A Brahmana turned to be a hunter! | Shanti-Parva-Section-168 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 38)
பதிவின் சுருக்கம் : நட்புக்குத் தக்கவர்கள் மற்றும் தகாதவர்களின் குறியீடுகைளக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மர் சொன்னதை விளக்கிக் கூறுமாறு கேட்ட யுதிஷ்டிரன்; கௌதமன் என்ற ஒரு பிராமணனின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்...
A Brahmana turned to be a hunter! | Shanti-Parva-Section-168 | Mahabharata In Tamil |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, நான் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன். ஓ! குருக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவரே, அது குறித்து நீர் என்னிடம் முழுமையாக உரையாடுவதே உமக்குத் தகும்.(1) எந்த வகை மனிதர்கள் மென்மையான மனநிலை கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்? எவரிடம் மிக இனிமையான நட்பு இருக்கும்? எவர் நிகழ்காலத்திலும், எதிர் காலத்திலும் நன்மை செய்ய வல்லவர்கள் என்பதையும் எங்களுக்குச் சொல்வீராக.(2) பெருகும் செல்வமோ, உற்றார் உறவினர்களோ, நலன் விரும்பிகளான நண்பர்களின் இடத்தைப் பெற மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.(3) நல்லாலோசனைகளைக் கேட்க வல்லனும், நன்மையைச் செய்பவனுமான ஒரு நண்பன் மிக அரிதானவனாவான். ஓ! அறவோரில் முதன்மையானவரே, இவை குறித்து நீர் முழுமையாக உரையாடுவதே உமக்குத் தகும்" என்றான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, எந்த மனிதர்களுடன் நட்பு கொள்ள முடியும், எந்த மனிதர்களிடம் நட்பு கொள்ளக்கூடாது என்பது குறித்து நான் உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(5) பேராசைமிக்கவன், இரக்கமற்றவன், தன் வகைக்கான கடமைகளைத் துறந்தவன், நேர்மையற்றவன், கபடன், அற்பன், பாவம்நிறைந்த செயல்பாடுகளைக் கொண்டவன் {பாவி}, அனைத்தையும் ஐயுறுபவன், செயல்படாதவன் {சோம்பேறி},(6) எதிலும் தாமதம் செய்பவன், கோணல்புத்தி கொண்டவன், உலகளாவிய அளவில் அவதூறு செய்வதை நோக்கமாகக் கொண்டவன், ஆசானை மதிக்காதவன், நன்கறியப்பட்ட ஏழு தீமைகளுக்கு[1] அடிமையாயிருப்பவன், துயரிலுள்ள நண்பர்களைக் கைவிடுபவன், தீய ஆன்மா கொண்டவன், வெட்கமற்றவன்,(7) எப்போதும் பாவத்தை நோக்கியே பார்வையைச் செலுத்துபவன், நாத்திகன், வேதங்களை அவதூறு செய்பவன், கட்டுப்படுத்தப்படாத புலன்களைக் கொண்டவன், கட்டுபாடற்ற காமத்தில் ஈடுபடுபவன்,(8) பொய்மைநிறைந்தவன், அனைவராலும் கைவிடப்பட்டவன், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறுபவன், பொறாமை கொண்டவன், பாவத்தையே செய்பவன்,(9) தீய நடத்தை கொண்டவன், தூய்மையடையாத ஆன்மா கொண்டவன், கொடூரன், சூதாடி, நண்பர்களுக்கு எப்போதும் தீங்கிழைப்பவன், பிறர் செல்வத்தின் மேல் பேராசை கொள்பவன்,(10) தன்னால் முடிந்த அளவுக்குப் பிறனால் கொடுக்கப்படும் எதிலும் ஒருபோதும் நிறைவை வெளிப்படுத்தாத தீய ஆன்மா கொண்ட அற்பன், நண்பர்களிடம் ஒருபோதும் நிறைவு கொள்ளாதவன், ஓ! மனிதர்களில் காளையே,(11) கோபப்படத் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் கோபப்படுபவன், அமைதியற்ற மனம் கொண்டவன், காரணமேதுமில்லாமல் சச்சரவில் ஈடுபடுபவன், நல்ல நண்பர்களைக் கைவிட எந்தத் தயக்கமும் கொள்ளாதவன்,(12) தன் நலன்களை மட்டுமே எப்போதும் மனத்தில் கொள்ளும் இழிந்தவன், ஓ! மன்னா, தெரிந்தோ, தெரியாமலோ நண்பர்கள் இழைக்கும் சிறு தீங்குக்காகச் சச்சரவில் ஈடுபடுபவன்,(13) எதிரியைப் போலச் செயல்பட்டு, நண்பனைப் போலப் பேசுபவன், பிறழ்நடை {வக்கிரமான} உள்ளுணர்வு கொண்டவன், (தன் நன்மையில்) குருடாக இருப்பவன், தனக்கும், பிறருக்கும் நன்மையானவற்றில் ஒருபோதும் மகிழ்ச்சி கொள்ளாதவன் ஆகியோர் தவிர்க்கப்பட வேண்டும்.(14) மதுபானம் பருகுபவன், பிறரை வெறுப்பவன், கோபம்நிறைந்தவன், கருணையற்றவன், பிறரின் இன்பத்தைக் கண்டு துன்புறுபவன், நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், வாழும் உயிரினங்களின் உயிரை எடுப்பதிலேயே எப்போதும் ஈடுபடுபவன்,(15) நன்றியற்றவன், தீயவன் ஆகியோர் தவிர்க்கப்பட வேண்டும். இவர்களில் எவரிடமும் ஒருபோதும் (நட்புடன்) கூட்டணி அமைத்துக் கொள்ளக்கூடாது. அதே போலவே, பிறரின் குற்றங்களைக் குறிப்பதையே எப்போதும் நோக்கமாகக் கொண்டவனிடமும் (நட்புடன்) கூட்டணி அமைத்துக் கொள்ளக்கூடாது.
[1] காமத்தால் உண்டாகும் நான்கு தீமைகளான வேட்டை, சூதாட்டம், பெண்டிர், குடி மற்றும் கோபத்தால் உண்டாகும் மூன்று தீமைகளான தீங்கிழைத்தல், கடுஞ்சொல், பொருளை அபகரித்தல் ஆகிய ஏழு தீமைகளும் அதிபயங்கரத் தீமைகள் என்று கொள்ளப்படுகின்றன.
இப்போது, (நட்புடன்) கூட்டணி அமைத்துக்கொள்ளக்கூடிய மனிதர்களைக் குறிப்பிடுகிறேன் கேட்பாயாக.(16) நற்பிறவி கொண்டவர்கள், நாநலம் மற்றும் பேச்சில் பணிவு கொண்டவர்கள், அறிவியலையும் ஞானத்தையும் கொண்டவர்கள், அழகிய ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்புகளைக் கொண்டவர்கள், தகுதியையும், பிற சாதனைகளையும் கொண்டவர்கள், பேராசையில் இருந்து விடுபட்டவர்கள், உழைப்பால் களைக்காதவர்கள்,(17) நண்பர்களுடன் நலமாக இருப்பவர்கள், நன்றி நிறைந்தவர்கள், பல்வேறு தகவல்களையும், ஞானத்தையும் கொண்டவர்கள், பொருளாசையற்றவர்கள், ஏற்புடைய பண்புகளைக் கொண்டவர்கள், வாய்மையில் உறுதியாக இருப்பவர்கள், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்கள்,(18) உடற்பயிற்சிகள் மற்றும் பிற பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், நல்ல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் குலங்களைத் தழைக்கச் செய்பவர்கள்[2], களங்கமற்றவர்கள், புகழுடையவர்கள் ஆகியோருடன் மன்னர்கள் (நட்புடன்) கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.(19)
[2] "மனைவியரை அடைந்து, பிள்ளைகளைப் பெற்றவர்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மேலும், ஓ! ஏகாதிபதி, தன் சக்திக்குத் தக்கபடி செயல்படுபவனிடம் நிறைவடைந்து மகிழ்பவர்கள், கோபத்திற்கு அவசியமில்லாத சந்தர்ப்பங்களில் ஒருபோதும் கோபமடையாதவர்கள், போதுமான காரணமேதுமில்லாமல் ஒருபோதும் சலிப்படையாதவர்கள்,(20) பொருளறிவியலை நன்கறிந்தவர்கள், எரிச்சலில் இருக்கும்போதும் தங்கள் மனங்களை அமைதியாக வைத்துக் கொள்ளக்கூடியவர்கள், தனிப்பட்ட தியாகம் செய்து நண்பர்களின் தொண்டில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள்,(21) மனவேற்றுமை கொண்டு நண்பர்களிடம் இருந்து ஒருபோதும் பிரியாதவர்கள், (எளிதில் நிறம் மாறாத) கம்பளியால் ஆன சிவப்புத் தரைவிரிப்பைப் போலத் (தங்கள் பற்றில்) மாற்றமில்லாமல் தொடர்பவர்கள், கோபத்தால் ஒருபோதும் ஏழைகளை அவமதிக்காதவர்கள், காமம் மற்றும் குழப்ப வசப்பட்டு ஒருபோதும் இளம்பெண்களை அவமதிக்காதவர்கள், தவறான பாதைகளை ஒருபோதும் நண்பர்களுக்குக் காட்டாதவர்கள், நம்பிக்கைக்குத் தகுந்தவர்கள், அறநடத்தையில் பற்றுடையவர்கள், தங்கத்தையும் செங்கற்கட்டிகளையும் ஒரே கண்ணால் {ஒன்றாகப்} பார்ப்பவர்கள், நண்பர்களிடமும், நலம்விரும்பிகளிடமும் உறுதியான பிணைப்பு கொண்டவர்கள்,(23) தங்கள் மதிப்புக்குறிகள் அனைத்தையும் கைவிட்டு மக்களைத் திரட்டி, நண்பர்களின் காரியத்தை நிறைவுசெய்ய முயல்பவர்கள் ஆகியோர் (நட்புடன்) கூட்டணி அமைத்துக்கொள்ளத்தக்க மனிதர்களாகக் கருதப்பட வேண்டும்.(24) உண்மையில், எந்த மன்னன், இத்தகைய மேன்மையான மனிதர்களுடன் நட்புக்கூட்டணி அமைத்துக் கொள்கிறானோ, அவனுடைய ஆட்சிப்பகுதிகள், விண்மீன்களின் தலைவனையுடைய {நிலவுடைய} ஒளிபோல அனைத்துத் திசைகளிலும் பரந்து விரிவடையும்.(25)
ஆயுதங்களில் நல்ல பயிற்சி பெற்றவர்கள், கோபத்தை முற்றிலும் கட்டுப்படுத்தியவர்கள், போரில் எப்போதும் வலுத்தவர்கள், உயர்ந்த குடிபிறப்பு, நல்ல நடத்தை மற்றும் பல்வேறு சாதனைகளைச் செய்தவர்கள் ஆகிய மனிதர்களுடனே கூட்டணிகள் அமைக்கப்பட வேண்டும்.(26) ஓ! பாவமற்றவனே, நான் குறிப்பிட்ட குற்றமுள்ள மனிதர்களில், ஓ! மன்னா, நன்றியற்றவர்களும், நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவர்களுமே பெரும் குற்றமுள்ளவ்வர்கள். தீய நடத்தை கொண்ட அந்த மனிதர்கள் அனைவராலும் தவிர்க்கப்பட வேண்டும். உண்மையில், இதுவே தீர்மானிக்கப்பட்ட முடிவாகும்" என்றார் {பீஷ்மர்}.(27)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இந்த விளக்கத்தை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவர்கள் என்றும், நன்றியற்ற மனிதர்கள் என்றும் அழைக்கப்படுவோர் யார் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(28)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, வடக்கில் இருக்கும் மிலேச்சர்களின் நாட்டில் நடந்த சம்பவங்கள் அடங்கிய ஒரு பழங்கதையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(29) நடுநாட்டை {மத்தியதேசத்தைச்} சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிராமணன் இருந்தான். அவன் {அந்த பிராமணன்} வேத கல்வியற்றவனாக இருந்தான். (ஒருநாள்) அந்த மனிதன், ஒரு செழிப்பான கிராமத்தைக் கண்டு, ஈகை பெறும் விருப்பத்தில் அதற்குள் நுழைந்தான்.(30) பெரும் செல்வத்தைக் கொண்டவனும், (மனிதர்களின்) வகைகள் அனைத்தின் தனிப்பட்ட பண்புகளை அறிந்தவனும், பிராமணர்களிடம் பற்று மிக்கவனும், வாய்மையில் உறுதியானவனும், எப்போதும் கொடைகளை அளிப்பவனுமான ஒரு கள்வன் அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்தான்.(31) அந்தப் பிராமணன், அந்தக் கள்வனின் வசிப்பிடத்திற்குச் சென்று பிச்சை கேட்டான். உண்மையில் அவன், ஒரு வருடத்திற்கு வாழ வேண்டியதற்குத் தேவையான பொருட்களையும், ஒரு வீட்டையும் கேட்டான்.(32) இவ்வாறு அந்தப் பிராமணனால் கேட்கப்பட்ட கள்வன், {அதற்கு மேலும்} நுனி முழுமையான புதிய துணியையும்[3], இளமை கொண்ட ஒரு கைம்பெண்ணையும் {விதவைப் பெண்ணையும்} கொடுத்தான்.(33) அவை அனைத்தையும் கள்வனிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிராமணன் மகிழ்ச்சியால் நிறைந்தான். உண்மையில் அந்தக் கௌதமன்[4], கள்வன் அவனுக்குக் கொடுத்த வசதியான வீட்டில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.(34) அவன், கள்ளர் தலைவனிடம்[5] இருந்து பெற்ற பெண் அடிமையின் {பணியாளின்} உற்றார் உறவினருக்கு உதவிபுரியத் தொடங்கினான். இவ்வழியில் அவன் அந்தச் செழிப்புமிக்க வேடர்களின் கிராமத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்தான்.(35)
[3] "அஃதாவது அது முழுத் துணியில் இருந்து கிழிக்கப்பட்ட துணியல்ல, ஆனால் அதற்கு இரு நுனிகளும் இருந்தன என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உடனே, பிராம்மணன் அந்தத் திருடனுடைய வீட்டிற்குச் சென்று பிக்ஷையை யாசித்தான். அந்தத் திருடனானவன் அந்தப் பிராம்மணனுக்கு வஸிக்க வேண்டியதற்கான இடத்தையும், வருஷத்திற்கு வேண்டிய பிக்ஷையையும் கரையுள்ளதான புதி வஸ்திரத்தையும், பதியில்லாதவளும், யௌவனப்பருவமுடையவளுமான ஒரு ஸ்திரீயையும் கொடுத்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவன் {பிராமணன்}, அவனுடைய {கள்வனுடைய} வீட்டிற்குச் சென்று பிச்சையெடுத்தான். அவன் தான் வசிப்பதற்குண்டான ஓர் இடத்தையும், ஒரு வருடம் நீடிக்கக்கூடிய பிச்சையையும் கேட்டான். அவன் அந்தப் பிராமணனுக்கு இவையனைத்தையும் கொடுத்து, புதிதாகத் தெரிந்த ஓர் ஆடையைக் கொடுத்தான். மேலும் அவன் கணவனை இழந்த ஒரு முதிய பெண்ணையும் அவனுக்குக் கொடுத்தான்" என்றிருக்கிறது.[4] கும்பகோணம் பதிப்பில், "கௌதம கோத்திரத்தில் பிறந்த அந்தப் பிராம்மணன் திருடனிடமிருந்து இவற்றையெல்லாம் அவ்விதம் பெற்றுக் கொண்டு ஸந்தோஷமடைந்த மனமுள்ளவனாகிச் சிறந்ததான அந்த வீட்டில் அந்த ஸ்திரீயுடன்கூட ஸந்தோஷமாக இருந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கௌதமன் அந்த உயர்ந்த வீட்டில் அவளோடு இன்புற்றிருந்தான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "கௌதமன் என்பது அந்தப் பிராமணனின் பெயர்" என்றிருக்கிறது.[5] பிபேக்திப்ராயின் பதிப்பில் கள்ளர் தலைவனின் பெயர் "சபரன்" என்று சொல்லப்படுகிறது. அந்தப் பெயருக்கு அடிக்குறிப்பாக, அதன் பொருள் "வேடன்" என்பதாகும் என்றுமிருக்கிறது.
அவன் {கௌதமன்}, பெரும்பற்றுடன் வில் ஏவும் கலையைப் பயிலத் தொடங்கினான். கௌதமன், அங்கே வசித்த பிற கள்வர்களைப் போல, ஒவ்வொருநாளும் காட்டுக்குச் சென்று, காட்டு நாரைகளை {அன்னபக்ஷிகளை} அபரிமிதமாகக் கொன்றான். உயிரினங்களைக் கொல்வதில் எப்போதும் ஈடுபட்ட அவன், விரைவில் அச்செயலில் நல்ல திறம்பெற்றவனாகி, கருணைக்கு விடைகொடுத்தனுப்பினான். கள்வர்களுடன் அவன் கொண்ட நெருக்கத்தின் விளைவால், அவன் அவர்களில் ஒருவனாகவே ஆனான்.(36,37) அந்தக் கள்வர் கிராமத்தில் பல மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவனால் கொல்லப்பட்ட காட்டு நாரைகளின் எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தது.(38) ஒருநாள் அந்தக் கிராமத்திற்கு மற்றொரு பிராமணன் வந்தான். அவன் மரவுரியும் மான்தோலும் உடுத்தி, தன் தலையில் சடாமுடி தரித்தவனாக இருந்தான். மிக உயர்ந்த தூய நடத்தை கொண்ட அவன் வேத கல்வியில் பற்றுடன் இருந்தான்.(39) அவன் அடக்கமான மனோநிலை மற்றும் உணவில் சிக்கனம் கொண்டவனாக, பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாக, வேதங்களை முற்றாக அறிந்தவனாக, பிரம்மச்சரிய நோன்புகளைப் பயில்பவனாக, கௌதமன் எங்கிருந்து வந்தானோ அந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தான்.(40)
ஏற்கனவே சொன்னதுபோலத் தான் திரிந்து கொண்டிருந்த போக்கில் அந்தப் பிராமணன், கௌதமன் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட அந்தக் கள்ளர் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். ஒரு சூத்திரனால் கொடுக்கப்பட்ட உணவை ஏற்காத அவன், (விருந்தோம்பலின் கடமைகளை ஏற்றுக் கொள்வதற்காக) அங்கே இருக்கக்கூடிய ஒரு பிராமணனின் வீட்டைத் தேடத் தொடங்கினான்[6].(41) அதன்படி அவன் கள்வர் குடும்பங்கள் நிறைந்த அந்தக் கிராமத்தின் அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தான். இறுதியாக அந்தப் பிராமணர்களில் முதன்மையானவன், கௌதமனுக்குச் சொந்தமான வீட்டுக்கு வந்தான்.(42) சரியாக அதே நேரத்தில், கௌதமனும் காட்டிலிருந்து தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். இரு நண்பர்களும் சந்தித்துக் கொண்டனர்.(43) வில்லும், வாளும் தரித்திருந்த அவன், கொல்லப்பட்ட நாரைகளைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு இருந்தான். அவனது தோள்களில் இருந்த பையில் இருந்து சொட்டி குருதியால் அவனது உடல் பூசப்பட்டிருந்தது.(44) புதிதாக வந்த அந்த விருந்தினன், தன்னினத்தைத் தின்னும் விலங்குக்கு ஒப்பாக, தன் பிறப்பின் வகைக்கான தூய நடைமுறைகளில் இருந்து வீழ்ந்துவிட்டவனாக இருந்த அந்த மனிதன், தன் வீட்டுக்குள் நுழைவதைக் கண்டு, ஓ! மன்னா, அவனை அடையாளங்கண்டு கொண்டு இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(45)
[6] "ஒரு சூத்திரன் என்னதான் செல்வந்தனாக இருந்தாலும் அவனிடமிருந்து கொடையேதும் ஏற்காத அசூத்திரபிராதிகிராஹினர்களான acudrapratigraahins பிராமணர்கள் பலர் இந்த நாள் வரையிலும்கூட இந்தியாவில் இருக்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
{அவன்}, "மடமையினால் நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ ஒரு பிராமணனும், பிராமணக் குடும்பத்தைத் தழைக்கச் செய்பவனுமாவாய். நடுநாட்டை {மத்திய தேசத்தைச்} சேர்ந்த மதிப்புமிக்கக் {பிராமணக்} குடும்பத்தில் பிறந்த உன்னால் எவ்வாறு நடைமுறைகளில் ஒரு கள்வனாக முடிந்தது?(46) ஓ! மறுபிறப்பாளனே, வேதங்களில் கரைகண்டவர்களும், புகழ்மிக்கவர்களும், பழங்காலத்தைச் சேர்ந்தவர்களுமான உற்றார் உறவினரை நினைவுகூர்வாயாக. அவர்களின் குலத்தில் பிறந்த நீ, ஐயோ, அதற்கொரு கறையாக வந்து சேர்ந்திருக்கிறாய்.(47) உன் முயற்சியால் விழிப்படைவாயாக. ஓ! மறுபிறப்பாளனே, (நீ பிறந்த வகைக்கான) சக்தி, நடத்தை, கல்வி, தற்கட்டுப்பாடு மற்றும் கருணையை நினைவுகூர்ந்து தற்போதைய உன் வசிப்பிடத்தை விட்டு அகல்வாயாக" என்றான்.(48)
ஓ! மன்னா, இவ்வாறு நல்ல மனம் கொண்ட தன் நண்பனால் சொல்லப்பட்ட கௌதமன், இதயத்தில் பெரும் துன்பத்துடன் அவனுக்குப் பதிலளித்தான்,(49) "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, நான் ஓர் ஏழை. நான் வேத அறிவற்றவன். ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, செல்வத்துக்காக மட்டுமே நான் இங்கே வசிப்பிடத்தை அடைந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக.(50) எனினும், உன்னைக் கண்டதால் நான் இன்று அருளப்பட்டவனானேன். நாளை நாம் இருவரும் இந்த இடத்தைவிட்டு ஒன்றாகப் புறப்படுவோம். நீ இந்த இரவை என்னோடு கழிப்பாயாக" என்றான்.(51)
புதிதாக வந்த பிராமணன் இவ்வாறு சொல்லப்பட்டதும், கருணை நிறைந்தவனாகி, அங்கே எதையும் தொடுவதைத் தவிர்த்து, அந்த இரவை அங்கே கழித்தான். உண்மையில் பசித்தாலும், மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்ளப்பட்டாலும், அந்த விருந்தினன் அந்த வீட்டில் இருந்த எந்த உணவையும் தீண்ட மறுத்துவிட்டான்" என்றார் {பீஷ்மர்}.(52)
சாந்திபர்வம் பகுதி – 168ல் உள்ள சுலோகங்கள் : 52
ஆங்கிலத்தில் | In English |