A malevolent person! | Shanti-Parva-Section-164 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 34)
பதிவின் சுருக்கம் : கொடூரர்களின் இயல்புகளையும், குறியீடுகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...
A malevolent person! | Shanti-Parva-Section-164 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "நல்லோரை நான் கண்டதன் விளைவால் நல்லுறவு என்ன என்பதை நான் அறிவேன். இருப்பினும், ஓ! பாரதரே, தீங்கு செய்பவரையோ {கொடூரர்களையோ}, அவர்களது செயல்களின் இயல்பையோ நான் அறிந்ததில்லை.(1) உண்மையில் கொடூரச் செயல்களைச் செய்யும் தீய மனிதர்களை, முட்கள், குழிகள் மற்றும் நெருப்பைத் தவிர்ப்பது போல மக்கள் தவிர்க்கிறார்கள்.(2) ஓ! பாரதரே, தீங்கு செய்பவன் {கொடூரன்}, இம்மை மற்றம் மறுமை ஆகிய இரண்டிலும் (துன்பத்தில்) எரிவான் என்பது நிச்சயம் தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஓ! குருகுலத்தவரே, உண்மையில் அத்தகையவர்களின் செயல்கள் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(3)
[1] கும்பகோணம் பதிப்பில், "க்ரூரனாயிருப்பவன் இவ்வுலகிலும், இறந்தபின்னும் நிச்சயமாக எரிக்கப்படுகிறான். ஓ கௌரவ்யரே, ஆகையால், அந்த க்ரூரனுடைய நிச்சயமான தர்மத்தை நீர் சொல்ல வேண்டும்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தீமை விளைவிப்போர் {குரூரர்கள்} எப்போதும் தீய செயல்களைச் செய்பவர்களாகவும், அவற்றைச் செய்வதற்குத் தடுக்கப்பட முடியாத உணர்வைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் பிறரைப் பழித்து, அவதூறு செய்வதில் ஈடுபடுவார்கள். தங்களுக்கு உரியவை கிடைக்காமல் வஞ்சிக்கப்படுவதாகத் தங்களை எப்போதும் கருதிக் கொள்வார்கள்.(4)
கொடூரன், தன் ஈகைச் செயல்களைத் தானே தற்பெருமை பேசுவான். அவன் மிக இழிந்தவனாவான். அவன் வஞ்சனை நிறைந்தவனாகவும், தந்திரம் நிரம்பியவனாகவும் இருப்பான். பிறருக்கு உரியவற்றை அவன் ஒருபோதும் கொடுக்கமாட்டான். அவன் ஆணவம் கொண்டவனாக இருப்பான். அவன் தீய தோழமையுடன் சேர்ந்து எப்போதும் தற்பெருமை நிறைந்தவனாக இருப்பான்[2].(5)
[2] கும்பகோணம் பதிப்பில், "தான் கொடுத்ததைப் புகழ்ந்து பேசுகிறவனும், த்வேஷத்தைச் செய்கிறவனும், இகழ்ந்த கார்யங்களைச் செய்கிறவனும், ஸ்நேஹத்தைக் காண்பித்து வஞ்சிப்பவனும் (ஸாமர்த்திமிருந்தும்) வெளிக்கு ஏழைத்தனத்தைக் கொண்டாடுகிறவனுமாக இருப்பான்" என்றிருக்கிறது.
தான் சந்திக்கும் அனைவரையும் ஐயுற்று, அவர்களிடம் அச்சமடைபவனாக இருப்பான். அவன் மூட புத்தி கொண்டவனாக இருப்பான். அவன் கஞ்சத்தனத்துடன் இருப்பான். அவன் தன் உதவியாளர்களைப் புகழ்வான். காடுகளில் ஓய்ந்திருக்கும் துறவிகள் அனைவரிடமும் இயல்புக்கு மாறான பகைமையையும், வெறுப்பையும் வளர்ப்பான்.(6)
அவன் பிறருக்குத் தீங்கிழைத்து மகிழ்வான். அவன், பிறரின் தகுதிகளையும், குற்றங்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் முற்றான அலட்சியத்துடன் இருப்பான். அவன் பொய்மை நிறைந்தவனாக இருப்பான். அவன் நிறைவில்லாதவனாக இருப்பான். அவன் ஆதீத பேராசையுடையவனாக எப்போதும் கொடூரச் செயல்களையே செய்வான்.(7)
அத்தகைய மனிதன், பிறர் அனைவரையும் தன்னைப் போலவே {கொடூரர்களாக} நினைத்துக் கொண்டு, ஒருவரையும் ஒருபோதும் நம்பாமல், அறம் சார்ந்தவர்களையும், சாதனையாளர்களையும் ஒரு பூச்சியைப் போல மதிப்பான்.(8)
அத்தகைய மனிதன் {கொடூரன்}, பிற மக்கள் மீது சாட்டப்படும் குற்றங்கள் ஐயுறத்தக்க அளவில் இல்லையெனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை அறிவித்துக் கொண்டே இருப்பான். எனினும், அத்தகைய குற்றங்களில் தானே களங்கமுடையவனாக இருப்பினும், அவற்றில் இருந்து தான் அறுவடை செய்யும் பயன்களின் காரணமாக, அவற்றைக் குறித்துச் சிறிதும் குறிப்பிடாமல் இருப்பான்.(9)
தனக்கு நன்மை செய்தவனை, புத்திசாலித்தனத்துடன் வஞ்சித்து அவனை ஏமாளியாகக் கருதுவான். நன்மை செய்தவனுக்கு எந்தக் காலத்திலாவது எந்தக் கொடையாவது கொடுத்திருந்தால் அவன் வருத்தத்தால் நிறைவான்.(10)
விருப்பம் நிறைந்த கண்களுடன் மனிதர்கள் நின்று கொண்டிருந்தாலும் கூடத் தனிமையில் அமைதியாக உண்ணத்தக்கவற்றையும், பானங்களையும், பிறவகை உணவுகளையும் உண்பவனைக் கொடூரனெனவும், தீயோனெனவும் அறிவாயாக.(11)
மறுபுறம், எவன் {உணவின்} முதல் பகுதியைப் பிராமணர்களுக்குக் காணிக்கையளித்து, எஞ்சியவற்றை நண்பர்கள், சொந்தங்கள் ஆகியவர்களுடன் பகிர்ந்து உண்கிறானோ, அவன் மறுமையில் பேரின்ப நிலையையும், இம்மையில் முடிவிலா மகிழ்ச்சியையும் அடைவான்.(12)
ஓ! பாரதர்களின் தலைவா, நான் இப்போது தீய மற்றும் கொடூர மனிதனின் குறியீடுகளைக் குறித்துச் சொல்லியிருக்கிறேன். அத்தகையவன் எப்போதும் ஞானியால் தவிர்க்கப்பட வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(13)
சாந்திபர்வம் பகுதி – 164ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |