The justice of Medhavin! | Shanti-Parva-Section-175 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 02)
பதிவின் சுருக்கம் : காலம் வேகமாகச் செல்வதைக் கருத்தில் கொண்டு எந்த உயர்ந்த நன்மையை மனிதன் நாட வேண்டும் என்று கேட்ட யுதிஷ்டிரன்; நிச்சயத்தன்மையற்ற வாழ்வைக் குறித்தும், பிரம்மத்தைத் தவிர அனைத்தும் ஒடுங்குதலைக் குறித்தும் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் நடந்த உரையாடலை உரைத்த பீஷ்மர்...
The justice of Medhavin! | Shanti-Parva-Section-175 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் அழிவைத் தரும் காலம் கடந்து கொண்டிருக்கிறது[1]. ஓ! பாட்டா, நாடப்பட வேண்டிய நன்மையான பொருள் எது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
[1] "அதாவது, காலமானது யாருக்கும் காத்திராமல் கடந்து கொண்டே இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, இது தொடர்பாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பழைய கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு குறிப்பிட்ட பிராமணர், பெரும் நுண்ணறிவைக்கொண்டவனும், (இதன் காரணமாகவே) மேதாவி என்றழைக்கப்பட்ட ஒரு மகனைப் பெற்றிருந்தார்.(3) ஒரு நாள், மோக்ஷ அறம் குறித்த உண்மைகளை நன்கறிந்த அந்த மகன் {மேதாவி}, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த தன் தந்தையிடம் பேசினான்.(4)
மகன் {மேதாவி}, "ஓ! தந்தையே, மனிதனின் வாழ்வுக்காலம் மிக விரைவாகக் கடந்து செல்வதைக் கொண்டு ஒரு ஞானம் கொண்ட மனிதன் என்ன செய்ய வேண்டும்? ஓ! தந்தையே, ஒருவன் செய்ய வேண்டிய கடமைகளின் போக்கை, அவற்றின் கனிகளைக் குறித்துத் தவறாமல் எனக்குச் சொல்வீராக. உம்மிடம் இருந்து கேட்டு, அந்தக் கடமைகளை நோற்க நான் விரும்புகிறேன்" என்று கேட்டான்.(5)
தந்தை, "ஓ! மகனே {மேதாவியே}, ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வுமுறையை {ஆசிரமத்தை} நோற்று, வேதங்களை முதலில் கற்க வேண்டும். பிறகு அவன் தன் மூதாதையர்களை மீட்பதற்காக {கிருஹஸ்தாசிரமத்தை ஏற்று} பிள்ளைகளைப் பெற வேண்டும். அடுத்ததாகத் தன் நெருப்பைக் கிண்டி, (பரிந்துரைக்கப்பட்டிருக்கும்) வேள்விகளை முறையான சடங்குகளுடன் செய்ய அவன் முனைய வேண்டும்[2]. இறுதியாக, அவன் தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் காட்டிற்குள் நுழைய வேண்டும்" என்று சொன்னார்.(6)
[2] கும்பகோணம் பதிப்பில், "ஆதானவிதிப்படி மூன்று அக்கினிகளையும் உண்டு பண்ணிக் கொண்டு விதிப்படி யாகங்களைச் செய்தவனாகி அரண்யஞ்சென்று பிறகு முனியாயிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
மகன் {மேதாவி தன் தந்தையிடம்}, "இவ்வாறு அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டு, இவ்வாறு உலகம் தாக்கப்படும்போது, மரண விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய தடுக்கப்பட முடியாத காரியங்கள் அதன் மீது பாயும்போது, எவ்வாறு நீர் இவ்வார்த்தைகளை அமைதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டான்.(7)
தந்தை {மேதாவியிடம்}, "எவ்வாறு உலகம் தாக்கப்படுகிறது? எதனால் அது சூழப்பட்டிருக்கிறது? மரண விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் தடுக்கப்பட முடியாத அளவில் அதன் {உலகத்தின்} மீது பாய்வதுமான அஃது எது? ஏன் நீ என்னை இவ்வாறு அச்சுறுத்துகிறாய்" என்று கேட்டார்.(8)
மகன் {மேதாவி தன் தந்தையிடம்}, "காலனே உலகத்தைத் தாக்குகிறான். முதுமையால் உலகம் சூழப்படுகிறது. (மனிதனின் வாழ்வுக்காலத்தைத் தொடர்ந்து குறைக்கும் வகையில்) வந்து போய்க் கொண்டிருக்கும் இரவுகளே அந்தத் தடுக்கப்பட முடியாத காரியங்கள்.(9) காலன் யாருக்காகவும் காத்திருக்க மாட்டான், (ஆனால் ஒவ்வொரு உயிரினத்தையும் நோக்கி உறுதியாக நகர்ந்து வருகிறான்) எனும்போது, அறிவு எனும் ஆடையால் மறைத்துக் கொள்ளாமல் என்னால் எவ்வாறு காலத்தைக் கடத்த முடியும்[3]?(10) அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு இரவும், ஒருவனின் இருப்புக்குரிய காலத்தைக் குறைத்தபடியே கடந்து சென்று கொண்டிருக்கும்போது, ஞானம் கொண்ட மனிதன் அந்த நாளை கனியற்றதாகவே கருத வேண்டும்.(11) (காலன் உறுதியாக அணுகி வரும்போது) ஆழமற்ற நீரின் மீனைப் போல மகிழ்ச்சியை உணர்பவன் எவன் இருக்கிறான்? மனிதனின் ஆசைகள் நிறைவேறும் முன்பே அவனிடம் காலன் வந்து விடுகிறான்.(12) ஒரு மனிதன் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, அவனது இதயம் வேறுவகையில் நிலைத்திருக்கும்போது, செம்மறியாட்டைக் கவர்ந்து செல்லும் பெண்புலியைப் போலக் காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(13)
[3] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் உண்மையான வார்த்தை ஞானேனா, அஞானேனா இல்ல. பிறகு, இறுதி வரியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை அவபிஹிதா, அபிஹிதா அல்ல. அவ என்பதிலும் அபி என்பதிலும், அ எறள எழுத்து அடிக்கடி தவிர்க்கப்படுகிறது. எனவே அவபிஹிதா என்பது மறைக்கப்படாமல் என்ற பொருளையே தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வலையால் பிடிக்கப்பட்டவன் போல ஸஞ்சரித்துக் கொண்டிருக்கும் நான் எவ்விதம் பயமடையாமலிருக்கக்கூடும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்த வலையில் என் கால் அகப்பட்டிருக்கும்போது என்னால் எவ்வாறு காத்திருக்க முடியும்" என்றிருக்கிறது.
நீர் உமது நன்மைக்கானதை இந்த நாளிலேயே நிறைவேற்றிக் கொள்வீராக. இந்தக் காலன் உம்மிடம் வர வேண்டாம். காலன், தன் பலியாடுகளை அவர்கள் செயல்கள் நிறைவடையும் முன்பே இழுத்துச் செல்கிறான்.(14) நாளை செய்ய வேண்டிய செயல்களை இன்றே செய்ய வேண்டும், பிற்பகலில் செய்ய வேண்டியதை முற்பகலிலேயே செய்துவிட வேண்டும். தன் பலியாடுகளின் செயல்கள் நிறைவேறிவிட்டனவா, இல்லையா என்று பார்த்துக் கொண்டு காலன் காத்திருப்பதில்லை.(15) இன்று தன்னிடம் காலன் வரமாட்டான் என்பதை எவன் அறிவான்? இளம் வயதிலேயே ஒருவன் அறம்பயில வேண்டும். வாழ்வென்பது நிலையற்றதாகும். அறம்பயிலப்பட்டால், இம்மையில் புகழும், மறுமையில் பேரின்பமும் அதன் விளைவுகளாக இருக்கும்.(16)
அறியாமையில் மூழ்கிய ஒருவன், மகன்களுக்காகவும், மனைவியருக்காகவும் உழைக்க ஆயத்தமாக இருக்கிறான். நல்ல அல்லது தீய செயல்களைச் செய்யும் ஒருவன், அவற்றை வளர்த்துப் பெருக்குகிறான்.(17) உறங்கும் மானை அபகரித்துச் செல்லும் புலியைப் போலவே, மகன்கள், விலங்குகளில் இன்புற்று, தன் ஆசைகளை நிறைவு செய்து கொள்வதற்காக அடிமையாக இருக்கும் மனிதனைக் காலன் அபகரித்துச் செல்கிறான்.(18) அவன் தன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கும் மலர்களைப் பறிக்க இயலும் முன்பே, தன் ஆசைக்குரிய பொருட்களை அடைந்து மனநிறைவடையும் முன்பே, இரையை அபகரிக்கும் புலியைப் போல அவனைக் காலன் அபகரித்துச் செல்கிறான்.(19) "இது செய்து முடிக்கப்பட்டது; இது செய்யப்பட வேண்டும்; இது பாதிச் செய்யப்பட்டிருக்கிறது" என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, இன்பத்தை நிறைவு செய்வதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு மத்தியில் இருக்கும்போதே காலன் அவனை அடக்கி ஆட்கொள்கிறான்.(20)
மனிதன் தன் வயல், தன் கடை, அல்லது தன் இல்லம் என எத்தொழிலைப் பற்றுடன் செய்து கொண்டிருந்தாலும், அவன் தன் செயல்களின் கனியை அடையும் முன்பே காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(21) பலவீனன், பலமிக்கவன், துணிவுமிக்கவன், அச்சம் கொண்டவன், மூடன், கல்விமான் இவர்களில் எவரும் தங்கள் செயல்களின் கனிகளை அடையும் முன்பே காலன் அவர்களை அபகரித்துச் செல்கிறான்.(22) பல்வேறு காரணங்களில் இருந்து எழும் மரணம், முதுமை, நோய், கவலை ஆகிய அனைத்தும் உமது உடலிலேயே வசித்து வரும்போது, எவ்வாறு உம்மால் முற்றிலும் {ஒன்றுமில்லாததுபோல} நலமாக வாழ முடிகிறது?(23) உடல்படைத்த உயிரினம் பிறந்தவுடனேயே, அதன் அழிவுக்காக (அழிவைக் கொண்டுவர) முதுமையும், மரணமும் அதனைத் தொடர்ந்து வருகின்றன. இருப்பில் இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்களை அனைத்தும் இவ்விரண்டால் {முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால்} பாதிப்பை அடைகின்றன.(24) (தோழர்களுக்கு மத்தியில்) கிராமங்களிலும், நகரங்களிலும் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் பற்றே, காலனின் வாய் என்று சொல்லப்படுகிறது[4]. மறுபுறம், காடானது, புலன்களை அடைத்து வைக்கும் கொட்டகையாகக் கருதப்படுகிறது. இது ஸ்ருதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது[5].(25)
[4] கும்பகோணம் பதிப்பில், "கிராமத்தில் வஸிப்பவனுக்கு (பிள்ளை பெண்டிர் முதலியவற்றிலுள்ள) ஆசையென்பதுதான் மிருத்யுவின் முகமாகும்" என்றிருக்கிறது.[5] "இந்த உரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை தேவானாம் Devanam (தேவர்களின்) என்பதாகும். எனினும், தேவா என்ற வார்த்தை இங்கே புலன்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அரண்யமென்பதுதான் இந்திரியமென்னும் பசுக்களைக் கட்டத்தக்க கொட்டிலாகுமென்று வேதம் உபதேசிக்கிறது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "த்யானஞ்செய்யத்தக்க தனிமையான இடம் அரண்யமென்று சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.
நல்லோர், அக்கட்டுகளை அறுத்து விடுதலையை அடைகின்றனர், அதே வேளையில் தீயோர் அவற்றை அறுப்பதில் வெல்வதில்லை.(26) எண்ணம், சொல், அல்லது செயலால் ஒருபோதும் உயிரினங்களுக்குத் தீங்கிழைக்காதவன், உயிருக்கும், உடைமைக்கும் அழிவைத்தரும் இத்தகையவற்றால் ஒருபோதும் தீங்குற மாட்டான்[6].(27) காலனின் தூதர்கள் (நோய் மற்றும் முதுமை) அணுகும்போது, பொய்மையை விழுங்கும் வாய்மையைத் தவிர எதனாலும் அவர்களை {நோய் மற்றும் முதுமையை} தடுக்க முடியாது. வாய்மையே அழிவில்லாதது[7].(28) இந்தக் காரணங்களுக்காகவே ஒருவன் வாய்மை எனும் நோன்பைப் பயில வேண்டும்; வாய்மையுடன் ஒன்று கலப்பத்தில் அவன் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்; வாய்மையே அவனின் வேதம் என அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்; தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, வாய்மையின் மூலம் அவன் காலனை வெல்ல வேண்டும்.(29) மரணமின்மை, மரணம் ஆகிய இரண்டும் உடலிலேயே விதைக்கப்பட்டிருக்கிறது. அறியாமை மற்றும் குழப்பம் ஆகியவற்றின் மூலம் ஒருவன் மரணமடைகிறான்; அதே வேளையில் வாய்மையின் மூலம் மரணமின்மை அடையப்படுகிறது.(30)
[6] "அதாவது, காட்டுவிலங்குகள், சட்டத்திற்குக் கட்டுப்படாத மனிதர்களால் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எவன் மனத்தாலும், வாகாலும், சரீரத்தாலும் மற்ற காரணங்களாலும் பிராணிகளைத் துன்பப்படுத்தாமலிருக்கிறானோ அவன் உயிரையும், பொருள்களையும் அபஹரிக்கத்தக்க பிராணிகளாலும் துன்பப்படுத்தப்பட மாட்டான்" என்றிருக்கிறது.[7] கும்பகோணம் பதிப்பில், "(கிழத்தனம் வ்யாதி முதலிய உருவமுள்ளதாக) வரும் மிருத்யுவின் ஸேனையை ஸத்தியம் ஒன்றாலல்லாமல் ஒருவனும் ஒருபொழுதும் தடுக்கவல்லவனல்லன்" என்றிருக்கிறது.
எனவே, தீங்கிழைப்பதில் இருந்து விலகி, வாய்மையை அடைய முயன்று, ஆசை மற்றும் கோபத்தின் ஆதிக்கத்தை மீறி, இன்பம் மற்றும் துன்பத்தை ஒரே பார்வையில் கருதி, அமைதியை அடைந்து, மரணமில்லாதவனை {தேவனைப்} போல நான் மரணத்தைத் தவிர்க்கப் போகிறேன்.(31) சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் வரும் வரையில், என் புலன்களைக் கட்டுப்படுத்தி, சாந்தி வேள்வி, பிரம்ம வேள்வி, சொல்வேள்வி, மன வேள்வி, செயல் வேள்வி ஆகியவற்றில் நான் என்னை ஈடுபடுத்திப் போகிறேன்[8]. பிசாசங்கள் மட்டுமே செய்யக்கூடியதும், நிலையற்ற கனிகளை உண்டாக்கக்கூடியதுமான கொடுமையான விலங்கு வேள்விகளையோ, உடல் வேள்விகளையோ {உடலைத் தியாகம் செய்வதையோ} என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு செய்ய முடியும்[9]?(33) எவனுடைய சொற்கள், எண்ணங்கள், தவங்கள், துறவு, யோகத் தியானம் ஆகியன அனைத்தும் பிரம்மத்தில் நிலைத்திருக்குமோ, அவன் உயர்ந்த நன்மையை ஈட்டுவதில் வெல்வான்.(34) அறிவுக்கு (அறிவுக்கண்ணுக்கு) இணையான வேறு எந்தக் கண்ணும் இல்லை. வாய்மை (வாய்மையில் உள்ளதைப்) போன்ற தவம் வேறேதும் இல்லை. பற்று (பற்றில் உள்ளதற்கு) இணையான துயரம் வேறேதும் இல்லை. துறவை (துறவில் அடைவதைப் போன்ற) மகிழ்ச்சி வேறேதும் இல்லை.(35)
[8] "சாந்தி என்பது அமைதியாகும். சாந்தி வேள்வி என்பது, அனைத்திலும் தன்மறுத்தலைப் பயில முயற்சி செய்வதாகும்; வேறு சொற்களில், அனைத்து வகை விருப்பங்கள், அல்லது மனச்சார்புகளில் இருந்து விலகுவதாகும். பிரம்ம வேள்வி என்பது உபநிஷத்துகளில் விதிக்கப்பட்டிருக்கும் உண்மைகளைச் சிந்திப்பதாகும். சொல் வேள்வி என்பது, முதல் மந்திரமான ஓம், அல்லது பிரணவத்தை அமைதியாக உரைப்பதாகும் (ஜபம் செய்வதாகும்). மன வேள்வி என்பது பரமாத்மாவைத் தியானிப்பதாகும். செயல் வேள்வி என்பது, நீராடல், தூய்மை, ஆசானுக்காகக் காத்திருத்தல் {அவருக்குப் பணிவிடை செய்தல்} உள்ளிடனவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நிவ்ருத்தி மார்க்கத்தில் பழக்கமென்னும் யாகத்தில் பற்றுள்ளவனும், இந்திய நிக்ரஹமுள்ளவனும், ப்ரம்மஜ்ஞானமென்னும் யாகத்தில் நிலைபெற்றவனும், வாக்கு, மனம், சரீரங்களுக்குள்ள ஜபம், த்யானம், ஸ்நானம் என்ற யாகங்களுள்ளவனுமான முனியாயிருந்து கொண்டு உத்தராயணம் என்னும் பிரம்மலோகவழிக்குத் தக்கவனாயிருக்கப் போகிறேன்" என்றிருக்கிறது.[9] "க்ஷேத்திரயஜ்ஞம் Ksethrayajna, க்ஷத்திரயஜ்ஞம் Kshatrayajna ஆகிய இரண்டு உரைகளும் சரியானவையே, க்ஷேத்திரமென்பது உடலையே குறிக்கும். க்ஷத்திரயஜ்ஞம் என்ற உரை ஏற்றுக் கொள்ளப்பட்டால், "போரெனும் க்ஷத்திரிய வேள்வியைப் போல" என்று பொருள்படும். எனவே, இங்கே கொடுமை சார்ந்த அனைத்து செயல்களும் குறிப்பிடப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அறிவுள்ளவனான என் போன்றவன் ஹிம்ஸையுள்ளவைகளும், அழியத்தக்க பயனுள்ளவைகளும் பசுக்களால் {விலங்குகளால்} செய்யத்தக்கவைகளுமான யாகங்களைப் பிசாசமானது தன் சரீரத்தின் நாசமென்னும் யாகங்களைச் செய்வது போல எவ்விதம் செய்யத்தக்கவனாவான்?" என்றிருக்கிறது.
பிரம்மத்தில் இருந்து பிரம்மத்தின் மூலமாகப் பிறந்தவன் நான். நான் பிள்ளையற்றவனாக இருந்தாலும், என்னைப் பிரம்மத்திற்கே அர்ப்பணிப்பேன். நான் பிரம்மத்திற்கே திரும்புவேன். என்னை மீட்க ஒரு மகன் தேவையில்லை.(36) பயிலல், நன்னடத்தை, பொறுமை, தீங்கிழையாமை, எளிமை, சடங்குகள் மற்றும் காணும் வேள்விகள் அனைத்தையும் தவிர்த்தல் ஆகியவற்றைக் கொண்டு அனைத்தையும் சமமாகப் பார்ப்பதால் விளையும் நிலையான தனிமையை விட ஒரு பிராமணனுக்குச் செல்வம் வேறேதும் இல்லை.(37) ஓ! பிராமணரே, ஒருவன் மரணமடையப் போகிறான் எனும்போது, செல்வம், உற்றார் உறவினர், மனைவியர் ஆகியவற்றால் அவனுக்கு என்ன பயன் இருக்க முடியும்? குகைக்குள் மறைக்கப்பட்டிருக்கும் உமது சுயத்தை {ஆன்மாவை} நாடுவீராக. உமது பாட்டன்மாரும், உமது தந்தைமாரும் எங்கே இருக்கின்றனர்" என்று கேட்டான் {மேதாவி}"[10].(38)
[10] "அல்லது, உன் அறிவால் பிரம்மத்தைத் தேடுவாயாக என்பது பொருள். ஆத்மன் என்ற சொல் அடிக்கடி உயர்ந்த சுயத்திற்கு ஒப்பாகப் பயன்படுத்தப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஓ பிராமணரே, மரிக்கப்போகிற உமக்குப் பொருள்களால் என்ன பயன்? பந்துக்களாலும் உமக்கு என்ன பயன்? தாரங்களால் உமக்கு என்ன பயன்? உம்முடைய பிதாவும், பாட்டனாரும் எங்கே போனார்கள்? ஹ்ருதயக் குகையில் ப்ரவேசித்திருக்கும் ஆத்மரூபத்தைத் தேடிக் கொள்ளும்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி, (இந்தக் கதையில்) மகனின் பேச்சைக் கேட்ட பிறகு, வாய்மை எனும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்த அந்தத் தந்தையின் வழியில் நீயும் நடப்பாயாக" என்றார்.(39)
சாந்திபர்வம் பகுதி – 175ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |