The Rakshasa king Virupaksha! | Shanti-Parva-Section-170 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 40)
பதிவின் சுருக்கம் : கௌதமனுக்கு உண்ண மீன்களும், படுக்க மென்மையான படுக்கையும் கொடுத்த ராஜதர்மன் என்ற நாரை; செல்வமீட்டும் வழியைச் சொன்ன ராஜதர்மன்; ராட்சச மன்னன் விருபாக்ஷனைக் காணச் சென்ற கௌதமன்; செல்வச்செழிப்பில் இருந்த மேருவ்ரஜ நகரத்தைக் கண்ட கௌதமன்...
The Rakshasa king Virupaksha! | Shanti-Parva-Section-170 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இந்த இனிய வார்த்தைகளைக் கேட்ட கௌதமன், ஆச்சரியத்தால் நிறைந்தான். அதேநேரத்தில் பெரும் ஆவலை உணர்ந்த அவன், ராஜதர்மனிடம் {நாரையிடம்} இருந்து பார்வை எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.(1)
ராஜதர்மன் {என்ற நாரையானவன்}, "ஓ! பிராமணரே, நான் கசியபருக்கும், (தவசி) தக்ஷனின் மகள்களில் ஒருத்திக்குப் பிறந்த மகனாவேன். பெரும் தகுதிகளையுடைய நீர் இன்று என் விருந்தினராகியிருக்கிறீர். ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, உமக்கு நல்வரவு" என்றான்".
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி விருந்தோம்பலை அளித்த அந்த நாரையானவன், சுற்றிலும் கிடந்த சால மலர்களால் ஒரு சிறந்த படுக்கையை அமைத்துக் கொடுத்தான். மேலும் அவன், பாகீரதியின் ஆழமான நீரில் இருந்து பிடிக்கப்பட்ட பல பெரிய மீன்களையும் அவனுக்குக் கொடுத்தான்.(4) உண்மையில், அந்தக் கசியபரின் மகன் {நாரையான ராஜதர்மன்}, தன் விருந்தினனான கௌதமன் ஏற்றுக் கொள்வதற்காகச் சுடர்மிக்க நெருப்பையும், குறிப்பிட்ட பெரிய மீன்களையும் கொடுத்தான்.(5) அந்தப் பிராமணன் உண்டு, நிறைவடைந்த பிறகு, தவங்களைச் செல்வமாகக் கொண்ட அந்தப் பறவையானவன், களைப்பு நீங்க தன் சிறகுகளால் அவனுக்கு விசிறத் தொடங்கினான்.(6)
தன் விருந்தினன் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட அவன் {ராஜதர்மன்}, அவனது குடிவழி குறித்துக் கேட்டான். அதற்கு அந்த மனிதன் {கௌதமன்}, "நான் கௌதமன் என்ற பெயரால் அறியப்படும் ஒரு பிராமணனாவேன்" என்றான் சொல்லி அமைதியடைந்தான்.(7)
அந்தப் பறவையானவன், இலைகளாலும், நறுமணமிக்க மலர்கள் பலவற்றாலுமான மென்மையான படுக்கையைத் தன் விருந்தினனுக்குக் கொடுத்தான். கௌதமன் அதில் தன்னைக் கிடத்திக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(8) கௌதமன் அவ்வாறு தன்னைக் கிடத்திக் கொண்ட போது, கடமைகளின் அறிவில் யமனுக்கு ஒப்பானவனான கசியபரின் நானலமிக்க மகன் {ராஜதர்மன்}, அவன் அங்கே வந்ததற்கான காரணத்தைக் குறித்துக் கேட்டான்.(9)
கௌதமன் {நாரையிடம்}, "ஓ! பெரும் ஆன்மா கொண்டவனே, நான் ஏழ்மைமிக்கவன். செல்வம் ஈட்டுவதற்காக நான் கடலுக்குச் செல்ல விரும்புகிறேன்" என்று பதிலுரைத்தான்.(10)
கசியபரின் மகன் உற்சாகமாக, "நீர் கவலையேதும் கொள்வது உமக்குத் தகாது. ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, நீர் வெற்றியடைந்து, உடைமைகளுடன் இல்லம் திரும்புவீர்.(11) மரபுரிமை, நற்பேறு அல்லது தேவர்களின் உதவி மூலமான திடீர் உடைமையீட்டல், உழைப்பு, நண்பர்களின் உதவி, அல்லது அன்பு ஆகிய நான்கு வழிமுறைகளின் மூலம் ஒருவன் செல்வத்தை ஈட்டலாம் என்று தவசி பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார்.(12) நான் உமது நண்பனாகியிருக்கிறேன். நான் உம்மிடம் நல்லெண்ணங்களை வளர்க்கிறேன். எனவே, நீர் செல்வமடைவதில் வெல்லும் வழியில் நான் முயற்சி செய்வேன்" என்றான் {நாரையான ராஜதர்மன்}.(13)
தன் விருந்தினன் படுக்கையிலிருநு உற்சாகமாக எழுவதைக் கண்ட அந்தப் பறவையானவன், அவனிடம் {கௌதமனிடம்}, "ஓ! இனிமையானவரே, இந்த வழியாகச் சென்றால் நிச்சயம் நீர் வெற்றியடைவீர்.(14) இந்த இடத்தில் இருந்து மூன்று யோஜனைகள் தொலைவில் ராட்சசர்களின் வலிமைமிக்க மன்னன் ஒருவன் இருக்கிறான். பெரும்பலம் கொண்ட அவனது பெயர் விருபாக்ஷனாகும். மேலும் அவன் எனது நண்பனுமாவான்.(15) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, அவனிடம் செல்வீராக. என் வேண்டுகோளால் துண்டப்படும் அந்தத் தலைவன், நீர் விரும்பும் அளவுக்குச் செல்வத்தை உமக்குக் கொடுப்பான்" என்றான்.(16)
ஓ! மன்னா, இவ்வாறு சொல்லப்பட்ட கௌதமன், வழியில் அமுதம் போன்ற இனிமையான கனிகளை நிறைவாக உண்டு கொண்டே அந்த இடத்திற்கு உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றான்.(17) சாலை நெடுகிலும் வளர்ந்திருந்த சந்தனம், அகில், இலவங்க மரங்களைக் கண்டு, அவற்றின் புத்துணர்வு மிக்க நிழல்களை அனுபவித்தபடியே அந்தப் பிராமணன் விரைவாகச் சென்றான்.(18) பிறகு அவன் {கௌதமன்} மேருவ்ரஜம் என்ற பெயரில் அறியப்பட்ட நகரத்தை அடைந்தான். அது கற்களால் செய்யப்பட்ட பெரிய கட்டட முகப்புகளையும், அதே பொருளாலான {கற்களாலான} உயர்ந்த சுவர்களையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் அஃது அகழியால் சூழப்பட்டிருந்தது, மேலும் மதில்களில் பெரிய பாறைத் துண்டுகள் மற்றும் பல்வேறு வகைகளிலான இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தன.(19) ஓ! மன்னா, தன் நண்பனால் (நாரையால்) தன்னிடம் விருந்தினனாக அனுப்பப்பட்டவன் அவன் என்பதைப் பெரும் நுண்ணறிவு கொண்ட ராட்சசத் தலைவன் {விருபாக்ஷன்} விரைவில் அறிந்து கொண்டான். அந்தத் தலைவன் கௌதமனை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.(20)
அப்போது, ஓ! யுதிஷ்டிரா, அந்த ராட்சசர்களின் மன்னன், தன் பணியாட்களிடம், "வாயிலில் இருந்து கௌதமர் இங்கே விரைவில் கொண்டுவரப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டான். மன்னனின் ஆணையின் பேரில், பருந்துகளைப் போல வேகமிக்கக் குறிப்பிட்ட மனிதர்கள், தங்கள் ஆட்சியாளனின் அற்புத அரண்மனையில் இருந்து வெளியே வந்து, கௌதமன் இருந்த வாயிலுக்குச் சென்றனர்.(22)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த அரசத் தூதுவர்கள், அந்தப் பிராமணனிடம், "விரைவாக வாரும், மன்னன் உம்மைக் காண விரும்புகிறார்.(23) விருபாக்ஷன் என்ற பெயரைக் கொண்ட பெரும் துணிவுமிக்க ராட்சசர்களின் மன்னனைக் குறித்து நீர் கேள்விப்பட்டிருப்பீர். அவரே உன்னை உடனடியாகக் காண விரும்புகிறார். தாமதிக்காதீர், விரைவாக வாரும்" என்று சொன்னார்கள்.(24)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், ஆச்சரியத்தால் தன் களைப்பை மறந்து அந்தத் தூதுவர்களுடன் ஓடினான். அந்த நகரின் பெருஞ்செழிப்பைக் கண்ட அவன் {கௌதமன்} ஆச்சரியத்தால் நிறைந்தான்.(25) ராட்சசர்களின் மன்னனைப் பார்க்க வேண்டி, தூதுவர்களின் துணையுடன் அம்மன்னனின் அரண்மனைக்குள் விரைவாக நுழைந்தான்" {என்றார் பீஷ்மர்}.(26)
சாந்திபர்வம் பகுதி – 170ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |