The end of Gautama! | Shanti-Parva-Section-172 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 42)
பதிவின் சுருக்கம் : திட்டம்போட்டபடியே ராஜதர்மனைக் கொன்று, இறைச்சியை வறுத்து பயண வழிக்கான உணவாக எடுத்துச் சென்ற கௌதமன்; ராஜதர்மனைக் காணாது வருந்திய விருபாக்ஷன்; ராஜதர்மனின் கதியை உணர்ந்து கௌதமனைத் துரத்திப் பிடித்த ராட்சசர்கள்; கௌதமனை உண்ண மறுத்த ராட்சசர்கள்; அவனைத் துண்டுகளாக வெட்டி கள்வர்களுக்குக் கொடுத்தது; நன்றியற்றவனின் இறைச்சியை உண்ண மறுத்த தன்னின உன்னிகள்...
The end of Gautama! | Shanti-Parva-Section-172 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தப் பறவைகளின் இளவரசன் {நாரையான ராஜதர்மன்}, அங்கே அந்த ஆலமரத்தடியில் தன் விருந்தினனின் பாதுகாப்புக்காகச் சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட பெரும் நெருப்பை மூட்டி வைத்திருந்தான்[1].(1) மறுபுறத்தில் அந்தப் பறவையானவன் நம்பிக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்தான். நன்றியற்றவனும் தீய ஆன்மா கொண்டவனுமான அந்த இழிந்தவன் {கௌதமன்}, விருந்தோம்பி உறங்கிக் கொண்டிருக்கும் அவனைக் கொல்லத் தயாரானான்.(2) நம்பிக்கைநிறைந்த அந்தப் பறவையைச் சுடர்மிக்க நெருப்பின் துணையுடன் கொன்று, தான் செய்தது ஒரு பாவம் என்பதை ஒருபோதும் நினைக்காமல் அவனைக் கொன்றதும் மகிழ்ச்சியால் நிறைந்தான்.(3) இறகுகளை உரித்தெடுத்து அவன், அந்த நெருப்பிலேயே இறைச்சியை வறுத்தான். பிறகு தான் கொண்டு வந்த தங்கத்தோடு சேர்த்து அதையும் எடுத்துக் கொண்ட அந்தப் பிராமணன் அந்த இடத்தில் இருந்து வேகமாக ஓடினான்.(4)
[1] "அக்னி அல்லது நெருப்பு என்று சொல்லப்படும் தேவன், வாயுவை (காற்று தேவனை) தன் சாரதியாகக் கொண்டவனாவான். இந்த நாள்வரையில், இந்தியாவிலுள்ள பயணிகள் அனைவரும் காட்டிலோ, குடியிருப்புகள் இல்லாத இடங்களிலோ இரவைக் கழிக்க நேரும்போது, பெரும் நெருப்பை மூட்டிவிடுகிறார்கள். அத்தகைய நெருப்புகள் காட்டு வலங்குகளை அச்சுறுத்துவதில் வெல்கின்றன. உண்மையில், பசியுடன் திரியும் புலிகள் கூட, சுடர்மிக்க நெருப்பு வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அணுகுவதில்லை" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.
அடுத்த நாள், ராட்சச மன்னன் விருபாக்ஷன் தன் மகனிடம், "ஐயோ, ஓ! மகனே, நான் இன்று பறவைகளில் சிறந்த ராஜதர்மனைக் காணவில்லை.(5) ஒவ்வொரு நாள் காலையும் அவன் பெரும்பாட்டனை {பிரம்மனைத்} துதிப்பதற்காகப் பிரம்மலோகம் செல்வான். திரும்பும்போது, என்னைச் சந்திக்காமல் ஒருபோதும் அவன் சென்றதில்லை.(6) அவன் என் வசிப்பிடத்திற்கு வராமலேயே இரண்டு காலைகளும், இரண்டு இரவுகளும் கடந்துவிட்டன. எனவே, என் மனம் அமைதியடையவில்லை. என் நண்பனைக் குறித்து விசாரிக்க வேண்டும். இங்கே வந்த கௌதமன், வேத கல்வியற்றவனும், பிராமணக் காந்தியில்லாதவனுமாவான். அவன் என் நண்பனின் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றான். அந்த இழிந்த பிராமணன் ராஜதர்மனைக் கொன்றுவிட்டான் என நான் பெரிதும் அஞ்சுகிறேன்.(8) தீய நடைமுறைகளையும், தீ அறிவும் கொண்ட அவனை, அவன் வெளிப்படுத்திய குறிப்புகளின் மூலம் நான் உணர்ந்து கொண்டேன். கருணையற்றவனும், கொடூரனும், கடுமுகம் கொண்டவனும், தீயவனுமான அந்த மனிதர்களில் இழிந்தவன் ஒரு கள்வனைப் போன்றவனாவான். அந்தக் கௌதமன் என் நண்பனின் வசிப்பிடத்திற்குச் சென்றான். இந்தக் காரணத்தால் என் இதயம் மிகவும் கவலை கொள்கொள்கிறது.(9) எனவே ஓ! மகனே, பெரும் வேகத்துடன் ராஜதர்மனின் வசிப்பிடத்திற்குச் சென்று, தூய ஆன்மா கொண்ட அந்தப் பறவையானவன் இன்னும் உயிருடன் இருக்கிறானா என்பதை உறுதி செய்வாயாக. தாமதிக்காதே" என்றான்{விருபாக்ஷன்}.(10)
இவ்வாறு தன் தந்தையால் சொல்லப்பட்ட அந்த இளவரசன், பிற ராட்சசர்களின் துணையுடன் அங்கிருந்து பெரும் வேகத்தில் சென்றான். அந்த ஆலமரத்தடியை அடைந்த அவன், ராஜதர்மனின் எஞ்சிய பாகங்களைக் கண்டான்.(11) நுண்ணறிவுமிக்க ராட்சசர்களின் மன்னனுடைய மகன் துயரத்தால் வெகுவாக அழுது, கௌதமனைப் பிடிப்பதற்காகத் தன் சக்தி அனைத்தையும் பயன்படுத்தி வெகு வேகமாக ஓடினான்.(12) வெகு தொலைவிற்குச் செல்லும் முன்பே ராட்சசர்கள் அந்தப் பிராமணனைப் பிடித்து, இறகுகள், எலும்புகள் மற்றும் கால்களற்ற ராஜதர்மனின் உடலைக் கண்டார்கள்.(13) சிறைபிடிக்கப்பட்டவனைக் கூட்டிக் கொண்டு பெரும் வேகத்தோடு மேருவ்ரஜத்திற்குத் திரும்பி அந்த ராட்சசர்கள், ராஜதர்மனின் சிதைந்த உடலையும், நன்றியற்றவனும், இழிந்த பாவியுமான கௌதமனையும் மன்னனுக்குக் காட்டினார்கள்.(14) தன் நண்பனின் எஞ்சிய {உடல்} பாகங்களைக் கண்ட மன்னன், தன் அமைச்சர்கள் மற்றும் புரோஹிதருடன் சேர்ந்து உரக்க அழத் தொடங்கினான். உண்மையில், அவனுடைய வசிப்பிடத்தில் கேட்கப்பட்ட ஓலம் பேரொலிமிக்கதாக இருந்தது.(15,16)
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ராட்சச மன்னனின் மொத்த நகரமும் துயரத்தில் ஆழ்ந்தது. அப்போது மன்னன் தன் மகனிடம், "இந்த இழிந்த பாவி கொல்லப்பட வேண்டும். இங்கே இருக்கும் ராட்சசர்கள் இவனது இறைச்சியை மகிழ்ச்சியாக உண்ணட்டும்.(17) பாவச் செயல்கள், பாவம் நிறைந்த பழக்கவழக்கங்கள், பாவம் நிறைந்த ஆன்மா கொண்டவனும், பாவத்திற்குப் பழக்கப்பட்டவனுமான இந்த இழிந்தவன் உங்களால் கொல்லப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என்றான்.(18)
ராட்சச மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பயங்கர ஆற்றலைக் கொண்டவர்களான ராட்சசர்கள் பலர், அந்தப் பாவியின் இறைச்சியை உண்பதில் தங்களுக்குள்ள விருப்பமின்மையைத் தெரிவித்தனர்.(19) உண்மையில் அந்த இரவு உலாவிகள் தங்கள் மன்னனிடம், "இந்த இழிந்த மனிதனை கள்வர்களுக்குக் கொடுத்துவிடுவீராக" என்றனர்.(20) மேலும் அவர்கள் தங்கள் மன்னனுக்குத் தலைவனங்கி, "பாவம் நிறைந்த இந்த இழிந்தவனை எங்களுக்கு உணவாகக் கொடுப்பது உமக்குத் தகாது" என்றனர்.(21)
மன்னன் அவர்களிடம், "அப்படியே ஆகட்டும். இந்த நன்றியற்ற அற்பனை, தாமதமில்லாமல் கள்வர்களுக்குக் கொடுப்பீராக" என்றான்.(22)
இவ்வாறு சொல்லப்பட்டவர்களும், வேல்களையும், போர்க்கோடரிகளையும் தரித்தவர்களுமான அந்த ராட்சசர்கள் அந்த இழிந்த அற்பனை துண்டுகளாக வெட்டி அவற்றைக் கள்வர்களுக்குக் கொடுத்தனர்.(23) எனினும், அந்தக் கள்வர்களும், அந்த இழிந்த மனிதனின் இறைச்சியை உண்ண மறுத்துவிட்டனர். தன்னின உன்னிகளாக {மனித இறைச்சி உண்பவர்களாக} இருந்தாலும் அவர்கள் {அந்தக் கள்வர்கள்}, அந்த நன்றியற்ற மனிதனை உண்ணவில்லை.(24) ஓ! மன்னா, பிராமணனைக் கொன்றவன், மதுபானம் பருகியவன், களவாடியவன், நோன்பில் இருந்து விழுந்தவன் ஆகியோருக்கும் பாவக்கழிப்பு உண்டு, ஆனால் ஒரு நன்றியற்றவனுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(25) எந்தக் கொடூரமான மனிதன், ஒரு நண்பனுக்குத் தீங்கிழைத்து, நன்றியற்றவனாகிறானோ, அந்தத் தீயவனைத் தன்னின உன்னிகளோ, பிணந்தின்னிப் புழுக்களோ கூட உண்பதில்லை" என்றார் {பீஷ்மர்}.(26)
சாந்திபர்வம் பகுதி – 172ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |