்டியலும் எது அதிகம் மதிக்கப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக.(2) ஓ! பாரதரே, கடமையெனும் பாதையானது நீண்டதாகவும், எண்ணற்ற பல கிளைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. உம்மைப் பொறுத்தவரையில், அக்கடமைகளில், பிற அனைத்தையும்விட எந்தச் சில கடமைகள் விரும்பத்தக்கன?(3) ஓ! மன்னா, விரிவானதும், பல கிளைகளைக் கொண்டதுமான அதைக் குறித்து எனக்கு விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)
[1] "இங்கே பயன்படுத்தப்பட்டிரும் கிரேயாஸ் Creayas என்ற சொல்லுக்கு ஒரு விசித்திரப் பொருள் இருக்கிறது. அனைத்திலும் சிறந்தது எனவும் பொருள் கொள்ளலாம்; எனவே, இத்தகைய வாக்கியங்களில் இதன் பொருள் சொர்க்கத்தில் அடையப்படும் உயர்ந்த இன்பம் எனவும் கொள்ளலாம். மகிழ்ச்சியை அடைவதற்குரிய அறச்செயல்கள் அனைத்தும் என்றும் பொருள் கொள்ளலாம். பூமி சார்ந்த இன்பங்களுடன் சேர்த்து இதைப் புரிந்து கொள்ளக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "எதைக் கொண்டு நீ உயர்ந்த தகுதியை அடையலாம் என்பது குறித்து நான் உன்னிடம் பேசப் போகிறேன். ஞானம் கொண்ட நீ, நான் சொல்லப் போகும் அறிவால் அமுதம் பருகியவனைப் போல நிறைவடையப் போகிறாய்.(5) பெரும் முனிவர்களால் சொல்லப்பட்ட கடமைகளின் விதிகள் பலவற்றில் ஒவ்வொன்றும் அவரவர்களின் சொந்த ஞானத்தைச் சார்ந்தே இருக்கிறது. அவை {கடமைகள்} அனைத்திலும் உயர்ந்தது தற்கட்டுப்பாடு {தமம் - புலனடக்கம்}[2] ஆகும்.(6) உண்மையை அறிந்தவர்களான பழங்காலத்தினருக்கு மத்தியில் தற்கட்டுப்பாடே உயர்ந்த தகுதிக்கு {மோட்சத்திற்கு} வழிவகுக்கிறது என்று சொல்லப்பட்டது. ஒரு பிராமணனைப் பொறுத்தவரையில், தற்கட்டுப்பாடானது அவனது நித்திய கடமையாகும்.(7) தற்கட்டுப்பாட்டில் இருந்தே அவன் தன் செயல்களின் முறையான கனிகளை அடைகிறான். அவனது வழக்கில், தற்கட்டுப்பாடானது, (தகுதியில்) ஈகை, வேள்வி மற்றும் வேத கல்வி ஆகியவற்றையும் விஞ்சி நிற்கிறது.(8) தற்கட்டுப்பாடே (அவனது) சக்தியை அதிகரிக்கிறது. தற்கட்டுப்பாடு உயர்ந்ததும், புனிதமானதுமாகும். தற்கட்டுப்பாட்டின் மூலம் ஒரு மனிதன் தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையும் சக்தியும் அடைந்து, அதன் விளைவாக உயர்ந்த அருள்நிலையை அடைகிறான்.(9) இந்த உலகத்தில் தற்கட்டுப்பாட்டுக்கு இணையாக வேறு எந்தக் கடமையும் இருப்பதாக நாம் கேள்விப்படவில்லை. அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரின்படியும், தற்கட்டுப்பாடே இவ்வுலக அறங்களில் உயர்ந்ததாகும்.(10)
[2] கும்பகோணம் பதிப்பில், "மஹரிஷிகளால் தத்தமக்குள்ள ஞானத்தை ஆஸ்ரயித்துப் பலவிதமான அந்த அந்தத் தர்மமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன. அவைகளுள் தமமானது மிக முக்கியமானது. நிச்சயமான அறிவுள்ள பெரியோர்கள் தமத்தை மோக்ஷத்திற்குக் காரணமென்று கூறுகிறார்கள்" என்றிருக்கிறது.
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, தற்கட்டுப்பாட்டின் மூலமே ஒருவன் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் உயர்ந்த மகிழ்ச்சியை {பேரின்பத்தை} அடைகிறான். தற்கட்டுப்பாடு கொண்டவன் பேரறத்தை ஈட்டுகிறான்.(11) தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன் இன்பநிலையில் உறங்குகிறான், இன்பநிலையில் விழிக்கிறான், இன்ப நிலையிலேயே இவ்வுலகில் திரிகிறான். அவனது மனம் எப்போதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கிறது.(12) தற்கட்டுப்பாடு இல்லாத மனிதன் எப்போதும் துன்பத்தை அனுபவிக்கிறான். அத்தகைய மனிதன், தன் குற்றங்களால் பிறக்கும் பேரிடர்கள் பலவற்றை உண்டாக்குகிறான்.(13) நம் வாழ்வுமுறைகளிலும் {ஆசிரமங்களிலும்}, தற்கட்டுப்பாடே சிறந்த நோன்பாகச் சொல்லப்படுகிறது. தற்கட்டுப்பாடு என்று அழைக்கப்படும் குறியீடுகளின் மொத்த தொகையை நான் இப்போது சொல்லப் போகிறேன்.(14) மன்னிக்கும் தன்மை, பொறுமை, தீங்கிழையாமை, பாகுபாடின்மை, உண்மை, நேர்மை, புலன்களை வெற்றிக் கொள்வது, புத்திசாலித்தனம், மென்மை, பணிவு, உறுதி,(15) ஈகை, கோபத்திலிருந்து விடுபடுவது, நிறைவு, இனிய பேச்சு, நல்லுணர்வு, வன்மத்திலிருந்து விடுதலை ஆகிய இவை அனைத்தின் சேர்க்கையே தற்கட்டுப்பாடாகும் {தமமாகும்}.(16)
ஓ! குருவின் மகனே {யுதிஷ்டிரனே}, ஆசானை மதித்தலும், உலகளாவிய கருணையும் அதில் அடங்கும். தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன், முகத்துதி, அவதூறு ஆகிய இரண்டையும் தவிர்ப்பான். மனமாசு, புகழ்க்கேடு, பொய் பேச்சு,(17) காமம், பேராசை, செருக்கு, ஆணவம், தற்புகழ்ச்சி, அச்சம், பொறாமை, அவமதிப்பு ஆகிய இவை அனைத்தும் தற்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதனால் தவிர்க்கப்பட வேண்டும்.(18) அவன் {தற்கட்டுப்பாடு கொண்டவன்} ஒருபோதும் அவதூறில் ஈடுபடமாட்டான். அவன் பொறாமையில் இருந்து விடுபட்டவனாக இருப்பான். அவன் அற்ப பொருள்களால் (உலகளாவிய இன்பங்களில் எந்த வடிவத்தைச் சேர்ந்த பொருளாக இருந்தாலும்) ஒருபோதும் நிறைவடையமாட்டான். அவன் ஒருபோதும் நிறைவடையாத பெருங்கடலைப் போன்றவனாவான்[3].(19) "நான் உன்னவன், நீ என்னவன், அவர்கள் என்னிடம் இருக்கிறார்கள், நான் அவர்களிடம் இருக்கிறேன்" என்பது போன்ற பூமிசார்ந்த தொடர்புகளில் இருந்து எழும் பற்றுகளில் அவன் ஒருபோதும் கட்டுப்பட மாட்டான்.(20)
[3] "இத்தகைய மனிதன், பூமியில் உள்ள எந்தப் பொருளிலும் ஒருபோதும் தன் இதயத்தை நிலைக்கச் செய்ய மாட்டான், அதன்படியே அவற்றை அடைவதால் அவன் நிறைவும் அடையமாட்டான். அவனுடைய உயர்வுள்ளலானது {பேரார்வம்}, இந்தப் பூமியால் கொடுக்கப்பட முடியாத அளவுக்கு உயர்ந்ததாகும், பிரம்ம லோகமே கூட அவனை நிறைவு செய்ய முடியாது என உரையாசிரியர் விளக்குகிறார். முதல்பார்வையில் இதைப் படிக்க நிறைவின்மையைப் போலத் தெரியும். ஆனால் உண்மையில் அஃது அவ்வாறானதில்லை. அவனுடைய பேரார்வத்தின் மகிமை அவ்வாறு பலவந்தமாக அவனை நாடச் செய்கிறது. மனநிறைவென்பது சொர்க்கத்தின் அருள்நிலை உட்படச் சாதாரணப் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நிந்திக்கப்படாதவனும், ஆசையற்றபுத்தியுள்ளவனும் அல்ப ஸுகங்களை விரும்பாதவனும், அஸூயையில்லாதவனுமான இந்த மனிதன் ஸமத்திரம் போல எவ்விதத்தாலும் திருப்தியுள்ளவனாகமாட்டன்" என்றும், அதன் அடிக்குறிப்பில், "பிரம்மலோகங்கிடைத்தாலும், அஃது அநித்யமானதால் அதனை விரும்பான்" என்பது பழையவுரை" என்றுமிருக்கிறது.
நகரங்கள், அல்லது காடுகளின் நடைமுறைகளைப் பின்பற்றுபவனும், அவதூறிலோ, முகத்துதியிலோ ஒருபோதும் ஈடுபடாதவனுமான மனிதன், முக்தியை அடைவான்.(21) உலகளாவிய நட்பைப் பயின்று, அறம்சார்ந்த நடத்தையும், உற்சாகமிக்க ஆன்மாவையும், ஆன்மாவின் அறிவையும் கொண்டு, பூமியின் பற்றுகள் அனைத்திலிருந்தும் விடுபட்ட மனிதன் மறுமையில் பெரும் வெகுமதியை அடைகிறான்.(22) சிறப்பான நடத்தையுடனும், கடமைகளை நோற்றும், உற்சாகமிக்க ஆன்மாவுடனும், கல்வி மற்றும் தன்னறிவுடனும் கூடிய மனிதன், இம்மையில் உயர்ந்த மதிப்பையும், மறுமையில் உயர்ந்த கதியையும் அடைகிறான்.(23) பூமியில் நல்லவை என்று கருதப்படும் செயல்கள் அனைத்தும், நல்லோரால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், ஞானம் கொண்ட தவசியின் பாதையை அமைக்கின்றன. நல்லோன் ஒருவன் ஒருபோதும் அந்தப் பாதையில் இருந்து விலக மாட்டான்.(24) உலகில் இருந்து ஓய்ந்து, காட்டு வாழ்வைப் பின்பற்றி, புலன்களில் முழுக் கட்டுப்பாட்டுடன், தன் மரணத்தை எதிர்பார்த்து அமைதியாக அந்தப் பாதையில் நடக்கும் கல்விமான், நிச்சயம் பிரம்ம நிலையை அடைவான்.(25)
எந்த உயிரினத்திடமும் அச்சமில்லாதவனும், எந்த உயிரினத்தையும் அச்சுறுத்தாதவனுமான ஒருவனுக்கு, தன் உடலைவிட்ட பிறகு எந்த அச்சத்தையும் சந்திக்க வேண்டியதில்லை[4].(26) தன் தகுதிகளைத் தேக்க முனையாமல் (உண்மையான இன்பத்தில்) அதைத் தீர்ப்பவனும், அனைத்து உயிரினங்களிடமும் சம பார்வை கொண்டவனும், உலகளாவிய நட்பெனும் போக்கைப் பயில்பவனுமான ஒருவன் பிரம்மத்தை அடைகிறான்.(27) வானில் உள்ள பறவைகளின் பாதையையோ, நீரின் பரப்பில் நீர்க்கோழியின் பாதையையோ பகுத்தறிய முடியாததைப் போலவே, (பூமியில்) அத்தகைய மனிதனின் பாதையும் கவனத்தை ஈர்க்காது.(28) ஓ! மன்னா, இல்லத்தைக் கைவிட்டு, துறவறத்தைப் பின்பற்றுபவன் இன்புற அழிவில்லாத பிரகாச உலகங்கள் பல காத்திருக்கின்றன.(29) செயல்களை அனைத்தையும் கைவிட்டு, முறையான போக்கில் தவங்களையும் கைவிட்டு, கல்வியின் பல்வேறு கிளைகளைக் கைவிட்டு, உண்மையில் (பூமியைச் சேர்ந்த மனிதர்கள் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்யும்) அனைத்துப் பொருட்களையும் கைவிடும் ஒருவன்,(30) தன் ஆசைகளில் தூய்மையானவனாக, அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுபட்டவனாக[5], உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடனும், தன்னறிவுடனும், தூய்மையான இதயத்துடனும் கூடியவனாகி, இவ்வுலகில் பெரும் மதிப்பை வென்று, இறுதியாகச் சொர்க்கத்தை அடைகிறான்.(31)
[4] "அத்தகைய மனிதன் நிச்சயம் அருள்நிறைந்த கதியையே அடைவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "சாதி {வர்ணம்}, உடை, உணவு போன்ற வேறுபாடுகளைக் களைந்து என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வேத தவங்களில் இருந்து எழுந்ததும், குகைக்குள் மறைக்கப்பட்டதுமான பெரும்பாட்டனின் அழிவில்லா உலகத்தை, தற்கட்டுப்பாடு கொண்ட ஒருவனால் மட்டுமே வெல்ல முடியும்[6].(32) உண்மை அறிவில் இன்பம் கொள்பவனும், தெளிவடைந்தவனும், எவ்வுயிருக்கும் தீங்கிழையாதவனுமான ஒருவன், இவ்வுலகிற்குத் திரும்புவதில் எந்த அச்சமும், வேறு எந்த அச்சமும் கொள்ளமாட்டான்[7] {அவனுக்கு மறுபிறவி குறித்த அச்சமேதும் இல்லை}.(33) தற்கட்டுப்பாட்டில் ஒரே ஒரு குறை {தோஷம்} உள்ளது. இரண்டாவது குறை என்று அதில் ஏதும் காணப்படவில்லை. தற்கட்டுப்பாடுடைய மனிதன் பலவீனனாகவும், மூடனாகவும் கருதப்படுகிறான்.(34) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இந்தப் பண்பு ஒரே ஒரு குறையை மட்டுமே கொண்டுள்ளது. அதன் தகுதிகளோ {புண்ணியங்களோ} பலவாகும்.(35) தற்கட்டுப்பாடுடைய மனிதனுக்குக் காட்டின் தேவைதான் என்ன இருக்கிறது? ஓ! பாரதா, அதேபோல, தற்கட்டுப்பாடு இல்லாதவனுக்கும், காட்டினால் என்ன பயன் இருக்க முடியும்? தற்கட்டுப்பாடுடையவன் வசிக்கும் இடமே காடாகும், அதுவே புனிதமான ஆசிரமமுமாகும்" என்றார் {பீஷ்மர்}".(36)
[6] "இங்கே குறிப்பிடப்படும் பிரம்மலோகம் என்பது ஒவ்வொருவரின் இதயம் என்று கருதப்படுகிறது. ஒருவன் தன்மறுப்பு மற்றும் தவங்களின் மூலம் அதை அடைகிறான். இதயத்தின் இன்பநிலையை வெல்வது, தீய ஆசைகளை விரட்டுவதிலிருக்கிறது என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் புத்தாஸ்யமாகும் (அதாவது புத்தனின் பிறப்புறுப்பு என்பதாகும்). இந்த வரியை, ஒரு புத்தரைக் குறித்த பௌத்த கருத்தாகக் கொள்ள முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஞானத்தில் ஸந்தோஷப்படுகிறவனும், எல்லாப்பிராணிகளிடமும் மித்திரனாயிருப்பவனுமான அறிவுள்ளவனுக்கு இவ்வுலகில் மறுபிறப்பென்னும் பயமில்லை, பரலோகத்தைப் பற்றிய பயம் ஏது?" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், அமுதத்தைப் பருகியவனைப் போல மிகுந்த நிறைவடைந்தான்.(37) மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த அறவோர்களில் முதன்மையானவரிடம் {பீஷ்மரிடம்} கேள்விகளைக் கேட்டான். (தன் பேரனால் கேட்கப்பட்ட) அந்தக் குருகுல வழித்தோன்றல் {பீஷ்மர்}, (கேட்கப்பட்ட கேள்விகளின் பேரில்) மீண்டும் உற்சாகமாக உரையாடத் தொடங்கினார்" {என்றார் வைசம்பாயனர்}.(38)
சாந்திபர்வம் பகுதி – 160ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |