The nature of the wise! | Shanti-Parva-Section-173 | Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 43)
பதிவின் சுருக்கம் : ஈமச்சிதை வளர்த்து தன் நண்பனுக்குரிய இறுதி சடங்குகளைச் செய்த விருபாக்ஷன்; வானத்தில் தோன்றிய சுரபி; அமுதப் பொழிவால் உயிர்பெற்ற ராஜதர்மன்; கௌதமனை உயிர்மீட்க வேண்டியது; நரகத்தில் மூழ்கிய கௌதமன்...
The nature of the wise! | Shanti-Parva-Section-173 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிறகு அந்த ராட்சச மன்னன் {விருபாக்ஷன்}, அந்த நாரைகளின் இளவரசனுக்காக {ராஜதர்மனுக்காக} ஓர் ஈமச்சிதையை ஏற்படுத்தி, தங்கம், ரத்தினங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் விலைமதிப்புமிக்க ஆடைகள் ஆகியவற்றால் அஃதை அலங்கரித்தான்.(1) அந்தப் பறவைகளின் இளவரசனுடன் {ராஜதர்மனுடன்} கூடிய அதற்கு {அந்தச் சிதைக்கு} நெருப்பிட்ட அந்த வலிமைமிக்க ராட்சசர்களின் தலைவன் {விருபாக்ஷன்}, விதிப்படி தன் நண்பனுக்குச் {ராஜதர்மனுக்குச்} செய்ய வேண்டிய ஈமக்கடனக்குரிய சடங்குகளைச் செய்தான்.(2) அந்த நேரத்தில், தக்ஷனின் மகளான மங்கலமான {பசுவான} சுரபி தேவி அந்தச் சிதை அமைக்கப்பட்ட இடத்திற்கு மேலே வானத்தில் தோன்றினாள். அவளுடைய மார்புகள் பால் நிறைந்தவையாக இருந்தன {அவளுடைய மடி பால் நிறைந்ததாக இருந்தது}[1].(3) ஓ! பாவமற்ற ஏகாதிபதி, அவளுடைய வாயிலிருந்து பாலுடன் கலந்த நுரையானது ராஜதர்மனின் ஈமச்சிதையில் விழுந்தது.(4) அதன் மூலம் அந்த நாரைகளின் இளவரசன் {ராஜதர்மன்} மீண்டும் உயிர்பெற்றான். அவன் எழுந்து, ராட்சசர்களின் மன்னனான தன் நண்பன் விருபாக்ஷனிடம் சென்றான்[2].(5)
[1] "சுரபி என்பவள் தவசி தக்ஷனுக்குப் பிறந்த தெய்வீகப் பசுவாவாள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் சுரபியைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பிபேக்திப்ராயின் பதிப்பில் சுரபியைக் குறித்துச் சொல்லப்பட்டிருந்தாலும், மடிநிறைந்த பால் குறித்த வர்ணனை ஏதும் இல்லை.[2] கும்பகோணம் பதிப்பில், "கொக்குகளுக்கு அரசனான (அந்தக்) கொக்கானது தேவனான இந்திரனுடைய வசனத்தால் அந்த இந்திரனாலேயே அமிருதத்தால் நனைக்கப்பட்டுத் திரும்பவும் உயிருள்ளதாகச் செய்யப்பட்டது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், கங்குலியின் பதிப்பில் உள்ளதைப் போலவே சுரபியின் வாயிலிருந்து பாய்ந்த பால் மற்றும் நுரையின் மூலம் ராஜதர்மன் உயிர்த்தெழுந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த நேரத்தில் தேவர்களின் தலைவனே {இந்திரனே} விருபாக்ஷனின் நகரத்திற்கு வந்தான். ராட்சச மன்னனிடம் பேசிய இந்திரன், "நற்பேற்றாலேயே நீ இந்த நாரைகளின் இளவரசனுடைய உயிரை மீட்டாய்" என்றான்.(6) பிறகு தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பறவைகளில் சிறந்தவனான ராஜதர்மனுக்குப் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} சாபம் கிடைத்த பழங்கதையை விருபாக்ஷனுக்குச் சொன்னான்.(7) மன்னனிடம் {விருபாக்ஷனிடம்} பேசிய அவன் {இந்திரன்}, "ஓ! ஏகாதிபதி {விருபாக்ஷனே}, ஒரு காலத்தில் இந்த நாரைகளின் இளவரசன், பிரம்மலோகத்தில் (இவனது வரவு எதிர்பார்க்கப்பட்டபோது) வரவில்லை. கோபமடைந்த பெரும்பாட்டன் {பிரம்மன்} இந்த நாரைகளின் இளவரசனிடம்,(8) "இன்று இந்த அற்ப நாரை என் சபைக்கு வராததால், அந்தத் தீய ஆன்மா கொண்டவன் (பூமியை விட்டு அகலும் வகையில்) விரைவில் இறப்பான்"[3] என்றார்.(9) பெரும்பாட்டனின் இந்த வார்த்தைகளின் விளைவாலேயே, நாரைகளின் இளவரசன், கௌதமனால் கொல்லப்பட்டாலும், அமுதத்தில் உடல் நனைந்ததன் மூலம் மீண்டும் உயிரை அடைந்தான்" என்றான் {இந்திரன்}.(10)
[3] கும்பகோணம் பதிப்பில், "நீ என்னுடைய இச்சபையை எப்பொழுதும் பார்க்க வராமலிருக்கிற காரணத்தால் தர்மஸ்வபாவமுள்ள பரமாத்மாவை அறிந்ததுமான கொக்காகப் பிறக்கப்போகிறாய். பாபகார்யத்தைச் செய்கிறவனும் வேடச்சேரியிலிருப்பவனும், நன்றிகெட்டவனும், சூத்திர மடந்தைக்குப் பதியுமான ஒரு பிராம்மணன் ஒருஸமயம் உன்னுடைய இருப்பிடத்திற்கு வருவான். அவன் எப்பொழுது (உன்னைக்) கொல்வானோ அப்பொழுது உனக்கு விடுதலை வரும்" என்று இருக்கிறது.
இந்திரன் அமைதியானதும், தேவர்களின் தலைவனை வணங்கிய ராஜதர்மன், "ஓ! தேவர்களில் முதல்வனே, உன் இதயம் எனக்கு அருள்தர விரும்பினால், என் அன்புக்குரிய நண்பன் கௌதமன் உயிர் பெற்று எழட்டும்" என்று கேட்டான்.(11)
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசவன் {இந்திரன்}, அந்தப் பிராமணனான கௌதமன் மீது அமுதத்தைத் தெளித்து, அவனை உயிரோடு மீட்டெடுத்தான்.(12) அந்த நாரைகளின் இளவரசன், (ராட்சச மன்னன் கொடுத்த) தங்கச் சுமையை இன்னும் தன் தோள்களில் சுமந்து கொண்டிருந்த கௌதமனை ஆரத்தழுவிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(13) பிறகு, நாரைகளின் இளவரசனான அந்த ராஜதர்மன், பாவச்செயல்களைச் செய்த கௌதமனை, அவன் வைத்திருந்த செல்வத்தோடு அனுப்பிவைத்து தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(14) (அடுத்த நாள்) உரிய நேரத்தில் அந்தப் பறவையானவன் பெரும்பாட்டனின் {பிரம்ம} உலகத்திற்குச் சென்றான். பின்னவன் {பிரம்மன்} ஒரு விருந்தினருக்குக் காட்டப்பட வேண்டிய கவனத்தோடு அந்த உயர் ஆன்மப் பறவையைக் கௌரவித்தான்.(15) கௌதமனும், வேடர்களின் கிராமத்தில் இருந்த தன் இல்லத்துக்குத் திரும்பி, தன் சூத்திர மனைவியிடம் பாவம்நிறைந்த பல பிள்ளைகளைப் பெற்றான்.(16) சில வருடங்களுக்குள், தான் மறுமணம் செய்து கொண்ட தன் மனைவியிடம் பல பிள்ளைகளைப் பெற்ற அந்த நன்றியற்ற பாவி, பல வருடங்களுக்குப் பயங்கர நரகத்தில் மூழ்குவான் எனத் தேவர்களால் பெரும் சாபமிடப்பட்டது.(17)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இவை யாவும் முன்பு ஒரு சமயம் நாரதரால் எனக்குச் சொல்லப்பட்டது. ஓ! பாரதக் குலத்தின் காளையே இந்த முக்கியமான கதையின் சம்பவங்களை நினைவுகூர்ந்து அனைத்து விபரங்களையும் நான் உனக்கு முறையாகச் சொல்லியிருக்கிறேன்.(18) நன்றியற்றவனால் எவ்வாறு புகழடையமுடியும்? நன்றியற்றவன் நம்பத்தகாதவனாவான். நன்றியற்ற ஒருவனால் ஒருபோதும் தப்ப முடியாது.(19) எந்த மனிதனும் ஒரு நண்பனுக்குத் தீங்கிழைக்கக்கூடாது. எவன் ஒரு நண்பனுக்குத் தீங்கிழைப்பானோ, அவன் நீடித்த, நிலைத்த பயங்கர நரகத்தில் மூழ்குவான்.(20) அனைவரும் நன்றிநிறைந்தவர்களாக இருக்க வேண்டும், அனைவரும் தன் நண்பர்களுக்கு நன்மையை நாட வேண்டும். ஒரு நண்பனிடம் இருந்து அனைத்தையும் அடையலாம். நண்பர்களின் மூலம் கௌரவங்களை அடையலாம்.(21) நண்பர்களின் விளைவால் ஒருவன் பல்வேறு இன்பநுகர் பொருட்களை அனுபவிக்கலாம். நண்பர்களுடைய முயற்சியின் மூலம் ஒருவன் பல்வேறு வகை ஆபத்துகள் மற்றும் துன்பங்களில் இருந்து தப்பிக்கலாம். ஞானமுள்ள ஒருவன் தன் நண்பர்களைச் சிறந்த கவனத்துடன் கௌரவிப்பான்.(22)
நன்றியற்ற, வெட்கங்கெட்ட, பாவம் நிறைந்த அற்பன், ஞானியரால் புறக்கணிக்கப்படுவான். நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவன், தன் குலத்தில் இழிந்தவனாவான். அத்தகைய பாவம் நிறைந்த அற்பன் மனிதர்களிலேயே தீயவன் ஆவான்.(23) ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, நன்றியின்மையால் களங்கப்பட்டவனும், தன் நண்பனுக்குத் தீங்கிழைப்பவனுமான பாவம் நிறைந்த ஓர் இழிந்தவனின் பண்புகளை இவ்வாறே நான் உனக்குச் சொல்லிவிட்டேன். நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?" என்றார் {பீஷ்மர்}".(24)
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, உயர் ஆன்ம பீஷ்மரால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டு யுதிஷ்டிரன் பெரும் நிறைவடைந்தான்".(25)
ஆபத்தர்மாநுசாஸன உப பர்வம் முற்றிற்று
சாந்தி பர்வம் - பாகம் 1 முற்றிற்று
சாந்திபர்வம் பகுதி – 173ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |