Truth! | Shanti-Parva-Section-162 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 32)
பதிவின் சுருக்கம் : வாய்மையின் பெருமைகளையும், பதிமூன்று வகை உண்மைகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...
Truth! | Shanti-Parva-Section-162 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "பிராமணர்கள், முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் வாய்மையின் கடமையை {சத்தியத்தைத் தர்மமென்று} மெச்சுகிறார்கள். நான் வாய்மையை {சத்தியத்தைக்} குறித்துக் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, அது குறித்து என்னிடம் உரையாடுவீராக. ஓ! மன்னா, வாய்மையின் குறியீடுகள் என்ன? அஃது எவ்வாறு அடையப்பட முடியும்? வாய்மையைப் பயில்வதால் ஈட்டப்படுவதென்ன? அஃதை எவ்வாறு ஈட்ட முடியும்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நால்வகையினரின் கடமைகளில் குழப்பம் ஏற்படுவது ஒருபோதும் மெச்சப்படுவதில்லை. வாய்மை என்று அழைக்கப்படுவது, இந்த நான்கு வகைகளிலும் கலப்படமில்லாத தூய நிலையில் எப்போதும் இருக்கிறது.(3) நல்லோரிடம் வாய்மையானது எப்போதும் ஒரு கடமையாகவே இருக்கிறது. உண்மையில், வாய்மை ஒரு நித்திய கடமையாகும். ஒருவன் வாய்மையை மதிப்புடன் வணங்க வேண்டும். வாய்மையே (அனைத்திற்கும்) உயர்ந்த புகலிடமாக இருக்கிறது.(4) வாய்மையே கடமை {தர்மம்}; வாய்மையே தவம்; வாய்மையே யோகம்; வாய்மையே அழிவில்லா பிரம்மம். வாய்மையானது உயர்ந்த வகையைச் சேர்ந்த ஒரு வேள்வியாகச் சொல்லப்படுகிறது. அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன.(5) நான் இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வாய்மையின் வடிவங்களையும், அதன் முறைப்படியான வரிசையிலான குறியீடுகளையும் சொல்லப் போகிறேன்.(6)
வாய்மையை எவ்வாறு அடையலாம் என்பது குறித்தும் கேட்பது உனக்குத் தகும். ஓ! பாரதா, இவ்வுலகில் வாய்மையானது பதிமூன்று {13} வகைகளில் இருக்கிறது.(7) பாகுபாடின்மை, தற்கட்டுப்பாடு, {வன்மமின்மை [நல்லெண்ணம்]}, மன்னிக்கும்தன்மை, பணிவு, பொறை {தாங்கும் ஆற்றல்}, நற்பண்பு,(8) துறவு, தியானம், கண்ணியம், உறுதி, கருணை, தீங்கிழையாமை ஆகியன வாய்மையின் வடிவங்களாகும்[1]. ஓ! பெரும் ஏகாதிபதி, இவையே வாய்மையின் பதிமூன்று வடிவங்களாகும்.(9) வாய்மையானது, நிலையானதாகவும், அழிவில்லாததாகவும், மாற்றமில்லாததாகவும் இருக்கிறது. பிற அறங்களை எதிர்க்காத நடைமுறைகளின் மூலம் அஃது அடையப்படலாம் {எந்த தர்மத்திற்கும் விரோதமில்லாதது வாய்மை}. யோகத்தின் மூலமும் அஃது அடையப்படலம்.(10)
[1] கங்குலியில் 12 வகைகளே சொல்லப்பட்டிருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், "பாரத, எல்லா உலகங்களிலும் ஸத்யம் பதிமூன்று விதமாக அடையப்படுகிறது. அரசஸ்ரேஷ்டனே, உண்மை, ஸமதை, தமம், அமாத்ஸர்யம், க்ஷமை, லஜ்ஜை, திதிக்ஷை, அனஸூயை, த்யாகம், த்யானம், ஆர்யத்தன்மை, த்ருதி, எப்பொழுதும் தயை, அஹிம்ஸை என்று ஸத்யத்தின் உருவங்கள் பதின்மூன்றாகும்; ஸந்தேகமில்லை" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் 14 கூறப்படுகின்றன. ஸத்யமும், உண்மையும் ஒன்றெனக் கொண்டால் 13 ஆகும். பிபேக்திப்ராயின் பதிப்பில், "அனைத்து உலகங்களிலும், பதிமூன்று வகை உண்மைகள் இருக்கின்றன. பாகுபாடின்மையும், தற்கட்டுப்பாடும் உண்மை என்பதில் ஐயமில்லை. வன்மமின்மை, மன்னிக்கும்தன்மை, பணிவு, பொறுமை, பொறாமையின்மை, துறவு, தியானம், ஞானம், உறுதி, தொடர் பற்று மற்றும் தீங்கிழையாமை ஆகியவையும் அதிலடங்கும். இதில் சரியாக 13 குறிப்பிடப்பட்டிருக்கிறது.
விருப்பும் வெறுப்பும், காமமும் கோபமும் அழிவடையும்போது, எந்தப் பண்பின் விளைவால் ஒருவன் தனக்கும், தன் எதிரிக்கும் இடையிலும், தனக்கான நன்மைக்கும், தனக்கான தீமைக்கும் இடையில் மாற்றமில்லாத கண்ணுடன் காண இயன்றவனாகிறோனோ அதுவே பாகுபாடின்மை {ஸமதை} என்று அழைக்கப்படுகிறது.(11) அடுத்தவரின் பொருட்களை ஒருபோதும் விரும்பாமை, ஈர்ப்பு, பொறுமை, தன்னிடம் பிறர் கொள்ளும் அச்சங்களைத் தணிக்கும் வல்லமை, நோயிடம் எதிர்ப்புணர்வு[2] ஆகியவை அடங்கியதே தற்கட்டுப்பாடாகும் {தமமாகும்}. அறிவின் முலம் இஃதை {தற்கட்டுப்பாட்டை} அடையலாம்.(12) ஈகை பயில்வதில் அர்ப்பணிப்பு, அன்னைத்துக் கடமைகளையும் நோற்றல் ஆகியவை நல்லெண்ணம் {வன்மமின்மை / அமார்ஸர்யம்} என்று ஞானமுள்ளோரால் கருதப்படுகிறது. வாய்மையில் இடையறாத அர்ப்பணிப்பு கொள்வதன் மூலம் ஒருவன் உலகளாவிய நல்லெண்ணத்தை {வன்மமின்மையை} அடைகிறான்.(13) மன்னிக்கும் மற்றும் மன்னிக்காத தன்மைகளைப் பொறுத்த வரையில், எந்தப் பண்பின் மூலம் மதிக்கத்தக்க நல்லவன் ஒருவன், ஏற்புடையதையும், ஏற்பில்லாததையும் தாங்கிக் கொள்வானோ, அதுவே மன்னிக்கும் தன்மை {க்ஷமை} என்று சொல்லப்படுகிறது. இந்த அறம் {மன்னிக்கும் தன்மை}, மெய் நடைமுறையின் மூலம் நன்கு அடையப்படுகிறது.(14) எந்த அறத்தின் விளைவால், ஒரு நுண்ணறிவு மிக்க மனதன், மனத்திலும், பேச்சிலும் அடக்கமுள்ளவனாக, பல நற்செயல்களைச் செய்து, பிறரின் நிந்தனையை ஒருபோதும் ஈட்டுவதில்லையோ அதுவே பணிவு {லஜ்ஜை} என்றழைக்கப்படுகிறது. அற உதவியின் மூலம் இஃது அடையப்படும்.(15)
[2] கங்குலியில் "நோயிடம் எதிர்ப்புணர்வு" என்றிருப்பது, கும்பகோணம் பதிப்பில் "கோபத்தை அடக்குவது" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பிலும் "கோபத்தைத் தணித்தல்" என்றிருக்கிறது.
அறத்திற்காகவும், பொருளுக்காவும் எந்த அறம் மன்னிக்கச் செய்யுமோ அதுவே பொறை {தாங்கும் ஆற்றல் / திதிக்ஷை} என்று அழைக்கப்படுகிறது. இது மன்னிக்கும் தன்மையின் ஒரு வடிவமே ஆகும். இது பொறுமையினால் அடையப்படுகிறது, இது மக்களைத் தன்னோடு இணைக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.(16) பற்றுகளையும், உலகம் சார்ந்த போருட்கள் அனைத்தையும் கைவிடுவது துறவு {த்யாகம்} என்றழைக்கப்படுகிறது. ஒருவன் கோபம் மற்றும் வன்மத்தை விலக்காமல் ஒருபோதும் துறவை அடைய முடியாது.(17) எந்த அறத்தின் விளைவால் ஒருவன் விழிப்புடனும், கவனத்துடனும் அனைத்து உயிரினங்களுக்கு நன்மை செய்வானோ, அது நற்பண்பு {ஆர்யத்தன்மை} என்றழைக்கப்படுகிறது. இதற்குக் குறிப்பிட்ட வடிவமேதும் கிடையாது, தன்னலப் பற்றுகள் அனைத்தையும் கைவிடுவதில் இஃது அடங்கியிருக்கிறது.(18) எந்த அறத்தின் மூலம் ஒருவன் மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் மாற்றமில்லாதவனாக இருக்கிறானோ, அது மனோவுறுதி {த்ருதி} என்று அழைக்கப்படுகிறது. எந்த ஞானி தன் நன்மையை விரும்புவானோ, அவன் எப்போதும் இந்த அறத்தைப் பயில்வான் {மனோவுறுதியுடனிருப்பான்}.(19) ஒருவன் எப்போதும், மன்னிக்கும் தன்மையைப் பயில்பவனாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்க வேண்டும். எந்த ஞானி, இன்பம், அச்சம், கோபம் ஆகியவைற்றைக் கைவிடுவதில் வெல்கிறானோ அவன் மனோவுறுதியை அடைவதில் வெல்கிறான்.(20) அனைத்து உயிரினங்களையும் பொறுத்தவரையில் எண்ணம், சொல், செயல், ஆகியவற்றில் தீங்கிழையாமை {அஹிம்ஸை} மற்றும் அன்பு {கருணை / தயை}, கொடை ஆகியவையே நல்லோரின் அழிவில்லாக் கடமைகளாக இருக்கின்றன[3].(21)
[3] கும்பகோணம் பதிப்பில், "செய்கையாலும், மனத்தாலும், வாக்காலும் எல்லாப் பிராணிகளிடத்திலும் அனுக்கிரஹமும், தானமும் அஹிம்ஸ்யாகும் என்றிருக்கிறது. இதுவே சாதுக்களின் ஸனாதனமான தர்மம். பாரத, ஸத்யமென்னும் ஒரே லக்ஷணமுள்ள வெவ்வேறான இந்தப் பதிமூன்று ஸ்வரூபங்களும் ஸத்யத்தையே அடுத்திருக்கின்றன; ஸத்யத்தையே பெருமைப்படுத்துகின்றன" என்றிருக்கிறது.
வெளிப்படையாக இந்தப் பதிமூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதாகத் தெரிந்தாலும், அவை வாய்மை {சத்தியம்} என்ற ஒன்றாகவே இருக்கின்றன. ஓ! பாரதா, இவை அனைத்தும் வாய்மையை ஆதரித்து, அதற்கு வலுவூட்டுகின்றன.(22) ஓ! ஏகாதிபதி, வாய்மையின் தகுதிகளை {சத்தியத்தின் புண்ணியங்களைத்} தீர்ப்பது இயலாததாகும். இந்தக் காரணங்களுக்காகவே பிராமணர்களும், பித்ருக்களும், தேவர்களும் வாய்மையைப் போற்றுகின்றனர்.(23) வாய்மையை {சத்தியத்தை} விட உயர்ந்த கடமையேதும் கிடையாது, பொய்மையைவிடப் பயங்கரப் பாவம் வேறேதும் கிடையாது. உண்மையில், அறத்தின் அடித்தளமாகவே வாய்மை இருக்கிறது. இதன் காரணமாக ஒருபோதும் எவனும் வாய்மையை அழிக்கக்கூடாது.(24) வாய்மையில் இருந்தே, தானங்களும், வேள்விக் கொடைகளும், மூன்று வகை அக்னிஹோத்திரங்களும், வேதங்களும், அறத்திற்கு வழிவகுக்கும் அனைத்தும் எழுகின்றன.(25) ஒரு காலத்தில் ஆயிரம் குதிரை வேள்விகளைத் தராசின் ஒரு தட்டிலும், வாய்மையை மறுதட்டிலும் வைத்த போது, ஆயிரம் குதிரை வேள்விகளை விட வாய்மையே கனமிக்கத்தாக இருந்தது" என்றார் {பீஷ்மர்}.(26)
சாந்திபர்வம் பகுதி – 162ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |