The glory of Penance! | Shanti-Parva-Section-161 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 31)
பதிவின் சுருக்கம் : தவத்தின் பெருமையை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...
The glory of Penance! | Shanti-Parva-Section-161 | Mahabharata In Tamil |
{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் தொடர்ந்தார்}, பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அனைத்தும் தவத்தையே வேராகக் கொண்டிருக்கின்றன என்று அறிவுபடைத்தோர் கூறுகின்றனர். தவங்களைச் செய்யாத மூடன், தன் செயல்களுக்கான வெகுமதிகளை அடைவதில்லை.(1) பலமிக்கப் படைப்பாளன் {பிரம்மன்}, தவங்களின் உதவியாலேயே இந்த அண்டமனைத்தையும் படைத்தான். அதே வகையிலேயே முனிவர்களும், தவங்களின் சக்தியால் வேதங்களை அடைந்தனர்.(2) தவங்களின் உதவியாலேயே பெரும்பாட்டன் {பிரம்மன்} உணவு, கனிகள் மற்றும் கிழங்குகளைப் படைத்தான். ஆழ்ந்த சிந்தனையுள்ள ஆன்மாக்களுடன் {மன அடக்கத்துடன் கூடிய} தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், தவங்களின் மூலமே மூவுலகங்களையும் காண்கின்றனர்.(3)
{அகதம் முதலிய} மருந்துகளும், தீங்கிழைக்கும் சாரப்பொருட்களுக்கான முறிமருந்துகளும், (இங்கே காணப்படும்) பல்வேறு செயல்களும் தவ உதவியின் மூலமே எதிர்பார்க்கும் விளைவுகளை உண்டாக்குகின்றன. அனைத்துக் காரியங்களின் நிறைவும் தவத்தைச் சார்ந்தே இருக்கிறது.(4) வெளிப்படையாக அடைதற்கரிதாகத் தெரியும் எந்தப் பொருளும், தவத்தின் உதவியால் நிச்சயம் வெல்லப்படும். முனிவர்கள் தங்கள் ஆறுவகைத் தெய்வீகப் பண்புகளையும் தவத்தின் மூலமே அடைந்தார்கள் என்பதில் ஐயமில்லை.(5)
எழுச்சியைத் தூண்டும் மதுவைப் பருகும் ஒருவன், பிறரின் ஏற்பில்லாமல் அவர்களது உடைமைகளைப் பறிப்பவன், கருவைக் கொன்ற குற்றவாளி, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் செய்தவன் ஆகியோர் அனைவரும் முறையாகச் செய்யப்படும் தவத்தின் மூலம் {தங்கள் பாவங்களில் இருந்து} தூய்மையடைகின்றனர்.(6) தவங்கள் பல வகைப்படும். அவை பல்வேறு வெளிப்பாடுகளின் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. எனினும் தவங்கள் அனைத்தைக் காட்டிலும், இன்பம், மகிழ்வு, உணவு ஆகியவற்றைத் தவிர்த்துச் செய்யப்படும் தவமே உயர்வானதும், சிறந்ததுமாகும்.(7)
ஓ! மன்னா, கருணை, உண்மைநிறைந்த பேச்சு, கொடை மற்றும் புலனடக்கம் ஆகியவற்றை விடவும், உணவைத் தவிர்த்துச் செய்யப்படும் தவமே {உபவாஸவிரதமே} மேன்மையானதாகும்.(8) கொடையைவிட {தானத்தைவிட} செய்வதற்கரிய வேறு செயலேதும் இல்லை. தாய்க்குத் தொண்டாற்றுவதைவிட மேன்மையான வாழ்வுமுறை {ஆசிரமம்} ஏதும் இல்லை. மூன்று வேதங்களை அறிந்தோரைவிட மேன்மையான வேறு உயிரினம் ஏதும் இல்லை. அதே போலவே, துறவே உயர்ந்த தவமாக அமைகிறது.(9)
தன்னறத்தையும், சொர்க்கத்தையும் கவனத்தில் கொள்ளவே மக்கள் தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்துகின்றனர். அத்தகைய கட்டுப்பாட்டையும், அறமீட்டலையும் பொறுத்தவரையில், உணவைத் தவிர்ப்பதைக் காட்டிலும் வேறு உயர்ந்த தவமேதுமில்லை.(10) முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோரும், விலங்குகள், பறவைகள் மற்றும் அசையும், அல்லது அசையாத எந்த உயிரினமாக இருப்பினும்,(11) அனைத்தும் தவங்களில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றன, அவர்கள் அடையும் எந்த வெற்றியும் தவத்தின் மூலமே வெல்லப்படுகிறது.(12) இன்பநிலையில் தங்கள் பங்குகளைப் பெற்ற இவை (ஆகாயத்து ஒளிக்கோள்கள்), எப்போதும் தவத்தின் விளைவுகளாகவே இருக்கின்றன. தவத்தின் மூலம் இறைநிலையே {தேவத்தன்மையைக்} கூட அடையலாம் என்பதில் ஐயமில்லை" என்றார் {பீஷ்மர்}.(13)
சாந்திபர்வம் பகுதி – 161ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |