Monday, May 07, 2018

பிராமண விதிமுறைகள்! - சாந்திபர்வம் பகுதி – 165

Eternal injunction for a Brahmana! | Shanti-Parva-Section-165 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 35)


பதிவின் சுருக்கம் : பிராமணர்கள் தொடர்புடைய நித்திய விதிமுறைகளை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...


Eternal injunction for a Brahmana! | Shanti-Parva-Section-165 | Mahabharata In Tamil

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, (கள்வர்களால்) பொருள் கொள்ளையடிக்கப்பட்டவர்களும், வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுபவர்களும், வேதங்கள் அனைத்தையும் நன்கறிந்தவர்களும், அறத்தகுதியை ஈட்ட விரும்புபவர்களும், ஆசான்களுக்கும், பித்ருக்களுக்கும் உரிய தங்கள் கடமைகளை வெளிப்படுத்துபவர்களும், சாத்திரங்களையும் ஓதுவதிலும், கற்பதிலும் தங்கள் நாட்களைக் கடத்துபவர்களுமான பக்திமிக்க ஏழை பிராமணர்களுக்கு, செல்வமும், அறிவும் கொடுக்கப்பட வேண்டும்[1].(1,2) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, ஏழ்மையில் இல்லாத பிராமணர்களுக்குத் தக்ஷிணை[2] மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். (தங்கள் பாவச் செயல்களின் விளைவால்) பிராமண நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு வேள்விப் பீடத்தின் எல்லைகளுக்கு வெளியே சமைக்கப்படாத உணவு கொடுக்கப்பட வேண்டும்[3].(3) வேதங்களும், பெருங்கொடைகளுடன் கூடிய வேள்விகள் அனைத்தும் பிராமணர்களே ஆகும்[4]. அற உந்துதல்களால் தூண்டப்படும் அவர்கள் வேள்விகளைச் செய்வதில் ஒருவரையொருவர் விஞ்சவே விரும்புகின்றனர். எனவே, மன்னன் பல்வேறு வகைகளிலான மதிப்புமிக்கச் செல்வத்தை அவர்களுக்குக் கொடைகளாகக் கொடுக்க வேண்டும்.(4) மூன்று வருடங்கள், அல்லது அதற்கு மேலும் தன் குடும்பத்திற்கு உணவூட்டும் வகையில் போதுமான கிடங்குகளைக் கொண்ட பிராமணன், சோமத்தைப் பருகத் தகுந்தவனாவான்[5].(5)


[1] "பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில், ஆசான்கள் தாங்கள் கொடுக்கும் கல்விக்கு வெகுமதியாக எந்தக் கட்டணத்தையும் சீடர்களிடம் வசூலிப்பதில்லை. குருதக்ஷிணை என்ற இறுதிக் கட்டணம் கேட்கத்தக்கது என்பதில் ஐயமில்லை, இருப்பினும், அதையும் அந்தச் சீடனின் கல்வி நிறைவு பெற்ற பிறகே கேட்க முடியும். அறிவைப் பணத்திற்கு விற்பது பெரும் பாவமாகும். இந்த நாள் வரையில் உள்ளூர் பாடசாலைகளில் கல்வி முற்றிலும் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. மேலும் ஆசான்கள் தங்கள் சீடர்களுக்கு {கல்வி கற்கும் காலமெல்லாம்} உணவும் அளிக்கிறார்கள். ஆசான்களுக்குப் பிரதி உபகாரமாக மொத்த நாடும் ஈகையால் அவர்களை ஆதரிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலியின் மகாபாரதம் மொழிபெயர்க்கப்பட்ட காலத்தில் {1883-1896} உள்ளூர் பாடசாலைகளில் கல்வி இலவசமாகக் கொடுக்கப்பட்டது என்பது மிக அரிய தகவலே.

[2] "தக்ஷிணை என்பது வேள்விகளில் கொடுக்கப்படும் கொடை அல்லது பரிசாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "வாஹிர்வேதிசாகிருதம் Vahirvedichakrita என்பது சரியான உரை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] கும்பகோணம் பதிப்பில், "அரசன் எல்லா ரத்தினங்களையும், யோக்யதைக்குத்தக்கபடி கொடுக்க வேண்டும். தக்ஷிணைகளுடன் கூடியவையும் அன்னத்துடன் கூடியவையுமான யாகங்கள் பிராமணர்களின் பொருட்டே கொடுக்கத்தக்கவையாகும்" என்றிருக்கிறது.

[5] "அஃதாவது, இத்தகைய மனிதன், தேவர்களுக்குக் காணிக்கை அளிக்கப்படுவதும், வேள்வி செய்பவனாலும், புரோகிதர்களாலும் பருகப்படுவதுமான சோமத்தைக் கொண்டு செய்யப்படும் மகத்தான வேள்வியைச் செய்யலாம் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அரியணையில் ஓர் அறம்சார்ந்த மன்னனே இருந்த போதிலும், எவராலும், அதிலும் குறிப்பாக ஒரு பிராமணனால் தொடங்கப்பட்ட வேள்வி, மதிப்பீடு செய்யப்பட்ட செலவில் நான்கில் ஒரு பாகம் இல்லாததால் நிறைவடையாமல் இருந்தால்,(6) அப்போது மன்னன், அந்த வேள்வியை நிறைவு செய்வதற்காக, பெருமளவில் கால்நடைகளை வைத்திருப்பவனும், வேள்வி செய்யாமல் இருப்பவனும், சோமம் பருகுவதைத் தவிர்ப்பவனுமான ஒரு வைசியனின் சொந்தங்களிடமிருந்து {குடும்பத்திலிருந்து} செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம்.(7) ஒரு சூத்திரனுக்கு ஒரு வேள்வியைச் செய்யும் ஆற்றல் கிடையாது. எனவே, ஒரு மன்னன், நமது சூத்திர வீடு ஒன்றில் இருந்து (அத்தகைய காரியத்திற்காகச் செல்வத்தை) எடுத்துக் கொள்ளலாம்[6].(8) நூறு பசுக்களை வைத்திருந்தாலும் வேள்வி செய்யாதவன், ஆயிரம் பசுக்களை வைத்திருந்தாலும் வேள்வி செய்யாமல் தவிர்ப்பவன் ஆகியோரின் சொந்தங்களிடம் இருந்து மன்னன் எந்தத் ஐயுணர்வுமின்றிச் செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம்.(9) ஈகை பயிலாத அத்தகையவனின் செல்வத்தை மன்னன் எப்போதும் வெளிப்படையாகவே எடுக்க வேண்டும். இவ்வழியில் செயல்படுவதால் அந்த மன்னன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(10)

[6] "பர்துவான் மொழிபெயர்ப்பாளர், நா nah என்ற பொருளால் தவறாக வழிநடத்தப்பட்டு, இந்த வரி ஒரு சூத்திரனைக் கொள்ளையடிக்க உத்தரவிடுவதாகப் பொருள் கொள்கிறார். உண்மையில், இங்கே நா என்பது நமது என்பதற்கு இணையானதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அரசன் விசேஷமாகத் தர்மிஷ்டனாயிருக்கும்பொழுது, யாகஞ்செய்யும் பிராம்மணனுக்கு யாகமானது ஓர் அம்சத்தால் தடைப்பட்டிருக்குமாகில், எந்த வைஸ்யன் பல பசுக்களுள்ளவனும், யாகங்களை விட்டவனும், ஸோம்பானஞ்செய்யாதவனுமாயிருக்கிறானோ அவனுடைய குடும்பத்திலிருந்து அந்தப் பொருளை யாகத்திற்கு வேண்டி அவ்வரசன் அபஹரிக்கலாம். சிறிது குற்றமுள்ள சூத்திரனுடைய வீட்டிலிருந்து பொருளை இஷ்டம் போல் அபஹரிக்கலாம். சூத்திரனுக்கு வீட்டில் சொந்தமான பொருளொன்றுமில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஏதோ ஒரு பொருள் குறைவதால் ஒரு வேள்வி பாதிப்படையலாம். அது குறிப்பாக ஒரு பிராமணனின் வேள்வியாக இருந்தால், தர்மத்தைப் பின்பற்றுபவனான ஒரு மன்னன், பல விலங்குகளைக் கொண்டவனும், ஆனால் வேள்விகளைச் செய்யாமலோ, சோமம் பருகாமலோ இருப்பவனுமான ஒரு வைசியனின் வீட்டில் இருந்து அந்தப் பொருளை எடுத்துக் கொள்ளலாம். மன்னன், அந்த வேள்வியின் காரியத்திற்காகத் தன் வீட்டில் இருந்தே அந்தப் பொருளை எடுக்கலாம். தன் {மன்னனின்} வீட்டில் ஒரு சூத்திரனுக்குச் சொந்தமானது என்று ஏதுமில்லை. எனவே, ஒரு சூத்திரனின் வீட்டில் இருந்து தான் விரும்பும் எந்தப் பொருளையும் மன்னன் எடுத்துக் கொள்ளலாம்" என்றிருக்கிறது.

நான் சொல்வதை இன்னும் கேட்பாயாக. எந்தப் பிராமணன் இல்லாமையால் ஆறு வேளை உணவைத் தவிர்த்திருப்பானோ[7], அவன் நாளைக்கான சிந்தனை ஏதுமில்லாமல் இன்றைய காரியத்தில் மட்டுமே கவனம் கொள்ளும் மனிதனின் விதிப்படி {அஸ்வஸ்த விதிப்படி}[8], உமித் தொட்டியில், அல்லது களத்தில், அல்லது தோட்டத்தில், அல்லது ஒரு தாழ்ந்த மனிதனின் வேறு எந்த இடத்தில் இருந்தும் கூட ஒரே ஒரு வேளைக்குத் தேவையான உணவை மட்டும் அனுமதியில்லாமல் எடுத்துக் கொள்ளலாம். எனினும், கேட்கப்பட்டாலும், கேட்கப்படாவிட்டாலும் இந்தத் தன் செயலைக் குறித்து மன்னனுக்குத் தெரிவிக்க வேண்டும்.(11,12) மன்னன் கடமையை அறிந்தவனாக இருந்தால், அத்தகைய பிராமணனுக்கு எந்தத் தண்டனையும் வழங்கக்கூடாது. அவன் ஒரு பிராமணன், ஒரு க்ஷத்திரியனின் குற்றத்தினால் மட்டுமே பசியால் பீடிக்கப்படுகிறான் என்பதை நினைவுகூர வேண்டும்[9].(13) மன்னன் ஒரு பிராமணனின் கல்வி மற்றும் நடத்தையை உறுதி செய்து கொண்டு, அவனுக்கு வாழ்வாதாரத்தை அளித்து, தன் மடியில் பிறந்த பிள்ளையைப் பாதுகாக்கும் ஒரு தந்தையைப் போலவே அவனைப் பாதுகாக்க வேண்டும்.(14) ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒருவன் (விலங்கு அல்லது சோம வேள்வியைச் செய்ய முடியாதவனாக இருந்தால்} வைசியாநர {வைஸ்வாநரி} வேள்வியைச் செய்ய வேண்டும். அறமறிந்தோர், மாற்றாக விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறையானது, அறத்தை அழிக்காது என்று சொல்கின்றனர்.(15)

[7] "அதாவது முழுமையாக மூன்று நாள் உணவில்லாமல் இருந்தவன் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[8] "இங்கே சொல்லப்படுவது, நாளையைக் குறித்துச் சிந்திக்காமல் இன்று மட்டுமே உணவை அளிக்கும் அஸ்வஸ்தன விதான Acwastana vidhaana விதியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[9] "ஒரு பிராமணன் பசியால் வாடுவதற்கு, மன்னர்கள் பசிக்கு அளிக்க வேண்டிய தங்கள் கடமையைப் புறக்கணிப்பதே காரணம் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

விஸ்வதேவர்கள், சத்யஸ்கள், பிராமணர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர், துயர்மிக்கக் காலங்களில் மரணத்திற்கு அஞ்சி, சாத்திரங்களில் மாற்றாக விதிக்கப்பட்டிருக்கும் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்வதில் எந்த ஐயுணர்வு கொள்வதில்லை.(16) எனினும், எந்த மனிதன் தொடக்க நிலையில் வாழ இயன்றவனாக இருப்பினும், மாற்றைக் கைக்கொள்கிறானோ அவன் தீய மனிதனாகக் கருதப்படுகிறான், மேலும் அவன் ஒருபோதும் சொர்க்கத்தில் எந்த இன்பத்தையும் அடைய மாட்டான்.(17) வேதங்களை அறிந்தவனான ஒரு பிராமணன், ஒரு மன்னனிடம் தன் சக்தியையும், அறிவையும் குறித்து ஒருபோதும் பேசக்கூடாது. (இஃதை ஒரு மன்னன் தானே உறுதி செய்ய வேண்டும்).(18) மேலும் ஒரு பிராமணனின் சக்தியையும், மன்னனின் சக்தியையும் ஒப்பிட்டால், முன்னவனே {பிராமணனே} பின்னவனை {மன்னனை} விட மேன்மையானவனாக எப்போதும் காணப்படுவான்.(19) இந்தக் காரணத்தினாலேயே பிராமணர்களின் சக்தியை மன்னன் தாங்கிக் கொள்வதோ, தடுப்பதோ அரிதானதாக இருக்கும். பிராமணன் படைப்பாளனாகவும், ஆட்சியாளனாகவும், விதிசமைப்பவனாகவும், தேவனாகவும் கருதப்படுகிறான்.(20)


ஒரு பிராமணனிடம் இழிமொழியோ, வெற்றுப் பேச்சுக்களோ பேசப்படக்கூடாது. க்ஷத்திரியன் தன் கடினங்கள் அனைத்தையும் தன் கரங்களின் வலிமையாலேயே கடக்க வேண்டும்.(21) வைசியனும், சூத்திரனும் தங்கள் கடினங்களைச் செல்வத்தின் மூலம் வெல்ல வேண்டும்; பிராமணன் மந்திரங்களாலும், ஹோமங்களாலும் வெல்ல வேண்டும். கன்னிகை, இளம்பெண், மந்திரங்களை அறியாதவன், அறியாமை கொண்ட அற்பன்,(22) அல்லது தூய்மையற்றவன் ஆகிய இவர்கள் வேள்வி நெருப்பில் காணிக்கைகளை ஊற்றத்தகுந்தவர்களல்ல {ஆகுதி அளிக்கத்தக்கவர்களல்ல}. இவர்களில் எவராவது அவ்வாறு செய்தால், யாருக்காக அதைச் செய்தார்களோ அவர்களோடு சேர்ந்து அவனோ, அவளோ, நிச்சயம் நரகத்தில் வீழ்வார்கள். இதன் காரணமாகவே, வேதங்களை அறிந்தவனும், வேள்விகள் அனைத்திலும் திறம்பெற்றவனுமான ஒரு பிரமாணனைத் தவிர வேறு எவனும், வேள்விக் காணிக்கைகளை ஊற்றுபவனாகக் கூடாது.(23) வேள்வி நெருப்பைத் தூண்டியவனுக்கு, {வேள்வியில்} அர்ப்பணிக்கப்பட்ட உணவைத் தக்ஷிணையாகக் கொடுக்கவில்லையெனில் அவன் வேள்வி நெருப்பைத் தூண்டுபவனாக மாட்டான் என்று சாத்திரம் அறிந்தோர் சொல்கின்றனர்.(24) ஒருவன், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, உரியஅர்ப்பணிப்புடன் (சாத்திரங்களில் சுட்டிக்காட்டப்படும்) தகுந்த செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். எந்த வேள்விகளில் தக்ஷிணை கொடுக்கப்படவில்லையே, அந்த வேள்வியின் தேவர்களை ஒருவன் ஒருபோதும் வணங்கக்கூடாது[10].(25)

[10] கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், தேவர்களை வணங்கக்கூடாது என்பது போன்ற வரிகள் தென்படவில்லை.

தக்ஷிணையுடன் நிறைவு செய்யப்படாத ஒரு வேள்வியானது, (புண்ணியத்தை உண்டாவக்குவதற்குப் பதில்) ஒருவனுடைய பிள்ளைகள், விலங்குகள் மற்றும் சொர்க்கத்திற்கு அழிவையே உண்டாக்கும். அத்தகைய ஒரு வேள்வி ஒருவனுடைய புலன்கள், புகழ், சாதனைகள், ஆயுள் ஆகியவற்றை அழிக்கும்.(26) பருவகாலத்தில் {மாதவிடாய் காலத்தில்} உள்ள பெண்களுடன் கிடக்கும் பிராமணர்கள், அல்லது வேள்விகளை ஒருபோதும் செய்யாதவர்கள், அல்லது வேதங்களை அறியாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செயல்பாட்டில் சூத்திரர்களாகவே கருதப்படுகிறார்கள்[11].(27) ஒரு சூத்திரப் பெண்ணை மணந்து கொண்ட பிராமணன், நீருக்காக ஒரே ஒரு கிணறு மட்டுமே கொண்ட ஒரு கிராமத்தில் பனிரெண்டு வருடங்கள் வசித்தால், அவன் செயல்பாட்டில் சூத்திரனாகிறான்.(28) திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு கன்னிப்பெண்ணைத் தன் படுக்கைக்கு அழைக்கும் பிராமணன், மதிக்கத்தக்கவன் என்றெண்ணி ஒரு சூத்திரனுடன் ஒரே பாயில் அமர்ந்த பிராமணன், காய்ந்த புற்களாலான படுக்கையில் ஏதாவதொரு க்ஷத்திரியன் அல்லது வைசியனின் அருகிலும் அமர்ந்து, அவனையும் அதே வகையில் மதிக்க வேண்டும். இவ்வழியில் ஒருவன் தூய்மையடைகிறான். ஓ! மன்னா, இது குறித்து என் வார்த்தைகளைக் கேட்பாயாக.(29) தாழ்ந்த வகையைச் சேர்ந்த ஒருவனுக்குத் தொண்டாற்றியோ, அல்லது ஒரே விளையாட்டு விளையாடியோ, அல்லது ஒரே படுக்கையில் கிடந்தோ ஓர் இரவைக் கழிப்பதால் ஒரு பிராமணனுக்கு உண்டாகும் பாவமானது, காய்ந்த புற்களாலான படுக்கையில் ஒரு க்ஷத்திரியன், அல்லது ஒரு வைசியனின் பின்னால் மூன்று வருடங்கள் தொடர்ந்து அமர்வதன் மூலம் தூய்மையடைகிறது.(30)

[11] "பம்பாய் பதிப்பில் இந்த வரி வேறு வகையில் இருக்கிறது" எங்கு கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எந்தச் சில பிராம்மணர்கள் ரஜஸ்வலையுடன் சேர்ந்தவர்களோ, எவர்கள் அக்னியை விட்டவர்களோ, எவர்களின் குலம் வேதமோதுபவர்களில்லாததோ அவர்கள் யாவரும் சூத்திரனின் செய்கையுள்ளவர்களாகிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மாதவிடாயில் உள்ள பெண்களுடன் இருப்பவர்கள், வேள்வி நெருப்பில்லாதவர்கள், வேதங்களை அறியாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சூத்திரர்களின் தர்மத்தைப் பின்பற்றுகிறார்கள்" என்றிருக்கிறது.

கேலிக்காகப் பேசப்படும் பொய் பாவமாகாது; ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு பெண்ணிடமோ, திருமணத்தின்போதோ, தன் ஆசானின் நன்மைக்காகவோ, தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காகவோ சொல்லப்படும் பொய்களும் பாவமாகாது. இந்த ஐவகைப் பொய்களும் பாவமாகாது என்று சொல்லப்படுகின்றன.(31) இழிதொழில் செய்வோனிடம் இருந்தும் கூட, அர்ப்பணிப்பு மற்றும் மதிப்புடன் கூடிய ஒருவனால் பயன்நிறைந்த அறிவை அடையமுடியும். ஒருவன் தங்கத்தைத் தூய்மையற்ற ஓர் இடத்தில் இருந்தும் எந்த ஐயுணர்வு இன்றி எடுக்கலாம். தன் பாலினத்தில் {பெண்களில்} ரத்தினமான ஒரு பெண்ணை ஒரு தீய இனத்தில் இருந்தும்கூட (மனைவியாக) எடுத்துக் கொள்ளலாம். நஞ்சில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அமுதம் பருகப்படலாம் எனும்போது; சாத்திரங்களின் படி பெண்கள், ரத்தினங்கள் மற்றும் பிற மதிப்புமிக்கப் பொருட்கள், தண்ணீர் ஆகியனவும் தூய்மையற்றவையல்ல.(33) பிராமணர்கள் மற்றும் பசுக்களின் நன்மைக்காகவும், வர்ணக்கலப்பேற்படும் சந்தர்ப்பங்களிலும், ஒரு வைசியன் கூடத் தன் பாதுகாப்புக்காக ஆயுதங்களை எடுக்கலாம்.(34) மதுபானம் பருகுவது, ஒரு பிராமணனைக் கொல்வது, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துவது ஆகிய பாவங்கள் தெரிந்து செய்யப்பட்டால் அதற்கான பாவக்கழிப்பு {பரிகாரம்} ஏதும் இல்லை. அவர்களுக்கான ஒரே பாவக்கழிப்பு மரணமேயாகும்.(35)

தங்கத்தைக் களவாடுவது, ஒரு பிராமணனின் உடைமையைக் களவாடுவது ஆகியவற்றுக்கும் அதேயே {மரணத்தையே பரிகாரமாகச்} சொல்லலாம். மதுபானம் பருகுவது, கலவியிலிருந்து விலக்கப்பட்டோருடன் கலவி கொள்வது,(36) வீழ்ந்தோருடன் கலப்பது, (பிற மூன்று வகையினரில் ஒருவன்) ஒரு பிராமணிப் பெண்ணுடன் கலவி கொள்வது ஆகியவற்றின் மூலம் அவன் தவிர்க்கவேமுடியாத அளவுக்கு வீழ்கிறான்.(37) வீழ்ந்தோருடன் வேள்வி காரியங்கள், கல்வி மற்றும் கலவியில் ஒரு முழு வருடம் கலந்திருந்தால், அவன் வீழ்ந்தவனாகிறான் {பதிதனாகிறான்}. எனினும், வீழ்ந்தோருடன் ஒருவன் ஒரே வாகனத்தில் செல்வது, ஒரே இருக்கையில் அமர்வது, ஒரே வரிசையில் உண்பது ஆகிய கலப்பினால் அவன் வீழ்ந்தவனாகமாட்டான்.(38) மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து முக்கியப் பாவங்களைத் தவிர்த்து, மற்ற பாவங்கள் அனைத்திற்கும் பாவக்கழிப்புகள் {பரிகாரங்கள்} கொடுக்கப்பட்டிருக்கின்றன. விதிப்படி அந்தப் பாவங்களுக்கான பாவக்கழிப்புகளைச் செய்த பிறகு, ஒருவன் மீண்டும் அவற்றில் ஈடுபடக்கூடாது.(39) இந்த ஐந்து பாவங்களில் முதல் மூன்று பாவங்களில் (மதுபானம் பருகுவது, ஒரு பிராமணனைக் கொல்வது, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தல்) குற்றவாளிகளாக இருப்போரின் வழக்கில், அவர்கள் இறந்து அவர்களது ஈமச்சடங்குகள் செய்யப்படாமல் இருந்தாலும்கூட (உயிரோடு இருக்கும்) அவர்களது சொந்தங்கள் உணவை எடுத்துக் கொள்வதிலோ, ஆபரணங்களை அணிந்து கொள்வதிலோ எந்தத் தடையும் இல்லை. உயிரோடு இருக்கும் சொந்தங்கள் அத்தகைய சந்தர்ப்பங்களில் இதுபோன்ற காரியங்களில் எந்த ஐயுணர்வு கொள்ளக்கூடாது.(40)

உண்மையில், அந்தப் பாவிகள் பாவத்தணிப்புச் செய்வது வரை, அறவோர் அவர்களுடன் பேசவும் கூடாது[12]. பாவம் நிறைந்து செயல்பட்ட ஒரு மனிதன், அதற்பிறகு அறம்சார்ந்து நடந்தும், தவங்களின் மூலமும் தன் பாவத்தை அழிக்க வேண்டும்.(41) ஒரு திருடனைத் திருடன் என்று அழைப்பதால் ஒருவன் திருட்டின் பாவத்தை இழைக்கிறான். எனினும், திருடனல்லாத ஒருவனைத் திருடன் என்று அழைப்பதன் மூலம் ஒருவன் திருட்டின் இரண்டு மடங்கு பாவத்தை இழைக்கிறான்.(42) கற்பை இழக்கும் கன்னி பிரம்மஹத்தியின் {பிராமணனைக் கொன்ற பாவத்தில்} நான்கில் மூன்று பாகப் பாவத்தை செய்தவளாகிறாள், அதேவேளையில் அவளது கற்பழித்தவன் பிரம்மஹத்தியில் நான்கில் ஒரு பாகப் பாவத்தை செய்தவனாகிறான்.(43) பிராமணர்களை அவதூறு செய்வதன் மூலம், அல்லது அவர்களைத் தாக்குவதன் மூலம் ஒருவன் நூறு வருடங்கள் புகழ்க்கேட்டில் மூழ்குகிறான்.(44) ஒரு பிராமணனைக் கொல்வதால் ஒருவன் ஆயிரம் வருடங்களுக்கு நரகில் மூழ்குகிறான். எனவே, ஒருவரும் பிராமணனை இழித்துப் பேசவோ, கொல்லவோ கூடாது.(45)

[12] "இந்த 41ம் சுலோகம் மூன்று வரிகளைக் கொண்டதாகும். இதில் வங்கப்பதிப்பிலும், பம்பாய் பதிப்பிலும் உள்ள இரண்டாவது வரி பிழையுள்ளதாகத் தெரிகிறது. நீலகண்டர் தன் குறிப்புகளில் கொடுத்துள்ள குறிப்பு சிறப்பாக இருக்கிறது. நான் அதையே பின்பற்றுகிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலியில் வரும் 40 மற்றும் 41ம் சுலோகங்களின் உரை கும்பகோணம் பதிப்பில், "பிராயச்சித்தத்திற்குத்தக்க விதியுடனிருந்து காலத்தால் திரும்பவும் அப்பாவத்தில் ருசியுள்ளவனாயிருக்கக்கூடாது. இவர்களில் முதல் மூன்று பேர்களைப் பற்றிப் பிரேதகாரியம் வந்திருக்குபொழுது (அவர்களின் ஞாதியிடமிருந்து) அன்னத்தையும் தனத்தையும் பெற்றுக் கொள்ளலாம். ஆலோசனை செய்ய வேண்டாம். இப்பாவமுள்ளவர்கள் அமாத்தியர்களானாலும் குருக்களானாலும் அவர்களைத் தர்மமுள்ளவன் தர்மப்படி விலக்க வேண்டும். இவர்கள் பிராயச்சித்தங்களைச் செய்து கொள்ளாமல் ஸஹவாஸஞ் செய்யத்தக்கவர்களல்லர். அதர்மத்தைச் செய்த மனிதன் தர்மத்தாலும் தவத்தாலும் பாவத்தை விலக்க வேண்டும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இந்த மூன்று பேர்கள் இறப்பதில் அவர்களின் ஞாதிகளுக்குத் தீட்டு இல்லை; ஆகையால், அவர்களிடமிருந்து அன்னம் முதலியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மேற்குறிப்பிட்ட மூன்று பாவங்களைச் செய்தோரின் ஈமச்சடங்குகளில், வீழாதவர்களின் ஈமச்சடங்குகளில் போலல்லாமல் ஒருவன் ஒருபுறமாக ஈமக் காணிக்கைகள் அளிக்கப்படுகிறதா இல்லையா என்பதில் கவலை கொள்ள வேண்டாம்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில் பிபேக்திப்ராய், "இந்த ஸ்லோகம் குழப்பமுள்ளதாகவும், விளக்கம் தேவைப்படுவதாகவும் தெரிகிறது. வீழாதவர்களுக்கு, ஈமக்காணிக்கைகள் நேரடியாக நெருப்பில் அளிக்கப்படும். அது குறாக்கவோ, ஒரு புறமாகவோ கொடுக்கப்பட்டால் அவை நெருப்புக்கு வெளியே தரையில் விழலாம், அதனால் தீய ஆவிகள் அவற்றை உண்ணக்கூடும். மேலே குறிப்பிட்டதுபோல மதுபானம் அருந்தியோர், பிராமணனைக் கொன்றோர், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியோர் ஆகியோரே அந்த மூவராவர். இந்தப் பாவிகளுக்கு அஃது எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பது ஒரு பொருட்டே அல்ல" என விளக்குகிறார்.

ஒருவன் ஒரு பிராமணனை ஆயுதத்தால் தாக்கினால், அவனது காயத்தில் இருந்து பாய்ந்த குருதியில் நனைந்த மண்ணின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்களுக்கு அவன் நரகத்தில் வாழ வேண்டும்.(46) கருவைக் கொன்ற குற்றவாளி ஒருவன், பசுகளுக்காகவும், பிராமணர்களுக்காகவும் போரிட்டு அடையும் காயங்களால் மரணமடைந்தால் தூய்மையடைகிறான். அவன் சுடர்மிக்க நெருப்புக்குள் தன்னை வீழ்த்திக் கொள்வதன் மூலமும் தூய்மையடையலாம்[13].(47) மதுபானம் பருகுபவன், கொதிக்கும் மதுபானத்தைப் பருகுவதால் தூய்மையடைகிறான். அந்தச் சூடான பானத்தால் எரிக்கப்பட்டு அடையும் மரணத்தினால் அவன் மறுமையில் தூய்மையடைகிறான்[14]. இத்தகைய பாவத்தால் களங்கமடைந்த ஒரு பிராமணன், இத்தகைய போக்கின் மூலம் இன்ப உலகங்களை அடைவானேயன்றி வேறு வகையில் இல்லை.(48)

[13] "கருவைக் கொன்ற குற்றவாளி என்று வரும்போதெல்லாம், கருவைக் கொன்றதற்கு இணையான பாவங்கள் அனைத்தையும் குறிக்கிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, ஒரு பிராமணனைக் கொல்வதும் கருவைக் கொன்ற குற்றமே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ப்ரூணஹத்தி செய்தவன் யுத்தமத்தியில் ஆயுதங்கள் விழுந்து அடிபடுவதால் சுத்தி அடைவான்; அல்லது, ஜ்வாலையுள்ள அக்னியில் தன் சரீரத்தை ஹோமஞ்செய்ய வேண்டும்; அதனால் சுத்தி அடைவான்" என்றிருக்கிறது.

[14] "இந்த வரியைப் படிப்பதில் பொருள் வேறுபாடு ஏற்படுகிறது. மேற்கண்ட பதிப்பு, வங்க உரைகளைப் பின்பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. பம்பாய் பதிப்பில் பின்வருமாறு இருக்கிறது: "அவனது உடல் எரிக்கப்பட்டோ, மரணத்தின்மூலமோ அவன் தூய்மையடைகிறான்" என்றிருக்கிறது. பம்பாய் உரை பிழையுள்ளதாகத் தெரிகிறது. மதுபானம் பருகுவது பயங்கரமான ஐந்து பாவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே, வங்க உரையில் காணப்படும் கடும் விதியே சரியான உரையாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கள் குடித்த பிராம்மணனன், உஷ்ணமான கள்ளைக் குடித்து, அக்கள்ளால் சரீரம் நன்றாக எரிக்கப்படுமானால் அந்தப் பாவத்திலிருந்து விடுபடுகிறான்; அல்லது, மரணத்தை அடைந்து சுத்தி அடைகிறான்" என்றிருக்கிறது.

ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்திய தீய ஆன்மா கொண்ட இழிந்த அற்பன், கொதிக்கும் இரும்பு பெண் சிலையை அணைத்துக் கொள்வதன் விளைவால் ஏற்படும் மரணத்தின் மூலம் தூய்மையடைகிறான்.(49) அல்லது தன் அங்கத்தையும் {ஆண்குறியையும்}, விதைப்பையையும் வெட்டிக் கொண்டு அவற்றைத் தன் கரங்களில் ஏந்தியபடியே தென்மேற்காகச் சென்று அவன் தன் உயிரை விட வேண்டும்.(50) அல்லது, ஒரு பிராமணனுக்கு நன்மை செய்வதின் மூலம் மரணத்தைச் சந்தித்தும் அவன் தன் பாவத்தைக் கழுவிக் கொள்ளலாம். அல்லது ஒரு குதிரை வேள்வி, அல்லது கோஸவ வேள்வி, அல்லது அக்நிஷ்டோம {மருத்ஸோம} வேள்வி ஆகியவற்றைச் செய்து அவன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த மதிப்பை மீட்கலாம்.(51)

பிராமணனைக் கொன்றவன், பனிரெண்டு வருடங்களுக்குப் பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, கொல்லப்பட்டவனின் மண்டையோட்டை எப்போதும் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு அனைவருக்கும் தன் பாவத்தை அறிவிக்க வேண்டும்.(52) இவ்வழியைப் பின்பற்றித் தவங்களுக்கு அர்ப்பணிப்புடன் அவன் ஒரு தவசியின் வாழ்வை வாழ வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்ணை, அவள் நிலையை அறிந்தே கொன்றவனுக்கு இந்தப் பாவக்கழிப்பே கொடுக்கப்பட்டிருக்கிறது.(53) அத்தகைய பெண்ணை அறிந்தே கொல்பவன் பிரம்மஹத்தியைப் போன்று இருமடங்கு பாவம் செய்தவனாவான். மதுபானம் பருகியவன், அற்ப அளவே உணவை உண்டு, பிரம்மச்சரிய நோன்புகளைப் பயின்று, வெறுந்தரையில் உறங்கி,(54) அக்நிஷ்டோமத்துக்கு அடுத்த வேள்வியை மூன்று வருடங்களுக்கு மேல் செய்ய வேண்டும். பிறகு அவன் (ஒரு நல்ல பிராமணனுக்கு) ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுக்க வேண்டும். இவை யாவற்றையும் செய்வதால் அவன் தன் தூய்மையை மீண்டும் அடைவான்.(55)

ஒரு வைசியனைக் கொன்றால், அவன் இரண்டு வருடங்களுக்கு அத்தகைய வேள்வியைச் செய்து, நூறு பசுக்கள் மற்றும் ஒரு காளையைக் கொடையாகக் கொடுக்க வேண்டும். ஒரு சூத்திரனைக் கொன்றால், அவன் ஒரு வருடத்திற்கு அத்தகைய வேள்வியைச் செய்து, நூறு பசுக்களையும், ஒரு காளையையும் கொடையாகக் கொடுக்க வேண்டும். ஒரு நாய், அல்லது கரடி, அல்லது ஒட்டகம் ஆகியவற்றைக் கொன்ற ஒருவன், ஒரு சூத்திரனைக் கொன்றதற்கு விதிக்கப்பட்ட அதே தவத்தைச் செய்ய வேண்டும்.(56) ஓ! மன்னா, பூனை, காடை, தவளை, காக்கை, பாம்பு, எலி ஆகியவற்றைக் கொன்றால், ஒருவன் விலங்கைக் கொன்ற பாவத்தை அடைகிறான் என்று சொல்லப்படுகிறது.(57) நான் இப்போது பிறவகைப் பாவக்கழிப்புகளை வரிசையாகச் சொல்லப் போகிறேன். சிறு பாவங்கள் அனைத்திற்கும், ஒருவன் வருந்த வேண்டும், அல்லது ஒருவருடம் ஏதாவது நோன்பை நோற்க வேண்டும்.(58) வேதங்களை அறிந்த ஒரு பிராமணனின் மனைவியோடு கலவி கொண்ட ஒருவன், நாளின் நான்காம் பகுதியில் சிறு உணவை மட்டுமே எடுத்துக் கொண்டு மூன்று வருடங்கள் பிரம்மச்சரிய நோன்பிருக்க வேண்டும். (தன் மனைவியல்லாத) வேறு பெண்ணுடன் கலவி கொண்ட ஒருவன் அதே போன்ற நோன்பை இரு வருடங்கள் இருக்க வேண்டும்.(59) ஒரு பெண்ணின் தோழமையில், அவள் அமர்ந்த அதே இடத்தில் அவளோடு அமர்ந்து, அல்லது அதே இருக்கையில் அமர்ந்து இருந்தால், ஒருவன் மூன்று நாட்கள் நீரை மட்டுமே உண்டு வாழ வேண்டும். இதைச் செய்வதன் மூலம் அவன் தன் பாவத்திலிருந்து தூய்மையடையலாம். சுடர்மிக்க நெருப்பை (தூய்மையற்ற பொருட்களை வீசுவதன் மூலம்) களங்கப்படுத்துபவனுக்கும் அதே பாவக்கழிப்பே சொல்லப்பட்டிருக்கிறது.(60)

ஓ! குரு குலத்தோனே, போதுமான காரணமின்றித் தன் தந்தை, அல்லது தாய், அல்லது ஆசான் ஆகியோரைக் கைவிடுபவன், நிச்சயம் வீழ்ந்தவனாவான் என்பதே சாத்திரங்களின் முடிவு. பிறமனையுறவு கொண்ட {விபச்சாரம் செய்த} குற்றவாளியான ஒரு மனைவி, அல்லது சிறையில் அடைக்கப்பட்ட ஒருவன் ஆகியோருக்கு விதிப்படி உணவு மற்றும் உடைகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். உண்மையில், பிறமனையுறவு குற்றத்தில் ஓர் ஆணுக்கு விதிக்கப்பட்ட நோன்புகள், அதே குற்றத்தைச் செய்த ஒரு பெண்ணாலும் நோற்கப்பட வேண்டும்.(61,62) மேன்மையான வர்ணத்தைச் சேர்ந்த கணவனைக் கைவிட்டு, (தாழ்ந்த வகையைச் சேர்ந்த) ஒரு தீயவனுடன் கலவி புரிந்த ஒரு பெண், ஒரு பெரிய பார்வையாளர் கூட்டத்தைக் கொண்ட ஒரு பொதுவான இடத்தில் வைத்து நாய்களால் கடிக்கச் செய்யப்பட வேண்டும்.(63) ஒரு ஞானமிக்க மன்னன், பிறமனையுறவு கொண்ட ஆணை, பழுக்கக் காய்ச்சிய இரும்புப் படுக்கையில் கிடத்தி, அதன் கீழே விறகுகளை வைத்து அந்தப் பாவியை எரிக்க வேண்டும்.(64) ஓ! மன்னா, பிறமனையுறவு கொண்ட பெண் குற்றவாளிக்கும் இதே தண்டையே விதிக்கப்பட்டிருக்கிறது. எந்தத் தீய பாவி, தனக்குச் சொல்லப்பட்ட பாவக்கழிப்பை ஒரு வருடத்திற்குள் செய்யவில்லையோ, அவனை அந்தப் பாவத்தைப் போன்ற இரு மடங்கு பாவம் பீடிக்கும்.(65)

அத்தகைய மனிதனோடு தொடர்புடைய ஒருவன் இரண்டு வருடங்கள் தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துப் பிச்சையெடுத்து வாழ்ந்து இந்தப் பூமியில் உலவ வேண்டும். நான்கு வருடங்களாக ஒரு பாவியோடு தொடர்புடைய ஒருவன், ஐந்து வருடங்களுக்கு அத்தகைய வாழ்வு முறையைப் பின்பற்றி வாழ வேண்டும்.(66) அண்ணனுக்கு முன்பு தம்பி திருமணம் செய்து கொண்டால், அந்தத் தம்பி, அண்ணன், அந்தப் பெண் ஆகிய மூவரும், அத்தகைய திருமணத்தின் விளைவால் வீழ்ந்தவர்களாவார்கள்.(67) இவர்கள் அனைவரும், வேள்வி நெருப்பைப் புறக்கணித்தவனுக்குப் பரிந்துரைக்கப்படும் நோன்புகளை நோற்க வேண்டும், அல்லது, ஒரு மாதத்திற்குச் சாந்திராயண[15] நோன்பைப் பயில வேண்டும், அல்லது, வேறு எந்த வலிமிக்க நோன்பையாவது பயின்று தன் பாவத்திலிருந்து தூய்மையடைய வேண்டும்.(68) திருமணம் செய்து கொண்ட தம்பி, திருமணமாகாத தன் அண்ணனுக்குத் தன் மனைவியை {மருமகளாகக்} கொடுக்க வேண்டும். அதன் பிறகு தன் அண்ணனின் அனுமதியோடு, அவன் தன் மனைவியைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்[16]. இத்தகைய வழிமுறைகளின் மூலம் அந்த மூவரும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடையலாம்.(69) ஒரு பசுவைத் தவிர வேறு விலங்குகளைக் கொல்வதன் மூலம் அந்தக் கொலையாளி களங்கப்பட்டவனாக மாட்டான். தாழ்ந்த விலங்குகள் அனைத்தின் மீதும் மனிதனுக்கு ஆளுமை உண்டு என்பதைக் கற்றோர் அறிவர்.(70)

[15] பிபேக்திப்ராய் பதிப்பினுடைய அடிக்குறிப்பில், "சந்திரனின் அயணத்தைப் பொறுத்து இந்த நோன்பு பின்பற்றப்படுகிறது. ஒரு முழு நிலவு நாளில் {பௌர்ணமியில்} ஒருவன் பதினைந்து பிடி உணவே உண்ண வேண்டும். அதன் பிறகு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பிடி குறைய வேண்டும். புது நிலவு நாளுக்கு {அமாவாசைக்குப்} பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிடி அதிகரிக்க வேண்டும்" என்றிருக்கிறது.


[16] கும்பகோணம் பதிப்பில், "பரிவேத்தாவென்னும் அந்தத் தம்பியானவன், பரிவித்தியான தமையன் பொருட்டு விவாக்ஷஞ்செய்த அந்த ஸ்திரீயை மருமகளாக மரியாதையுடன் அளிக்க வேண்டும். தமையனால் அனுமதி கொடுக்கப்பட்டுத் தம்பியும் பிறகு அவளைப் பெற்றுக் கொள்ளலாம்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலும், "திருமணம் செய்து கொண்ட தம்பியானவன், திருமணமாகாதத் தன் அண்ணனுக்குத் தன் மனைவியை மருமகளாக அளிக்க வேண்டும். பிறகு அண்ணனின் அனுமதியோடு அவன் மீண்டும் அவளைப் பெற்றுக் கொள்ளலாம்" என்றிருக்கிறது.

ஒரு பாவி, தன் கரத்தில் சாமரத்தையும்[17], மண்குடத்தையும் ஏந்திக் கொண்டு தன் பாவத்தை அறிவித்துக் கொண்டே அலைய வேண்டும். அவன் ஒரு நாளைக்கு, ஏழு குடும்பங்களில் மட்டுமே பிச்சையெடுத்து,(71) அவ்வாறு ஈட்டப்பட்டதைக் கொண்டு மட்டுமே வாழ வேண்டும். இவ்வாறு பனிரெண்டு நாட்கள் செய்வதன் மூலம் அவன் தன் பாவத்தில் இருந்து தூய்மையடைவான். தன் கரத்தில் சாமரத்தை ஏந்த முடியாதவன், இந்த நோன்பைப் பயிலும்போது, (மேற்குறிப்பிட்டவாறு) பிச்சையெடுக்கும் நோன்பை ஒரு முழு வருடத்திற்கு நோற்க வேண்டும்.(72) மனிதர்களுக்கு மத்தியில் இத்தகைய பாவக்கழிப்புகளே சிறந்தவை. ஈகை பயில இயன்றவர்கள், இத்தகைய வழக்குகள் அனைத்திலும் விதிக்கப்பட்ட ஈகையைப் பயில வேண்டும்.(73) நம்பிக்கையும், நன்னடத்தையும் கொண்டவர்கள், ஒரு பசுவை மட்டுமே கொடுப்பதால் தூய்மையடைவார்கள்.(74) நாய், பன்றி, மனிதன், சேவல், ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியையோ, உடல் கழிவுகளையோ உண்டாலும் சிறுநீரைக் குடித்தாலும் ஒருவன் புனித நூல் {பூணூல்} அணியும் நிகழ்வை {உபநயனத்தை} மீண்டும் செய்து கொள்ள வேண்டும்.(75) சோமம் பருகும் பிராமணன், மது அருந்தியவனின் வாயில் இருந்து மதுவின் மணத்தை நுகர்ந்தால், அவன் மூன்று நாளைக்கு வெண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும்.(76) அல்லது, மூன்று நாட்களுக்கு வெண்ணீரைக் குடித்தும், காற்றை உண்டும் வாழ வேண்டும். அறியாமையிலோ, மடமையினாலோ ஒருவனால், அதிலும் குறிப்பாக ஒரு பிராமணனால் செய்யப்படும் பாவங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் நித்திய விதிமுறைகளே இவை" என்றார் {பீஷ்மர்}"[18].(77)

[17] கும்பகோணம் பதிப்பில், "சமரீ மிருகத்தின் வாலைத் தரித்துக் கொண்டு (நாடக்கத்திற்குச் செல்லும் பிராமணன்) மண்பாத்திரத்தை எடுத்துக் கொண்டும் தன் கர்மத்தை வெளியிற் சொல்லிக் கொண்டும் ஏழுவீடுகளில் பிச்சை எடுக்க வேண்டும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "சமரீமிருகத்தின் வால்மயிரைத் தலையில் தரித்துப் பெண் வேஷம் பூண்டு நடிக்கும் பிராம்மணன்" என்பது பொருள் என்றுமிருக்கிறது.

[18] சாந்திபர்வம் பகுதி 164க்கும், 166க்கும் சற்றும் தொடர்பில்லாமல் இந்த 165ம் பகுதி இருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 165ல் உள்ள சுலோகங்கள் : 77

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்