The history of sword! | Shanti-Parva-Section-166 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 36)
பதிவின் சுருக்கம் : வாள் எவ்வாறு உண்டானது, அதன் ஆசான் யார் எனப் பீஷ்மரிடம் கேட்ட நகுலன்; வாளின் மூலம் உள்ளிட்ட வரலாற்றை நகுலனுக்குச் சொன்ன பீஷ்மர்...
The history of sword! | Shanti-Parva-Section-166 | Mahabharata In Tamil |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் செய்த} இந்த உரையாடல் முடிந்ததும், சாதனை செய்த வாள்வீரனான நகுலன், கணைப்படுக்கையில் கிடக்கும் குரு குலத்துப் பாட்டனிடம் இவ்வாறு கேள்வி கேட்டான்.(1)
நகுலன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, இவ்வுலகில் முதன்மையான ஆயுதமாக வில் கருதப்படுகிறது. எனினும், ஓ! மன்னா, வில் வெட்டப்படவோ, முறிக்கப்படவோ நேரும்போதும், குதிரைகள் கொல்லப்படவோ, பலவீனப்படவோ நேரும்போதும், வாளில் நல்ல பயிற்சி கொண்ட ஒரு நல்ல போர்வீரனால் தன் வாளின் மூலமாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதால், என்மனம் வாளையே விரும்புகிறது.(2,3) வாள் தரித்த வீரனால், பல வில்லாளிகளையும், கதாயுதங்கள் மற்றும் ஈட்டிகளைத் தரித்த பல எதிரிகளையும் தனியொருவனாகவே தாக்குப்பிடிக்க முடியும்.(4) எனக்கு இந்த ஐயம் இருக்கிறது. உண்மையை அறிந்து கொள்வதில் நான் ஆவல் கொள்கிறேன். ஓ! மன்னா, உண்மையில் போர்கள் அனைத்திலும் முதன்மையான ஆயுதம் எது?(5) வாளானது முதன்முதலாக எப்போது படைக்கப்பட்டது, என்ன நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டது? அந்த ஆயுதத்தின் முதல் ஆசான் யார்? ஓ3! பாட்டா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான் {நகுலன்}".(6)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நுண்ணறிவு கொண்ட மாத்ரி மகனின் {நகுலனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், வில் அறிவியலில் முற்றான திறம்படைத்தவரும், கணைப்படுக்கையில் நீண்டு கிடந்தவருமான அறம்சார்ந்த பீஷ்மர், திறம் மிக்கப் பயிற்சி கொண்டவனும், துரோணரின் சீடனுமான உயரான்ம நகுலனிடம் குறிப்பிடத்தக்க திறனை வெளிப்படுத்தும் வகையில், காதுக்கினிய உயிரெழுத்துகள் முறையாக அமைக்கப்பட்டதும், மகிழ்ச்சிமிக்கச் சொற்கள் நிறைந்ததுமான இந்தப் பதிலை அளித்தார்.(7-9)
பீஷ்மர் {நகுலனிடம்}, "ஓ! மாத்ரியின் மகனே, நீ என்னிடம் கேட்டதற்கான உண்மையைக் கேட்பாயாக. ஒரு செஞ்சுண்ண மலை போல உன் கேள்வியால் நான் உற்சாகம் அடைகிறேன்[1].(10) பழங்காலத்தில் இந்த அண்டம் முழுவதும் ஒரே நீர்ப்பரப்பாக, அசைவற்றதாக, வானமற்றதாக, இந்தப் பூமிக்கான இடம் ஏதுமில்லாததாக இருந்தது.(11) இருளில் மூழ்கி, உணர்ந்தறியமுடியாத வகையில் இருந்த அதன் தன்மை மிகப் பயங்கரமானதாக இருந்தது. முற்றான அமைதியின் ஆளுகையில் இருந்த அதன் பரப்பு அளவிடமுடியாததாக இருந்தது. சரியான நேரத்தில் (அண்டத்தின்) பெரும்பாட்டன் {பிரம்மன்} தன் பிறப்பை அடைந்தான்.(12) பிறகு அவன், காற்றையும், நெருப்பையும், பெரும் சக்தி கொண்ட சூரியனையும் உண்டாக்கினான். மேலும் அவன் வானத்தையும், சொர்க்கங்களையும், பாதாளங்களையும், பூமி, திசைகள்,(13) நிலவு, விண்மீன்கள், விண்மீன்கூட்டங்கள், கோள்கள் ஆகியவற்றுடன் கூடிய ஆகாயத்தையும், வருடம், பருவ காலங்கள், மாதங்கள், இரண்டு அரைத்திங்கள்கள்{பக்ஷங்கள்}, காலத்தின் சிறிய பிரிவுகள் ஆகியவற்றையும் உண்டாக்கினான்.(14)
[1] "நகுலனின் கேள்வி பீஷ்மருக்கு ஆவலைத் தூண்டியதால், அவரது காயங்களின் மூலம் இரத்தம் அதிகம் பாய்ந்ததை நீலகண்டர் விளக்குகிறார். எனவே பீஷ்மர் தன்னையே செஞ்சுண்ண மலையாக ஒப்பிட்டுக் கொள்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தாதுக்களுள்ள மலைபோன்ற நான் உன்னால் ஞாபகப்படுத்தப்பட்டவனாகிறேன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "யுத்தத்திலடிபட்டு ரத்தத்தால் நனைந்திருந்தலால், தாதுமயமான மலை உவமையாயிற்று" என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தெய்வீகப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, பிறகு, காணத்தக்க வடிவத்தை அடைந்து, (தன் விருப்ப சக்தியின் விளைவால்) பெரும் சக்தி கொண்ட சில மகன்களைப் பெற்றான்.(15) அவர்கள், மரீசி, {பிருகு}, அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர், அங்கிரஸ், வலிமையும் பலமுமிக்க ருத்திரன்[2],(16) பிரசேதஸ் ஆகியோர் ஆவர். இறுதியானவன் {பிரசேதஸ்} தக்ஷனைப் பெற்றான், அவன் {தக்ஷன்} அறுபது மகள்களைப் பெற்றான். பிள்ளைகளைப் பெறும் நோக்கம் கொண்ட மறுபிறப்பாள முனிவர்கள் அந்த மகள்கள் அனைவரையும் {மனைவியாக} எடுத்துக் கொண்டனர்.(17) அவர்களில் இருந்தே அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தும், தேவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் பல்வேறு வகைகளிலான ராட்சசர்கள்,(18) பறவைகள், விலங்குகள், மீன்கள், குரங்குகள், பெரும்பாம்புகள், காற்றிலும், நீரிலும் விளையாடும் பல்வேறு வகை இனங்களிலான கோழிகள்,(19) காய்கறிகள், முட்டையிடும் இனங்களும், பாலூட்டிகளும், கழிவுகளில் {வியர்வை, மலம், அழுகல் உள்ளிட்டவற்றில்} பிறக்கும் அனைத்தும் உயிரினங்களும் பிறந்தன. இவ்வழியிலேயே அசையும், மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் இருப்புக்கு வந்தது.(20)
[2] கும்பகோணம் பதிப்பில், "பிறகு, பூஜ்யரான பிதாமஹரானவர் உலகத்திலுள்ள ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு உத்தமமான தேஜஸுள்ள புத்திரர்களான மரீசியையும், ப்ருகுவையும், அத்ரியையும், புலஸ்திரையும், புலஹரையும், க்ரதுவையும், வஸிஷ்டர், அங்கிரஸ் இருவர்களையும், பரத்வாஜரையும் உண்டு பண்ணினார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
அண்டத்தின் பெரும்பாட்டன் {பிரம்மன்} இவ்வாறு அசையும், மற்றும் அசையாத உயிரினங்களை இருப்புக்கு இழைத்து, வேதங்களில் விதிக்கப்பட்ட அழிவில்லா அறத்தை {சாஸ்வத தர்மத்தை} அறிவித்தான்.(21) அந்த அறமானது, தேவர்கள், அவர்களுடைய ஆசான்கள், புரோகிதர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், மருத்துகள், அசுவினிகள்,(22) பிருகு, அத்ரி, அங்கிரஸ், சித்தர்கள், தவ வளம் கொண்ட கசியபர், வசிஷ்டர், கௌதர், அகஸ்தியர், நாரதர், பர்வதர்,(23) வாலகில்ய முனிவர்கள், பிரபாசர்கள் என்ற பெயர்களில் அறியப்பட்ட முனிவர்கள், சிகதர்கள், கிருதபர்கள், சோமவாயவ்யர்கள், வைஸ்வானர்கள், மரீசிபர்கள்,(24) ஆகிருஷதர்கள், ஹம்சர்கள், நெருப்பில் பிறந்தோர் {அக்னியோனிகள்}, வானப்ரஸ்தர்கள், பிருஸ்னிகள் ஆகியோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரும் பிரம்மனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தனர்.(25)
எனினும், தானவர்களில் முதன்மையானோர், பெரும்பாட்டனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல், கோபத்துக்கும், பேராசைக்கும் வசப்பட்டவர்களாக, அறத்திற்கு அழிவுண்டாக்கத் தொடங்கினர்.(26) அவர்கள் {அந்தத் தானவர்கள்} ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன், விரோசனன், சம்பரன், விப்ரசித்தி, பிரகலாதன், நமுசி, பலி ஆகியோராவர்.(27) இவர்களும், இன்னும் பல தைத்திய தானவர்களும், கடமை மற்றும் அறத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி, அனைத்து வகைத் தீச்செயல்களிலும் இன்புற்று விளையாடிக் கொண்டிருந்தனர்.(28) பிறப்பால் தேவர்களுக்கு இணையானவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்ட அவர்கள், தேவர்களையும், தூய நடத்தை கொண்ட தவசிகளையும் அறைகூவி அழைக்கத் தொடங்கினர்.(29) அவர்கள் அண்டத்தின் எந்த உயிரினத்திற்கும் ஒருபோதும் நன்மையையோ, அவர்களில் எவருக்கும் கருணையையோ காட்டவில்லை. நன்கு அறியப்பட்ட மூன்று வழிமுறைகளை அலட்சியம் செய்த அவர்கள், தண்டக்கோலை மட்டுமே தரித்துக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் பீடித்து அழிக்கத் தொடங்கினர்.(30)
உண்மையில், செருக்கால் நிறைந்திருந்த அந்த அசுரர்களில் முதன்மையானோர், பிற உயிரினங்களுடனான நட்புரீதியான அனைத்து தொடர்புகளையும் கைவிட்டனர். அப்போது, மறுபிறப்பாள தவசிகளுடன் கூடிய தெய்வீகப் பிரம்மன்,(31) நூறு யோஜனைகள் பரப்பளவுக்கு, பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தடாகத்தில் உள்ள தாமரை மலர்களைப் போலத் தன் பரப்பில் நட்சத்திரங்களைக் கொண்டதாகத் தெரிந்ததுமான இமயத்தின் இனிமைநிறைந்த சிகரத்திற்குச் சென்றான்.(32) ஓ! ஐயா, மலர்ந்திருக்கும் மரங்கள் அடர்ந்த காடுகளைக் கொண்ட அந்த மலைகளின் இளவரசனின் மீதிருந்த முதன்மையான தேவனான பிரம்மன், உலகின் காரியத்தை நிறைவு செய்வதற்காகச் சில காலம் தங்கியிருந்தான்.(33) ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், அந்தப் பலமிக்கத் தலைவன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி ஒரு மகத்தான வேள்வியைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.(34) வேள்வி செய்வதில் திறம்பெற்றவர்களும், விறகுகளையும், சுடர்மிக்க நெருப்பையும் கொண்டு, அது {வேள்வி} தொடர்பான செயல்கள் அனைத்தையும் செய்ய வல்லவர்களுமான முனிவர்கள் வேள்விப்பீடத்தை அலங்கரித்தனர்.(35)
வேள்விப் பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததன் விளைவால் அது {வேள்விப்பீடம்} மிக அழகாகத் தெரிந்தது. தேவர்களில் முதன்மையானோர் அனைவரும் அதில் {வேள்விப்பீடத்தில்} அமர்ந்தனர்.(36) மேலும் உயர்ந்த மறுபிறப்பாள முனிவர்களைக் கொண்ட சத்யஸ்கள் அனைவராலும் அந்த மேடை அலங்கரிக்கப்பட்டது. விரைவில் அந்த வேள்வியில் மிகப் பயங்கரமான ஒன்று நடந்ததாக முனிவர்களின் மூலம் நான் கேள்விப்பட்டேன்.(37) (வேள்வி நெருப்பில் இருந்து) ஆகாயத்தில் சிதறியிருக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் எழும் சந்திரனுக்கு ஒப்பான காந்தியுடன் கூடிய ஓர் உயிரினம் தன்னைச் சுற்றிலும் உள்ள தழல்களைச் சிதறடித்தபடி எழுந்தது.(38) அதன் நிறம் நீலத் தாமரை {கருங்குவளை} இதழ்களைப் போலக் கரியதாக இருந்தது. அதன் பற்கள் கூர்மையானவையாக இருந்தன. அதன் வயிறு மெலிந்ததாக இருந்தது. அதன் வடிவம் உயர்ந்ததாக இருந்தது. அது தடுக்கப்பட முடியாத மிதமிஞ்சிய சக்தியைக் கொண்டதாக இருந்தது.(39) அந்த உயிரினம் தோன்றியதும் பூமாதேவி நடுங்கினாள். மலைபோன்ற அலைகளையும், பயங்கர நுரைகளையும் கொண்ட பெருங்கடல் கலக்கமடைந்தது.(40)
பேராபத்துகளை முன்னறிவித்துக் கொண்டு வானத்தின் எரிநட்சத்திரங்கள் விழுந்து கொண்டிருந்தன. மரங்களின் கிளைகள் கீழேவிழத் தொடங்கின. திசைகளின் புள்ளிகள் அனைத்தும் அமைதியற்றவையாகின. மங்கலமற்ற காற்றுகள் வீசத் தொடங்கின. ஒவ்வொரு கணமும் அனைத்து உயிரினங்களும் அச்சத்தால் நடுங்கத் தொடங்கின.(41) அண்டத்தின் பயங்கரக் கலக்கத்தையும், வேள்வி நெருப்பில் இருந்து எழுந்த அந்த உயிரினத்தையும் கண்ட பெரும்பாட்டன், அங்கே இருந்த பெருமுனிவர்கள், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், "இந்த உயிரினம் என்னால் எண்ணப்பட்டது. பெரும் சக்தி கொண்ட இதன் பெயர் அஸி (வாளாகும்) ஆகும். உலகத்தைப் பாதுகாப்பதற்காகவும், தேவர்களின் எதிரிகளை அழிப்பதற்காகவும் நான் இதை உண்டாக்கினேன்" என்றான்.(43) பிறகு அந்த உயிரினம் தான் முதலில் ஏற்றிருந்த வடிவத்தைக் கைவிட்டு, பெரும் காந்தியுடையதும், மிகப் பளபளப்பானதும், கூர்முனைகளைக் கொண்டதும், யுக முடிவில் அனைத்தையும் அழிக்க எழுந்ததைப் போலவும் ஒரு வாளின் வடிவத்தை ஏற்றது.(44) அப்போது பிரம்மன், மறம் {அதர்மம்}, பாவம் ஆகியவற்றை அழிக்கத்தகுந்தவனாக்குவதற்காக, முதன்மையான காளையைத் தன் கொடியில் கொண்டவனும், நீலமிடறு கொண்டவனுமான ருத்திரனிடம் அந்தக் கூரிய ஆயுதத்தைக் கொடுத்தான்.(45)
இதன்பேரில், அளவிலா ஆன்மா கொண்டவனும், பெரும் முனிவர்களால் புகழப்பட்டவனுமான தெய்வீக ருத்திரன், அந்த வாளை எடுத்துக் கொண்டு, வேறொரு வடிவத்தை ஏற்றான்.(46) நான்கு கரங்களை வெளிப்படுத்திக் கொண்ட அவன், பூமியில் நின்று கொண்டிருந்தாலும், தலை சூரியனையே தொடும் அளவுக்கு நெடியவனானான். மேல்நோக்கிய விழிகளுடனும், பரந்து விரிந்த அங்கங்களுடனும் அவன் தன் வாயில் இருந்து நெருப்பின் தழல்களைக் கக்கத் தொடங்கினான்.(47) நீலம், வெள்ளை, சிவப்பு எனப் பல்வேறு நிறங்களை ஏற்று, தங்க நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட கருப்பு மான் தோலை உடுத்தியிருந்த அவன்,(48) சூரியனின் காந்திக்கு ஒப்பான மூன்றாவது கண்ணைத் தன் நெற்றியில் கொண்டிருந்தான். ஒன்று கருப்பாகவும், ஒன்று பழுப்பாகவும் இருந்த அவனது மற்ற இரு விழிகள் மிகப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.(49) சூலபாணியும், பகனின் கண்ணைக் கிழித்தவனுமான தெய்வீக மகாதேவன், அனைத்தையும் அழிக்கும் யுக நெருப்புக்கு ஒப்பான காந்தியைக் கொண்ட அந்த வாளை எடுத்துக் கொண்டு,(50) மின்னலின் கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்ட கரிய மேகத் திரள்களைப் போன்றிருந்த மூன்று உயர்ந்த குமிழ்களைக் கொண்ட கேடயத்தையும் எடுத்துக் கொண்டு பல்வேறு வகையான பரிமாணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினான்.
பேராற்றல் கொண்ட அவன் {ருத்திரன்}, ஒரு மோதலை விரும்பி வானத்தில் அந்த வாளைச் சுழற்றத் தொடங்கினான்.(51) அவன் வெளியிட்ட முழக்கங்கள் உரத்தவையாகவும், அவனது சிரிப்பின் ஒலி பயங்கரமானதாகவும் இருந்தது. உண்மையில், ஓ! பாரதா {நகுலா}, ருத்திரன் அப்போது ஏற்றிருந்த வடிவம் மிகப் பயங்கரமானதாக இருந்தது.(52) ருத்திரன் கடுஞ்செயல்களை நிறைவேற்றும் வடிவத்தை ஏற்றிருப்பதைக் கேட்ட தானவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, பெரும் பாறைகளையும், சுடர்மிக்கக் கொள்ளிகளையும், பல்வேறு வகையிலான இரும்பாலான பயங்கர ஆயுதங்களையும், கூர்முனை கொண்ட கத்திகளுடன் கூடிய ஆயுதங்களையும் பொழிந்து கொண்டே அவனை நோக்கிப் பெரும் வேகத்தில் வரத் தொடங்கினர்.(53,54) எனினும், அந்தத் தானவப் படையானது, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அழிக்கப்பட முடியாதவனுமான ருத்திரன் வலிமையில் பெருகுவதைக் கண்டு, மலைப்படைந்து, நடுங்கத் தொடங்கினர்.(55)
ருத்திரன் தனியொருவனாக இருந்தாலும், கையில் வாளுடன் போர்க்களத்தில் அவன் நகர்ந்த போது, தங்களுடன் ஆயிரம் ருத்திரர்கள் போரிடுவதாக அசுரர்களுக்குத் தெரிந்தது.(56) அந்தப் பெருந்தேவன், கிழித்துக் கொண்டும், துளைத்துக் கொண்டும், பீடித்தும், வெட்டியும், துண்டித்தும், கலங்கடித்தபடியும், சுற்றிலும் பரவியிருக்கும் காய்ந்த புற்குவியலுக்கு மத்தியில் உள்ள காட்டுத்தீயைப் போல அடர்த்தியாக இருந்த தன் பகைவர்களின் கூட்டத்திற்கு மத்தியில் நகர்ந்து கொண்டிருந்தான்.(57) வலிமைமிக்க அசுரர்கள், அந்தத் தேவனின் வாள்வீச்சால் கரங்கள், தொடைகள், மார்புகள் வெட்டப்பட்டு, துளைக்கப்பட்டு, தங்கள் உடல்களில் இருந்து தலைகள் கொய்யப்பட்டு, பூமியில் விழத் தொடங்கினர்.(58) தானவர்களில் வேறு சிலர், அந்த வாள்வீச்சுகளால் பீடிக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் உற்சாகமளித்தபடியே அனைத்துத் திசைகளிலும் பிளந்து தப்பி ஓடினர்.(59) சிலர் பூமியின் குடல்களுக்குள் ஊடுருவினர்; வேறு சிலர் மலைகளின் அடியில் சென்றனர். இன்னும் சிலர் மேல்நோக்கிச் சென்றனர்; வேறு சிலர், கடலின் ஆழத்திற்குள் நுழைந்தனர்.(60)
கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, சதையாலும், குருதியாலும் பூமி சகதியானது, அனைத்துப் பக்கங்களிலும் பயங்கரக் காட்சிகள் தென்பட்டன.(61) குருதியால் மறைக்கப்பட்ட வீழ்ந்த தானவர்களின் உடல்கள் விரவிக்கிடந்த பூமியானது, கின்சுகங்கள் {பலாச மரங்கள்} நிறைந்த மலைச்சிகரத்தைப் போலத் தெரிந்தது.(62) ஊனீரால் நிறைந்த பூமியானது, மது போதையில் உள்ளவளும், அடர் சிவப்பு ஆடைகளை உடுத்தியிருந்தவளும், அழகிய நிறம் கொண்டவளுமான ஒரு மங்கையைப் போலத் தெரிந்தது.(63) தானவர்களைக் கொன்று, பூமியில் மீண்டும் அறத்தை நிறுவிய மங்கலமான ருத்திரன், தன் பயங்கர வடிவைக் கைவிட்டு, மீண்டும் தன் நல்வடிவை அடைந்தான்.(64) அப்போது, முனிவர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் அந்தத் தேவாதி தேவனுக்கு வெற்றியை விரும்பி பாராட்டுப் பேரொலியுடன் துதித்தனர்.(65)
இதன்பிறகு, அந்தத் தெய்வீக ருத்திரன், அறத்தைப் பாதுகாத்ததும், தானவர்களின் குருதியால் வண்ணம் தீட்டப்பட்டதுமான அந்த வாளை, உரிய துதிகளுடன் விஷ்ணுவுக்கு அளித்தான்.(66) விஷ்ணு அதை மரீசிக்குக் கொடுத்தான். தெய்வீக மரீசி அதைப் பெரும் முனிவர்கள் அனைவருக்கும் கொடுத்தார். அவர்கள் அதை வாசவனுக்கு {இந்திரனுக்குக்} கொடுத்தனர்.(67) வாசவன் அதை லோகபாலர்களுக்குக் கொடுத்தான். ஓ! மகனே {நகுலா}, லோகபாலர்கள் அந்தப் பெரும் வாளை சூரியனின் மகனான மனுவுக்குக் கொடுத்தனர்.(68) அதை மனுவுக்குக் கொடுத்தபோது அவர்கள், "நீயே மனிதர்கள் அனைவருக்கும் தலைவனாவாய். அறத்தைத் தன் கருவறையில் கொண்டிருக்கும் இந்த வாளைக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பாயாக.(69) உடலின் நிமித்தமாகவோ, மனத்தாலோ அறத்தடைகளை மீறுவோரை முறையாகத் தண்டித்து, உறுதியின்மையால் ஒருபோதும் அல்லாமல், விதிகளுக்கு இசைவானபடியே அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(70) சிலர் சொல்லாலான நிந்தனைகளாலும், அபராதங்களாலும், பறிமுதல்களாலும் தண்டிக்கப்படவேண்டும். சிறிய காரணங்களுக்காக {தண்டனையாக} ஒருபோதும் அங்க இழப்போ, மரணமோ கொடுக்கப்படக்கூடாது" என்றனர்.(71)
சொல்லாலான நிந்தனைகளை முதலாகக் கொண்ட இந்தத் தண்டனைகளே, அந்த வாளின் பல்வேறு வடிவங்களாகக் கருதப்படுகின்றன. (மன்னனின்) பாதுகாப்பின் கீழுள்ள மனிதர்கள் அத்துமீறுவதன் விளைவால், அந்த வாள் இந்த வடிவங்களையே ஏற்கிறது.(72) மனு, தன் மகனான க்ஷுபனை அனைத்துயிரினங்களின் அரசுரிமையில் நிறுவிய நேரத்தில், அவர்களின் பாதுகாப்புக்காக இந்த வாளை அவனிடம் கொடுத்தார்.(73) க்ஷுபனிடமிருந்து இக்ஷ்வாகுவும், இக்ஷ்வாகுவிடமிருந்து புரூரவசும் எடுத்துக் கொண்டனர். பிறகு புரூரவசிடம் இருந்து ஆயுசும், ஆயுசிடமிருந்து நகுஷனும் எடுத்துக் கொண்டனர்.(74) பிறகு நகுஷனிடமிருந்து யயாதியும், யயாதியிடமிருந்து பூருவும் எடுத்துக் கொண்டனர். பூருவிடமிருந்து ஆமூர்த்தனும் {ஆதூர்த்தனும்}, ஆமூர்த்தனிடமிருந்து பூமிசயனும் பெற்றுக் கொண்டனர்.(75)
பூமியசயனிடமிருந்து துஷ்யந்தன் மகனான பரதன் அதைப் பெற்றுக் கொண்டான். ஓ! ஏகாதிபதி, பரதனிடமிருந்து அறம்சார்ந்த ஐலபிலன் பெற்றுக் கொண்டான்.(76) ஐலபிலனிடமிருந்து மன்னன் துந்துமாரன் பெற்றுக் கொண்டான். துந்துமாரனிடமிருந்து காம்போஜனும், காம்போஜனிடமிருந்து முசுகுந்தனும் பெற்றுக் கொண்டனர்.(77) முசுகுந்தனிடமிருந்து மருத்தனும், மருத்தனிடமிருந்து ரைவதனும் பெற்றுக் கொண்டனர். ரைவதனிடம் இருந்து யுவனாஸ்வனும், யுவனாஸ்வனிடமிருந்து ரகுவும் பெற்றுக் கொண்டனர்.(78) ரகுவிடமிருந்து வீரனான ஹரிணாஸ்வன் பெற்றுக் கொண்டான். ஹரிணாஸ்வனிடமிருந்து அந்த வாள் சுனகனால் எடுத்துக் கொள்ளப்பட்டது, சுனகனிடமிருந்து அற ஆன்மாவான உசீநரன் எடுத்துக் கொண்டான். அவனிடமிருந்து அது போஜர்களாலும், யாதவர்களாலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.(79) யதுக்களிடமிருந்து அதைச் சிபி எடுத்துக் கொண்டான். சிபியிடமிருநு அது பிரதர்த்தனனிடம் சென்றது. பிரதர்த்தனனிடமிருந்து அதை அஷ்டகன் பெற்றுக் கொண்டான். அஷ்டகனிடமிருந்து பிருஷதாஸ்வன் பெற்றுக் கொண்டான்.(80)
பிருஷதாஸ்வனிடமிருந்து பரத்வாஜர் அதைப் பெற்றுக் கொண்டார், அவரிடமிருந்து துரோணர் அதைப் பெற்றுக் கொண்டார். துரோணரிடமிருந்து அது கிருபரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. கிருபரிடமிருந்த அந்தச் சிறந்த வாளை, உன் சகோதரர்களுடன் கூடிய நீ {நகுலன்} அடைந்தாய்.(81) அந்த வாள் பிறந்த நட்சத்திரக்கூட்டமானது கிருத்திகையாகும். அக்னியே அதன் தேவனாவான், ரோஹிணியே அதன் கோத்ரமாகும் {குடும்பமாகும்}. ருத்ரனே அதன் உயர்ந்த ஆசானாவான்.(82) அந்த வாளானது பொதுவாக அறியப்படாத எட்டுப் பெயர்களைக் கொண்டதாகும். அதை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ! பாண்டுவின் மகனே {நகுலனே}, இந்தப் பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் எப்போதும் வெற்றியை அடைவான்.(83) அஸி, வைசஸனம் {விசஸனம்}, கட்கம், கூர்முனை கொண்டது {தீக்ஷ்ணஸர்மம்}, அடைவதற்கரிதானது {துராஸதம்}, ஸ்ரீகர்ப்பம், வெற்றி {விஜயம்}, அறப்பாதுகாவலன் {தர்ம்பாலம்} ஆகியவையே அந்தப் பெயர்களாகும்.(84) ஓ! மத்ராவதியின் {மாத்ரியின்} மகனே, ஆயுதங்கள் அனைத்திலும் வாளே முதன்மையானது. அது முதலில் மஹாதேவனாலேயே தரிக்கப்பட்டதும் என்று புராணங்களே உண்மையில் அறிவிக்கின்றன.(85)
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, வில்லைப் பொறுத்தவரையில், அது முதலில் பிருதுவால் உண்டாக்கப்பட்டது. இந்த ஆயுதத்தின் உதவியுடனே அந்த வேனன் மகன் {பிருது}, பல வருடங்களுக்குப் பூமியை அறம்சார்ந்து ஆண்ட போது, அவளது {பூமியின்} பயிர்களையும், தானியங்களையும் அபரிமிதமாகக் கறந்தான்.(86) ஓ! மாத்ரியின் மகனே, முனிவர்கள் சொல்வதை முடிவான ஆதாரமாகக் கருதுவதே உனக்குத் தகும். போரில் திறம்பெற்ற அனைவரும் வாளை வழிபட வேண்டும்.(87) ஓ! பாரதக் குலத்தின் காளையே, வாளின் மூலம் மற்றும் படைப்பைக் குறித்த உன் கேள்வியின் முதல் பகுதியை உண்மையில் விரிவாக நான் சொல்லிவிட்டேன்.(88) வாளின் மூலம் தொடர்பான இந்தச் சிறந்த கதையைக் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் இம்மையில் புகழை வென்று, மறுமையில் அழிவில்லா இன்பத்தை அடைகிறான்" என்றார் {பீஷ்மர்}".(89)
சாந்திபர்வம் பகுதி – 166ல் உள்ள சுலோகங்கள் : 89
ஆங்கிலத்தில் | In English |