Virtue, Profit, Desire, Emancipation! | Shanti-Parva-Section-167 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 37)
பதிவின் சுருக்கம் : அறம், பொருள், இன்பம் ஆகியவை குறித்து விதுரர், அர்ஜுனன், நகுல சகாதேவர்கள், பீமசேனன் ஆகியோர் பேசியது; வீடு குறித்து யுதிஷ்டிரன் பேசியது...
Virtue, Profit, Desire, Emancipation! | Shanti-Parva-Section-167 | Mahabharata In Tamil |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இதை {வாளின் வரலாற்றைச்} சொல்லிவிட்டு பீஷ்மர் அமைதியானபோது, யுதிஷ்டிரன் (அவனும் பிறரும்) தன் இல்லத்துக்குத் திரும்பினான். மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகளிடமும், அவர்களோடு ஐந்தாவதாக இருந்த விதுரனிடமும்,(1) "உலகின் போக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இம்மூன்றின் முக்கியத்துவத்தில், எது முதன்மையானது, எது இரண்டாவது, எது மூன்றாவது?(2) மூன்று திரட்டுகளை (காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றை) அடக்குவதற்கு, மூன்றில் (அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில்) எதில் முதலில் மனத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்?[1] நீங்கள் அனைவரும் இந்தக் கேள்விக்கு உண்மையான வார்த்தைகளில் பதிலளிப்பதே தகும்" என்று கேட்டான்.(3) குரு தலைவனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், உலகின் போக்கு, (பொருட்களின் உண்மையான இயல்பைக் குறித்த) உண்மை ஆகியவற்றுடன் கூடிய பொருள் அறிவியலையும் அறிந்தவனும், அறிவில் பெரும்பொலிவு கொண்டவனுமான விதுரன், சாத்திரங்களில் உள்ள பொருட்களை நினைவுகூர்ந்து, இந்த வார்த்தைகளை முதலில் சொன்னான்.(4)
[1] கும்பகோணம் பதிப்பில், "உலகத்தின் நிலை தர்மத்திலும், அர்த்தத்திலும், காமத்திலும் அடங்கியிருக்கிறது. அவைகளுள் எது மிகப்பெரியது? எது நடுத்தரமானது? எது எளிது? காமம், கோபம், லோபம் இம்மூன்றையும் ஜயிக்க வேண்டி எதில் மனத்தை அடக்கி வைக்க வேண்டும்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மக்களின் நடத்தை, தர்மம், அர்த்தம், காமம் என்ற அடிப்படையில் இருக்கிறது. இவற்றில் எது முக்கியமானது? எது நடுத்தரமானது? எது முக்கியமற்றது? மூன்று பிரிவுகளையும் அடக்க விரும்பும் ஒருவன் இவற்றில் எதை அடக்க வேண்டும்?" என்றிருக்கிறது.
விதுரன், "பல்வேறு சாத்திரங்களைக் கற்றல், தவம், கொடை, நம்பிக்கை, வேள்விகளைச் செய்தல், மன்னிக்கும் தன்மை, நேர்மையான மனநிலை, கருணை, வாய்மை, தற்கட்டுப்பாடு ஆகிய இவை அறத்தின் உடைமைகளாகும்.(5) நீ அறத்தைக் கைகொள்வாயாக. உன் இதயம் அதைவிட்டு விலகாதிருக்கட்டும். அறம், பொருள் ஆகிய இரண்டும் இவற்றிலேயே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே காலத்தில் {தவணையில்} சேர்க்கப்படக்கூடியவை என்று நான் நினைக்கிறேன்.(6) அறத்தின் மூலமே முனிவர்கள் (உலகத் துன்பங்கள் அனைத்தையும்) கடந்து சென்றனர். அனைத்து உலகங்களும் (நிலையாக இருப்பதற்கு) அறத்தையே சார்ந்திருக்கின்றன. அறத்தின் மூலமே தேவர்கள் தன் மேலான நிலையை அடைந்தனர். அறத்தின் மீதே பொருள் அல்லது செல்வம் நிலைத்திருக்கிறது(7) ஓ! மன்னா, அறமே தகுதியில் {புண்ணியத்தில்} முதன்மையானதாகும். பொருள் நடுநிலைமை கொண்டது என்று சொல்லப்படுகிறது. இன்பமே மூன்றிலும் கீழானது என ஞானிகளால் சொல்லப்படுகிறது.(8) இதன்காரணமாக ஒருவன், அறத்தில் முக்கியக் கவனம் செலுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் வாழ வேண்டும். அவன் தன்னைப் போலவே பிற உயிரினங்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்" என்றான் {விதுரன்}".(9)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "விதுரர் தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்ததும், பொருள் அறிவியலில் நன்கு திறம்பெற்றவனும், அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டின் உண்மைகளையும் அறிந்தவனுமான பிருதையின் மகன் அர்ஜுனன், (யுதிஷ்டிரனுடைய கேள்வியின் ஓட்டத்தால்) தூண்டப்பட்டு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, இந்த உலகமே செயல்களின் களமாகும். எனவே இங்கே செயலே மெச்சப்பட வேண்டும். உழவு, வணிகம், ஆநிரை வளர்த்தல், பல்வேறு வகையான கலைகள் {கைத்தொழில்கள்},(11) ஆகியன உள்ளடங்கியதே பொருள் {அர்த்தம்} என்றழைக்கப்படுகிறது. மேலும் பொருளே அத்தகைய செயல்கள் அனைத்திற்கும் எல்லையாக இருக்கிறது. பொருள், அல்லது செல்வமின்றி, அறம் மற்றும் இன்பம் (இன்பத்திற்குரி பொருட்கள்) ஆகியவற்றை வெல்லமுடியாது. இதுவே ஸ்ருதியின் அறிவிப்பாகும்.(12) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரும் கூட, பல்வேறு வகையான செல்வங்களைக் கொண்டிருந்தால், அறத்தின் உயர்ந்த செயல்களைச் செய்ய வல்லவர்களாகவும், நிறைவுசெய்வதற்குக் கடினமான ஆசைகளையும் நிறைவு செய்பவர்களாகவும் ஆவார்கள்.(13) ஸ்ருதி அறிவிக்கும் வகையில், அறமும், இன்பமும் செல்வத்தின் அங்கங்களாகவே இருக்கின்றன. செல்வத்தை அடைந்தால், அறத்தையும், ஆசைக்குரிய பொருட்களையும் வெல்லலாம்.(14) அனைத்து உயிரினங்களும் பிரம்மனை வழிபடுவதைப் போலவே, மேன்மையான பிறவிகளாகப் பிறந்தோரும், செல்வம்படைத்த மனிதனை வழிபடுவார்கள்.(15)
மான்தோல் உடுத்தியவர்களும், தலையில் சடாமுடி தரித்தவர்களும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களும், உடல் முழுவதும் புழுதி பூசப்பட்டவர்களும், புலன்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டவர்களும், வழுக்கைத் தலை கொண்டவர்களும், அர்ப்பணிப்புள்ள பிரம்மச்சாரிகளும், ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து வாழ்பவர்களும் கூடச் செல்வத்தை அடைய விரும்புகிறார்கள்.(16) மஞ்சள் ஆடை {காஷாயம்} உடுத்தியவர்களும், நீண்ட தாடிகளைக் கொண்டவர்களும், பணிவுடையவர்களும், கல்விமான்களும், உள்ளடக்கம் கொண்டவர்களும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்களும்கூடச் செல்வத்தை அடைய விரும்புகிறார்கள். முன்னோரின் நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களும், தங்களுக்குரிய கடமைகளை நோற்பவர்களும், சொர்க்கத்தில் விருப்பமுள்ளவர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.(18) நம்பிக்கையுள்ளவர்களும், நம்பிக்கையற்றவர்களும், உயர்ந்த வகை யோகத்தைக் கடுமையாகப் பயில்பவர்களும் என அனைவரும், செல்வத்தின் சிறப்புக்குச் சான்றளிக்கிறார்கள்.(19) எவன் தன்னைச் சார்ந்திருப்பவர்களின் இன்பத்திற்குரிய பொருட்களைக் கொடுத்துப் பேணி வளர்த்து, தண்டனைகளால் தன் எதிரிகளைப் பீடிக்கிறானோ, அவனே உண்மையில் செல்வம்படைத்தவன் என்று சொல்லப்படுகிறான். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, இதுவே என் உண்மையான கருத்தாகும்.(20) எனினும், இந்த இருவரும் (நகுலனும், சகாதேவனும்) சொல்லப் போவதையும் கேட்பீராக" என்றான் {அர்ஜுனன்}".(21)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அர்ஜுனன் நிறுத்தியதும், மாத்ரியின் மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்.(22)
நகுலனும் சகாதேவனும், "அமர்ந்தோ, கிடந்தோ, நின்றோ, நடந்தோ ஒருவன் மிகக் கடுமையான வழிமுறைகளில் முயற்சி செய்தாவது செல்வத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.(23) அடைவதற்கு அரிதானதும், மிகவும் ஏற்புடையதுமான செல்வம் ஈட்டப்பட்டால், அஃதை ஈட்டிய மனிதன் நிச்சயம் ஆசைக்குரிய {இன்பத்திற்குரிய} பொருட்கள் அனைத்தையும் அடைவது காணப்படுகிறது.(24) எந்தச் செல்வம் அறத்துடன் தொடர்புடையதோ, எந்த அறம் செல்வத்தோடு தொடர்புடையதோ, அவை நிச்சயம் அமுதத்தைப் போன்றவையே. இதன் காரணமாக என்கள் கருத்துகள் பின்வருமாறு இருக்கின்றன.(25)
செல்வமில்லாத மனிதனால் எந்த ஆசையையும் நிறைவு செய்து கொள்ள முடியாது; அதே போல அறமற்ற ஒருவனிடமும் செல்வமேதும் இருக்க முடியாது. எனவே, அறம் மற்றும் பொருள் ஆகியவற்றில் இருந்து விலகியிருப்பவன் உலகத்திற்கு அச்சத்தை ஏற்படுத்துபவனாக இருப்பான்.(26) இந்தக் காரணத்திற்காக ஒருவன், அறத்தேவைகளை அலட்சியம் செய்யாமல், அர்ப்பணிப்பு நிறைந்த மனத்துடன் செல்வத்தை அடைய முனைய வேண்டும். (ஞான) மொழியை நம்புபவர்கள், தாங்கள் விரும்பிய எதையும் அடைவதில் வெல்கிறார்கள்.(27) ஒருவன் முதலில் அறம்பயில வேண்டும்; அடுத்ததாக அறத்தைத் தியாகம் செய்யாமல் செல்வத்தை அடைய வேண்டும்; பிறகு தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முனைய வேண்டும்; செல்வத்தை அடைவதில் வெற்றி அடையும் ஒருவனிடம் இதுவே தன் {ஆசையை நிறைவேற்றிக் கொள்வதே மூன்றிலும்} இறுதிச் செயலாக இருக்க வேண்டும்" என்றனர் {நகுலனும், சகாதேவனும்}".(28)
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், "அசுவினிகளின் இரட்டை மகன்கள் {நகுல சகாதேவன்} இவ்வார்த்தைகளைப் பேசியதும் அமைதியடைந்தனர். பிறகு, பீமசேனன் பின்வருவதைச் சொல்லத் தொடங்கினான்.(29)
பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஆசையில்லாதவன் செல்வத்தை ஒருபோதும் விரும்புவதில்லை. ஆசையில்லாத ஒருவன் ஒருபோதும் அறத்தை விரும்புவதில்லை. அசையற்றவனால் எந்த விருப்பத்தையும் உணரமுடியாது. இதன்காரணமாக, ஆசையே {இன்பமே} மூன்றிலும் முதன்மையானதாகும்.(30) ஆசையின் ஆதிக்கத்தின் கீழேயே முனிவர்களும், கனிகளையோ, கிழங்குகளையோ, காற்றை மட்டுமே உண்டு, தங்களைத் தவங்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள்.(31) வேதத்தை நன்கறிந்தவர்கள், வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும், அல்லது நம்பிக்கையின் சடங்குகள் மற்றும் வேள்விச் செயல்களிலும், அல்லது கொடைகளைக் கொடுப்பதிலும், பெறுவதிலும் ஈடுபடுகிறார்கள்.(32) வணிகர்கள், உழவர்கள், ஆநிரை வளர்ப்போர், கலைஞர்கள், கைவினைஞர்கள், தணிவுச் சடங்குகளில் ஈடுபடுவோர் ஆகிய அனைவரும் ஆசையினாலேயே {காமத்தினாலேயே} செயல்படுகிறார்கள்.(33) சிலர் ஆசையால் தூண்டப்பட்டு, பெருங்கடலின் ஆழத்தில் குதிக்கிறார்கள். உண்மையில், ஆசையானது {காமமானது} பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. ஆசையின் கொள்கையானது அனைத்திலும் படர்ந்தூடுருவி இருக்கிறது.(34) ஆசையிலிருந்து விலகியிருப்பவன் என்று எவனும், இவ்வுலகில் இருப்பதாகவோ, இருந்ததாகவோ, இருக்கப்போவதாகவோ காணப்படவில்லை. ஓ! மன்னா, இதுவே உண்மையாகும். அறம், செல்வம் {பொருள்} ஆகிய இரண்டும் இன்பத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.(35)
வெண்ணையானது, தயிரின் சாரத்தை வெளிப்படுத்துவதைப் போலவே ஆசையும், பொருள் மற்றும் அறத்தின் சாரத்தை வெளிப்படுத்தும். எண்ணெய் விதைகளைவிட {பிண்ணாக்கைவிட} எண்ணெய் சிறந்ததாகும். நீர்மோரைவிட நெய் சிறந்ததாகும்.(36) மலர்களும், கனிகளும், மரத்தைவிடச் சிறந்தவையாகும். அதே போல, ஆசையே {காமமே} அறம் மற்றும் பொருளைவிடச் சிறந்ததாகும். மலர்களின் இருந்து தேன் சாறு பிரித்தெடுக்கப்படுவதைப் போலவே, ஆசையானது இவ்விரண்டில் இருந்தே பிரித்தெடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆசையே அறம், பொருள் ஆகிய இரண்டின் மூலமாகும். ஆசையே இவ்விரண்டின் ஆன்மாவாகும்.(37) பிராமணர்களுக்கு ஆசையில்லாதிருந்தால், அவர்கள் பிரம்மவாதிகளுக்கு இனிப்புகளையோ, செல்வத்தையோ ஒருபோதும் கொடுக்கமாட்டார்கள்[2]. ஆசையில்லாமல் இருந்தால், உலகத்தில் காணப்படும் பல்வேறு வகைச் செயல்பாடுகளும் காணப்படாமல் போகும். இந்தக் காரங்களினால், ஆசையே முத்தொகையிலும் முதன்மையானதாகத் தெரிகிறது.(38) சிறந்த ஆடைகளை உடுத்தியிருப்பவர்களும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களும், இனிய மதுவினால் போதையுண்டிருப்பவர்களுமான அழகி காரிகைகளை அணுகி, அவர்களோடு நீர் விளையாடிக் கொண்டிருப்பீராக. ஓ! மன்னா, நமக்கு ஆசையே மூன்றில் முதன்மையானதாகும்.(39) இந்தக் கேள்வியை வேர்வரை சிந்தித்ததனால், நான் இந்த முடிவை அடைந்திருக்கிறேன். ஓ! தர்மனின் மகனே, இந்த முடிவை ஏற்கத் தயங்காதீர். இந்த என் வார்த்தைகள் வெற்று வார்த்தைகளல்ல. அறம் நிறைந்த அவற்றை, நல்லோர் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.(40) அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்தும் சமமாகவே கவனிக்கப்பட வேண்டும். எந்த மனிதன் இவ்வற்றில் ஏதாவது ஒன்றில் மட்டும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அவன் மேன்மையான மனிதனல்ல. இவற்றில் இரண்டில் மட்டுமே அர்ப்பணிப்பு கொண்டவன் நடுத்தரமானவனாகச் சொல்லப்படுகிறான். மறுபுறம் மூன்றையும் கவனிப்பவனே, தன் இனத்தில் சிறந்தவனாவான்" என்றான் {பீமசேனன்}.(41)
[2] கும்பகோணம் பதிப்பில், "காமமில்லாமல் பொருளால் மட்டும் ப்ராம்மணர்கள் நல்ல அன்னத்தைப் புஜிக்கிறார்களில்லை. காமமில்லாமல் ப்ராம்மணர்களின் பொருட்டுத் தானஞ்செய்கிறதில்லை" என்றிருக்கிறது.
ஞானம் கொண்டவனும், நண்பர்களால் சூழப்பட்டவனும், சந்தனம் பூசியிருந்தவனும், சிறந்த மாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தவனுமான பீமன், இவ்வார்த்தைகளை அந்த வீரர்களிடம் சுருக்கமாகவும், விரிவாகவும் சொன்னதும் அமைதியடைந்தான்.(42) அப்போது, அறவோரில் முதன்மையானவனும், பெரும் கல்விமானும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அவர்கள் அனைவராலும் பேசப்பட்ட வார்த்தைகளை முறையாக நினைவுகூர்ந்து, அந்தப் பேச்சுகள் அனைத்தும் போலி தத்துவங்களே என எண்ணி, பின்வருமாறு பேசினான்.(43)
யுதிஷ்டிரன், "சாத்திரங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் அனைவரும் முடிவான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் அவற்றின் அதிகாரங்களை அறிந்திருக்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை. நீங்கள் பேசிய நிச்சயத்தன்மை நிறைந்த வார்த்தைகள் என்னால் கேட்கப்பட்டன.(44) இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போவதைக் குவிந்த கவனத்தோடு கேட்பீராக. எவன் தகுதியிலோ {புண்ணியத்திலோ}, பாவத்திலோ ஈடுபடவில்லையோ, எவன் பொருளையோ, அறத்தையோ, ஆசையையோ {இன்பத்தையோ} கவனிக்கவில்லையோ, எவன் அனைத்துக் களங்களுக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கிறானோ, எவன் தங்கத்தையும், செங்கற்களையும் ஒன்றாகக் கருதுகிறானோ, அவன், இன்பம், துன்பம் மற்றும் காரிய நிறைவுக்கான தேவை ஆகியவற்றிலிருந்து விடுபட்டவனாகிறான்.(45) அனைத்து உயிரினங்களும் பிறப்புக்கும், இறப்புக்கும் ஆட்படுகின்றன. அனைத்தும் வீணாதல் {கிழத்தன்மை} மற்றும் மாற்றத்திற்கு {விகாரங்களுக்கு} உட்பட்டவையாக இருக்கின்றன. வாழ்வின் பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகளால் மீண்டும் மீண்டும் விழிப்படையும் அனைவரும் முக்தியை {விடுதலையை / மோட்சத்தை} மெச்சுகிறார்கள். எனினும், நாம் முக்தியை அறியவில்லை.(46)
தான்தோன்றியும், தெய்வீகமானவனுமான பிரம்மன், எவன் பற்று மற்றும் பாசத்தின் கட்டுகளில் கட்டப்பட்டிருக்கிறானோ அவன் ஒருபோதும் முக்தியை அடைவதில்லை என்று சொல்லியிருக்கிறான். எனினும், கல்விமான்கள் முக்தியையே நாடுகிறார்கள். இந்தக் காரணத்திற்காக, ஒருவன் எதையும் ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ ஒருபோதும் கருதக்கூடாது.(47) இந்தப் பார்வையே சிறந்ததாகத் தெரிகிறது. இவ்வுலகில் உள்ள எவனாலும் தான் விரும்பியவாறு செயல்பட முடியாது. (மேன்மையான ஒரு சக்தியால்) எவ்வாறு செயல்படுவதற்காக நான் உண்டாக்கப்பட்டேனோ, அவ்வாறே துல்லியமாகச் செயல்படுகிறேன். விதி சமைக்கும் பெரியவன் தான் விரும்பியவாறே அனைத்து உயிரினங்களையும் செயல்படச் செய்கிறான். விதி சமைப்பவனே {பரமனே} உயர்ந்தவன். நீங்கள் அனைவரும் இஃதை அறிவீராக.(48) எவனாலும் தன் செயல்களால் அடையப்பட முடியாததை அடைய முடியாது. எது நடக்க வேண்டுமோ அதுவே நடைபெறும். இஃதை அறிவீராக. முத்தொகையிலிருந்தும் விடுபட்ட ஒருவனால் முக்தியை வெல்ல முடியும் என்பதால், முக்தியே உயர்ந்த நன்மையை உண்டாக்கவல்லதாகத் தெரிகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}".(49)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "காரணம் நிறைந்ததும், இதயத்துக்கு ஏற்புடையதுமான இந்த முதன்மையான வார்த்தைகளைக் கேட்ட பீமனும், பிறரும், மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் கரங்களைக் கூப்பி, அந்தக் குருகுல இளவரசனை {யுதிஷ்டிரனை} வணங்கினார்கள்.(50) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில், இனிய எழுத்துகளாலும், அசைகளாலும் நன்கு அலங்கரிக்கப்பட்டும், இதயத்துக்கு ஏற்புடையதும், ஒவ்வாத ஒலிகளும் வார்த்தைகளும் இல்லாததுமான ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} இந்தப் பேச்சைக் கேட்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்}, யுதிஷ்டிரனை உயர்வாக மெச்சத் தொடங்கினான்.(51) உயர் ஆன்மாவையும், பெரும் சக்தியையும் கொண்ட அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, பதிலுக்கு இணங்கிய தணிக்கையாளர்களைப் புகழ்ந்தான். பிறகு மன்னன், மீண்டும் உயர் ஆன்மாகக் கொண்ட நதிகளில் முதன்மையானவளுடைய மகனிடம் {பீஷ்மரிடம்} கடமைகளைக் குறித்து விசாரிப்பதற்காகப் பேசினான்" {என்றார் வைசம்பாயனர்}.(52)
சாந்திபர்வம் பகுதி – 167ல் உள்ள சுலோகங்கள் : 52
ஆங்கிலத்தில் | In English |