A whore called Pingala! | Shanti-Parva-Section-174 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 01)
பதிவின் சுருக்கம் : ஆன்மவிடுதலையை நாடுவதே கடமைகளில் முதன்மையானது; இன்பமும் துன்பமும் வாழ்க்கையில் மாறிமாறிச் சக்கரமாகச் சுழன்று வருவன என்று யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர், பிள்ளையை இழந்து வாடிக் கொண்டிருந்த மன்னன் சேனஜித்திடம் பேசிய ஒரு பிராமணரின் உரையை விளக்கமாகச் சொன்னது; துன்பத்திற்குக் காரணமான அறியாமை; விதியின் வலிமை ஆகியவற்றைச் சொல்லி மூடனும், அறிஞனும் துன்பமடைவதில்லை, மாறாக இந்த இரு நிலைகளுக்கு இடைப்பட்டவர்களே துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று மன்னன் சேனஜித்திடம் சொன்ன அந்தப் பிராமணர், பிங்களை என்ற வேசியின் கதையையும், அவள் பாடிய ஸ்லோகத்தையும் சொன்னது...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, மன்னர்களின் கடமைகள் தொடர்பான மங்கலக் கடமைகள் குறித்து நீர் உரையாடினீர். இப்போது, ஓ! மன்னா, (நான்கு) வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} வாழ்வோருக்குரிய முதன்மையான கடமைகளை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அறம் பல வாயில்களைக் கொண்டதாகும். அறம் (பரிந்துரைக்கும் கடமைகளை) நோற்பது ஒருபோதும் பயனற்றதாகாது. ஒவ்வொரு வாழ்வுமுறைக்கும் {ஆசிரமத்திற்கும்} தனித்தனியே கடமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. (மறுமையில் கிடைக்கக்கூடியவையாக இருக்கும் அக்கடமைகளின் கனிகள் புலப்படாதனவாக இருக்கின்றன). எனினும் ஆன்மாவை நோக்கிச் செய்யப்படும் தவத்தின் கனிகள் இம்மையிலேயே {இவ்வுலகிலேயே} அடையப்படுகின்றன[1].(2) எந்தப் பொருளில் ஒருவன் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அதைத் தவிர வேறு எதுவும் பேரருள் நிறைந்த உயர்ந்த உடைமையாக அவனுக்குத் தோன்றாது.(3) ஒருவன் முறையாகச் சிந்திக்கும்போது, (அத்தகைய சிந்தனையால் அவனது இதயம் தூய்மையடையும்போது), இவ்வுலகின் பொருட்கள் அனைத்தையும் அவன் வெறும் துரும்பைப் போலப் பயனற்றவையாக அறிந்து கொள்வான். அப்போது அவன் அந்தப் பொருட்கள் மீது கொண்ட பற்றிலிருந்து விடுபடுவான் என்பதில் ஐயமில்லை.(4) ஓ! யுதிஷ்டிரா, குறைகள் நிறைந்த இவ்வுலகம் இவ்வாறு இருக்கும்போது, நுண்ணறிவைக் கொண்ட ஒவ்வொரு மனிதனும், தன் ஆன்ம விடுதலையை {முக்தியை} அடைவதற்காக முயற்சிக்க வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(5)
[1] இத்தகைய ஸ்லோகங்களை மொழிபெயர்ப்பது உண்மையில் கடினமானதாகும். தர்மம் என்ற சொல் சில வேளைகளில் அறத்திற்கும், கடமைகளின் தொகுப்புக்கும் பொருள் கொள்ளுமாறு பயன்படுத்தப்படுகிறது. வேறு சில இடங்களில் அது கடமை, அல்லது குறிப்பிட்ட சூழ்நிலைக்குப் பரிந்துரைக்கப்படும் கடமைகளின் நடை ஆகியவற்றைக் குறிக்கிறது. தபம் Tapah என்ற சொல் பொதுவாகத் தவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், சிரவணம் cravana (கேட்பது), மனனம் manana (தியானம்), நிதியாத்யாசனம் nidhiaadhyaasana (முற்றான ஒருங்குவிப்புக்காக அனைத்தில் இருந்தும் ஆன்மாவை விலக்குவது) ஆகியவற்றையும் நேரடியாகக் குறிப்பிடுகிறது. முதல் வரியின் இரண்டாவது பாதியில்வரும் சதி அப்ரெத்யம் Sati apretya முதலியவற்றின் இலக்கணம், சத் Sat என்பது உண்மை, எனவே, ஆன்மா, அல்லது ஒவ்வொரு நபரின் ஆன்மாவையும் ஒரு சிறு பகுதியாக மட்டுமே கொண்டிருக்கும் பரமாத்மா என்று பொருள்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஒருவன் செல்வத்தை இழக்கும்போது, அல்லது ஒருவனுடைய மனைவியோ, மகனோ, தந்தையோ இறக்கும்போது, தன் துயரத்தை எந்த ஆன்ம நிலை கொண்டு கொல்ல வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்றான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் செல்வத்தை இழக்கும்போது, அல்லது அவனுடைய மனைவியோ, மகனோ, தந்தையோ இறக்கும்போது, அவன், "ஐயோ, இது பெருந்துன்பம்" என்று நிச்சயம் சொல்வான். ஆனால் அவன், சிந்தனையுடன் துணையுடன் அந்தக் கவலையைக் கொல்ல வேண்டும்.(7) இது தொடர்பாகச் {மன்னன்} சேனஜித்தின் சபைக்கு வந்த அவனுடைய மறுபிறப்பாள நண்பர், மன்னனிடம் பேசிய பேச்சைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(8) அந்த ஏகாதிபதி {சேனஜித்}, தன் மகனுடைய மரணத்தின் நிமித்தமாகத் துயரில் கலங்கி, கவலையில் எரிந்துகொண்டிருப்பதைக் கண்ட அந்தப் பிராமணர், உற்சாகமிழந்த இதயத்துடன் இருந்த அந்த ஆட்சியாளனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(9) "நீ ஏன் மயங்குகிறாய்? எந்த நுண்ணறிவும் இல்லாமல் இருக்கிறாய். நீயே துன்பத்திற்குப் பொருளாக இருக்கும்போது (பிறருக்காக) ஏன் வருந்துகிறாய்? சிலர் உனக்காகச் சில நாட்கள் வருந்துவார்கள், பிறகு அவர்களுக்கான சமயத்தில் அவர்களுக்காகப் பிறர் வருந்துவார்கள்.(10) ஓ! மன்னா, நானும், நீயும், உனக்காகக் காத்திருப்போரும் {உன்னிடம் பணிசெய்வோரும்} என அனைவரும் நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல்லப்போகிறோம்" என்றார்.(11)
சேனஜித், "ஓ! கல்விமானான பிராமணரே, ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, எதை அடைந்தால் நீர் கவலையடைய வேண்டாமோ, அந்த நுண்ணறிவு எது? அந்தத் தவம் எது? அந்த எண்ணம் எது? அந்த அறிவு எது? அந்தக் கல்வி எது?" என்று கேட்டான்.(12)
அந்தப் பிராமணர் {மன்னன் சேனஜித்திடம்}, "உயர்ந்தவையும், நடுத்தரமானவையும், தாழ்ந்தவையுமான உயிரினங்கள் அனைத்தும், அதனதன் செயல்களின் விளைவால் துயரில் சிக்கிக் கொள்வதைப் பார்.(13) என்னுடைய சுயத்தையே நான் எனதாகக் கருதவில்லை. மறுபுறம், மொத்த உலகத்தையும் நான் எனதாகக் கருதுகிறேன். மேலும், (நான் காணும்) இவை அனைத்தும் என்னைப் போலவே பிறருக்கும் சொந்தமானவை என்றும் கருதுகிறேன். இந்த எண்ணத்தின் விளைவால் என்னைத் துயரம் அணுகாது.(14) இந்த நுண்ணறிவை {புத்தியை} அடைந்தபிறகு, நான் இன்பத்திற்கோ, துன்பத்திற்கோ வசப்படுவதில்லை.(15) பெருங்கடலில் மிதக்கும் இரு மரத்துண்டுகள் ஒரு சமயத்தில் ஒன்றாகச் சேர்ந்து, பிறகு பிரிவதைத் போலவே இந்த உலகில் (வாழும்) உயிரினங்களின் சேர்க்கையும் நேர்கிறது.(16) மகன்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் ஆகியோர் அனைவரும் இவ்வகையினரே. ஒருவன் அவர்களிடம் இருந்து பிரியப்போவது நிச்சயம் என்பதால், அவன் அவர்களிடம் ஒருபோதும் பற்று கொள்ளக்கூடாது.(17) உன் மகன் புலப்படாத உலகில் இருந்து வந்தான். அவன் உன்னை அறிந்திருக்கவில்லை. நீயும் அவனை அறிந்திருக்கவில்லை. நீ யார்? யாருக்காக நீ வருந்திக் கொண்டிருக்கிறாய்?(18)
ஆசையெனும் நோயிலிருந்தே துயரம் எழுகிறது. மேலும், ஆசையெனும் நோய் நீங்குவதிலிருந்தே மகிழ்ச்சி விளைகிறது. இன்பத்தில் இருந்தே துன்பம் எழுகிறது, மேலும் துன்பமானது மீண்டும் மீண்டும் எழுகிறது.(19) இன்பத்திற்குப் பிறகு துன்பமும், துன்பத்திற்குப் பிறகு இன்பமும் {மாறி மாறி} வருகின்றன. மனிதர்களின் இன்பங்களும் துன்பகங்களும் ஒரு சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கின்றன.(20) இன்பத்திற்குப் பிறகு உனக்குத் துன்பம் வரும். மீண்டும் நீ இன்பத்தை அடைவாய. எப்போதும் துன்பத்தையும், எப்போதும் இன்பத்தையும் ஒருவரும் அனுபவிப்பதில்லை.(21) இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிற்கும் புகலிடமாக இவ்வுடல் இருக்கிறது[2]. உடல்படைத்த உயிரினம், தன் உடலின் உதவியால் செய்யும் எந்தச் செயல்களின் விளைவுகளையும் அவனது அந்த உடலே அனுபவிக்கும்.(22) உடல் இருப்பில் எழும்போது அதனுடனே சேர்ந்தே உயிரும் எழுகிறது. இந்த இரண்டும் ஒன்றாகவே இருக்கின்றன, ஒன்றாகவே அழிகின்றன[3].(23) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள், உலகம் சார்ந்த பல கட்டுகளால் கட்டப்பட்டு, நீரில் மணற்கரை போல அழிவைச் சந்திக்கின்றனர்.(24)
[2] "இங்கே குறிப்பிடப்படுவது உடலன்றி ஆன்மா இல்லை என உரையாசிரியர் விளக்குகிறார். உடலுடைய இறப்பின் மூலம் இன்பமும், துன்பமும் மறைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கும்பகோணம் பதிப்பில், "ஜீவனத்திற்குக் காரணமான ஸுக்ஷமசரீரமும் அந்தச் சரீரத்துடன் கூடவே உண்டாகிறது. ஸ்தூலமும் ஸூக்ஷ்மமும் என்கிற இரண்டு சரீரங்களும் சேர்ந்து கொண்டே பலவிதமாயிருக்கின்றன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த வரிகளே இல்லை.
அறியாமையில் பிறந்த பல்வேறு வகைத் துன்பங்கள், உயிரினங்கள் கொண்ட பற்றின் விளைவால் அவற்றைப் பீடித்து, எள்ளை நசுக்கும் செக்குகள் போலச் செயற்பட்டு, (தாங்கள் வசப்பட்டிருக்கும்) மறுபிறப்பு சுழற்சியைப் பிரதிபலிக்கும் செக்குகள் போல அவற்றை {உயிரினங்களை} நசுக்குகின்றன.(25) மனிதன், தன் மனைவிக்காக (மற்றும் பிறருக்காக) எண்ணற்ற தீச்செயல்களைச் செய்கிறான், ஆனால், இம்மையிலும், மறுமையிலும் அவன் தனியாகவே பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்கிறான்.(26) பிள்ளைகள், மனைவியர், உற்றார் உறவினர் ஆகியோருடன் பற்றுடன் இருக்கும் மனிதர்கள் அனைவரும், பலமற்ற காட்டு யானைகள், புதைகுழியில் மூழ்குவதைப் போல, துன்பக்கடலெனும் சகதியில் மூழ்குகின்றனர்.(27) உண்மையில், ஓ! தலைவா, செல்வத்தின் இழப்பாலும், மகன் மற்றும் உற்றார், உறவினரின் இழப்பாலும் மனிதன் அனுபவிக்கும் பெருந்துயரானது, காட்டுத்தீயின் எரிசக்திக்கு ஒப்பானதாகும்.(28) இன்பம் துன்பம், இருப்பு இல்லாமை ஆகிய இவை அனைத்தும் விதியைச் சார்ந்தே இருக்கின்றன.(29) நண்பர்களைக் கொண்டவனாக இருந்து நண்பர்களற்றவனாக ஆனவன், எதிரிகளைக் கொண்டவனாக இருந்து எதிரிகளற்றவனாக ஆனவன், ஞானம் கொண்டவனாக இருந்து ஞானமற்றவனாக ஆனவன், ஆகிய இவர்களில் ஒவ்வொரும் விதியின் மூலமே இன்பத்தை அடைகின்றனர்.(30)
ஒருவனுடைய மகிழ்ச்சிக்கு நண்பர்கள் காரணமாக இருப்பதில்லை. ஒருவனுடைய துன்பத்துக்கு எதிரிகள் காரணமாக இருப்பதில்லை. செல்வம் அடைவதை ஏற்படுத்த ஞானம் தகுந்ததல்ல {ஞானத்தால் செல்வத்தைக் கொண்டு வர முடியாது}; அதே போல இன்பம் அடைவதை ஏற்படுத்த செல்வம் தகுந்ததல்ல {செல்வம் இன்பத்தைத் தராது}.(31) செல்வத்திற்கு நுண்ணறிவு {புத்தி} காரணமல்ல, அதேபோவே எழைமைக்கு மடமையும் காரணமல்ல. வேறெதையும் அல்லாமல் ஞானத்தை மட்டுமே கொண்டவன் உலகின் வகையைப் புரிந்து கொள்கிறான் {ஒரு ஞானியாலன்றி வேறு எவராலும் இவ்வுலகத்தின் வகையைப் புரிந்து கொள்ள முடியாது}.(32) புத்திசாலி, வீரன், முட்டாள், கோழை, மூடன், கல்விமான், பலவீனன், பலமிக்கவன் ஆகியோரில் எவனிடம் இருந்து விதிக்கப்பட்டிருக்கிறதோ அவனிடம் இருந்தே மகிழ்ச்சி ஏற்படும்.(33) பசுவானவள், கன்று, உரிமையாளனான பசுமந்தையாளன் {இடையன்}, கள்வன் ஆகியோருக்கு மத்தியில், எவன் அவளது {அந்தப் பசுவின்} பாலைக் குடிப்பானோ அவனுக்கே உரிமையானவள் ஆவாள்[4].(34) முற்றிலும் செயலற்ற அறிவைக் கொண்டவர்கள், மேலான அறிவுக்கு அப்பாற்பட்ட மனநிலையை அடைந்தவர்கள் ஆகியோர் இன்பத்தை அடைவதில் வெல்கிறார்கள். இந்த இரண்டு வகையினருக்கு மத்தியில் உள்ளோரே துன்பத்தை அனுபவிக்கிறார்கள்[5].(35)
[4] "உரையாசிரியரின் விளக்கம் பின்வருமாறு: பசுவானவள், அவளது பாலைக் குடிப்பவனுக்கே சொந்தமானவள். அவளிமிருந்து எந்தப் பெறாதவனுக்கு, அவளிடம் எந்தப் பற்றும் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒருவன் தனது தேவைக்கு மேல் ஆசைப்படக்கூடாது. (தாகம், பசி மற்றும் உழைப்பால்) களைத்தவனுக்கு நூறு பசுக்களை விடச் சிறிதளவு பால் மிகவும் பயனுள்ளது; தானியங்கள் நிரப்பப்பட்ட நூறு களஞ்சியங்களை விடச் சிறிதளவு அரிசி பயன்மிக்கது; ஒரு பெரிய மாளிகையைவிட, ஒரு சிறிய படுக்கையே பயன்மிக்கது என்று சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பசுவானது கன்றிற்கும், இடயனுக்கும், யஜமானனுக்கும், திருடனுக்கும் சொந்தமாகும். எவன் ஒரு பசுவின் பாலைக் குடிக்கிறானோ அப்பசுவானது அவனுடையதென்பது நிச்சயம்" என்றிருக்கிறது.[5] "இந்த ஸ்லோகத்திற்குப் பொருள் கொள்வதில் நான் நீலகண்டரைப் பின்பற்றியிருக்கிறேன். அவரது விளக்கமே சரியாகத் தோன்றுகிறது. மூடதமம் mudatamah என்பது அவரைப் பொருத்தவரையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போரைக் குறிக்கிறது. நினைவுநிலையில் நான்கு படலங்கள் இருக்கின்றன. அவை, (1) விழிப்பு, (2) கனவு, (3) கனவற்ற ஆழ்ந்த உறக்கம், (4) துரியம் Turiya அல்லது (யோகிகள் அடையக்கூடிய முற்றான சமாதி) ஆகியனவாகும். கும்பகோணம் பதிப்பில், "உலகில் எவர்கள் மிகவும் மூடர்கள, எவர்கள் அறிவின் மேலான நிலையை அடைந்தவர்களோ அந்த மனிதர்கள் ஸுகமாகச் செழிக்கிறார்கள். இடையிலுள்ள மனிதன் கஷ்டப்படுகிறான்" என்றிருக்கிறது.
ஞானம் கொண்டவர்கள், இரண்டு இறுதிநிலைகளிலேயே திளைக்கிறார்களேயன்றி நடுவில் உள்ள நிலைகளில் அல்ல. இந்த இரண்டு இறுதிநிலைகளில் எதை அடைந்தாலும் மகிழ்ச்சியை அடையலாம் என்று தவசிகள் சொல்கின்றனர். அந்த இரண்டிற்கும் இடையில் உள்ள நடுநிலைகளே துன்பத்தைக் கொண்டிருக்கின்றன[6].(36) (சமாதி நிலை கொண்டு வரக்கூடிய) உண்மையான பேரின்ப நிலையை அடைவதில் வென்றவர்கள், இவ்வுலகத்தின் இன்ப துன்பங்களில் இருந்து விடுபட்டவர்கள், பொறாமையற்றவர்கள் ஆகியோர் செல்வத்தை அடைவதாலும், இழப்பதாலும் ஒருபோதும் கலங்குவதில்லை.(37) உண்மையான பேரின்பத்திற்கு வழிவகுக்கும் நுண்ணறிவை {புத்தியை} அடைவதில் தவறியவர்கள், ஆனால் (சாத்திரங்களுடைய அறிவின் துணையால்) மடமை மற்றும் அறியாமையை விஞ்சியவர்கள், அளவுக்குமீறி இன்பத்தையும், அளவுக்கு மீறிய துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள்.(38) சரியானது, அல்லது தவறானது என்ற கருத்தமைவுகள் எதுவும் இல்லாத மனிதர்கள் செருக்காலும், பிறரை வெற்றி கொண்டதாலும் உணர்வற்றவர்களாகி, சொர்க்கத்தின் தேவர்களைப் போல மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள்[7].(39) இன்பமானது துன்பத்திலேயே முடியும். செயலின்மையே துன்பம்; அதே வேளையில் புத்திசாலித்தனமே (செயல்படுவதே) மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. செல்வாக்கும், செழிப்பும் புத்திசாலியிடம் {செயல்படுபவனிடம்} வசிக்குமேயன்றி, ஒருபோதும் சோம்பேறியிடம் வசிக்காது.(40)
[6] "அந்த இரண்டு இறுதி {தீவிர} நிலைகள் என்பன, கனவற்ற உறக்கமும், துரியம், அல்லது சமாதி நிலைகளே ஆகும். நடுவிலுள்ள இரண்டு நிலைகள் விழிப்பும், கனவுடன் கூடிய உறக்கமும் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அறிவுள்ளவர்கள் புருஷார்த்தங்களுள் முந்தின தர்மத்திலும் கடைசியான மோக்ஷத்திலும் ஸந்தோஷமுள்ளவர்களாயிருப்பார்கள். அவர்கள் பொருள் காமங்களில் ஸந்தோஷப்படமாட்டார்கள். தர்மத்தையும் மோக்ஷத்தையும் அடைவது, ஸுகமென்றும் இடையிலுள்ள பொருள்காமங்கள் துக்கமென்றும் (அறிவுள்ளவர்கள்) கூறுகிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய், மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.[7] "பிறரை அவமதித்தன் விளைவால் எழும் செருக்கு; போரில் அடையும் வெற்றிகள் மற்றும் உலகின் பிற காரியங்களில் அடையும் வெற்றிகள் ஆகியவை இங்கே குறிப்பிடப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அறிவில்லாதவர்களும் மிக்க அஹங்காரத்தால் திருப்தியடைந்தவர்களுமான மூடர்கள் தேவலோகத்திலுள்ள தேவக்கூட்டங்கள் போல எப்போதும் ஸந்தோஷமுள்ளவர்களாயிருப்பார்கள்" என்றிருக்கிறது.
இன்பமோ துன்பமோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ இவற்றில் எது நேர்தாலும் அதை அனுபவிக்க வேண்டும், அல்லது வெல்லப்பட முடியாத இதயத்துடன் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.(41) தினமும் நூற்றுக்கணக்கான துன்ப நிகழ்வுகளும், நூற்றுக்கணக்கான அச்சந்தரும் நிகழ்வுகளும் அறியாமையும், மடமையும் கொண்ட மனிதனைத் தாக்குகின்றனவேயன்றி, ஞானியையல்ல.(42) ஞானத்தை அடைந்தவனும், தன் நன்மைக்கான அறிவரைகளைக் கேட்பதில் கவனம் நிறைந்தவனும், பொறாமையற்றவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனுமான நுண்ணறிவுமிக்க மனிதனைத் துன்பத்தால் தீண்டமுடியாது.(43) ஞானமிக்க மனிதன், அத்தகைய அறிவைச் சார்ந்து, (விருப்பம் மற்றும் ஆசையின் ஆதிக்கத்தில் இருந்து) இதயத்தைப் பாதுகாத்துக் கொண்டு இங்கே செயல்பட வேண்டும். எதிலிருந்து அனைத்தும் எழுகிறதோ, எதற்குள் அனைத்தும் மறைந்துபோகிறதோ, அந்தப் பரமாத்மாவை அறிந்தவனை உண்மையில் துன்பத்தால் தீண்டமுடியாது[8].(44) எதன் நிமித்தமாகத் துன்பம், இதய எரிச்சல், கவலை ஆகியன ஏற்படுகின்றனவோ, எதன் நிமித்தமாக முயற்சி தூண்டப்படுகிறதோ, அந்த வேரானது ஒருவனின் உடல் பகுதியாகவே இருப்பினும் அதைக் கைவிட வேண்டும்[9].(45)
[8] "இரண்டாவது வரியின் முதல்பாதி பல்வேறு வகையில் படிக்கப்படுகிறது. எனினும், பொருள் மாறாமலேயே இருக்கிறது. உண்மையான சமாதி நிலை, அல்லது உலகத்தில் இருந்து விலகியிருத்தல் ஆகியவை மூலம் பிரம்ம நிலையை அடைந்த மனிதன் ஒருபோதும் துன்பத்தால் தீண்டப்படமாட்டான் என்றே இங்குச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அறிவுள்ளவன் இந்தப் புத்தியையடைந்து பரிசுத்தமான மனத்துடன் ஸஞ்சரிக்க வேண்டும். சுக்லம் {வெண்மை / முக்திக்குக் காரணமானது}, க்ருஷ்ணம் {கருமை / ஸம்ஸாரத்திற்குக் காரணமானது} என்னும் வழிகளையறிந்தவனும், தெய்வம் ஆஸுரம் என்ற ஸ்வபாவங்களிலிருந்து வெளிப்பட்டவனும், பிறப்பு இறப்புகளை அறிந்தவனுமான மனிதனைச் சோகமானது தொடத்தக்கதன்று" என்றிருக்கிறது.[9] கும்பகோணம் பதிப்பில், "சோகமும், பயமும், கோபமும், ச்ரமும் எதைக் காரணமாகக் கொண்டு உண்டாகின்றனவோ அது தன் அங்கங்களில் ஒன்றாக இருந்தாலும் அதை விலக்க வேண்டும்" என்றிருக்கிறது.
எனது என்ற கருத்தில் பேணிவளர்க்கப்படும் எந்தப் பொருளாக இருந்தாலும், அது துயரம் மற்றும் இதய எரிச்சலின் தோற்றுவாயாக அமையும்.(46) விரும்பப்படும் எந்தப் பொருளும் கைவிடப்படும்போது, அது மகிழ்ச்சியின் தோற்றுவாயாக அமையும். ஆசைக்குரிய பொருட்களைத் தொடரும் மனிதன் அந்தத் தொடர்ச்சியின் போக்கில் அழிவையே அடைவான்.(47) புலன்களை நிறைவு செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியோ, சொர்க்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் பேரின்பமோ, ஆசைகள் அனைத்தின் அழிவில் இருந்து எழும் இன்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கும் ஈடாகாது.(48) சரியோ, தவறோ முற்பிறவிச் செயல்களின் விளைவுகள், ஞானிகளையும், மூடர்களையும், துணிவுமிக்கோரையும், மருண்டோரையும் அடைந்தே தீரும்.(49) இவ்வாறே இன்பமும் துன்பமும், ஏற்புடையவையும், ஏற்பில்லாதவையும் தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு மத்தியில் (சக்கரமாகச்) சுழல்கின்றன.(50)
நுண்ணறிவுமிக்கவனும், ஞானியுமான மனிதன், இத்தகைய அறிவைச் சார்ந்து சுகமாக வாழ்கிறான். ஒரு மனிதன் தன் ஆசைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, தன் கோபமானது தன்னிடம் சிறந்ததைப் பெற ஒருபோதும் அனுமதிக்காமல் இருக்க வேண்டும்.(51) இந்தக் கோபம் இதயத்தில் எழுந்து, அங்கே சீற்றத்துடனும், வளத்துடனும் வளர்கிறது. மனிதர்களின் மனங்களில் பிறந்து, உடல்களில் வசிக்கும் இந்தக் கோபமே மரணம் என்று ஞானிகளால் சொல்லப்படுகிறது.(52) ஒரு மனிதன், ஓர் ஆமையானது தன் அங்கங்களை உள்ளிழுத்துக் கொள்வதைப் போலத் தன் ஆசைகள் அனைத்திலிருந்தும் விலகினால், தன்னொளியுடன் கூடிய அவனது ஆன்மா, தன்னைக் காண்பதில் வெற்றியடைகிறது[10].(53) எனது என்ற கருத்தில் பேணிவளர்க்கப்படும் அந்தப் பொருளாக இருந்தாலும், அது துயரம் மற்றும் இதய எரிச்சலின் தோற்றுவாயாக அமையும்[11].(54) ஒரு மனிதன் எந்த அச்சத்தையும் உணராமல், வேறு எவராலும் அஞ்சப்படாமல் இருக்கும்போது, விருப்பையோ, வெறுப்பையோ அவன் வளர்க்காதபோது, அவன் பிரம்ம நிலையை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.(55)
[10] "அனுபவமற்ற ஒருவன், தன் முதல் படலத்தைக் கடக்கும்போது, தன் சுயத்தைக் காண்பதில் வெற்றியடைகிறான் என்று யோக சாத்திரங்கள் அனைத்திலும் சொல்லப்படுகிறது. அஃதாவது அவன் இருமை இருப்பை அனுபவித்து, தன்னைத் தானே காண்பதில் வெல்கிறான் என்று பொருள் கொள்ள வேண்டுமெனத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[11] "சுலோகம் 46 இங்கே மாற்றமில்லாமல் மீண்டும் சொல்லப்படுகிறது. பம்பாய் பதிப்பில் இது மறுபடி வரவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உண்மை, பொய்மை, துன்பம், இன்பம், அச்சம், துணிவு, ஏற்புடைமை, ஏற்பில்லாமை ஆகிய இருமைகளைக் கைவிட்டால், நீ அமைதிநிறைந்த ஆன்மாவாகலாம்.(56) ஒரு மனிதன், எந்த உயிரினத்துக்கும் எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ தீங்கிழைக்காத போது, அவன் பிரம்ம நிலையை அடைவதாகச் சொல்லப்படுகிறான்.(57) தவறான வழிநடத்தப்படுவதால் கைவிடமுடியாததும், முதுமையிலும் அழியாததும், மரண நோயாகக் கருதப்படுவதுமான தாகத்தை {ஆசையைக்} கைவிட்டவன் உண்மையான மகிழ்ச்சியை அடைவான்.(58) இதுதொடர்பாக, ஓ! மன்னா, சாதகமற்ற நிலையிலும் நித்திய தகுதியை {புண்ணியத்தை} அடைந்த பிங்களையால் {பிங்களை என்ற வேசியால்} பாடப்பட்ட சுலோகம் கேட்கப்படுகிறது.(59) பிங்களை என்ற பெயரைக் கொண்ட ஒரு வீழ்ந்த பெண்மணி, நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று, ஒரு விபத்தின் காரணமாகத் தன் காதலனின் தோழமை மறுக்கப்பட்டாள். பெரும் துன்பம் நிறைந்த அந்த நேரத்தில், அவள் ஆன்ம அமைதியை அடைவதில் வென்றாள்[12].(60)
[12] கும்பகோணம் பதிப்பில், "பிங்களையென்னும் வேசியானவள் ஸங்கேதஸ்தலத்தில் ஆசைநாயகனால் விலக்கப்பட்டவளாயிருந்தாள். உடனே அப்போது கஷ்டத்தை அடைந்த பிங்களையானவள் தன் புத்தியை சாந்தமாக (ஆத்மரூபத்தில்) நிலைபெறச் செய்து கொண்டாள்" என்றிருக்கிறது.
பிங்களை, "ஐயோ, அமைதிநிறைந்த சுயம் அருகில் இருக்க, வெறியின் வசப்பட்டு நான் நீண்ட பல வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். மரணம் என் வாயிலில் இருக்கிறது. எனினும், இதற்கு முன் நான் தூய்மையின் சாரத்தை நாடவில்லை.(61) ஒன்பது வாயில்களும் ஒரு தூணும் கொண்ட இந்த வீட்டை (உண்மை அறிவின் மூலம்) நான் மறைக்கப் போகிறேன்[13]. அருகில் இருக்கும் பரமாத்மாவை உண்மையில் அன்புக்குரியதாய் எந்தப் பெண்தான் கருதுகிறாள்?[14](62) நான் இப்போது விழித்துக் கொண்டேன். அறியாமையெனும் உறக்கத்தில் இருந்து இப்போது விழித்துவிட்டேன். நான் இனி ஆசைக்கு வசப்பட மாட்டேன். உண்மையில் நரகத்தின் உடல் வடிவங்களான மனிதக்காதலர்கள், காமத்துடன் அணுகி இனியும் என்னை வஞ்சிக்க இயலாது.(63) விதியின் மூலமோ, முற்பிறவி செயல்களின் மூலமோ தீமையும் நன்மையைத் தரும். (அறியாமை உறக்கத்திலிருந்து) விழிப்படைந்த நான், உலகப் பொருட்கள் மீது கொண்ட ஆசைகள் அனைத்தையும் கைவிடுகிறேன். என் புலன்களை முழுமையாக ஆட்சி செய்யப் போகிறேன்.(64) ஆசை மற்றும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} ஆகியவற்றில் இருந்து விடுபட்டவன் இன்பமாக உறங்குவான். நம்பிக்கை மற்றும் ஆசையில் இருந்து அடையும் விடுதலையே இன்ப நிலையாகும்" என்றாள் {என்பது அந்த ஸ்லோகமாகும்}. பிறகு, ஆசையையும், நம்பிக்கையையும் விலக்கியப் பிங்களை இன்பமாக உறங்கினாள்" என்றார் {அந்தப் பிராமணர்}".(65)
[13] "இங்கே குறிப்பிடப்படும் வீடு உடலாகும். அதைத் தாங்கியிருக்கும் ஒற்றைத் தூண் அறியாமையாகும், ஒன்பது வாயில்கள் என்பன, கண்கள், காதுகள், நாசி மற்றும் பிற ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[14] "பெண்கள், பரம்பொருள் எப்போதும் அவர்களுடனே இருந்தாலும், அன்புக்குரியதாகக் கருதாமல், தங்கள் மனிதக் காதலர்களை அன்புக்குரியவர்களாகக் கருதுகிறார்கள்" என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "கல்விமானான அந்தப் பிராமணர் சொன்ன இவற்றாலும் இன்னும் பிற சொற்களாலும் ஆறுதலடைந்த மன்னன் சேனஜித், (தன் துயரத்தைக் கைவிட்டு) இன்பத்தை உணர்ந்து மகிழ்ச்சியை அடைந்தான்".(66)
சாந்திபர்வம் பகுதி – 174ல் உள்ள சுலோகங்கள் : 66
ஆங்கிலத்தில் | In English |