Cruel Plan! | Shanti-Parva-Section-171 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 41)
பதிவின் சுருக்கம் : கௌதமனை வரவேற்றுக் கௌரவித்த விருபாக்ஷன்; பெரும் செல்வத்தை எடுத்துச் சென்ற கௌதமன்; அதே ஆலமரத்தடியை அடைந்து களைத்துச் சாய்ந்தது; ராஜதர்மன் வந்து தன் சிறகுகளால் விசிறி அவனது களைப்பகற்றி உணவு ஊட்டியது; நெடும் வழி செல்ல வேண்டியுள்ளதால் உணவுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணிய கௌதமனின் மனத்தில் உதித்த கொடூரத் திட்டம்...
Cruel Plan! | Shanti-Parva-Section-171 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு பெரிய அறைக்குள் வழிநடத்தப்பட்ட கௌதமன், ராட்சசர்களின் மன்னனிடம் அறிமுகப்படுத்தப்பட்டான். (வழக்கமான காணிக்கைகளுடன்) பின்னவனால் {ராட்சச மன்னன் விருபாக்ஷனால்} வழிபடப்பட்ட அவன், ஓரு சிறந்த இருக்கையில் அமர்ந்தான்.(1) மன்னன், அவன் பிறந்த குலம், நடைமுறைகள், வேத கல்வி, பிரம்மச்சரிய நோன்பு ஆகியவற்றைக் குறித்து விசாரித்தான். எனினும், அந்தப் பிராமணன் பிற கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தன் பெயரையும், குலத்தையும் மட்டுமே சொன்னான்.(2) தன் விருந்தினனுடைய பெயர் மற்றும் குலத்தை மட்டுமே உறுதி செய்து கொண்ட மன்னன், அவனிடம் பிராமணக் காந்தியும், வேத கல்வியும் இல்லாதிருப்பதைக் கண்டு, அடுத்ததாக அவன் சார்ந்த நாட்டைக் குறித்துக் கேட்டான்.(3)
அந்த ராட்சசன் {விருபாக்ஷன் கௌதமனிடம்}, "ஓ! அருளப்பட்டவரே, உமது வசிப்பிடம் எங்கே இருக்கிறது, உமது மனைவி எந்தக் குலத்தைச் சார்ந்தவர்? எங்களுக்கு உண்மையைச் சொல்வீராக. அஞ்சாதீர். கவலையில்லாமல் எங்களை நம்புவீராக" என்று கேட்டான்.(4)
கௌதமன் {விருபாக்ஷனிடம்}, "பிறப்பால் நான் நடுநாட்டை {மத்திய தேசத்தைச்} சேர்ந்தவன். நான் வேடர்களின் கிராமத்தில் வசிக்கிறேன். நான் விதவையாக இருந்த ஒரு சூத்திர மனைவியைத் திருமணம் செய்து கொண்டேன். நான் உன்னிடம் சொல்லும் இவை அனைத்தும் உண்மையே" என்றான்".(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "மன்னன், என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கத் தொடங்கினான். உண்மையில், தகுதியை அடைவதில் எவ்வாறு வெல்வது என்பதைக் குறித்து எண்ணத் தொடங்கினான்.(6) அவன் தனக்குள்ளேயே, "இந்த மனிதர் பிறப்பால் ஒரு பிராமணராவார். மேலும் இவர் உயர் ஆன்ம ராஜதர்மனின் நண்பராக இருக்கிறார். அந்தக் கசியபரின் மகனால் இவர் என்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறார்.(7) என் நண்பனுக்கு ஏற்புடையதையே நான் செய்ய வேண்டும். அவன் எனக்கு மிக நெருக்கமானவன். உண்மையில் அவன் என் சகோதரனும், என் அன்புக்குரிய உறவினனுமாவான். உண்மையில் என் இதயத்தின் நண்பனாவான்.(8) கார்த்திகை மாதத்தின் இந்த நாளில் {பூர்ணிமா திதியில் / முழு நிலவில் / பௌர்ணமியில்}, முதன்மையான வகையைச் சேர்ந்த ஆயிரம் பிராமணர்கள் என் வீட்டில் ஆதரிக்கப்படுகின்றனர். இந்தக் கௌதமரும் அவர்களோடு என் ஆதரவைப் பெறட்டும். நான் இவருக்குச் செல்வத்தையும் அளிப்பேன்.(9) இஃது ஒரு புனிதமான நாள். கௌதமர் இங்கே விருந்தினராக வந்திருக்கிறார். (பிராமணர்களுக்குக்) கொடுக்கப்பட வேண்டிய செல்வம் தயாராக இருக்கிறது. இனி இது குறித்துச் சிந்திக்க என்ன இருக்கிறது" என்று நினைத்தான்.(10)
சரியாக அதே நேரத்தில் பெரும் கல்விமான்களும், நீராடி தூய்மையடைந்து (சந்தனக்குழம்பு மற்றும் மலர்களால்) அலங்கரிக்கப்பட்டவர்களும், நீண்ட பட்டாடைகள் உடுத்தியவர்களுமான ஆயிரம் பிராமணர்கள் அந்த அரண்மனைக்கு வந்தனர்.(11) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சச மன்னன் விருபாக்ஷன், அங்கே வந்த விருந்தினர்களைச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி முறையாக வரவேற்றான்.(12) மன்னனின் உத்தரவின் பேரில் அங்கே அவர்களுக்காகத் தோல்விரிப்புகள் பரப்பப்பட்டன. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, அப்போது அரச பணியாட்கள் தரையில் குசப் புற்களால் ஆன பாயை {கோரைப்பாயை} விரித்தனர்[1].(13) மன்னனால் முறையாக வழிபடப்பட்ட அந்தப் பிராமணர்களில் முதன்மையானோர், அந்த ஆசனங்களில் அமர்ந்தார்கள். மீண்டும் ஒருமுறை அந்த ராட்சசத் தலைவன், எள், தர்ப்பை மற்றும் நீர் கொடுத்து தன் விருந்தினர்களைவிதிப்படி வழிபட்டான்.(14) அவர்களில் சிலர் விஸ்வதேவர்கள், பித்ருக்கள் மற்றும் அக்னி தேவர்களைப் பிரதிபலிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள், சந்தனக்குழம்பால் பூசப்பட்டு, அவர்களுக்கு மலர்களும் கொடுக்கப்பட்டன. மேலும் அவர்கள் விலைமதிப்புமிக்கப் பிற வகைக் காணிக்கைகளாலும் துதிக்கப்பட்டனர்.(15)
[1] கும்பகோணம் பதிப்பில், "ராக்ஷஸராஜனுடைய உத்தரவுப்படி வேலைக்காரர்களால் அந்தப்ராம்மணர்களுக்கு உத்தமமான குஸங்களால் பரப்பப்பட்ட ஆசனங்கள பூமியிற்போடப்பட்டன. அந்த ஆஸனங்களில் உட்கார்ந்த அந்தப்ராம்மணஸ்ரேஷ்டர்கள் அரசனால் பூஜிக்கப்பட்டார்கள்" என்றிருக்கிறது. தோல் விரிப்புகள் சொல்லப்படவில்லை. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ராட்சசர்களில் இந்திரனின் ஆணைப்படி அங்கே தரையில் விரிப்புகள் விரிக்கப்பட்டன. ஓ! பாரதக் குலத்தில் உயர்ந்தவனே, அதற்கு மேல் அந்தப் பணியாட்கள் மெத்தைகளை விரித்தனர்" என்றிருக்கிறது. இங்கும் தோல்விரிப்புகள் சொல்லப்படவில்லை.
இத்தகைய வழிபாட்டுக்குப் பிறகு, ஒவ்வொருவரும் ஆகாயத்தில் உள்ள நிலவைப் போல ஒளிமிக்கவர்களாகத் தெரிந்தனர். பிறகு, பிரகாசமானவையும், சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பளபளப்பானவையுமான தங்கத் தட்டுகளில், நெய்யுடனும், தேனுடனும் தயாரிக்கப்பட்ட சிறந்த உணவு நிரப்பப்பட்டு அந்தப் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு வருடமும் (முழு நிலவு {பௌர்ணமி} நாட்களில்) ஆஷாட {ஆடி}, மாக {மாசி} மாதங்களில், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு ராட்சசத் தலைவன் உரிய கௌரவங்களை அளித்த பிறகு, அவர்கள் விரும்பிய சிறந்த வகை உணவுகளைப் பெறுவது வழக்கமாக இருந்தது. அதிலும் குறிப்பாகக் கார்த்திகை மாதத்தின் முழு நிலவு நாளில், கூதிர் காலம் முடிந்ததும், அந்த மன்னன், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், முத்துகள்,(17-19) பெரும் மதிப்பிலான வைரங்கள், பல்வேறு வகையிலான வைடூரியக் கற்கள், மான் தோல்கள், ரங்கு மான் தோல்கள் உள்ளிட்ட பல்வேறு செல்வங்களைப் பிராமணர்களுக்கு அபரிமிதமாகக் கொடுப்பான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உண்மையில், பல்வேறு வகைச் செல்வக் குவியல்களை (தன் மறுபிறப்பாள விருந்தினர்களுக்குத்) தக்ஷிணையாகக் கொடுத்த(20) வலிமைமிக்க விருபாக்ஷன், அந்தப் பிராமணர்களில் முதன்மையானோரிடம் பேசும்போது, "இந்த நகைகள் மற்றும் ரத்தினங்களில், நீங்கள் விரும்பிய அளவுக்கு, உங்களால் எவ்வளவு சுமந்து செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்வான்.(21) ஓ! பாரதா, மேலும் அவன், "ஓ! பிராமணர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் உணவுண்ண பயன்படுத்திய தங்கத்தட்டுகளையும், பாத்திரங்களையும் உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்" என்ற வார்த்தைகளையும் சொல்வான்.
(அந்தக் குறிப்பிட்ட விருந்து நிகழ்வில்) உயர் ஆன்ம ராட்சச மன்னனால் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டபோது, அந்தப் பிராமணர்களில் காளையர் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய அளவுக்குச் செல்வத்தை எடுத்துக் கொண்டனர்.(23) விலைமதிப்புமிக்க நகைகள் மற்றும் ரத்தினங்களால் வழிபடப்பட்டவர்களும், சிறந்த ஆடைகளை உடுத்தியிருந்தவர்களுமான அந்தப் பிராமணர்களில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(24)
பல்வேறு நிலங்களில் இருந்து தன் அரண்மனைக்கு வந்திருந்த ராட்சசர்களைத் தடுத்த அந்த ராட்சச மன்னன் மீண்டும் ஒருமுறை அந்தப் பிராமணர்களிடம்,(25) "மறுபிறப்பாளர்களே, இந்த ஒரு நாளைக்கு இங்கே இருக்கும் ராட்சசர்களிடம் நீங்கள் அச்சங்கொள்ளத் தேவையில்லை. நீங்கள் விரும்பியவாறு விளையாடிய பிறகு, இங்கிருந்து வேகமாகச் செல்லலாம்" என்றான்.(26)
பிறகு அந்தப் பிராமணர்கள் அந்த இடத்தை விட்டகன்று பெரும் வேகத்துடன் அனைத்துத் திசைகளிலும் சென்றனர். கௌதமனும், நேரம் எதையும் வீணாக்காமல் கனம் மிக்க பெரும் அளவுக்கு தங்கத்தை எடுத்துச் சென்றான்.(27) அநதக் கடினச் சுமையைச் சுமந்து சென்ற அவன், (ஏற்கனவே நாரையைச் சந்தித்த) அதே ஆல மரத்தை அடைந்தான். களைப்புடனும், களைப்பின் வாட்டத்துடனும், பசியுடனும் அவன் கீழே அமர்ந்தான்.(28) கௌதமன் அங்கே ஓய்ந்திருந்தபோது, ஓ! மன்னா, பறவைகளில் சிறந்தவனான ராஜதர்மன் அங்கே வந்தான். நண்பர்களிடம் பற்றுக் கொண்ட அவன், கௌதமனை வரவேற்று மகிழ்ச்சி அடைந்தான்.(29) அவன் {ராஜதர்மன்}, தன் சிறகுகளை அசைத்து, தன் விருந்தினனுக்கு விசிறி, அவனது களைப்பைப் போக்கத் தொடங்கினான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் கௌதமனை வழிபட்டு, அவனது உணவுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தான்.(30)
உண்ட பிறகு, புத்துணர்வை அடைந்த கௌதமன், "பேராசையாலும், மடமையினாலும் உந்தப்பட்டு இந்த அளவுக்குப் பசும்பொன்னை எடுத்து வந்துவிட்டேன். நான் நீண்ட வழியில் பயணிக்க வேண்டியுள்ளது. என் வழியில் என் உயிரைத் தாங்கிக் கொள்ள உணவேதும் கொள்ளவில்லை.(31,32) என் உயிரைத் தாங்கிக் கொள்ள என்ன செய்யப் போகிறேன்?" என்று சிந்திக்கத் தொடங்கினான். அப்போது அவனுடைய எண்ணங்கள் இவ்வாறே இருந்தன. பெரும் சிந்தனைக்குப் பிறகும், வழியில் உண்பதற்கான உணவு எதையும் அவன் காணத் தவறினான்(33). ஓ! மனிதர்களில் புலியே, நன்றியற்றவனான அவன், அப்போது இவ்வாறே எண்ணினான், "என் அருகில் இருக்கும் இந்த நாரைகளின் இளவரசன், இவ்வளவு பெரியதாகவும், இறைச்சிக் குவியலைக் கொண்டதாகவும் இருக்கிறான்.(34) இவனைக் {நாரையான ராஜதர்மனைக்} கொன்று, பையில் போட்டுக் கொண்டு,பெரும் வேகத்தோடு நான் இந்த இடத்தைவிட்டுச் செல்லப் போகிறேன்" {என்று நினைத்தான் கௌதமன்}.(35)
சாந்திபர்வம் பகுதி – 171ல் உள்ள சுலோகங்கள் : 35
ஆங்கிலத்தில் | In English |