Self Restraint! | Shanti-Parva-Section-220 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 47)
பதிவின் சுருக்கம் : தற்கட்டுப்பாடு கொண்டவனின் குறியீடுகளையும், தற்கட்டுப்பாட்டின் சிறப்புகளையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "எதைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியையும், எதைச் செய்வதன் மூலம் துன்பத்தையும் ஒருவன் அடைகிறான்? ஓ! பாரதரே, எதைச் செய்வதன் மூலம் ஒருவன் அச்சத்தில் இருந்து விடுபட்டு, (வாழ்வின் நோக்கங்களைப் பொறுத்தவரையில்) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக இங்கே பயணிக்கிறான்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஸ்ருதிகளை நோக்கிச் செலுத்தப்பட்ட புத்தியைக் கொண்டிருந்த பழங்காலத்தவர், பொதுவாக அனைத்து வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்}, மிகக் குறிப்பாகப் பிராமணர்களுக்கும் தற்கட்டுப்பாடு {தமம்} எனும் கடமையையே உயர்வாக மெச்சினார்கள்.(2) அறச்சடங்குகளைப் பொறுத்தவரையில் தற்கட்டுப்பாடு {தமம்} இல்லாதவர்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. அறச்சடங்குகள், தவங்கள், வாய்மை ஆகிய இவை அனைத்தும் தற்கட்டுப்பாட்டிலேயே நிறுவப்பட்டுள்ளன.(3) தற்கட்டுப்பாட்டு ஒருவனின் சக்தியை அதிகரிக்கிறது. தற்கட்டுப்பாடு புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன் பாவமற்றவனாகவும், அச்சமற்றவனாகவும் ஆகி பெரும் விளைவுகளை வெல்கிறான் {அடைகிறான்}.(4) தற்கட்டுப்பாடு உடையவன் மகிழ்ச்சியாக உறங்கி, மகிழ்ச்சியாக விழிக்கிறான். அவன் இவ்வுலகில் மகிழ்ச்சியாகவே திரிகிறான், அவனது மனம் எப்போதும் உற்சாகமாக இருக்கிறது.(5)
தற்கட்டுப்பாடு கொண்டவனால் அனைத்துவகைக் கிளர்ச்சிகளும் அமைதியாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. தற்கட்டுப்பாடு இல்லாத ஒருவன் அதே போன்ற முயற்சியில் தவறுகிறான். தற்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதன், (காமம், ஆசை, கோபம் முதலிய வடிவங்களில் இருக்கும்) தனது எண்ணற்ற எதிரிகளைத் தனிப்பட்ட உடல்களாக வசிப்பவையாகக் காண்கிறான்.(6) தற்கட்டுப்பாடு இல்லாத மனிதர்கள், புலிகளையும், ஊனுண்ணும் பிற விலங்குகளையும் போல எப்போதும் அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் ஆழ்த்துகின்றனர். {தற்கட்டுப்பாடு இல்லாத} இம்மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே சுயம்பு (பிரம்மன்) மன்னர்களைப் படைத்தான்.(7) (நான்கு) வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திலும், பிற அறங்கள் அனைத்தைக் காட்டிலும் தற்கட்டுப்பாட்டைப் பயில்வதே தனிச்சிறப்புடையது. அனைத்து வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} மூலமும் அடைவதைவிடத் தற்கட்டுப்பாட்டின் மூலம் அடையப்படும் கனிகள் {பலன்கள்} மிக அதிகமாகும்.(8) நான் இப்போது, தற்கட்டுப்பாட்டை உயர்வாக மதிக்கும் மனிதர்களின் குறியீடுகளைக் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்[1]. உயர்ந்த பண்பு, அமைதியான மனநிலை {பரபரப்பின்மை}, மனநிறைவு, நம்பிக்கை,(9) மன்னிக்கும் தன்மை, மாறாத எளிமை, அதிகம் பேசாமை, பணிவு, பெரியோர்களிடம் மரியாதை, நலநாட்டம், அனைத்து உயிரினங்களிடமும் கருணை, வெளிப்படைத்தன்மை,(10) மன்னர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்போரைக் குறித்த பேச்சையும், போலியான, பயனற்ற விவாதங்களையும், பிறரைப் புகழ்வதையும், இகழ்வதையும் தவிர்த்தல் ஆகியவையே அவை {தற்கட்டுப்பாடு கொண்டவர்களின் குறியீடுகளாகும்}. தற்கட்டுப்பாட்டுடன் கூடிய மனிதன், விடுதலையை {முக்தியை} விரும்பி, தற்போதைய இன்பங்களையும், துன்பங்களையும் அமைதியாகத் தாங்கிக் கொள்பவனாக, எதிர்பார்ப்புகளைக் கொண்டோரின் மூலம் ஒருபோதும் கிளர்ச்சியடையவோ, சோர்வடையவோ மாட்டான்.(11)
[1] சமுதாயம் Samudayah என்பது ஹேது hetu என்பதற்கு இணையாக உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. கும்பகோணம் பதிப்பில், "எந்தக் குணங்களின் கூட்டம் தமமாகுமோ அந்தக் குணங்களுக்குரிய குறிகளைக் கூறுகிறேன்" என்றிருக்கிறது.
பழிவாங்கும் குணம் மற்றும் அனைத்து வகை வஞ்சனைகள் அற்றவனாக, புகழ்ச்சியாலோ, பழியாலோ அசைக்கப்பட முடியாதவனாக இருக்கும் அத்தகைய மனிதன், நன்னடத்தை, நல்ல பழக்கவழக்கம், தூய ஆன்மா, உறுதிப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனாகவும், தன் ஆசைகளின் முற்றான தலைவனாகவும் இருப்பான்.(12) அத்தகைய மனிதன் இவ்வுலகில் வெகுமதிகளைப் பெற்று, மறுமையில் சொர்க்கத்திற்குச் செல்வான். அடைய முடியாதவற்றைத் தன் உதவியின் மூலம் அனைத்து உயிரினங்களையும் அடையச் செய்யும் அத்தகைய மனிதன், மகிழ்ச்சிக் களிப்படைபவனாகிறான்[2].(13) உலகளாவிய நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் அத்தகைய மனிதன், எவருடனும் ஒருபோதும் பகையை வளர்க்க மாட்டான். ஆழ்ந்த அமைதி கொண்ட பெருங்கடலைப் போல அமைதியான அவன், ஞானத்தால் ஆன்மா நிறைந்தவனாகவும், எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாகவும் இருப்பான்.(14) புத்தியைக் கொண்டவனும், உலகளாவிய மதிப்புக்குத் தகுந்தவனுமான அத்தகைய தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன், எந்த உயிரினத்திடமும் அச்சத்தையூட்டாதவனாகவும், தானும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளாதவனாகவும் இருப்பான்.(15)
[2] "வறியவர்களுக்கு உணவும் உடைகளுக்கும் கொடுப்பது, பஞ்சகாலத்தில் தேவையானவற்றைக் கொடுப்பது ஆகியவை இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் ,"மோக்ஷத்தில் விருப்பமுள்ளவனும், அனுபவ ஸமயங்களில் வருங்காலத்தை விரும்பாதவுனும், பகையைச் செய்யாதவனும், உண்மையான உபசாரமுள்ளவனும், நிந்தையிலும், ஸ்துதியிலும் ஸமமாயிருப்பவனும், நன்னடத்தையுள்ளவனும், நல்ல சீலமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், தைரியமுள்ளவனுமாகப் பரிசுத்தமாயிருப்பவன் இவ்வுலகில் பூஜையைப் பெற்று இறந்த பின்னும் ஸ்வர்க்கத்தை அடைகிறான்;எல்லாப் பிராணிகளுக்கும் அரிதான பொருளை அளிப்பவனும் ஸுகமுள்ளவனுமாகிக் களிப்பான்" என்றிருக்கிறது.
பெரும் பொருள்களை அடைகையில் ஒருபோதும் மகிழ்சியடையாமலும், துயரத்தில் ஒருபோதும் துன்பங்கொள்ளாமலும் இருக்கும் அவன், நிறைவான ஞானத்தைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதனே தற்கட்டுப்பாடு உடையவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில் அத்தகைய மனிதனே மறுபிறப்பாளனாகச் சொல்லப்படுகிறான்.(16) சாத்திரங்களை அறிந்தவனாக, தூய ஆன்மா கொண்டவனாக இருக்கும் தற்கட்டுப்பாடுடைய மனிதன், நன்மைக்காகச் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும் செய்து, உயர்ந்த கனிகளை {பலன்களை} அனுபவிக்கிறான்.(17) எனினும், தீய ஆன்மா கொண்டவர்களோ, நலநாட்டம், மன்னிக்கும்தன்மை, அமைதி, நிறைவு, இனிய பேச்சு, வாய்மை, ஈகை, ஆறுதல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பாதையில் செல்ல மாட்டார்கள்.(18) அவர்களுடைய பாதையானது, காமம், கோபம், பேராசை, பிறரிடம் பொறாமை, தற்புகழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டதாகும். காமம் மற்றும் கோபத்தை அடக்கி, பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, தன் புலன்களின் முற்றான தலைவனாகும் ஒரு பிராமணன்,(19) தன்னை மிகக் கடுமையான தவங்களில் ஈடுபடுத்திக் கொண்டும், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டும், தனக்கு முழுமையான அழிவு கிடையாது என்பதை அறிந்தாலும் தன் காலம் வரும் வரை உடலைத் தாங்கிக் கொண்டிருப்பவனாகக் காத்திருந்து இந்த உலகில் வாழ்ந்து வர வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(20)
சாந்திபர்வம் பகுதி – 220ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |